அமோனியம் பெர்மாங்கனேட்டு
அமோனியம் பர்மாங்கனேட்டு (Ammonium permanganate) என்பது NH4MnO4, அல்லது NH3•HMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். தண்ணீரில் கரையக்கூடிய இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியும் மிதமான ஒரு வெடிபொருளுமாகும். உலர்ந்த நிலையிலுள்ள அமோனியம் பர்மாங்கனேட்டு வெப்பம், அதிர்ச்சி அல்லது உராய்வு போன்ற செயல்களால் வெடிக்க நேரிடும். சுமார் 60 பாகை செல்சியசு அல்லது 140 பாகை பாரன்கீட்டு வெப்பநிலையில் இச்சேர்மம் வெடிக்கலாம் [1]. வெடிக்கும்போது அமோனியம் பர்மாங்கனேட்டானது மாங்கனீசு டை ஆக்சைடு, நைட்ரசன் மற்றும் தண்ணீராகச் சிதைவடைகிறது.
1824 ஆம் ஆண்டு முதன்முதலில் இல்லார்டு மிட்செர்லிச் அமோனியம் பர்மாங்கனேட்டைத் தயாரித்தார். இதற்காக வெள்ளி பெர்மாங்கனேட்டுடன் சம மோலார் அளவு அமோனியம் குளோரைடை வினைபுரியச் செய்தார். வினையில் உருவான வெள்ளி குளோரைடை வடிகட்டிப் பிரித்தார். நீரை ஆவியாக்கி அமோனியம் பர்மாங்கனேட்டைத் தயாரித்தார். இதே முறையில் பேரியம் பர்மாங்கனேட்டு மற்றும் அம்மோனியம் சல்பேட்டு சேர்மங்களை வினைபுரியச் செய்தும் அமோனியம் பர்மாங்கனேட்டைத் தயாரிக்கிறார்கள். சாதாரண வெப்பநிலையிலும் அமோனியம் பர்மாங்கானேட்டு மெதுவாக சிதைவடைகிறது. 3 மாதங்களுக்கு சேமித்து வைக்கப்பட்ட ஒரு மாதிரியானது 96% மட்டுமே தூய்மைநிலையில் இருக்கும். 6 மாதங்களுக்கு பிறகு இதுவே அயோடினின் நிறத்தையும் நைட்ரசன் ஆக்சைடுகளின் மணத்தையும் பெறுகிறது. வெப்பத்தால் சிதைவடையும்போது நச்சுப்புகையை வெளியிடுகிறது [2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia