விலங்குகளின் வலி![]() வலியானது விலங்குகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் எதிர்மறையாக பாதிக்கவல்லது.[1] வலி பற்றிய ஆய்வுக்கான சர்வதேச சங்கத்தால் (International Association for the Study of Pain) "வலி" என்பது "நிகழ்ந்துள்ள அல்லது நிகழவல்ல திசுச் சேதத்துடன் தொடர்புடைய அல்லது அத்தகைய சேதத்தின் அடிப்படையில் விவரிக்கப்படும் விரும்பத்தகாத புலன்சார் மற்றும் உணர்வுசார் அனுபவம்" என்று வரையறுக்கப்பட்டுள்ளது.[2] உயிரினங்களில் வலி எனப்படுவது விலங்குகளால் மட்டுமே அனுபவிக்கப்படுவது ஆகும்.[3] மேலும் வலியை அனுபவிக்கும் விலங்கால் மட்டுமே அவ்வலியின் தரம், வீரியம் அல்லது தீவிரம், ஆட்கொள்ளும் துன்பத்தின் அளவு ஆகியவற்றை அறிய முடியும். பாதிக்கப்பட்ட விலங்கால் அதை வெளிப்படுத்த இயலாத பட்சத்தில் ஒரு பார்வையாளருக்கு அங்கு அந்த விலங்குக்கு உணர்வுசார் அனுபவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்வது கடினமான ஒன்று என்பதைவிட இயலாத காரியம் என்றே கூறவேண்டும்.[4] இதனைக் கருத்தில் கொண்டே விலங்குகளின் வலி என்பதன் வரையறைகளில் இக்கருத்து பெரும்பாலும் விலக்கப்பட்டு விடுகிறது. எடுத்துக்காட்டாக விலங்குகளின் வலி குறித்து ஜிம்மர்மேன் வழங்கிய வரையறை இதோ: "அறிந்துகொள்ளப்பட்ட தவிர்ப்பு, இனம்சார்ந்த நடத்தை வெளிப்பாட்டில் மாற்றம், சமூக நடத்தையில் மாற்றம் ஆகியவற்றோடு கூடிய அசையும் (motor) மற்றும் அசையா (vegetative) தற்காப்பு எதிர்வினைகளை வெளிப்படுத்தக்கூடியதான நிகழ்ந்துள்ள அல்லது நிகழவல்ல காயத்தால் ஏற்படும் ஒரு வெறுக்கத்தக்க புலன் அனுபவம்".[5] மனித தொடர்புகளை ஒத்த ஒரு வகையில் மனிதரல்லா விலங்குகளால் தங்கள் உணர்வுகளை மொழிகொண்டு உரையாடும் மனிதர்களிடம் தெரிவிக்க முடியாது. ஆயினும் விலங்குகளின் நடத்தையை அவதானிப்பதன் வாயிலாக அவ்விலங்குகளின் வலியின் அளவைப் பற்றிய தோராயமான குறிப்பு ஒன்றை அறியலாம். தங்கள் நோயாளிகளுடன் அவர்களது மொழியை அறியாத வேற்றுமொழி மருத்துவர்கள் அந்நிலையிலும் தங்களது நோயாளிகளின் வலியை அறிந்து கொள்வது போல், வலியின் குறிகாட்டிகளைக் கொண்டு வலியின் தன்மையைப் புரிந்து கொள்வது சாத்தியமே. பாலூட்டிகள் முதற்கொண்டு அனைத்து முதுகெலும்பிகள் உட்பட அனேக விலங்கு இனங்கள் வலியை அனுபவிப்பதை அறியமுடிகிறது என்று அமெரிக்க தேசிய ஆராய்ச்சி சபையின் ஆய்வக விலங்குகளில் வலியை இனங்கண்டு தணிப்பதற்கான செயற்குழு கூறுகிறது.[6] விலங்குத் திணையைச் சேர்ந்த அனைத்து உயிரினங்களின் நரம்பு மண்டல உடற்கூறியல் மேலோட்டத்தை ஆராய்ந்ததில், முதுகெலும்பிகள் மட்டுமல்லாது பெரும்பாலான முதுகெலும்பிலிகளும் வலியை உணரும் திறனைக் கொண்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது.[7] மேலும் காண்கமேற்கோள் தரவுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia