காரீய(II) நைட்ரேட்டு
காரீய(II) நைட்ரேட்டு (Lead(II) nitrate) Pb(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது பொதுவாக நிறமற்ற படிகமாகவோ அல்லது வெண்ணிறத் துாளாகவோ காணப்படுகிறது. மற்ற பெரும்பாண்மையான காரீய (II) உப்புக்களைப் போலல்லாமல் இது நீரில் கரையக்கூடிய தன்மை உடையது. இடைக்காலங்களிலேயே அறிந்திருக்கப்பட்டு, ப்ளம்ப் டல்சிஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இச்சேர்மத்தின் சிறிய அளவிலான தயாரிப்பானது, உலோக காரீயத்திலிருந்தோ அல்லது நைட்ரிக் காடியில் உள்ள காரீய ஆக்சைடையோ சார்ந்திருந்தது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட இச்சேர்மம் இதர காரீயச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. 19 ஆம் நுாற்றாண்டில், ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளால் காரீய(II) நைட்ரேட்டின் வணிகரீதியான உற்பத்தி தொடங்கியது. வரலாற்றுரீதியாக, இந்தச் சேர்மத்தின் மிக முக்கியப் பயனானது நிறமிகள் மற்றும் காரீய வண்ணங்களின் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது தான் ஆகும். ஆனால், இத்தகைய வண்ணங்கள் டைட்டானியம் டைஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட குறைவான நச்சுத்தன்மை கொண்ட வண்ணப்பூச்சுகளின் வரவினால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இச்சேர்மத்தின் இதர தொழிற்துறைப் பயன்களாக, நைலான்கள் மற்றும் பாலிஎஸ்தர்களின் நிலைப்படுத்தல் மற்றும் ஒளி வெப்ப இயக்கவியல் வரைபடத்தாளில் பூச்சு தயாரித்தல் போன்ற தொழிற்சாலைப் பயன்கள் ஆகியவை உள்ளன. 2000 ஆம் ஆண்டிலிருந்து காரீய(II) நைட்ரேட்டு தங்க சயனைடேற்றத்திற்கு பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. காரீய(II) நைட்ரேட்டானது நச்சுத்தன்மை உடைய ஆக்சிசனேற்றியாகும். மேலும், இச்சேர்மமானது சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகைமையால், தொகுதி 2ஏ –இன் கீழான மனிதனில் புற்றுநோய் தோற்றுவிக்கக்கூடிய காரணிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக இச்சேர்மமானது, போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சேமித்து வைக்கப்படவும், கையாளப்படவும் வேண்டும். மேலும், சுவாசித்தல், தோலோடு தொடுகை, உட்கொள்ளுதல் போன்ற செயல்கள் நிகழாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் தீங்கு விளைவிக்கும் தன்மையின் காரணமாக இச்சேர்மத்தின் வரையறுக்கப்பட்ட பயன்பாடுகள் தொடர் கண்காணிப்புக்குட்படுத்தப்பட வேண்டும். வரலாறுஇடைக்காலத்திலிருந்தே காரீய (II) நைட்ரேட்டானது, நிறமிகள் மற்றும் காரீய வண்ணங்களைத் (குரோம் மஞ்சள் (காரீய(II) குரோமேட்டு), குரோம் ஆரஞ்சு (காரீய(II) ஐதராக்சைடு குரோமேட்டு) மற்றும் இதர காரீய சேர்மங்களாலானவை) தயாரிக்க உதவும் மூலப்பொருளாக அறியப்பட்டிருந்தது மற்றும் இதே நோக்கத்திற்காகத் தயாரிக்கவும் பட்டது. இந்த நிறப்பொருட்கள் சாயமிடுதல் மற்றும் அச்சுத்தொழிலில் காலிகோ மற்றும் நெசவுத்தொழிலில் பயன்படுத்தப்பட்டு வந்தன.[6] 1597 ஆம் ஆண்டில், செருமானிய இரசவாதி ஆண்ட்ரியாசு லிபாவியசு இந்தச் சேர்மத்தை இடைக்காலத்தில் இதை அழைக்கப் பயன்படுத்திய பெயரான ”பிளம்ப் டல்சிசு” மற்றும் ”கால்க்சு பிளம்ப் டல்சிசு” (காரீய இனிப்பு என்று பொருள்படக்கூடிய) போன்ற பெயர்களால் முதலில் குறிப்பிட்டார்.[7] அதைத் தொடர்ந்த நுாற்றாண்டுகளில் காரீய நைட்ரேட்டின் சடசடவெனப் பொரியும் பண்பைப் பற்றிய உண்மையான புரிதலின்றியே சிறப்பு வகை வெடிபொருட்கள் மற்றும் தீப்பெட்டித் தொழிலில் காரீய அசைடு போன்றவை பயன்படுத்தப்பட்டன .[8] தயாரிப்பு முறையானது நேரடியான வேதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டதாக, அதாவது காரீயத்தை நைட்ரிக் காடியில் தீவிரமாகக் கரைக்கச் செய்து வீழ்படிவை பிரித்தெடுப்பதாக அமைந்தது. இருப்பினும், பல நுாற்றாண்டுகளாக இதன் தயாரிப்பானது சிறிய அளவிலேயே இருந்தது. மற்ற காரீய சேர்மங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் அளவில் காரீய(II) நைட்ரேட்டை வணிக ரீதியாகத் தயாரிப்பது 1835 ஆம் ஆண்டு வரையிலும் அறியப்படவில்லை.[9][10] 1974 ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நிறப்பொருட்கள் மற்றும் பெட்ரோலிய சேர்க்கைப் பொருட்கள் தவிர்த்த காரீய சேர்மங்களின் 642 டன்களாக இருந்தது.[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia