தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக) 2005 செப்டம்பர் 14 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டுஅரசியல் கட்சியாகும். விஜயகாந்த் இதன் நிறுவனத் தலைவர் ஆவார்.
கட்சிக் கொள்கைகள்
தனது கொள்கைகளாக தேமுதிக அறிவித்துள்ளவை பின்வருமாறு:[3]
“அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை பிரகடனம்.
அரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கிட பாடுபடுவதே எங்களின் லட்சியம்.
தமிழகத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்ற லஞ்ச லாவண்யத்தையும், ஊழலையும் அரசியலில் புரையோடிவிட்ட பித்தலாட்டம், அயோக்கியத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் முதலில் தடுத்து நிறுத்தியும், எதிர்காலத்தில் அவற்றை அறவே ஒழிப்பது.
தீவிரவாதத்தை தூண்டுபவர்களையும், தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்களையும், ஒட்டு மொத்த தீவிரவாதத்தையும் நாட்டில் இருந்து அடியோடு ஒழித்து எம்மதமும் சம்மதம் எனும் நிலையை உருவாக்குவது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுடன் உள்ள நதி நீர் பிரச்சினைகளை சுமூகத் தீர்வு கண்டு நட்புறவை வளர்த்து அதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் நதிகளை இணைப்பதற்கு அடித்தளமிடுவது.
தமிழகத்தில் கல்வியையும், அதன் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் பண்டைய கால வரலாறும், பண்பாடும் மாறாமல் அதே நேரத்தில் நவீன காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ப நடைமுறை கல்வியையும், தொழிற்கல்விக்கு முக்கியதுவம் அளித்து தரமான கல்வியை தமிழகத்திற்கு அளித்து மாணவர்கள், மாணவிகளின் எதிர்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றுவது.
இந்தியாவிலேயே தமிழகத்தை வேலைவாய்ப்புள்ள முதல் மாநிலமாக மாற்றுவது.
விவசாயிகளின் நலன் காத்திட விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது.
நெசவுத் தொழிலை நவீன மயமாக்கி நசிந்து வரும் நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் நலன் காத்திட புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கு பாடுபடுவது.
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு பாடுபடுவோம். அன்பு, அறம், ஆற்றல், என்பதை எங்கள் லட்சியக் கொள்கை முழக்கமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஒளிமயமானதாக்குவோம்.
2006 சட்டமன்றத் தேர்தல்
இக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.
15வது மக்களவைத் தேர்தல்
15வது மக்களவை (2009 பொதுத் தேர்தல்) தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் 2006 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட முரசு சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது [4].
2011 சட்டமன்ற தேர்தலில்அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.[6]
16ஆவது மக்களவைத் தேர்தல்
இத்தேர்தலில் பாசக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.[7]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.[8][9].
தொகுதிப் பங்கீடு:
கட்சி/அணி
போட்டியிடவிருக்கும் தொகுதிகள்
தேமுதிக
104
மக்கள் நலக் கூட்டணி + தமாகா
130
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.