மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு
மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பானது (ஆங்கிலம்: Mongol invasion of the Khwarazmian Empire) பொ. ஊ. 1219 முதல் பொ. ஊ. 1221 வரை[3] நடைபெற்றது. இசுலாமிய நாடுகளை மங்கோலியர்கள் ஆக்கிரமித்ததன் தொடக்கத்தை இது குறித்தது. மங்கோலிய விரிவாக்கம் இறுதியில் சப்பான், எகிப்திய அடிமை வம்சம், இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா தவிர ஆசியாவின் (கிழக்கு ஐரோப்பாவின் பகுதிகள் உட்பட) அனைத்துப் பகுதிகளையும் வெற்றி கொண்ட பின்னரே முடிந்தது. 1219 மற்றும் 1221க்கு[4] இடையில் செங்கிஸ் கான் தலைமையிலான மங்கோலியப் படைகள் நடு ஆசியாவில் இருந்த குவாரசமியப் பேரரசின் நிலங்கள் மீது படையெடுத்தன. காரா கிதை கானரசு மங்கோலியப் பேரரசுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் படையெடுப்பில் பரவலான அழிவு மற்றும் அட்டூழியங்கள் நடைபெற்றன. நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பு முடிவுற்றதையும், பாரசீகம் மீதான மங்கோலியப் படையெடுப்பு தொடங்கியதையும் இந்தப் படையெடுப்பானது குறித்தது. பெரியதாக இருந்த போதிலும் இரு நாடுகளும் சமீபத்தில் தான் உருவாக்கப்பட்டிருந்தன: 1100களின் பிந்தைய பகுதி மற்றும் 1200களின் தொடக்கத்தில் செல்யூக் பேரரசை இடம் மாற்றுவதற்காக குவாரசமிய அரசமரபானது தங்களது தாயகத்திலிருந்து விரிவடைந்திருந்தது; கிட்டத் தட்ட இதே நேரத்தில் செங்கிஸ் கான் மங்கோலிய மக்களை ஒன்றிணைத்திருந்தார். மேற்கு சியா அரசை வென்றிருந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முறையானவை தொடக்கத்தில் நட்புணர்வுடன் இருந்த போதிலும் ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் தூதரகச் செயல்பாடுகளால் செங்கிஸ் கோபமடைந்தார். குவாரசமிய ஷா இரண்டாம் முகம்மெதுவால் ஒரு மூத்த மங்கோலியத் தூதுவன் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட போது கான் தன்னுடைய படைகளை ஒருங்கிணைத்தார். இவர்கள் 90,000 மற்றும் 2,00,000க்கு இடைப்பட்ட அளவில் இருந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. படையெடுத்தார். ஷாவின் படைகள் பரவலான நிலப்பரப்பில் சிதறியிருந்தன. அநேகமாக, ஒவ்வொரு இடத்திலும் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தன்னுடைய பாதகத்தை உணர்ந்த அவர் ஒரேயொரு பெரிய இராணுவத்தைக் கொண்டு சண்டையிடுவதற்குப் பதிலாக மங்கோலியர்களைப் புதை மணலில் சிக்க வைப்பதைப் போல சிக்க வைப்பதற்காகத் தன்னுடைய நகரங்களின் கோட்டைகளில் தனித் தனியாக இராணுவ வீரர்களைப் பிரித்து வைக்க முடிவு செய்தார். எனினும், மிகச் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடலின் மூலமாக மங்கோலியர்கள் திரான்சாக்சியானாவின் நகரங்களான புகாரா, சமர்கந்து மற்றும் குர்கெஞ்சை தனித் தனியாகப் பிரித்து வென்றனர். செங்கிசும், அவரது கடைசி மகனான டொலுயும் பிறகு குராசானை அழிவுக்கு உட்படுத்தினர். கெராத், நிசாபூர் மற்றும் மெர்வ் ஆகிய அன்றைய உலகின் மிகப் பெரிய மூன்று நகரங்களை அழித்தனர். அதே நேரத்தில், மங்கோலியத் தளபதிகளான சுபுதை மற்றும் செபேயின் படைகளால் துரத்தப்பட்டதன் காரணமாக இரண்டாம் முகம்மெது தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அடைக்கலம் பெற எந்த ஓர் இடத்தையும் அடைய இயலாமல் காசுப்பியன் கடலில் இருந்த ஒரு தீவில் இவர் வறிய நிலையில் இறந்தார். இவரது மகனும், வாரிசுமான சலாலத்தீனால் குறிப்பிடத்தக்க அளவு படைகளை ஒருங்கிணைக்க முடிந்தது. பர்வான் யுத்தத்தில் தளபதியாகப் பயன்படுத்தப்பட்ட மங்கோலிய நீதிபதி சிகி குதுகுவை அவர் தோற்கடித்தார். ஆனால், சில மாதங்கள் கழித்து சிந்து ஆற்று யுத்தத்தில் செங்கிசால் அவரது படைகள் நொறுக்கப்பட்டன. எந்தவொரு எஞ்சிய எதிர்ப்பாளர்களையும் நீக்கியதற்குப் பிறகு 1223இல் சின் அரசமரபுக்கு எதிரான தன் போருக்காகச் செங்கிஸ் திரும்பி வந்தார். குவாரசமியப் போரானது மனித வரலாற்றில் மிகவும் குருதி தோய்ந்த போர்களில் ஒன்றாகும். ஒட்டு மொத்தமாக இப்போரில் இறந்தவர்கள் 20 இலட்சம் - 1.50 கோடி பேர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. குவாரசமிய நிலங்களை அடிபணிய வைத்ததானது சார்சியா மற்றும் எஞ்சிய பாரசீகம் மீது மங்கோலியர்களின் பிந்தைய தாக்குதலுக்கு ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. மங்கோலியப் பேரரசானது பிந்தைய காலத்தில் தனித் தனி கானரசுகளாகப் பிரிக்கப்பட்ட நேரத்தில் குவாரசமிய அரசமரபால் முன்னர் ஆளப்பட்ட பாரசீக நிலங்களானவை ஈல்கானரசால் ஆளப்பட்டன. அதே நேரத்தில், வடக்கு நகரங்களானவை சகதாயி கானரசால் ஆளப்பட்டன. சீனமயமாக்கப்படாத ஒரு நாட்டை முதன் முதலாகப் போரில் ஈடுபட்டு மங்கோலியர்கள் தோற்கடிப்பதைக் கண்ட இந்தப் படையெடுப்பானது மங்கோலியப் பேரரசின் வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. உண்மையில் குவாரசமியப் பேரரசின் மீது படையெடுக்க வேண்டும் என்பது மங்கோலியப் பேரரசின் எண்ணமே கிடையாது. பாரசீக வரலாற்றாளர் ஜுஸ்ஜனியின் கூற்றுப்படி செங்கிஸ் கான் குவாரசமிய ஆட்சியாளரான அலாவுதீன் முகம்மதுவுக்கு வணிகம் வேண்டி ஒரு செய்தி அனுப்பினார். அவரை அண்டையவர் என்று குறிப்பிட்டார். "சூரியன் உதிக்கும் நிலப்பரப்புகளை நான் ஆட்சி செய்கிறேன் அதே நேரத்தில் சூரியன் மறையும் நிலப்பரப்புகளை நீங்கள் ஆட்சி செய்கிறீர்கள். நாம் இருவரும் நட்பு மற்றும் அமைதிக்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோம்". அல்லது செங்கிஸ் கான் கூறியதாவது: "சூரியன் உதிக்கும் நிலங்களின் கான் நான் அதே நேரத்தில் சூரியன் மறையும் நிலங்களின் சுல்தான் நீங்கள்: நாம் இருவரும் நட்பு மற்றும் அமைதிக்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோம்."[5] மங்கோலியர்கள் உண்மையில் "தோல் கூடாரங்களில் வாழ்ந்த மக்களை" ஒன்றிணைத்தது, மங்கோலியாவின் நாடோடிப் பழங்குடியினர், பிறகு துருக்கியர்கள் மற்றும் பிற நாடோடி மக்கள் ஆகியவர்களை ஒன்றிணைத்த போது மிகச் சிறிதளவே இரத்தம் சிந்தப்பட்டது, மற்றும் எந்தவொரு பொருள் சேதமும் கிட்டத்தட்ட ஏற்படவில்லை. ஆனால், சுரசன்கள் உடனான மங்கோலியப் போர்கள் மங்கோலியர்கள் எந்த அளவுக்கு இரக்கமற்றவர்களாக இருக்கக்கூடியவர்கள் என்பதைக் காட்டியது. ஷா முகம்மது முழு மனதின்றி இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், அதுவும் நீடிக்கவில்லை. ஓர் ஆண்டுக்குள்ளாகவே போர் ஆரம்பமானது. மங்கோலிய வணிகக் குழு மற்றும் அதன் தூதர்கள் குவாரசமிய நகரமான ஒற்றாரில் படுகொலை செய்யப்பட்டனர். போர் நடந்த காலம் சுமார் இரண்டு வருடங்களுக்கு சற்றே குறைவானது ஆகும். இப்போரில் குவாரசமியப் பேரரசு அழிந்தது. 19ஆம் நூற்றாண்டு கிழக்கியலாளர் ஈ. ஜி. பிரவுனின் கூற்றுப் படி, செங்கிஸ் கானின் தூதர்களை இனல்சுக் கொன்ற நிகழ்வானது உலக வரலாற்றில் வேறு எந்த நிகழ்வையும் விட மனித இனத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியது ஆகும். பிரச்சினையின் ஆரம்பம்காரா கிதன்கள் தோற்ற பிறகு செங்கிஸ் கானின் மங்கோலியப் பேரரசு குவாரசமியப் பேரரசின் எல்லை வரை பரவி இருந்தது. அதை அலாவுதீன் ஆண்டார். தன்னுடைய நாட்டின் சில பகுதிகளை அப்போது தான் ஷா கைப்பற்றியிருந்தார். பகுதாதுவின் கலீபாவான நசீருடன் ஒரு பிரச்சினையில் மூழ்கியிருந்தார். கலீபாவிற்கு இஸ்லாமின் தலைவராகக் கொடுக்கப்படும் மரியாதையைக் கொடுக்க ஷா மறுத்தார். பொதுவாகக் கொடுக்கப்படும் இலஞ்சம் அல்லது பாசாங்குகள் எதுவும் இன்றி தன்னுடைய பேரரசின் ஷாவாகத் தன்னை அங்கீகரிக்க கலீபாவிடம் கேட்டார். இதன் காரணமாக ஷாவின் தெற்கு எல்லையில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்த நேரத்தில் தான் வேகமாக விரிவடைந்து கொண்டிருந்த மங்கோலியப் பேரரசு தொடர்பு கொண்டது.[6] மங்கோலிய வரலாற்றாளர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக உள்ளனர். அது மகா கானுக்கு குவாரசமியப் பேரரசின் மீது படையெடுக்கும் எண்ணம் எதுவும் கிடையாது, அவர் வணிகத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார் என்பதாகும். ஒரு வேளை அரசியல் கூட்டணியில் கூட ஆர்வம் கொண்டு இருந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.[7] குச்லுக் கஷ்கரைக் கைப்பற்றியதை அறிந்த செங்கிஸ் கான் செபேயின் தலைமையில் சுமார் 20,000 வீரர்களை அனுப்பினார். ஷாவும் குச்லுக்கிற்கு எதிராக சுமார் 60,000 வீரர்களுடன் சென்றார். செபேயின் படையைச் சந்தித்த ஷா அதனுடன் சண்டையிட்டார். சண்டை வெற்றி தோல்வியின்றி முடிந்தது. எனினும், மங்கோலியர்களின் ஆக்ரோசமான சண்டை ஷாவின் மனதில் பதிந்து போனது. ஷாவின் முன்னாள் அவர்களைப் பற்றி யாராவது பேசினால், "அவர்களைப் போல் தைரியமான, உறுதியான சண்டையிடுபவர்களை நான் கண்டது கிடையாது" என்று கூறினார்.[8] ஒரு முறை குவாரசமிய வணிகர்கள் மங்கோலியாவிற்குச் சென்றிருந்தனர். குவாரசமியாவில் 20 அல்லது 30 தினார்களுக்கு விற்கப்படும் துணிக்கு 3 பாலிஷ் (225 தினார்கள்) தங்கக் காசுகள் என விலை நிர்ணயித்தனர். "நாம் துணியையே கண்டதில்லை என இந்த வணிகன் நினைக்கிறானா?" எனச் செங்கிஸ் கான் கோபம் கொண்டார். முழுவதும் துணிகளைக் கொண்ட ஒரு கிடங்கை அவனிடம் காண்பித்தார். அவனைக் கைது செய்து அவன் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன. பிறகு அவனை விடுதலை செய்து 1 பாலிஷ் (75 தினார்கள்) விலைக்கு வாங்கிக் கொண்டனர். செங்கிஸ் கானின் வணிக ஒப்பந்தத்திற்கான விருப்பம் ஷாவுக்குப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. சீனாவின் சொங்குடுவில் (பெய்ஜிங்) இருந்து வந்திருந்த ஷாவின் தூதன் பகால்தீன் ரசி சின் அரசமரபினுடனான போரின் போது அந்நகரத்தைத் தாக்கிய மங்கோலியர்களின் காட்டு மிராண்டித்தனத்தைப் பெரிதுபடுத்தி விளக்கினான்.[9] ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய இன்னொரு விஷயமானது மங்கோலியர்கள் குவாரசமியாவைத் தாக்குவதற்கு சில வருடங்களுக்கு முன்பு பகுதாதுவின் கலீபா மங்கோலியர்களுக்கும் ஷாவுக்கும் இடையில் போரை ஏற்படுத்த முயற்சித்தார் என்பதாகும். கலீபா செங்கிஸ் கான் உடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்த முயற்சித்தார். ஏனெனில் நசீருக்கும் ஷாவுக்கும் இடையில் பிரச்சனை இருந்தது. பட்டத்தின் மூலமோ அல்லது சாதாரணமாகவோ தன்னை ஒப்பற்றவன் என்று கூறிக் கொண்ட எந்த ஆட்சியாளருடனும் கூட்டு வைக்கக் கான் விரும்பவில்லை. பிற்காலத்தில் கலீபகமும் அழிந்து போனது. அதற்குக் காரணம் செங்கிஸ் கானின் பேரன் குலாகு. ஷா தன்னை குவாரசமியாவின் சுல்தான் என்று அறிவிக்குமாறு கலீபாவிடம் கேரினார். ஆனால், நசீருக்கு அந்த எண்ணமே இல்லை. ஏனெனில், நசீரைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள ஷா மறுத்தார். எது எப்படி இருப்பினும் ஒன்றை மட்டும் நாம் உறுதியாக கூற முடியும் அது செங்கிஸ் கான் போரைப் பற்றிய பேச்சையே ஒதுக்கினார் என்பது. ஏனெனில், அந்நேரத்தில் அவர் சின் அரசமரபுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். வணிகத்தின் மூலம் ஏராளமான செல்வத்தைப் பெற முடியும் என்று நினைத்தார்.[சான்று தேவை] புகாராவைச் சேர்ந்த அலி கவாஜா, ஒற்றாரைச் சேர்ந்த யூசுப் கன்கா, மற்றும் குவாரசமியப் பேரரசைச் சேர்ந்த மகமுது ஆகியோரைக் குவாரசமியாவிற்குச் செங்கிஸ் கான் அனுப்பினார். தூதுவர்கள் செங்கிஸ் கான் கூறியதாக ஷாவிடம் கூறியதில் "உங்களை என் விருப்பத்திற்குரிய மகனாகப் பார்க்கிறேன்" என்ற வரியும் இடம் பெற்றது. இப்பேச்சைக் கேட்ட ஷா மகமுதுவைத் தனியாக அழைத்தார். "நீ குவாரசமியாவைச் சேர்ந்தவன். குவாரசமியர்களிடம் நீ உண்மையாக இருக்க வேண்டும்." தன் கேள்விகளுக்கு உண்மையாகப் பதிலளித்தால் அவனுக்குச் சன்மானம் அளிப்பேன் என்றார். தன் கையில் இருந்த ஆபாரணத்தில் இருந்து ஒரு முத்தை நீக்கி அவன் கையில் கொடுத்தார். தன் ஒற்றனாகச் செங்கிஸ் கானிடம் செயல்பட வேண்டும் என்றார். "உண்மையைச் சொல். செங்கிஸ் கான் டோம்கச்சை (பெய்ஜிங்) வென்றுவிட்டதாகக் கூறுகிறானே? இது உண்மையா அல்லது பொய்யா?" ஷா கேட்டார். "உண்மை தான்" அவன் கூறினான். "என் நாட்டின் அளவு மற்றும் இராணுவத்தின் வலிமை உனக்குத் தெரியும். பேச்சுக்களில் இச்சபிக்கப்பட்டவன் என்னைத் தன் மகன் என்கிறான். அவன் இரானுவம் எவ்வளவு பெரியது?" ஷா கேட்டார். "செங்கிஸ் கானின் இராணுவம் மிகச்சிறியது" மகமுது பதிலளித்தான். பிறகு அவன் அனுப்பி வைக்கப்பட்டான்.[10] பின்னர் செங்கிஸ் கான் முஸ்லிம்கள் 500 பேர் அடங்கிய ஒரு ஒட்டகத் தொடர்வண்டியை குவாரசமியாவுக்கு வணிகத் தொடர்பு ஏற்படுத்த அனுப்பினார். அவர்கள் 1218ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில் சென்றடைந்தனர். ஒட்டகத்தின் கழுத்தளவுடைய சுத்தத் தங்கம், காண்டாமிருகக் கொம்புகள், வெள்ளை ஒட்டகக் கம்பளியால் செய்யப்பட்ட துணிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சென்றனர். இப்பொருட்கள் ஒவ்வொன்றும் 50 தினார்கள் அல்லது அதற்கு மேலும் மதிப்புடையவையாக இருந்தன. ஆனால் குவாரசமிய நகரான ஒற்றாரின் ஆளுநரும் ஷாவின் மாமாவுமான இனல்சுக் அந்த வணிக வண்டியின் உறுப்பினர்களைக் கைது செய்தார். அந்த வணிக வண்டியானது குவாரசமியாவுக்கு எதிரான ஒரு சதித் திட்டம் என்றார்.[7] மேலும் சுல்தானுக்கு ஒரு பொய்க் கடிதத்தை எழுதினார். அதில் "இவர்கள் வணிகர்கள் என்ற போர்வையில் வந்துள்ளனர். தங்களுக்குத் தேவையில்லாதவற்றை விசாரிக்கின்றனர். சாதாரண மக்களுடன் இருக்கும் போது "உங்களுக்கு வரப்போவதைப் பற்றி நீங்கள் சந்தேகமே கொள்ள வேண்டாம். உங்களால் சண்டையிட முடியாதவை உங்களுக்கு நடக்கும்." எனக் கூறி மிரட்டுகின்றனர்" எனக் கடிதம் எழுதினார். அவ்வணிகர்களைக் கொன்றார். செங்கிஸ் கான் பிறகு இரண்டாவது குழுவாக 3 தூதுவர்களை ஷாவைச் சந்திக்க அனுப்பினார். அக்குழுவில் 1 முஸ்லிமும் 2 மங்கோலியர்களும் இருந்தனர். ஒற்றாரில் பிடிக்கப்பட்ட வணிக வண்டியானது விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அந்த ஆளுநர் தண்டனைக்காக ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறச் சென்றனர். 2 மங்கோலியர்களுக்கும் மொட்டையடித்த ஷா முஸ்லிமின் தலையை வெட்டி அவர்களைச் செங்கிஸ் கானிடமே அனுப்பி வைத்தார். அந்த வணிக வண்டியின் உறுப்பினர்களும் கொல்லப்பட வேண்டும் என்று முகம்மது ஆணையிட்டார். இது கானுக்குக் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதையாகக் கருதப்பட்டது. ஏனெனில் கான் தூதர்களை "புனிதமானவர்களாகவும், மீறப்படக்கூடாதவர்களாகவும்" கருதினார்.[11] இதன் காரணமாகச் செங்கிஸ் கான் குவாரசமிய அரசமரபைத் தாக்கினார். தியான் சான் மலைகளைக் கடந்த மங்கோலியர்கள் 1219ல் ஷாவின் பேரரசுக்குள் வந்தனர்.[12] திட்டம் மற்றும் ஒழுங்கமைப்புமுக்கியமாகப் பட்டுப் பாதையில் இருந்த ஒற்றர்கள் போன்ற பல்வேறு உளவுத்துறை ஆதாரங்கள் மூலம் தகவல்களைத் திரட்டிய பிறகு செங்கிஸ் கான் கவனமாகத் தன்னுடைய ராணுவத்தைத் தயார் செய்தார். அவருடைய இராணுவமானது முந்தைய படையெடுப்புகளினால் வேறுவிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது.[13] அவர் செய்த மாற்றங்களானவை மற்றவர்களால் அஞ்சப்பட்ட மங்கோலியக் குதிரைப்படையுடன் துணைப்படையினரைச் சேர்த்ததாகும். கன மற்றும் மெல்லிய ரகத் துணைப்படையினரைச் செங்கிஸ் கான் சேர்த்தார். தனது பாரம்பரிய பலமான எளிதில் நகரக்கூடிய நாடோடிக் குதிரைப்படையுடன் செங்கிஸ் கான் சீனப் போர் முறைகளில் பலவற்றை கலந்தார். அவற்றுள் முக்கியமாக முற்றுகைப் போர் முறையைக் குறிப்பிடலாம். வெடிமருந்து மற்றும் கோட்டைச் சுவர்களின் மீது 20 அடி நீள அம்புகளை எய்யக் கூடிய பெரிய முற்றுகை வில்கள் ஆகியவை வண்டிகளில் ஏற்றப்பட்டன. மங்கோலிய உளவுத்துறை அமைப்பானது மிகவும் வல்லமைமிக்கதாக இருந்தது. ராணுவ மற்றும் பொருளாதார உறுதி மற்றும் தாக்குப்பிடிக்கக் கூடிய திறமை ஆகியவற்றை முழுவதுமாக வேவு பார்க்காமல் மங்கோலியர்கள் என்றுமே ஒரு எதிரியைத் தாக்கியது கிடையாது. உதாரணமாக ஹங்கேரி மற்றும் போலந்தின் ராணுவங்களை இரண்டு வெவ்வேறு போர்களில் இரண்டு நாள் இடைவெளியில் அழிக்கும் முன் சுபுதை மற்றும் படு கான் மத்திய ஐரோப்பாவை வேவு பார்க்க ஒரு வருடம் எடுத்துக்கொண்டனர்.[14] இந்தப் படையெடுப்பில் கான் முதன்முதலில் தனது வரப்போகும் படையெடுப்புகள், தனது மகன்கள் மற்றும் பேரன்களின் படையெடுப்புகள் ஆகியவற்றுக்கு முன்மாதிரியாக மறைமுக தாக்குதலின் பயன்பாட்டைக் காட்டினார். தனது ராணுவத்தைப் பிரித்த கான் ஒரு படையை ஷாவைக் கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அனுப்பினார். இதன் காரணமாக ஷா தனது சொந்த நாட்டுக்குள்ளேயே உயிர் பிழைப்பதற்காக ஓடினார்.[6] பிரிக்கப்பட்ட மங்கோலியப் படைகள் ஷாவின் படைகளைத் துண்டுதுண்டாக அழித்தன. நாடானது முற்றிலுமாக பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டது. இதே முறை பின்வந்த படையெடுப்புகளிலும் பின்பற்றப்பட்டது. ![]() ஷாவின் ராணுவமானது 40,000 பேரில் இருந்து 200,000 பேரை கொண்டதாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கோட்டைக் காவல் படையினர். இவர்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு முக்கியமான நகரங்களில் காவல் பணியை மேற்கொண்டனர். இவர்களில் ஒரு உயர் தர குதிரைப்படை மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு சமர்கந்த் அருகில் உதவி படையாக நிறுத்தப்பட்டிருந்தது. குவாரசமியப் பேரரசானது தனது பெரும்பாலான பகுதிகளை அப்போதுதான் வென்றிருந்தது. ஷாவுக்கு ஒரு பயம் இருந்தது. அவரது ராணுவம் ஒரு பெரிய படையாக ஓர் அடுக்கு நபர்களின் கீழ் வைக்கப்பட்டிருந்தால் தனக்கு எதிராக திரும்பக்கூடும் என்று அஞ்சினார். மேலும் சீனாவிலிருந்து ஷாவுக்கு வந்த தகவல்கள் மங்கோலியர்கள் முற்றுகைப் போர் முறையில் சிறந்தவர்கள் இல்லை என்று அறிவுறுத்தின. மேலும் அவர்கள் பாதுகாக்கப்பட்ட கோட்டைகளை வெல்லும்போது பிரச்சனைகளைச் சந்தித்ததனர் என்று அறிவுறுத்தின. படையெடுப்பு ஆரம்பமானதும் படைகளை நிறுத்துதலில் ஷாவின் முடிவுகள் பெரும் தோல்வியில் முடிந்தன. ஏனெனில் மங்கோலிய வேகம், எதிர்பாராத தாக்குதல் மற்றும் நீடித்த முயற்சிகள் ஷா தனது படைகளைத் திறமையாக நகர்த்துவதைத் தடை செய்தன. படைகள்இப்போரின் படை வீரர்களின் எண்ணிக்கை மதிப்பீடானது எப்போதுமே விவாதத்திற்கு உள்ளான ஒன்றாகவே இருந்துள்ளது. போர் நடந்தபோது மற்றும் போர் நடந்து சிறிது காலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து (அல்லது தற்போது எஞ்சி கிடைக்கப் பெறுகின்ற) ஆதாரங்களுமே மங்கோலியர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததாக குறிப்பிடுகின்றன.[15] பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக ரஷித் அல்-தின் (இல் கானேட்டின் வரலாற்றாசிரியர்) ஷாவுக்கு 4 லட்சம் போர் வீரர்களும் கானுக்கு 6 முதல் 7 லட்சம் போர் வீரர்கள் வரையும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[16] இல் கானேட்டின் வரலாற்று ஆசிரியரான ஜுவய்னி தனது டரிக்-இ ஜஹான்குஷய் நூலில் மங்கோலிய ராணுவத்தின் அளவாக 7 லட்சத்தைக் குறிப்பிடுகிறார். செங்கிஸ் கான் காலத்தில் வாழ்ந்த மின்ஹஜ்-இ-சிராஜ் ஜுஸ்ஜனி என்ற முஸ்லிம் வரலாற்று ஆசிரியர் செங்கிஸ் கானின் படை வீரர்களின் எண்ணிக்கை 8 லட்சம் என்று குறிப்பிடுகிறார். நவீன வரலாற்று ஆசிரியர்கள் இந்த எண்ணிக்கைகள் எதார்த்தத்தை எந்த அளவுக்குப் பிரதிபலித்தன என இன்னும் விவாதிக்கின்றனர். டேவிட் மார்கன் மற்றும் டெனிஸ் சினோர் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் இந்த எண்ணிக்கைகள் உண்மை அளவு அல்லது ஒப்பீட்டு அளவு என இரண்டில் ஏதாவது ஒன்றிலாவது சரியானது தானா என சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் ஜான் மேசன் ஸ்மித் என்ற வரலாற்று ஆசிரியர் இரண்டு ராணுவத்துக்குமே இந்த எண்ணிக்கை சரியானது தான் என்று குறிப்பிடுகிறார். செங்கிஸ் கான் மற்றும் ஷாவின் ராணுவங்களின் அதிகமான போர்வீரர்களின் எண்ணிக்கை சரியானதுதான் என்கிறார். ரஷித் அல்-தின்னின் கூற்றான 1260களில் குவாரசமிய இராணுவமானது 300,000 வீரர்களையும் தங்க நாடோடிக் கூட்டத்தின் இராணுவமானது 3 முதல் 6 லட்சம் வீரர்களையும் கொண்டிருந்தது என்கிறார்.[17] சினோர் குவாரசமியப் படையானது 400,000 வீரர்களையும் ஆனால் மங்கோலிய இராணுவமானது 150,000 வீரர்களையும் கொண்டு இருந்தது என்கிறார். மங்கோலிய ஆதாரமான மங்கோலியர்களின் ரகசிய வரலாறு 1206ல் மங்கோலியப் போர்வீரர்களின் மொத்த எண்ணிக்கை 105,000 என்கிறது. இது ஒரு படையெடுப்பில் மட்டும் இருந்த மங்கோலிய வீரர்களின் எண்ணிக்கை கிடையாது மாறாக மங்கோலியப் பேரரசுக்கான மொத்த எண்ணிக்கை ஆகும். மேலும் 1211ல் 134,500 பேர் என்கிறது. 1227ல் ஒருசில தொலைதூரப் படையினரைத் தவிர வீரர்களின் எண்ணிக்கை 129,000 என்கிறது. அதே நேரத்தில் குவாரசமியாவின் படை வீரர்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள நம்பத்தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை.[18] கார்ல் ஸ்வெர்ட்ரப் என்கிற வரலாற்று ஆசிரியர் பல்வேறு ஆதாரங்கள் மற்றும் மதிப்பீட்டு முறைகளின்படி மங்கோலிய வீரர்களின் எண்ணிக்கையை 75,000 என்கிறார். மேலும் அவர் குவாரசமிய வீரர்களின் எண்ணிக்கை ஒரு சில கோட்டை காவல் படையினரைத் தவிர்த்து 40,000 என்கிறார். மேலும் அவர் சமகாலப் பதிவுகள் அனைத்துமே மங்கோலிய இராணுவமானது குவாரசமிய இராணுவத்தை விட பெரியதாக இருந்தது எனக் குறிப்பிடுவதாகக் கூறுகிறார். மங்கோலிய எதிர்ப்பு வரலாற்று ஆசிரியரான ஜுஸ்ஜனி மங்கோலிய வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியது போலவே மங்கோலிய ஆதரவு வரலாற்று ஆசிரியர்களான ரஷித் அல்-தின் போன்றவர்களால் குவாரசமிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து காட்டப்பட்டதாகக் கூறுகிறார்.[19] மெக்லின் என்ற வரலாற்றாசிரியரும் 400,000 என்பது மிகவும் அதிகப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்கிறார். கோட்டை காவல் படையினர் உட்பட 200,000 என்பதே எதார்த்தமான எண்ணிக்கை என்று கூறுகிறார்.[20] அதேபோல மங்கோலிய வீரர்களின் எண்ணிக்கை 120,000 என மதிப்பிடுகிறார். சீனாவில் இருந்த மங்கோலிய வீரர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தம் 200,000 என்கிறார்.[21] முகலியைத் தவிர தனது திறமையான அனைத்துத் தளபதிகளையும் செங்கிஸ் கான் இப்போருக்கு அழைத்து வந்திருந்தார். செங்கிஸ் தன்னுடன் ஏராளமான அயல்நாட்டவரையும் அழைத்து வந்திருந்தார். முக்கியமாகச் சீனர்களை அழைத்து வந்திருந்தார். இந்த அயல்நாட்டவர் முற்றுகைப் போர் வீரர்கள், பாலம் கட்டுபவர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற திறமையானவர்கள் ஆவர். மங்கோலியப் பேரரசின் ராணுவ வலிமைக்கு தீர்க்கமான ஆதாரமானது சில தசாப்தங்களுக்குப் பிறகு குலாகு கானால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நமக்குத் தெரியவருகிறது. அந்த நேரத்தில் குலாகு பாரசீகம், தற்கால துர்க்மேனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட தற்கால உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் பகுதிகளைத் தவிர முன்னாள் குவாரசமியப் பேரரசின் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளையும் ஆண்டுவந்தார். கணக்கெடுப்பின்போது ஆரம்பப் படையெடுப்பிலிருந்து மக்கள்தொகை வகையில் மீண்டெழ அப்பகுதிக்கு 40 வருடங்கள் கிடைத்திருந்தது. அப்பகுதிகளின் மக்கள் தொகையானது 5 தியுமன் போர்வீரர்களைச் சேர்க்கும் அளவுக்கு இருந்தது.[22] பொதுவாக 1 தியுமன் என்பது 10,000 வீரர்கள், ஆனால் நடைமுறையில் சராசரியாக 5,000 வீரர்கள் தான் இருப்பர்.[23] குலாகுவின் கணக்கெடுப்பு சரியெனில் முன்னாள் குவாரசமிய நிலப்பரப்புகள் 25,000 வீரர்களை கொடுக்கக் கூடியவையாக இருந்தன. இது ஸ்வெர்ட்ரப் என்ற வரலாற்று ஆசிரியரின் எண்ணிக்கையான 40,000 ஒத்துள்ளது. 1219ல் திரான்சோக்சானியாவின் மீது படையெடுத்தபோது செங்கிஸ் கான் சீன கவண் ஆயுத வல்லுனர்களைப் பயன்படுத்தினார். 1220ல் அவர்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டனர். அந்த கவண்களில் வெடி மருந்துகளால் ஆக்கப்பட்ட குண்டுகளை அவர்கள் ஒருவேளை பயன்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அந்நேரத்தில் சீனர்கள் வெடி மருந்தை பயன்படுத்தி வந்தனர்.[24] செங்கிஸ் கான் திரான்சோக்சானியா மற்றும் பாரசீகத்தை வெல்லும்போது வெடி மருந்துகளைப் பயன்படுத்தத் தெரிந்த பல சீனர்கள் அவரது ராணுவத்தில் பணியாற்றினார்.[25] வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளின் படி மங்கோலியப் படையெடுப்பானது சீன வெடிமருந்து ஆயுதங்களை மத்திய ஆசியாவுக்குக் கொண்டு வந்தது. இவற்றுள் ஹுவோச்சோங் எனப்படும் ஒரு சீன பீரங்கியும் அடங்கும்.[26] குவாரசமியப் பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மைமங்கோலிய இராணுவம் ஷாவின் ராணுவத்தை விடப் பெரிதாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. கண்டிப்பாக மங்கோலியக் குதிரைப் படையானது ஷாவின் குதிரைப் படையை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு யுத்தத்திலும் மங்கோலியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குவாரசமியப் பேரரசிலிருந்த ஒற்றுமையின்மையால் மங்கோலியர்கள் பலனடைந்தனர். பொதுவாக வலிமையான மற்றும் ஒன்றிணைந்த மாநிலமாகக் காட்டப்பட்டாலும் ஷாவின் பகுதிகள் அந்நேரத்தில்தான் வெல்லப்பட்டிருந்தன. அவருக்கு சொல்லுமளவுக்கு விசுவாசமாக அப்பகுதிகள் இல்லை. ஷா தனது பெரும்பாலான படையினரை நம்ப முடியாத நிலையில் தான் இருந்தார். வரலாற்றாளர் சி. இ. போஸ்வொர்த்தின் கூற்றுப்படி: "குவாரசமிய அரசமரபானது பிரபலமற்று பொதுவான வெறுப்புக்கு ஆளாகி இருந்தது. தான் ஆண்ட எந்த ஒரு மாகாணத்திலும் தனக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதில் ஷாவால் வெற்றி பெற முடியவில்லை."[27] இதன் காரணமாக கோட்டைக்காவல் படையினர் சுயமாக இயங்கிய உள்ளூர் ஆளுநர்களால் கட்டுப்படுத்தப்பட்டனர். ஒரு பெரிய பொதுவான போர் உத்தியைப் பயன்படுத்துவதில் பெரும்பாலான மாகாணங்கள் ஈடுபடவில்லை அல்லது எதிரிகளுக்கு எதிராக ஓரணியில் திரள படைகள் முயற்சிக்கவில்லை.[28] மேலும் தற்போது பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள் அனைத்துமே சிறிது காலத்திற்கு முன்னர் தான் ஷாவால் தாக்கப்பட்டிருந்தன. உதாரணமாக 1220ல் நிசாபூரின் வழியே சென்ற ஷா மக்களிடம் அரண்களைச் சரிசெய்யச் சொன்னார். அந்த அரண்கள் சில வருடங்களுக்கு முன் அப்பகுதியை வெல்லும்போது ஷாவால் சேதப்படுத்தப்பட்டு இருந்தன.[29] ஒற்றுமையின்மை காரணமாக மங்கோலியர்கள் வந்தபோது ஷாவின் இராணுவத்தின் பெரும்பகுதி சிறிதளவு சண்டையிட்டனர் அல்லது சண்டையிடாமல் இருந்துவிட்டனர். இபின் அல்-அதிரின் கூற்றுப்படி, புகாரா தாக்கப்பட்டபோது குவாரசமிய இராணுவமானது நகரை அப்படியே விட்டுவிட்டு ஓடியது. இதன் காரணமாக குடிமக்கள் எதிரிகளுடன் ஒப்பந்தம் போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.[30] பின்னர் சமர்கந்து தாக்கப்பட்டபோது ஷாவுக்கு விசுவாசமில்லாத நகரத்தின் துருக்கிய வீரர்கள் மங்கோலியர்களைப் பற்றிக் கூறியதாகக் கூறப்படுவதாவது: "நாங்கள் அவர்களின் இனம். அவர்கள் எங்களைக் கொள்ள மாட்டார்கள்". 4 நாட்கள் போரிட்டவர்கள் 5வது நாள் நகரத்தை மங்கோலியர்களிடம் ஒப்படைத்தனர். எனினும் அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவர்கள் அனைவரும் நகரத்தின் மக்களுடன் கொல்லப்பட்டனர்.[31] பால்க் நகரின் கோட்டைக் காவல் படையினர் சண்டையிடாமல் சரணடைந்தனர். மெர்வ் நகரக் கோட்டைக் காவல் படையினர் 7 நாட்களுக்குப் பிறகு சரணடைந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர்களும் கொல்லப்பட்டனர்.[32] பெரிய நகரங்களில் கடுமையான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரே நகரம் ஒற்றார் ஆகும். 6 மாதங்களுக்குத் தாக்குப் பிடித்த அந்நகரம், பிறகு மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டது. இதில் மங்கோலியர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இபின் அல்-அதிரின் கூற்றுப்படி, ஊர்கெஞ்ச் நகரில்தான் மங்கோலிய இறப்புகள் குவாரசமிய இழப்புகளை விட அதிகமாக இருந்ததன. ஒட்டுமொத்த போரிலேயே இவ்வாறு நடந்தது அங்கேதான்.[33][34] ஷாவின் இராணுவத்தின் நம்பகமற்ற தன்மை ஒரு இடத்தில் வெளிப்பட்டது. ஷாவின் மகன் ஜலால் அல்-தின்னின் குதிரைப்படையினர் போர் நடந்த இடத்தை விட்டு விலகிச் சென்றனர். அதற்கு ஒரே காரணம் போரில் கிடைத்த பொருட்களைப் பிரிப்பதில் ஆப்கானிய மற்றும் துருக்கிய நேசப்படைகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையே ஆகும். இதன் காரணமாக ஜலால் அல்-தின்னின் படைகள் வெகுவாகக் குறைந்தன. இதனால் மங்கோலியர்கள் சிந்து நதிப் பகுதியில் அவர்களை எளிதாக விரட்டினர்.[35] மங்கோலியர்கள் இச்சூழ்நிலையைத் தங்கள் நன்மைக்கு முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டனர். வணிகர்கள் மங்கோலியர்களின் ஒற்றர்களுக்கு உதவினர். ஏனெனில் மங்கோலிய வெற்றியானது வணிகர்களுக்கு நன்மை பயக்கும் என்ற நிலை இருந்தது. வணிகர்கள் நகரவாசிகளைச் சரண் அடையத் தூண்டும் வதந்திகளைப் பரப்பினர்.[36] குவாரசமிய அமைப்புமங்கோலியர்களுக்கு இன்னொரு விஷயமும் நன்மையாக அமைந்தது. அது பெரும்பான்மையான சீனா, கொரியா, மத்திய/மேற்கு ஐரோப்பா மற்றும் பெரும்பான்மையான பல பகுதிகளைப் போல் இல்லாமல் குவாரசமியாவில் அரண்கள் அதிகமாகக் கிடையாது. பேரரசின் பெரும்பான்மையான பகுதிகளில் முக்கிய நகரங்களின் சுவர்களுக்கு வெளியே கோட்டைகள் எதுவும் கிடையாது. மிக முக்கிய நகரங்களான சமர்கந்து மற்றும் ஒற்றார் ஆகியவற்றின் சுவர்கள் மண் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஆதலால் மங்கோலிய முற்றுகை எந்திரங்களால் எளிதாக இடிக்கப்பட்டன.[37] இதன் காரணமாக மங்கோலியர்கள் பல சிறு முற்றுகைகள் அல்லது சில நேரங்களில் சீனாவைப்போல் ஒரு பல வருட முற்றுகை என நேரம் ஆகாமல் பேரரசின் பெரிய பகுதிகளை எளிதாக கடந்தனர். நகரங்களை தாங்கள் நினைத்த மாத்திரம் குறுகிய நேரத்திலேயே வென்றனர். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானை வெல்வது மங்கோலியர்களுக்குச் சிறிது கடினமாக இருந்தது. ஏனெனில் ஆப்கானிஸ்தானில் அரண்கள் இருந்தன. ஆஷியர் கோட்டையானது 15 மாதங்களுக்கு முற்றுகையைத் தாக்குப் பிடித்தது (இதனால் மங்கோலிய ராணுவத்தின் குறிப்பிடத்தக்க பகுதியினர் இதில் ஈடுபடுத்தப்பட வேண்டி இருந்தது). சைஃப்-ருத் மற்றும் துலக் ஆகிய கோட்டைகள் வெல்லப்படும் போது மங்கோலியர்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. பாமியான் முற்றுகையானது சகதையின் அன்பு மகன் முத்துகனின் உயிரை வாங்கியது.[38] பேரரசின் நகர்புற மக்கள் தொகையானது அதிகப்படியான சிறு பட்டணங்களில் வாழாமல் ஒரு சில பெரிய நகரங்களில் வாழ்ந்தது. இதுவும் மங்கோலிய வெற்றிக்கு உதவியாக இருந்தது. பேரரசின் மக்கள்தொகையானது படையெடுப்பின்போது 50 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பரந்த நிலப்பரப்பில் இதனால் மக்கள் தொகை அடர்த்தி குறைவாகவே இருந்தது.[39][40] டெர்டியஸ் சான்ட்லர் மற்றும் ஜெரால்டு பாக்ஸ் ஆகிய வரலாற்று மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழ்க்கண்ட மக்கள் தொகை மதிப்புகளைப் பேரரசின் பெரிய நகரங்களுக்குக் கொடுக்கின்றனர்:[41]
