அம்மோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டு (Ammonium tetrathiomolybdate) என்பது (NH4)2MoS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல்சேர்மாகும். இந்த பிரகாசமான சிவப்பு அம்மோனியம் உப்பு மாலிப்டினத்தின் வேதியியலில் ஒரு முக்கியமான வினையாக்கியாகும். மேலும் இது உயிரி கனிம வேதியியலில் ஒரு கட்டுமானத் தொகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. தயோமெட்டலேட்டு எதிர்மின் அயனிக்கு, உலோகம் Mo(VI) இலிருந்து Mo(IV) ஆகக் குறைத்து கந்தகம் மையங்களில் ஆக்சிசனேற்றம் அடையும் தனித்துவமான பண்பைக் கொண்டுள்ளது.
தயாரிப்பும் கட்டமைப்பும்
அம்மோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டு உப்பில் நான்முகி [MoS4]2− எதிர்மின் அயனி உள்ளது. அம்மோனியா முன்னிலையில் ஐதரசன் சல்பைடும் மாலிப்டேட்டு ([MoO4]2−) கரைசலுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் அம்மோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டு தயாரிக்கப்படுகிறது:[3]
(NH4)2MoO4 + 4 H2S → (NH4)2MoS4 + 4 H2O
[MoS4]2− எதிர்மின் அயனி.
வினைகள்
அம்மோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டு அயனி ஒரு சிறந்த ஈந்தணைவியாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக, Ni(II) மூலங்களுடன், இது [Ni(MoS4)2]2− அயனியை உருவாக்குகிறது. தயோமோலிப்டேட்டின் வேதியியலின் பெரும்பகுதி [NEt4]2[MoS4] மற்றும் [PPh4]2[MoS4] (Et = C2H5, Ph = C6H5) போன்ற நான்காக்கப்பட்ட கரிம நேர்மின் அயனி உப்புகள் பற்றிய ஆய்வுகளிலிருந்து விளைகிறது. இந்த கரிம உப்புகள் அசிட்டோ நைட்ரைல் மற்றும் இருமெத்தில்பார்மமைடு போன்ற முனைவு கரிம கரைப்பான்களில் கரையும்.
அம்மோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டின் ([NH4]2[MoS4]) வெப்பச் சிதைவு 155 °செல்சியசு வெப்பநிலையில் தொடங்கி 280 °செல்சியசு வெப்பநிலை வரை நிகழ்கிறது. இவ்வினையில் மாலிப்டினம் முச்சல்பைடு (MoS3), அம்மோனியா (NH3) மற்றும் ஐதரசன் சல்பைடு (H2S) ஆகியவை உருவாகின்றன. [1]
(NH4)2MoS4 → MoS3 + 2 NH3 + H2S
MoS3 பின்னர் 300 °செல்சியசு முதல் 820 ° செல்சியசு வரையிலான பரந்த வெப்பநிலை வரம்பில் மாலிப்டினம் இருசல்பைடாக (MoS2) சிதைகிறது. மந்த வாயு சூழ்நிலையில் சரியாக MoS2 சேர்மமாக குறைந்தபட்சம் 800 ° செல்சியசு வெப்பநிலையில் மாறுகிறது. இதற்கான வினை கீழே கொடுக்கப்படுகிறது.
MoS3 → MoS2 + S
ஒருவேளை அதிகப்படியான ஐதரசன் இருந்தால் 450 பாகை செல்சியசு வெப்பநிலையிலும் மேற்கண்ட வினை நிகழ்கிறது. [4]
MoS3 + H2 → MoS2 + H2S
தொடர்புடைய சேர்மங்கள்
பல தொடர்புடைய தயோ மற்றும் செலீனோ எதிர்மின் அயனிகள் உட்பட அறியப்படுகின்றன. (A = கார உலோக நேர்மின் அயனி, [PPh4]+, [NEt4]+)
அம்மோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டு முதன்முதலில் விலங்குகளில் செப்பு நச்சுத்தன்மை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இது ஒரு பரம்பரை செப்பு வளர்சிதை மாற்றக் கோளாறான வில்சன் நோய்க்கு ஒரு சிகிச்சையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மனிதர்களில்; இது குடலில் உள்ள தாமிர உறிஞ்சுதலுடன் போட்டியிடுவதன் மூலமும், வெளியேற்றத்தை அதிகரிப்பதன் மூலமும் செயல்படுகிறது. மருத்துவ ஆய்வுகள், இச்சிகிச்சை முறை தற்போது உள்ள சிகிச்சைகளை விட வேகமாக செப்பு அளவைக் குறைக்கும் என்றும், சிகிச்சை பெற்ற நோயின் ஆரம்ப நரம்பியல் விளக்கத்தைக் கொண்ட குறைவான நோயாளிகள் நரம்பியல் சிதைவை அனுபவிக்கின்றனர் என்றும் காட்டுகின்றன[7][8][9]
புற்றுநோயில் தாமிரச் சிதைவுக்கான அம்மோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டு சிகிச்சையின் பல்வேறு கட்ட II மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அம்மோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டு ஆனது இரத்தக் குழல் வளர்ச்சியில் ஒரு தடுப்பு விளைவைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பாரம்பரியமற்ற சுரப்பு பாதையை உள்ளடக்கிய Cu அயன் சார்ந்த சவ்வு இடமாற்ற செயல்முறையின் தடுப்பின் மூலம் இது சாத்தியமாகும்.[10] புற்றுநோய் சிகிச்சையிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
↑Müller, A; Diemann, E; Jostes, R; Bögge, H (1981). "Transition metal thio anions: Properties and significance for complex chemistry and bioinorganic chemistry". Angewandte Chemie International Edition in English20 (11): 934. doi:10.1002/anie.198109341.
↑Brewer, GJ; Askari, F; Lorincz, MT; Carlson, M et al. (2006). "Treatment of Wilson disease with ammonium tetrathiomolybdate: IV. Comparison of tetrathiomolybdate and trientine in a double-blind study of treatment of the neurologic presentation of Wilson disease". Arch Neurol63 (4): 521–7. doi:10.1001/archneur.63.4.521. பப்மெட்:16606763.
↑Brewer, GJ; Askari, F; Dick, RB; Sitterly, J et al. (2009). "Treatment of Wilson's disease with tetrathiomolybdate: V. Control of free copper by tetrathiomolybdate and a comparison with trientine". Translational Research154 (2): 70–7. doi:10.1016/j.trsl.2009.05.002. பப்மெட்:19595438.