ஆக்ஸ்போர்டு குழு (Oxford Group)[1] அல்லது ஆக்ஸ்போர்டு தாவர உணவுமுறையினர் (Oxford Vegetarians) என்பது 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சிந்தனையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும்.[2] இக்குழுவின் முக்கிய நோக்கம் வளர்ந்து வரும் விலங்குரிமை, அல்லது விலங்கின விடுதலை, பற்றிய கருத்தாக்கங்களைப் பற்றி நேரில் சந்தித்து விவாதிப்பதும் உரையாடுவதும் ஆகும்.[3]
ஆரம்பத்தில் ஆக்ஸ்போர்டு குழு மெய்யியல் துறையின் முதுகலை மாணவர்களைக் கொண்டிருந்தது. இவர்களில் ஸ்டான்லி காட்லோவிச், ரோஸ்லிண்ட் காட்லோவிச், ஜான் ஹாரிஸ், டேவிட் வூட், மைக்கேல் பீட்டர்ஸ் (ஒரு சமூகவியல் முதுகலைப் பட்டதாரி) ஆகியோர் அடங்குவர். இக்குழுவின் உறுப்பினர்கள் ஆக்ஸ்போர்டில் உள்ள கல்விசார் வட்டங்களில் பிரபல செயற்பாட்டாளர்களாகவும் செல்வாக்குடையவர்களாகவும் இருந்தமையால் அச்செல்வாக்கின் மூலம் அங்கிருந்த மற்றவர்களும் மனிதரல்லா விலங்குகளை உள்ளடக்கிய ஒரு தார்மீக தத்துவத்தை வரையறை செய்யும் சிந்தனையில் ஆர்வம் காட்டத் துவங்கினர். இதிற்கு உத்வேகம் நல்கியவற்றில் குறிப்பிட்டது நெடுங்கதையாசிரியரான பிரிஜிட் ப்ரோஃபியின் படைப்பாகும். விலங்குரிமை பற்றிய கட்டுரைகளைத் தொகுப்பு ஒன்றை உருவாக்கும் யோசனை இக்குழுவுக்குத் தோன்ற, அதற்குப் பங்களிக்க ப்ரோஃபியும் மற்றவர்களும் ஒப்புக்கொண்டனர். திருமதி ப்ரோஃபியின் பரிந்துரையின் பேரில் ஆக்ஸ்போர்டு குழு மைக்கேல் ஜோசப் பதிப்பகத்தாரை அணுகியது. அப்பதிப்பகத்தில் இருந்த தொகுப்பாசிரியர் ஒருவர் குழு உறுப்பினர்களோடு கூடுதலாக நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களும் சேர்ந்து பங்களித்தால் அத்தகைய புத்தகம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். இருப்பினும், இதற்கு எவரும் ஆர்வம் காட்டாததால் காட்லோவிச், ஹாரிஸ் இருவரும் விக்டர் கோய்லான்ஸ் பதிப்பகத்தாரை அணுகினர். அங்கு அவர்கள் கில்ஸ் கார்டனை சந்தித்தனர். கோய்லான்ஸ் பதிப்பகத்தார் அப்புத்தகத்தைப் பதிப்பிக்க ஆர்வம் காட்டினர். இதன் விளைவாக சில மாதங்களுக்குப் பிறகு 1971-ல் அனிமல்ஸ், மென், அண்டு மாரல்ஸ் என்ற தலைப்பில் அந்நூல் வெளிவந்தது.[3]
கல்வித்துறை மற்றும் களச்செயற்பாடு ஆகிய இரு மட்டத்திலும் விலங்குரிமை என்ற கருத்தாக்கத்தின் வளர்ச்சிக்கு இந்தக் காலகட்டம் ஒரு வளமான காலமாக அமைந்திருந்தது. இதுகாறும் மனிதரல்லா விலங்குகளின் பயன்பாட்டிற்கு அடித்தளமாக இருந்துவந்த தார்மீக அனுமானங்களை ஆய்வு செய்து அதை எதிர்க்கும் கருத்தாக்கம் ஒன்றை உருவாக்க ஆக்ஸ்போர்டு குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் உதவின.[1]விலங்குப் பரிசோதனை, வேட்டையாடுதல் உள்ளிட்ட செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை எழுதி விநியோகம் செய்தும், அரசியல் நடவடிக்கைகள் ஈடுபட்டும் ஆக்ஸ்போர்டு குழு செயற்பட்டது.[4] அதன் உறுப்பினர்களில் இருவரான ரிச்சர்ட் டி. ரைடர், ஆண்ட்ரூ லின்சே ஆகியோரின் முயற்சியினால் 1977-ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் விலங்குரிமை குறித்த கேம்பிரிட்ஜ் மாநாடு நடத்தப்பட்டது. இது விலங்குரிமைகளுக்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்ட முதல் சர்வதேச மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.[3]