மொத்த மக்கள் தொகையானது குறைந்தது 5,20,000 அதிகபட்சமாக 8,50,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[42] குவாரசமிய இராணுவத்தில் 40,000 குதிரைப் படையினர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் துருக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள். குவாரசமியாவின் முக்கிய நகரங்களில் போராளிகள் இருந்தனர். ஆனால் அவர்கள் போர் புரியும் தரத்தில் இல்லை. இதனால் ஷாவால் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களை அணிவகுக்கச் செய்ய முடியவில்லை.[43] சுமார் 7 இலட்சம் மொத்த மக்கள் தொகை கொண்ட இப்பேரரசின் முக்கிய நகரங்கள் 1,05,000 முதல் 1,40,000 வரையான எண்ணிக்கையில் (15 முதல் 20 சதவீத மக்கள் தொகை) திடகாத்திரமான ஆண்களைப் போர் புரியும் வயதில் கொண்டிருந்தன. ஆனால் இவர்களில் ஒரு சிறு பகுதியினரே பயிற்சி மற்றும் ஆயுதங்கள் கொண்ட அதிகாரப்பூர்வப் போராளிகளாக இருந்தனர். ஆரம்பப் படையெடுப்புமங்கோலிய மற்றும் குவாரசமியப் பேரரசுகள் அண்டை நாடுகளாக இருந்த போதிலும் அவற்றின் மையப்பகுதிகள் வெகுதொலைவில் இருந்தன. அவற்றுக்கு இடையில் பல்வேறு மலைத்தொடர்கள் இருந்தன. இதனால் படை எடுப்பவர்கள் மலைத்தொடர்களைத் தாண்டி வர வேண்டியிருந்தது. இது பெரும்பாலும் ஒரு முக்கியமான காரணமாக இப்படையெடுப்பில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இருந்தும் மங்கோலியர்களின் கை ஓங்கியதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். குவாரசமிய ஷா மற்றும் அவரது ஆலோசகர்கள் மங்கோலியர்கள் சுங்கரியா வாயில் வழியாக வருவார்கள் என்று கணித்தனர். இது ஒரு இயற்கையான மலை வழி ஆகும். இது கருப்பு சீனா (தற்போது வெல்லப்பட்ட) மற்றும் குவாரசமியப் பேரரசுகளுக்கு இடையில் அமைந்திருந்தது. போருக்கு முன்னர் குவாரசமியப் பாதுகாப்புப் படையினருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது சிர் தர்யா பகுதிகளில் இருந்த பட்டணங்களைத் தாண்டிச் சென்று சுங்கரியா வாயில் வழியாக இராணுவத்தின் மூலம் அடைப்பது. ஏனெனில் மங்கோலியாவில் இராணுவத்தைத் தயார் படுத்த செங்கிஸ் கானுக்குப் பல மாதங்கள் ஆகும். குளிர்காலத்திற்கு பின்னர் தான் அவ்வழியாக செங்கிஸ் கான் வரவேண்டும். குவாரசமியாவின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்களது உத்தியை மெருகேற்ற நேரம் இருக்கும் என்று கருதினர். ஆனால் முதல் அடியை செங்கிஸ் கான் அடித்தார்.[44] போர் அறிவிக்கப்பட்ட உடனேயே மேற்கு நோக்கிச் செல்ல ஒரு படைக்கு செங்கிஸ் கான் ஆணை வழங்கினார். தெற்கில் இருந்த தியான் சான் மலைகளை உடனடியாகக் கடந்து குவாரசமியப் பேரரசின் கிழக்குப் பகுதியில் இருந்த வளமான ஃபெர்கானா பள்ளத்தாக்கைத் தாக்க வேண்டும் என்பதே அந்த ஆணை. அப்படையினரின் எண்ணிக்கை 20,000–30,000 வரை இருந்திருக்க வாய்ப்புண்டு. அதற்குமேல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படை செங்கிஸ் கானின் மகன் சூச்சி மற்றும் அவரது முக்கியத் தளபதி செபே ஆகியோர் தலைமையில் சென்றது. தியான் சான் மலை வழிகளானது சுங்கரியா வாயிலை விட மிகவும் கடினமானது. இப்பயணத்தை மேலும் கடினமாக்கும் வகையில் அவர்கள் குளிர்காலத்தின் நடுவில் அப்பகுதியைக் கடக்க முயற்சித்தனர். குளிர்காலத்தில் 5 அடிக்குமேல் பனி பொழிந்திருக்கும். மங்கோலியர்கள் அப்பகுதியைக் கடக்கும்போது இழப்பைச் சந்தித்தனர். கடந்த பின்னர் களைத்து இருந்தனர். ஆனால் ஃபெர்கானா பள்ளத்தாக்கிற்கு ஒரு மங்கோலியப்படை வந்தது குவாரசமியத் தலைமையை வியப்பில் ஆழ்த்தியது. போரின் போக்கையே மாற்றியது. இந்த அணிவகுப்பை ஆல்ப்ஸ் மலைகளை ஹனிபால் கடந்ததன் மத்திய ஆசிய இணையாகக் குறிப்பிடலாம். இரண்டின் விளைவுகளும் பேரழிவாக இருந்தது. ஏனெனில் இந்த மங்கோலிய இராணுவமானது கவனத்தைத் திசை திருப்பாவா அல்லது இது தான் முதன்மையான மங்கோலிய இராணுவமா என ஷாவுக்குத் தெரியாது. ஷா தனது பேரரசின் ஒரு வளமான பகுதியை படைகள் மூலம் பாதுகாக்க வேண்டும். எனவே ஷா தன் உயரடுக்கு குதிரைப் படை இருப்பை அனுப்பினார். இதன் காரணமாக ஷாவால் தன்னுடைய முதன்மை இராணுவத்துடன் திறம்பட எங்கும் அணிவகுத்துச் செல்ல முடியவில்லை. செபே மற்றும் சூச்சி தங்களது இராணுவத்தை நல்ல வடிவில் வைத்திருந்தனர். பள்ளத்தாக்கைச் சூறையாடிய அதே நேரத்தில் ஒரு பெரிய படையால் தோற்கடிக்கப்படுவதை அவர்கள் தவித்தனர். இந்நேரத்தில் மங்கோலியர்கள் பிரிந்து மீண்டும் மலைகளைத் தாண்டி பயணிக்க ஆரம்பித்தனர்: செபே தெற்குப் பகுதிக்கு அணிவகுத்து குவாரசமியப் பகுதிக்கு உள்ளே சென்றார். அதேநேரத்தில் சூச்சி பெரும்பான்மையான படையுடன் வடமேற்கு திசைக்கு அணிவகுத்துத் தாக்குதல் பொருளாகி இருந்த, சிர் தர்யாவில் இருந்த நகரங்களைக் கிழக்கிலிருந்து தாக்கச் சென்றார்.[45] ஒற்றார்அதேநேரத்தில் சகதை மற்றும் ஒகோடி தலைமையிலான மற்றொரு மங்கோலியப் படை அணிவகுத்தது. அது வடக்கின் அல்டாய் மலைகள் அல்லது சுங்கரியா வாயில் வழியாக வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்படை வந்தவுடனேயே எல்லை நகரமான ஒற்றாரை முற்றுகையிட்டது. ஒற்றாரில் இருந்த கோட்டைக் காவல் படையினரின் எண்ணிக்கையாக ரஷித் அல்-தின் 20,000யும் ஜுவய்னி 60,000யும் (குதிரைப்படை மற்றும் போராளிகள்) குறிப்பிடுகின்றனர். எல்லா நடுக்கால வரலாற்றுப் பதிவுகளைப் போலவே நாம் இந்தக் எண்ணிக்கையை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. இவை பெருமளவு அதிகரித்துச் சொல்லப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம். ஏனெனில் அந்த நகரங்களின் மக்கள் தொகை மிகக் குறைவு.[46] அல்டாய் மலைகளின் வழியாக அணிவகுத்த செங்கிஸ் கான் பெரும்பான்மையான இராணுவத்தை தன் இராணுவத்துக்குப் பின்னால் மலைத்தொடருக்கு அருகில் அணிவகுக்கச் செய்தார். அந்த இராணுவத்திடம் தொடர்பின்றி இருந்தார். பிராங்க் மெக்லின் என்ற வரலாற்று ஆசிரியரின் கூற்றுப்படி அணிவகுப்பில் இருந்த இந்த ஒழுங்கீனத்தை ஷாவுக்குச் செங்கிஸ் கான் வைத்த பொறியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஷா சமர்கந்திலிருந்து தனது இராணுவத்துடன் அணிவகுத்து ஒற்றாரை முற்றுகையிட்டவர்களைத் தாக்க முடிவு செய்தார். அப்படி செய்தால் ஷாவின் இராணுவத்தைப் பின்பகுதியிலிருந்து செங்கிஸ் கானால் சுற்றி வளைக்க முடியும். எனினும் ஷா இந்தப் பொறிக்குள் சிக்கவில்லை. செங்கிஸ் கான் தன்னுடைய திட்டங்களை மாற்ற வேண்டி இருந்தது.[47] பெரும்பான்மையான நகரங்களைப் போல் சிறு சண்டைக்கு பிறகு ஒற்றார் சரணடையவில்லை. அதே நேரத்தில் அதன் ஆளுநர் தன்னுடைய இராணுவத்தை களத்திற்கு அணிவகுத்து எண்ணிக்கையில் அதிகமாக இருந்த மங்கோலியர்களால் அழிக்கப்படவும் இல்லை. பதிலாக கோட்டைக் காவல் படையினர் சுவர்களுக்குள்ளேயே இருந்து பிடிவாதமாக எதிர்த்தனர். பல்வேறு தாக்குதல்களைத் தாங்கி நின்றனர். முற்றுகையானது முடிவின்றி 5 மாதங்களுக்குத் தொடர்ந்தது. கடைசியில் ஷா அல்லது இனல்சுக் ஆகிய இருவருக்குமே விசுவாசமாக இல்லாத சுவர்களுக்குள் இருந்த ஒரு துரோகி (கரச்சா) வாயில்களை மங்கோலியர்களுக்குத் திறந்துவிட்டான். இளவரசனின் படைகள் தற்போது புயலெனப் புகுந்து அங்கிருந்த கோட்டைக் காவல் படையினரைக் கொன்றனர்.[48] கோட்டைக்குள் எஞ்சிய 10ல் ஒரு பங்கு கோட்டைக் காவல் படையினர் மேலும் ஒரு மாதத்திற்குத் தாக்குப் பிடித்தனர். மங்கோலியர்களின் பக்கம் பெரும் சேதம் ஏற்பட்ட பிறகு ஒற்றார் வெல்லப்பட்டது. இனல்சுக் கடைசி வரை தாக்குப் பிடித்தான். ஒரு கட்டத்தில் முற்றுகையின் கடைசி நேரத்தில் கோட்டையின் உச்சிக்குச் சென்று உள்ளே நுழைந்த மங்கோலியர்கள் மீது ஓடுகளை எறிந்து அவர்கள் அருகில் வந்தபோது பலரையும் கொன்றான். செங்கிஸ் கான் நகரவாசிகள் பலரைக் கொன்று எஞ்சியவர்களை அடிமைப்படுத்தினார். இனல்சுக்கைக் கொன்றார்.[49][50] ![]() புகாரா, சமர்கந்து மற்றும் ஊர்கெஞ்ச் முற்றுகைகள்இந்நேரத்தில் மங்கோலிய இராணுவமானது எதிரிப் பேரரசைச் சுற்றி 2 பகுதிகளிலும் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஷா ஒரு பாதுகாப்பை சிர் தர்யாவின் நகரங்களுக்கு ஏற்படுத்தவில்லை. சுமார் 50,000 பேரைக் கொண்ட இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய செங்கிஸ் கான் மற்றும் டொலுய் இயற்கைப் பாதுகாப்பான சிர் தர்யா மற்றும் அதன் அரண்கள் கொண்ட நகரங்களைக் கடந்து மேற்கு நோக்கிச் சென்று புகாரா நகரத்தை முதலில் முற்றுகையிட்டனர். இதைச் செய்ய அவர்கள் 300 மைல் தூரத்திற்கு கிசில் கும் பாலைவனத்தின் சோலைகள் வழியே பிடிக்கப்பட்ட நாடோடிகளின் மூலம் வழி தெரிந்து கடந்தனர். மங்கோலியர்கள் புகாரா நகரத்தின் வாயிலுக்கு யார் கண்ணிலும் படாமல் வந்தனர். பல இராணுவ உத்தியாளர்கள் செங்கிஸ் கான் புகாராவுக்கு வந்த இச்செயலை போரில் மிக வெற்றிகரமான ஒரு சூழ்ச்சியாகக் கருதுகின்றனர்.[51][full citation needed] இரண்டாம் முகமது என்னதான் திட்டங்களைத் தீட்டி இருந்தாலும் அவருக்குப் பின்னால் தோன்றிய செங்கிஸ் கானின் இச்சூழ்ச்சி அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கியது. இதன் காரணமாக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதில் இருந்து முகமது தடுக்கப்பட்டார். மின்னல் வேக மங்கோலிய சூழ்ச்சிகளுக்கு முன்னாள் குவாரசமிய இராணுவத்தால் மெதுவாகவே வினையாற்ற முடிந்தது. புகாராபுகாராவில் அதிகமான அரண்கள் கிடையாது. கோட்டையானது அனைத்து குவாரசமிய நகரக் கோட்டைகளைப் போலவே ஒரு அகழி மற்றும் ஒரு சுவருடன் தான் இருந்தது. புகாராவின் கோட்டை காவல் படையினர் துருக்கிய வீரர்களாக இருந்தனர். துருக்கியத் தளபதிகளால் தலைமை தாங்கப்பட்டனர். முக்கியத் தளபதிகள் முற்றுகையின் 3ம் நாளில் பிரிந்து செல்ல முயன்றனர். ரஷித் அல்-தின் மற்றும் இபின் அல்-அதிரின் கூற்றுப்படி நகரமானது 20,000 பாதுகாப்புப் படையினரைக் கொண்டிருந்தது. ஆனால் கார்ல் ஸ்வெர்ட்ரப் என்பவர் நகரம் இதில் 10ல் 1 பங்கு பாதுகாப்புப் படையினரைத் தான் கொண்டிருந்தது என்று வாதிடுகிறார்.[52] பிரிந்து சென்ற ஒரு படையானது வெளிப்புற யுத்தத்தில் அழிக்கப்பட்டது. நகரத்தின் தலைவர்கள் வாயில்களை மங்கோலியர்களுக்குத் திறந்துவிட்டனர். எனினும் துருக்கிய பாதுகாப்புப் படையினரின் ஒரு குழு நகரத்தின் கோட்டையை மேலும் 12 நாட்களுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கோட்டையில் தப்பிப்பிழைத்தவர்கள் கொல்லப்பட்டனர். கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் மங்கோலியாவிற்கு அனுப்பப்பட்டனர். போரில் கலந்து கொள்ளாத இளைஞர்கள் மங்கோலிய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எஞ்சிய மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். மங்கோலிய வீரர்கள் நகரைச் சூறையாடியபோது தீப்பிடித்தது. இதன் காரணமாக பெரும்பாலான நகரமானது தரைமட்டமாக்கப்பட்டது.[53][full citation needed] சமர்கந்துபுகாராவின் வீழ்ச்சிக்குப் பிறகு செங்கிஸ் குவாரசமியத் தலைநகரமான சமர்கந்திற்குப் புறப்பட்டார். மார்ச் 1220ல் அங்கு வந்தடைந்தார். இக்காலகட்டத்தில் மங்கோலியர்கள் திறமையான உளவியல் போரையும் நடத்தினர். இதன் காரணமாக எதிரிகளுக்குள் பிரிவுகள் ஏற்பட்டது. கானின் ஒற்றர்கள் அவரிடம் ஷாவுக்கும் ஷாவின் தாயாருக்கும் இடையே இருந்த கசப்பான சண்டையைப் பற்றிக் கூறினர். இதில் ஷாவின் தாயார் ஷாவின் மிக மூத்த தளபதிகள் மற்றும் துருக்கிய குதிரைப்படைப் பிரிவுகளின் விசுவாசத்தைப் பெற்றிருந்தார். மங்கோலியர்கள் மற்றும் துருக்கியர்கள் இருவருமே புல்வெளி மக்களாக இருப்பதால் ஷாவின் தாயார் டெர்டுன் கதுன் மற்றும் அவரது இராணுவம் அவரது துரோகி மகனுக்கு எதிராக, மங்கோலியர்களுடன் சேர வேண்டுமென செங்கிஸ் வாதிட்டார். அதே நேரத்தில் செங்கிஸ் எதிரிப் படையில் இருந்து விலகியவர்களை ஷாவுக்குக் கடிதங்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அதில் டெர்டுன் கதுன் மற்றும் அவரது சில தளபதிகள் மங்கோலியர்களுடன் இணைந்து விட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இது குவாரசமியப் பேரரசில் ஏற்கனவே இருந்த அணிகளுக்குள் நெருப்பு மூட்டியது. மூத்த தளபதிகள் தங்களது படைகளை ஒன்றாக இணைப்பதை இச்செயல் ஒருவேளை தடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. செங்கிஸ் பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அடிக்கடி போலி ஆணைகளை டெர்டுன் கதுன் அல்லது ஷா முகமதுவின் பெயர்களில் வெளியிட்டார். இதன் காரணமாக ஏற்கனவே பிரிந்து இருந்த குவாரசமிய ஆணைகள் வழங்கும் அமைப்பானது மேலும் சிக்கலுக்கு உள்ளானது.[54] மங்கோலிய மூலோபாய முன்முயற்சி, விரைவான சூழ்ச்சி, மற்றும் உளவியல் உத்திகள் காரணமாக இராணித் தாயார் உட்பட அனைத்து குவாரசமியத் தளபதிகள் தங்களது படைகளைக் கோட்டைக் காவல் படையினராகவே வைத்திருந்தனர். இதன் காரணமாகத் தோற்கடிக்கப்பட்டனர். புகாராவுடன் ஒப்பிடும்போது சமர்கந்தானது கணிசமாகச் சிறந்த அளவிலான கோட்டை சார்ந்த பாதுகாப்புகளையும் மற்றும் ஒரு பெரிய கோட்டைக் காவல் படையையும் கொண்டிருந்தது. ஜுவய்னி மற்றும் ரஷித் அல்-தின் ஆகிய இருவரும் (மங்கோலியர்களின் கீழ் பணியாற்றியவர்கள்) நகரத்தை காப்பாற்ற இருந்த படையில் 1,00,000–1,10,000 வீரர்கள் வரை இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் இபின் அல்-அதிர் 50,000 வீரர்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[55] ஆனால் 10,000 வீரர்களே இருந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சமர்கந்து நகரத்தின் மக்கள் தொகையே அந்நேரத்தில் 1,00,000க்கும் குறைவுதான்.