விலங்குரிமைக்கான கேம்பிரிட்ஜ் மாநாடு
விலங்குரிமைகளுக்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்ட முதல் சர்வதேச மாநாடான கேம்பிரிட்ஜ் விலங்குரிமை மாநாடு 1977-ல் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டு நடவடிக்கைகளின் தொகுப்பு விலங்குரிமைகள்: ஒரு சிம்போசியம் (1979) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இதில் விலங்குரிமைகள் வேண்டியும் விலங்கினவாதத்திற்கு முடிவு கட்டும் நோக்கிலும் அம்மாநாட்டின் 150 பங்கேற்பாளர்களால் கையொப்பமிடப்பட்ட பிரகடனம் ஒன்று நிறைவேற்றப்பட்டது:
(மனிதர்களின் நிற அடிப்படையிலான வேறுபாட்டை ஒத்த) விலங்கு இனங்களின் வேறுபாட்டை மட்டுமே கொண்டு அறிவியல், விளையாட்டு, உணவு, வணிக இலாபம் உள்ளிட்ட எந்தவொரு மனித ஆதாயங்களுக்காகவும் விலங்குச் சுரண்டல்கள் அல்லது ஒடுக்குமுறையை நியாயப்படுத்த முடியும் என்பதை நாங்கள் ஏற்கவில்லை.
அனைத்து விலங்குகளின் பரிணாம உறவையும் தார்மீக உறவையும் ஏற்பவர்களாக அனைத்து உணர்திற உயிரினங்களுக்கும் வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சிக்கான தேடல் ஆகியவற்றிற்கு முழு உரிமை உண்டு என்ற எங்கள் நிலைப்பாட்டினை நாங்கள் அறிவிக்கிறோம்.
இந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.[3]
குழுவுடன் தொடர்புடைய நபர்கள்
ரோஸ்லிண்ட் மற்றும் ஸ்டான்லி காட்லோவிச், மாண்ட்ரியலைச் சேர்ந்த தம்பதியினர்; அச்சமயத்தில் முன்னவர் செயின்ட் ஹில்டாஸ் கல்லூரியிலும் பின்னவர் ஆக்ஸ்போர்டில் உள்ள நியூ காலேஜ் கல்லூரியிலும் மெய்யியலில் முதுகலை பட்டதாரி மாணவர்களாவர்; செல்வாக்குமிக்க கட்டுரைகளான அனிமல்ஸ், மென், அண்டு மாரல்ஸ் நூலின் இணை தெகுப்பாசிரியர்களாக இருந்தனர்.
ஜான் ஹாரிஸ், பாலியோல் கல்லூரியில் மெய்யியலில் முதுகலை மாணவர்; அனிமல்ஸ், மென், அண்டு மாரல்ஸ் நூலின் இணை தொகுப்பாசிரியர்.[1]
ரூத் ஹாரிசன், தொழிற்சாலைமுறை விவசாயம் குறித்து விமர்சனத்தையும் கண்டனத்தையும் விவரிக்கும் அனிமல் மெஷின்ஸ் (1964) நூலின் ஆசிரியர்.[4]
ஆண்ட்ரூ லின்ஸே, ஆக்ஸ்போர்டு இறையியலாளர்; அனிமல் ரைட்ஸ்: எ கிறிஸ்டியன் அசஸ்மெண்டு (1976) என்ற நூலின் ஆசிரியர்; 2006-ம் ஆண்டில் விலங்கு நெறியியலுக்கான ஆக்ஸ்போர்டு மையத்தின் நிறுவனர்.[3]
பிரிஜிட் ப்ரோஃபி, நெடுங்கதையாசிரியர்; தி சண்டே டைம்ஸ் இதழில் வெளியிடப்பட்ட "தி ரைட்ஸ் ஆவ் அனிமல்ஸ்" (1965) என்ற கட்டுரையை எழுதியவர்.[3]
ஸ்டீபன் ஆர். எல். கிளார்க், மெய்யியலாளர்; ஆக்ஸ்போர்டில் உள்ள பாலியோல் கல்லூரியில் படித்தார் (1964–1968); ஆல் சோல்ஸ் அமைப்பின் உறுப்பினர் (1968–1975); தி மாரல் ஸ்டேட்டஸ் ஆவ் அனிமல்ஸ் (1976) என்ற நூலின் ஆசிரியர்.[3]
பேட்ரிக் கார்பெட், மெய்யியலாளர்; அச்சமயத்தில் பாலியோல் கல்லூரியில் சக ஊழியராக இருந்தார்.[4]
காலின் மெக்கின், மெய்யியலாளர்; ஆக்ஸ்போர்டில் உள்ள ஜீசஸ் கல்லூரியில் முதுகலை மாணவர் (1972–1974)[4]
மேரி மிட்க்லி, மெய்யியலாளர்; பீஸ்ட் அண்ட் மேன் (1978) மற்றும் அனிமல்ஸ் அண்ட் வொய் தே மேட்டர்: எ ஜர்னி அரவுண்ட் தி ஸ்பீசீஸ் பேரியர் (1983) ஆகிய நூல்களை இயற்றியவர்.[4]
மைக்கேல் பீட்டர்ஸ், சமூகவியலாளர்; முன்பு ஆக்ஸ்போர்டின் ஹெர்ட்ஃபோர்ட் கல்லூரியில் படித்தவர்.[4]
டாம் ரீகன், அமெரிக்க மெய்யியலாளர்; தி கேஸ் ஃபார் அனிமல் ரைட்ஸ் (1983) என்ற நூலின் ஆசிரியர்; 1973-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டுக்குச் சென்றபோது அங்கு ஆக்ஸ்போர்டு குழுவுடன் தொடர்பு கொண்டார்.[4]
ரிச்சர்ட் ரைடர், முன்னாள் விலங்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள வார்ன்ஃபோர்ட் மருத்துவமனையின் மூத்த மருத்துவ உளவியலாளர்; 1970-ம் ஆண்டு விலங்கினவாதம் குறித்த துண்டுப் பிரசுரத்தை எழுதி அச்சொல்லைப் முதன்முதலில் பயன்படுத்தியவர்; விக்டிம்ஸ் ஆவ் சயின்ஸ்: தி யூஸ் ஆவ் அனிமல்ஸ் இன் ரிஸர்ச் (1975), அனிமல் ரெவல்யூஷன்: சேஞ்சிங் ஆட்டிடியூட்ஸ் டுவர்ட்ஸ் ஸ்பீஷீசிசம் (1989) ஆகிய நூல்களை இயற்றியவர்; RSPCA அமைப்பின் முன்னாள் தலைவர்.[3]
பீட்டர் சிங்கர், ஆஸ்திரேலிய மெய்யியலாளர்; ஆக்ஸ்போர்டில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரியில் முதுகலை மாணவர் (1969–1973); அவர் அந்த நேரத்தில் ஆக்ஸ்போர்டு குழுவின் உறுப்பினராக இல்லை என்றாலும் பின்னர் அதனைப் பற்றி அறிந்து கொண்டார்; அனிமல் லிபரேஷன் (1975) நூலின் ஆசிரியர்.[3]
டேவிட் வூட், மெய்யியலாளர், ஆக்ஸ்போர்டில் உள்ள நியூ காலேஜ் கல்லூரியில் முதுகலை மாணவர் (1968–1971)[4]
ஜான் வைன்-டைசன், வெளியீட்டாளர், ஃபுட் ஃபார் எ ஃபியூச்சர்: தி கம்ப்ளீட் கேஸ் ஃபார் வெஜிடேரியனிசம் (1979) என்ற நூலின் ஆசிரியர்.[4]
Finsen, Susan and Finsen, Lawrence. "Animal rights movement," in Marc Bekoff (ed.). The Encyclopedia of Animal Rights and Animal Welfare. Greenwood, 2009.
Free, Ann Cottrell. "A Tribute to Ruth Harrison", Animal Welfare Institute Quarterly, Fall 2000, Volume 49, Number 4.
Kean, Hilda. Animal Rights: Political and Social Change in Britain since 1800. Reaktion Books, 1998.
Paterson, David and Ryder, Richard D. Animals' Rights: A Symposium. Open Gate Press, 1979.
Ryder, Richard D. Animal Revolution. Basil Blackwell, 1989.
Garner, R., and Okuleye, Y. The Oxford Group and the Emergence of Animal Rights. Oxford, UK: Oxford University Press, December 2020. (For a full history of the group)