[56][57] இந்த நகரத்தின் மீதான முற்றுகையைச் செங்கிஸ் கான் தொடங்கியபோது, ஒற்றார் நகரத்தை வீழ்த்திய அவரது மகன்கள் சகதை மற்றும் ஒகோடி ஆகியோர் அவருடன் இணைந்தனர். ஒன்றுபட்ட மங்கோலியப் படைகள் சமர்கந்து நகரத்தைத் தாக்கத் தொடங்கின. இந்த தாக்குதலில் மங்கோலியர்கள் தங்களிடமிருந்த கைதிகளை உடல் கேடயங்களாகப் பயன்படுத்தினர். மூன்றாவது நாள் யுத்தத்தின் போது சமர்கந்தின் கோட்டைக் காவல் படையினர் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். தனது படையைத் தோற்று ஓடுவது போல் நடிக்கச் செய்த செங்கிஸ் கான், சமர்கந்தின் பாதி அளவு கோட்டைக் காவல் படையினரைக் கோட்டை மதில் சுவர்களைத் தாண்டி வெளியே வரச் செய்தார். வெட்ட வெளியில் நடந்த யுத்தத்தில் அவர்கள் கொல்லப்பட்டனர். ஷா முஹம்மத். சமர்கந்து நகரத்திற்கு மேலும் வீரர்களை அனுப்ப இரண்டு முறை முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். ஐந்தாம் நாள் ஒரு சில வீரர்களைத் தவிர அனைத்து வீரர்களும் சரணடைந்தனர். ஷாவின் தீவிர ஆதரவாளர்களான அந்த எஞ்சிய வீரர்கள் கோட்டையில் தாக்குப் பிடித்தனர். சரணடைந்த ஒவ்வொருவரும் செங்கிஸ் கானுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய காரணத்திற்காகக் கொல்லப்பட்டனர். சமர்கந்தின் மக்கள் நகரைக் காலி செய்து ஒரு வெட்ட வெளியில் நகரத்திற்கு வெளியில் கூடுமாறு ஆணையிடப்பட்டனர். அங்கு பலர் கொல்லப்பட்டனர்.[சான்று தேவை] சமர்கந்தின் வீழ்ச்சியின் போது செங்கிஸ் கான் தனது முதன்மைத் தளபதிகளான சுபுதை மற்றும் செபேயை ஷாவை வேட்டையாடுவதற்காக அனுப்பினார். ஷா மேற்கு நோக்கித் தனது விசுவாசம் மிகுந்த வீரர்கள் சிலர் மற்றும் தனது மகன் மிங்புர்னுவுடன் காசுப்பியன் கடலில் இருந்த ஒரு சிறிய தீவிற்குத் தப்பினார். அங்கு 1220 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இறந்தார். பெரும்பாலான அறிஞர்கள் அவரது இறப்பிற்குக் கபவாதத்தைக் காரணமாகக் கூறுகின்றனர். ஆனால் பிறர் அவரது பேரரசை இழந்ததன் திடீர் அதிர்ச்சி காரணமாக இறந்தார் என்று கூறுகின்றனர்.[சான்று தேவை] ஊர்கெஞ்ச்அதேநேரத்தில் செல்வந்த வர்த்தக நகரமான ஊர்கெஞ்ச் குவாரசமியப் படைகளின் கைகளில் இருந்தது. இதற்கு முன்னர் ஷாவின் தாய் ஊர்கெஞ்சை ஆட்சி செய்தார். ஆனால் தனது மகன் காஸ்பியன் கடலில் தலைமறைவானதை அறிந்த அவர் தானும் தப்பித்து ஓடினார். எனினும் பிடிக்கப்பட்டு மங்கோலியாவிற்கு அனுப்பப்பட்டார். முகமதின் தளபதிகளில் ஒருவரான குமார் டெகின் ஊர்கெஞ்சின் சுல்தானாக தன்னை அறிவித்துக் கொண்டார். இந்தப் படையெடுப்பின் ஆரம்பத்திலிருந்து வடக்குப் பகுதியில் போர் செய்துகொண்டிருந்த சூச்சி அத்திசையில் இருந்து ஊர்கெஞ்சை நோக்கி முன்னேறினார். அதே நேரத்தில் செங்கிஸ், ஒகோடி மற்றும் சகதை தெற்குப் பகுதியிலிருந்து ஊர்கெஞ்சை தாக்கினர். ![]() ஊர்கெஞ்ச் தாக்குதலானது மங்கோலியப் படையெடுப்புகளிலேயே மிகுந்த சிக்கலான யுத்தமாக உருவானது. நகரமானது அமு தரியா ஆற்றின் பக்கவாட்டில் ஒரு சதுப்பு நில டெல்டா பகுதியில் கட்டப்பட்டிருந்தது. மென்மையான தரையானது முற்றுகைப் போருக்கு ஒத்ததாக இல்லை. மேலும் கவன் வில்களுக்கு ஏற்றவாறு பெரிய கற்கள் அப்பகுதியில் இல்லை. இவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மங்கோலியர்கள் தாக்குதலை தொடங்கினர். பாதுகாப்பு படையினர் பகுதி பகுதியாக சண்டையிட்டனர். பாதுகாப்பு படையினரின் ஒரு கடினமான எதிர்ப்பிற்கு பிறகே நகரமானது வீழ்ந்தது. நகர்ப்புற சண்டைக்கு மங்கோலிய உத்திகள் பொருந்தாத காரணத்தால் மங்கோலிய இறப்புகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. ஊர்கெஞ்சை வெல்வதானது கான் மற்றும் அவரது மூத்த மகன் சூச்சி ஆகிய இருவருக்கும் இடையிலான தொடர் பிரச்சனைகளால் கடினமானது. சூச்சிக்கு இந்நகரம் பரிசாக வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. சூச்சிக்கும் அவரது மற்ற மூன்று சகோதரர்களுக்கும் ஒரே தாய் தான். அவர் செங்கிஸ் கானின் மனைவியான போர்ட்டே. போர்ட்டேயின் மகன்கள் மட்டுமே செங்கிஸ் கானின் அதிகாரப்பூர்வ மகன்கள் மற்றும் ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்களாக எண்ணப்பட்டனர். கானின் மற்ற 500 மனைவியரின் வழித்தோன்றல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் சூச்சியின் பிறப்பானது சர்ச்சைக்குரியதாக இருந்தது. கான் அதிகாரம் நிறைந்தவராக வளர்ந்து வந்த காலத்தின் ஆரம்பங்களில் போர்ட்டே கடத்தப்பட்டார். கைதியாக இருந்த காலத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். 9 மாதங்கள் கழித்து சூச்சி பிறந்தார். செங்கிஸ் கான் சூச்சியை தனது மூத்த மகனாக ஏற்றுக்கொண்ட போதிலும் சூச்சியின் உண்மையான தந்தை யார் என்பதை பற்றிய கேள்விகள் எப்பொழுதுமே எழுந்தன.[58][full citation needed] பாதுகாப்பு படையினருடன் சூச்சி பேச்சுவார்த்தை நடத்த எண்ணினார். முடிந்தவரை பெரும்பாலான நகரத்திற்கு சேதம் ஏற்படாமல் அவர்களை சரணடைய வைக்க எண்ணினார். இதன் காரணமாக அழுத்தமான சூழ்நிலை நிலவியது. இச்செயல் சகதைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சண்டையை தீர்க்க செங்கிஸ் ஊர்கெஞ்ச் வீழ்ந்த பொழுது முற்றுகை படைகளின் தளபதியாக ஒகோடியை நியமித்தார். சூச்சியை பொறுப்பில் இருந்து நீக்கியது மற்றும் சூச்சிக்கு உறுதியளிக்கப்பட்ட நகரத்தை சூறையாடியது ஆகிய நிகழ்வுகள் சூச்சிக்கு கோபத்தை ஏற்படுத்தி அவரை தனது தந்தை மற்றும் சகோதரர்களிடம் இருந்து பிரித்தது. குறிப்பிடத்தகுந்த ராணுவ திறமைகளை கொண்டிருந்தபோதும் தனது தம்பிகளுக்கு தன்னைத் தவிர்த்து முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டதன் காரணமாக சூச்சியின் பிந்தைய நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றன என குறிப்பிடப்படுகிறது.[6] எப்பொழுதும் போலவே கைவினைஞர்கள் மங்கோலியாவிற்கு அனுப்பப்பட்டனர். இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மங்கோலிய வீரர்களுக்கு அடிமைகளாகக் கொடுக்கப்பட்டனர். எஞ்சிய மக்கள் கொல்லப்பட்டனர். பாரசீக அறிஞர் அடா-மாலிக் ஜுவய்னியின் கூற்றுப்படி 50,000 மங்கோலிய வீரர்கள் ஒவ்வொருவரும் 24 ஊர்கெஞ்ச் குடிமக்களை கொல்ல உத்தரவிடப்பட்டதாக கூறியுள்ளார். அக்கணக்கீட்டின்படி 12 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இது குறிப்பிடும்படியான மிகைப்படுத்தல் ஆகும். எனினும் ஊர்கெஞ்ச் முற்றுகையானது மனித வரலாற்றில் குருதி தேய்ந்த படுகொலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.[சான்று தேவை] இதற்கு பிறகு அரல் கடலுக்கு தெற்கிலிருந்த குர்ஜங் நகரத்தின் முழுமையான அழிவானது வந்தது. சரணடைந்த பின்னர் மங்கோலியர்கள் அணைகளை உடைத்து நகரத்தை வெள்ளக்காடாக்கினர். பிறகு எஞ்சியவர்களை கொல்ல முன்னேறினர்.[சான்று தேவை] குராசான் படையெடுப்புஊர்கெஞ்ச் நகரத்திற்குள் இடித்துக்கொண்டு மங்கோலியர்கள் முன்னேற, செங்கிஸ் தனது இளைய மகன் டொலுய் தலைமையில் ஒரு ராணுவத்தை குவாரசமியாவின் மேற்கு மாகாணமான குராசானுக்கு அனுப்பினார். குராசன் ஏற்கனவே மங்கோலிய ராணுவத்தின் பலத்தை உணர்ந்து இருந்தது. போரின் முந்தைய பகுதியில் செபே மற்றும் சுபுதை ஆகிய தளபதிகள் இந்த மாகாணத்தின் வழியாக தப்பி ஓடிய ஷாவை வேட்டையாட பயணித்திருந்தனர். எனினும் இப்பகுதியானது அடிபணிய வைக்கப்படவில்லை. பெரும்பாலான முக்கிய நகரங்கள் மங்கோலிய ஆட்சிக்கு உட்படாமல் இருந்தன. ஷாவின் மகன் ஜலாலுதீன் மங்கோலியர்களுடன் போரிட ராணுவத்தை சேர்க்கிறார் என்ற வதந்தி காரணமாக இப்பகுதியில் இருந்த குறைந்த எண்ணிக்கையிலான மங்கோலிய படைகளுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டது. பால்க்டொலுயின் இராணுவமானது சுமார் 50,000 வீரர்களை கொண்டிருந்தது. இந்த ராணுவத்தின் நடுப்பகுதி மங்கோலிய வீரர்களை உள்ளடக்கியிருந்தது (மங்கோலிய வீரர்களின் எண்ணிக்கை சுமார் 7,000 என சில மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன[59][full citation needed]) இந்த ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் துருக்கியர்கள், சீனா மற்றும் மங்கோலியாவில் வெல்லப்பட்ட மக்கள் என அயல்நாட்டு வீரர்களாக இருந்தனர். மேலும் இந்த ராணுவத்தில் "நெருப்பைக் கக்கும் கனரக அம்புகளை செய்யக்கூடிய 3,000 இயந்திரங்கள், 300 கவண்கள், நாப்தாவால் நிரப்பப்பட்ட பானைகளை எரியக்கூடிய 700 மங்கோநெல்கள், 4,000 ஏணிகள், அகழிகளை மூடுவதற்காக 2,500 மண் மூட்டைகள்" ஆகியவை இருந்தன.[11] முதலில் வீழ்ந்த முதல் நகரங்கள் தெர்மெஸ் மற்றும் பிறகு பால்க் ஆகும். மெர்வ்டொலுயின் ராணுவத்திற்கு வீழ்ந்த முக்கிய நகரம் மெர்வ் ஆகும். ஜுவய்னி மெர்வை பற்றி எழுதியதாவது: "குராசானின் நிலப்பகுதிகளிலேயே சிறந்த பகுதியாக இருந்தது. அமைதி மற்றும் பாதுகாப்பு பறவையானது அதன் எல்லைகளுக்கு மேல் பறந்தது. அங்கிருந்த தலைவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாத மழை துளிகளுடன் போட்டியிட்டது. அதன் நிலமானது சொர்க்கத்துடன் போட்டியிட்டது."[59] மெர்வின் கோட்டை காவல் படையினரின் எண்ணிக்கை வெறும் 12,000 வீரர்களே ஆவர். மேலும் நகரமானது கிழக்குப் பகுதியில் இருந்த குவாரசமியாவில் இருந்து வந்த அகதிகளால் நிரம்பியது. முதல் 6 நாட்களுக்கு டொலுய் நகரத்தை முற்றுகையிட்டார். ஏழாம் நாள் நகரத்தை தாக்க ஆரம்பித்தார். எனினும் கோட்டை காவல் படையினர் தாக்குதலை முறியடித்து, மங்கோலியர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அதே முறையில் கோட்டை காவல்படையினர் நகரத்திற்குள் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்டனர். அடுத்த நாள் உயிருடன் வாழ அனுமதிக்கப்படுவர் என்ற டொலுயின் வாக்குறுதி அடிப்படையில் நகரத்தின் ஆளுநர் நகரத்தை சரணடைய வைத்தார். ஆனால் நகரம் ஒப்படைக்கப்பட்ட உடனேயே சரணடைந்த ஒவ்வொருவரையும் டொலுய் கொல்ல ஆரம்பித்தார். ஊர்கெஞ்ச் படுகொலையை விட மெர்வ் படுகொலையானது எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நிஷாபூர்மெர்வை முடித்துக்கொண்ட டொலுய் மேற்கு நோக்கி பயணித்தார். நிஷாபூர் மற்றும் ஹெராத் ஆகிய நகரங்களை தாக்கினார்.[60] மூன்றே நாட்களில் நிஷாபூர் வீழ்ந்தது. இங்கு செங்கிஸ் கானின் மருமகனான தோகுசர் யுத்தத்தில் மரணம் அடைந்தார். நகரத்தில் இருந்த பூனைகள் மற்றும் நாய்கள் உட்பட அனைத்து உயிர்களும் டொலுயின் வாளுக்கு இறையாயின. தோகுசரின் விதவை படுகொலைக்கு தலைமை தாங்கினார்.[59] நிஷாபூர் வீழ்ந்த பிறகு ஹெராத் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அதனால் மக்கள் உயிர் தப்பினர். இந்து குஷ் மலையில் இருந்த பாமியான் நகரம் மற்றொரு படுகொலைக்கு களமாக 1221 ஆம் ஆண்டின் பாமியான் முற்றுகையின் போது விளங்கியது. இங்கு கடினமான எதிர்ப்பின் காரணமாக செங்கிஸின் பேரன் இறந்தான். அடுத்த நகரம் டூஸ் ஆகும். 1221 ஆம் ஆண்டின் வசந்த கால முடிவின் போது குராசான் மாகாணம் முழுமையான மங்கோலிய ஆட்சியின் கீழ் வந்தது. பாதுகாப்புக்கு கோட்டை காவல் படையினரை விட்டுவிட்டு டொலுய் கிழக்கு நோக்கி தனது தந்தையுடன் இணைய புறப்பட்டார்.[சான்று தேவை] கடைசிப் போர் பயணம் மற்றும் அதற்குப் பிறகுகுராசானில் நடந்த மங்கோலிய போர் பயணத்துக்கு பிறகு ஷாவின் ராணுவம் சிதறுண்டது. தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த ஜலால் அல்-தின் எஞ்சிய குவாரசமிய ராணுவத் துருப்புகளை தெற்கில் இருந்த ஆப்கானிஸ்தான் பகுதியில் ஒன்றிணைக்க ஆரம்பித்தார். ஜலால் அல்-தின் தலைமையில் ஒன்றிணைந்து கொண்டிருந்த ராணுவத்தை வேட்டையாட செங்கிஸ் தனது துருப்புகளை அனுப்பினார். இரு பக்கங்களும் பர்வான் என்ற பட்டணத்தில் 1221 ஆம் ஆண்டு வசந்த காலத்தின்போது சந்தித்தன. அந்த யுத்தமானது மங்கோலிய படைகளுக்கு அவமானகரமான தோல்வியை கொடுத்தது. கோபமடைந்த செங்கிஸ் தெற்குப் பகுதியை நோக்கி தானே பயணித்தார். ஜலால் அல்-தினை சிந்து ஆற்று யுத்தத்தில் தோற்கடித்தார். தோற்கடிக்கப்பட்ட ஜலால் அல்-தின் இந்தியாவுக்கு தப்பி வந்தார். சிந்து ஆற்றின் தெற்கு கரையில் சில காலத்திற்கு புதிய ஷாவை தேடிய செங்கிஸால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியாவுக்குள் ஷாவை விட்டு விட்டு கான் வடக்கு நோக்கி திரும்பினார். எஞ்சிய எதிர்ப்பு மையங்கள் அழிக்கப்பட்ட பிறகு செங்கிஸ் மங்கோலியாவிற்கு திரும்பினார். வெல்லப்பட்ட பகுதிகளை பாதுகாக்க மங்கோலிய கோட்டை காவல் படையினரை விட்டு விட்டு சென்றார். குவாரசமியப் பேரரசு அழிக்கப்பட்டு உள்ளிழுக்கப்பட்ட நிகழ்வானது இஸ்லாமிய உலகம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு எதிர்காலத்தில் வரப்போகும் ஆபத்தை அடையாளப்படுத்துவதாக நிரூபணமாகியது.[53] செங்கிஸின் மகன் ஒகோடியின் ஆட்சி காலத்தின் போது கீவ ருஸ் மற்றும் போலந்து, மற்றும் மங்கோலிய ஆயுதங்களை அங்கேரி மற்றும் பால்டிக் கடலுக்கு கொண்டுவந்த எதிர்காலப் போர் பயண நிகழ்வு ஆகியவற்றுக்கு முக்கியமான படிக்கட்டாக இந்த புதிய பகுதி நிரூபணம் ஆகியது. இஸ்லாமிய உலகத்தைப் பொறுத்தவரை குவாரசமியாவின் அழிவானது ஈராக், துருக்கி மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை பாதுகாப்பற்ற வெட்டவெளி ஆக்கியது. அனைத்து மூன்று பகுதிகளும் எதிர்கால கான்களால் இறுதியாக அடிபணிய வைக்கப்பட்டன. ![]() குவாரசமியா உடனான போரானது செங்கிஸ் கானுக்கு அடுத்து யார் மன்னன் என்ற முக்கியமான கேள்வியையும் கொண்டு வந்தது. போர் ஆரம்பித்த பொழுது செங்கிஸ் இளமைப் பருவத்தில் இல்லை. அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அனைவருமே ஆக்ரோசமான போர் வீரர்கள். ஒவ்வொருவரும் விசுவாசமான ஆதரவாளர்களை தங்களுக்கென கொண்டிருந்தனர். இவ்வாறான உடன்பிறப்புகளுக்கு இடையேயான பிரச்சனையானது ஊர்கெஞ்ச் முற்றுகையின் போது கிட்டத்தட்ட வெளிப்பட்டுவிட்டது. அந்த யுத்தத்தை முடிக்க செங்கிஸ் தனது மூன்றாவது மகன் ஒகோடியை சார்ந்திருக்க வேண்டிய நிலைமைக்கு கட்டாயப்படுத்தப்பட்டார். ஊர்கெஞ்ச் அழிவிற்குப் பிறகு செங்கிஸ் அதிகாரப்பூர்வமாக தனது மகன் ஒகோடியை தனக்கு அடுத்த கானாக தேர்ந்தெடுத்தார். மேலும் எதிர்கால கான்கள் முந்தைய ஆட்சியாளர்களின் நேரடி வழித்தோன்றல்களாக இருப்பார்கள் எனவும் ஒரு வழிமுறையை நிறுவினார். இவ்வாறாக நிறுவப்பட்ட பின்னரும் நான்கு மகன்களுக்கு இடையிலும் இறுதியாக பிரச்சினை ஏற்பட்டது. இப்பிரச்சினைகள் செங்கிஸ் உருவாக்கிய கானரசின் நிலையற்ற தன்மையை வெளிக்காட்டியது. சூச்சி தனது தந்தையை மன்னிக்கவில்லை. மேற்கொண்ட மங்கோலிய போர்களில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். வடக்கு நோக்கிச் சென்றார். தனது தந்தை அவரை காண வருமாறு அழைத்த போது வர மறுத்துவிட்டார்.[58] சூச்சி இறந்த நேரத்தில் கான் தனது எதிர்ப்பு குணம் கொண்ட மகன் மீது போர் தொடுக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் சூச்சியின் மகன்களிடம் வெளிப்பட்டன. குறிப்பாக படு மற்றும் பெர்கே கான் ஆகியோரிடம் வெளிப்பட்டன.[14] எகிப்திய மம்லுக்குகள் 1260 ஆம் ஆண்டு ஐன் ஜலுட் யுத்தத்தில் மங்கோலியர்களுக்கு வரலாற்றின் மிக முக்கியமான தோல்வியை கொடுத்தபோது குலாகு கானால் அந்த தோல்விக்கு பழி தீர்க்க முடியவில்லை. குலாகுவின் உறவினரான இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெர்கே திரான்ஸ்காக்கேசியா பகுதியில் இஸ்லாமுக்கு ஆதரவாக குலாகுவை தாக்கினார். மங்கோலியர்கள் மங்கோலியர்களுடன் முதன்முதலாக யுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த யுத்தத்தின் விதைகளானவை அவர்களது தந்தைகள் குவாரசமிய போரில் ஈடுபட்ட போது உருவாயின.[53] அணுகுவதற்கே கடினமான மசந்தரன் போன்ற பகுதிகளைக் கூட மங்கோலியர்கள் எளிதாக அழித்தனர். ஆரம்ப கலீபாக்கள் முழு ஈரானை வென்ற போது கூட பல தசாப்தங்களுக்குப் பிறகு தன் இப்பகுதியை வென்றனர்.[61] உசாத்துணை
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia