ஜில் பிப்ஸின் மரணம்
ஆங்கில விலங்குரிமை ஆர்வலரான ஜில் ஃபிப்ஸ் (ஆங்கிலம்: Jill Phipps) பிப்ரவரி 1, 1995 அன்று, இங்கிலாந்திலுள்ள கோவென்ட்ரி விமான நிலையத்திற்கு அருகே இறைச்சிக்காக உயிருள்ள கன்றுகளை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பொதியுந்தின் அடியில் நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னணி1994-ம் ஆண்டு இங்கிலாந்தில் விலங்குரிமைப் போராளிகள் பி & ஓ (P & O), ஸ்டெனா ஸீலிங்க் (Stena Sealink), பிரிட்டனி ஃபெரீஸ் (Brittany Ferries) உள்ளிட்ட முக்கிய கப்பல் நிறுவனங்களை அவை அதுவரை செய்து வந்த உயிருள்ள விலங்கு ஏற்றுமதியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டு அக்கோரிக்கையை அந்நிறுவனங்கள் ஏற்கும்படிச் செய்வதில் வெற்றியும் கண்டனர். ஜனவரி 1995-ல், முப்பது விலங்குப் பண்ணையார்கள் கொண்ட குழு ஒன்று கடல் மற்றும் விமான வழிகளின் மூலம் விலங்குகளை ஏற்றுமதி செய்யும் மாற்றுப் போக்குவரத்தைச் செயல்படுதும் ஐ.டி.ஏஃப் (ITF) என்ற ஒரு அமைப்பை நிறுவியது. அத்தகைய ஒரு வழித்தடமாகக் கோவென்ட்ரி விமான நிலையம் அமைந்தது. அதன் வழியாக விலங்குகளை விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டது. மீண்டும் விலங்குரிமை செயற்பாட்டாளர்கள் கோவென்ட்ரி, பிளைமவுத் மற்றும் டோவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து விலங்குகள் ஏற்றுமதியை தடை செய்வதில் வெற்றி கண்டனர். எனினும் விலங்கு ஏற்றுமதி அனைத்தையும் அனுமதிக்குமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட்ட காரணத்தால் இப்போராட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்து விலங்கு ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்பட்டது.[a] 1995-ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் சசெக்ஸ் மாகாணத்தின் ஷோர்ஹாம் துறைமுகம் வழியாக ஏற்றுமதி மீண்டும் தொடங்கியபோது, இதை எதிர்த்து சுமார் 500 முதல் 600 எதிர்ப்பாளர்கள் திரண்டனர். அவர்கள் "சாலைகளை மறித்து, பொதியுந்துகளைச் சேதப்படுத்தி, ஓட்டுநர்களிடமும் காவல்துறையினரிடமும் வன்முறையில் ஈடுபட்டனர்" என்று ஊடகங்கள் கூறின. இது சில நாட்களுக்கு கடல் ஏற்றுமதியை வெற்றிகரமாக நிறுத்திவைத்தது. இதன் பின்னர் அதிகாரிகள் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட காவலர்களை கொண்டு விலங்குகளை ஏற்றிவந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க முன்வந்தனர். இதன் விளைவாகக் காவல்துறை செலவுகள் £6 மில்லியனையும் காவலர்களின் பணி நேரம் 20,000 மனித-மணிநேரங்களையும் தாண்டின. இதனால் சசெக்ஸின் தலைமைக் காவலர் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே துறைமுகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்போவதாகவும் மற்ற நாட்களில் விலங்குகளை ஏற்றி வரும் பொதியுந்துகளுக்குத் தடை விதிப்பதாகவும் அறிவித்தார். இத்தகைய அளவீட்டுக் கட்டுப்பாடுகள் விலங்கு வர்த்தகர்களால் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிமன்றம் "விலங்கு ஏற்றுமதி எதிர்ப்பாளர்களின் சட்ட விரோதமான செயல்பாடும் அதனால் ஏற்பட்ட காவல்துறையின் வளங்கள் மீதான செலவீனங்களும் ஒரு சட்டப்பூர்வ வர்த்தகத்தை முற்றிலுமாக தடைசெய்வதற்கு நியாயமான காரணங்களல்ல" என்று தீர்ப்பளித்தது.[3] இதைத் தொடர்ந்து மேலும் பல நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்தன. எனினும் இறுதியில் பெரும்பாலான ஐரோப்பிய பொருளாதார சமூகம் மாட்டுப் பித்த நோய் காரணமாக பிரித்தானிய மாட்டிறைச்சியை புறக்கணிக்கத் துவங்கிய காரணத்தால் 1996-ல் ஒருவழியாகத் தடை செய்யப்பட்டு இந்த விலங்கு ஏற்றுமதி வர்த்தகம் ஒரு முடிவுக்கு வந்தது.[4] 2006-ல் இந்தத் தடை மீண்டும் நீக்கப்பட்டது என்றாலும் கோவென்ட்ரி விமான நிலைய நிர்வாகத் தலைவர் உயிருள்ள கன்றுகளை விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கைகளை இனி மறுக்கப்போவதாக உறுதியளித்தார்.[5] ஜில் பிப்ஸ்
ஜில் பிப்ஸ் (15 ஜனவரி 1964 – 1 பிப்ரவரி 1995) 16 வயதில் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு இராயல் மெயில் நிறுவனத்திடம் வேலைக்குச் சென்றார். இளம் வயதிலேயே விலங்குகளைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டிய பிப்ஸ், தனது 11 வயதிலிருந்தே உரோம வர்த்தகத்திற்கு எதிராக தனது தாய் செய்த பிரச்சாரங்களில் கலந்து கொள்ளலானார். இதைத் தொடர்ந்து சைவ உணவு முறைக்கு மாறிய பிப்ஸ், தனது குடும்பத்தினரையும் சைவ உணவு முறையைக் கடைபிடிக்கச் செய்தார். கிழக்கத்திய விலங்கு விடுதலை லீக் அமைப்பில் இணைந்து செயலாற்றத் துவங்கிய பின்னர் பிப்ஸ் தனது தாயாருடன் சேர்ந்து செய்த ஒரு உள்ளூர் பிரச்சாரத்தின் விளைவாக அந்த ஊரில் செயல்பட்டு வந்த உரோம விற்பனை மையமொன்றும் உரோமப் பண்ணையையும் மூடப்பட்டன. 1986-ம் ஆண்டு தனது தாயுடனும் சகோதரியுடனும் சேர்ந்து பிப்ஸ் யூனிலீவர் ஆய்வகங்களில் உடற்கூறாய்வு நடத்தப்படுவதை எதிர்த்து அங்கு திடீர் கண்காணிப்புச் சோதனை ஒன்றை மேற்கொண்டார். அங்கு அவர் "கணினி உபகரணங்களை அடித்து நொறுக்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள சேதம் ஏற்படுத்தினார்" என்று ஊடகங்கள் உரைத்தன. அவரும் அவரது குழுவினரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. பிப்ஸின் தாய்க்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் அவரது சகோதரிக்கு பதினெட்டு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. பிப்ஸ் அப்போது கர்ப்பமாக இருந்ததால் அவரது தண்டனை காலம் நீக்கப்பட்டது.[7] தனது மகன் பிறந்த பிறகு, பிப்ஸ் சிறிது காலம் தனது போராட்டங்களுக்கு சற்று குறைந்த நேரத்தையே செலவிட்டார். பின்னர் மெள்ள மெள்ள தனது இளம் மகனுடன் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள், வேட்டையாடுதலை எதிர்க்கும் கூட்டங்களில் கலந்துகொள்வது போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் துவங்கினார். இறைச்சிக்காகக் கன்றுகளை ஏற்றுமதி செய்வதற்கு கோவென்ட்ரி விமான நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்தது அவரை அச்சுறுத்தியது. ஜனவரி 1995-ல் அவர் கோவென்ட்ரியிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் வரை கிட்டத்தட்ட 100 மைல்கள் நடந்து சென்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தனது 31வது பிறந்தநாளில் கோவென்ட்ரி விமான நிலையத்தில் இருந்து கன்றுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமான பீனிக்ஸ் ஏவியேஷன் நிறுவனத்தை நடத்தி வந்த நபரின் வீட்டிற்கு வெளியே பிப்ஸ் போராட்டம் நடத்தினார்.[7] விபத்தும் மரணமும்பிப்ரவரி 1, 1995 அன்று பேகின்டனில் உள்ள கோவென்ட்ரி விமான நிலையத்தில் ஐரோப்பா முழுவதும் விநியோகிப்பதற்கு வேண்டி உயிருள்ள கன்றுகளை ஆம்ஸ்டர்டாமுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்திய 35 விலங்குரிமை ஆர்வலர்களில் ஒருவராக பிப்ஸ் பங்கேற்றார். இவர்களில் பிப்ஸ் உட்பட பத்து ஆர்வலர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையில் அமர்ந்தும் சங்கிலியால் தங்களைப் பிணைத்துக் கொண்டும் விலங்குகளை ஏற்றி வந்த பொதியுந்தினை நிறுத்த முயன்றனர். அதில் எதிர்பாராத விதமாக அந்த பொதியுந்தின் சக்கரங்களில் பிப்ஸ் சிக்கிக் கொண்டதில் அவரது முதுகெலும்பு முறிந்தது.[8]
அந்தப் பொதியுந்தின் ஓட்டுநரைக் குற்றச்சாட்டும் வகையில் எந்த ஆதாரமும் இல்லை என்று இங்கிலாந்தின் நீதித்துறை அமைப்பான கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸ் தீர்ப்பளித்தது. பொதியுந்துகளின் வரிசையைச் சீர் செய்து அவற்றின் நகர்வினைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரே பிப்ஸின் மரணத்திற்கு காரணம் என்று பிப்ஸின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். விசாரணையில் ஒரு போராட்டக்காரர் திடீரென்று தனக்கு முன்னால் சாலையில் ஓடிவந்தது அந்த ஓட்டுநரின் கவனத்தை சிதறடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இறுதியில் இந்த மரணம் தற்செயலாக நிகழ்ந்த விபத்து என்று தீர்ப்பு எழுதப்பட்டது.[8] பின்நிகழ்வுஆண்டுதோறும் பிப்ஸ் இறந்த ஆண்டு தினத்தை ஒட்டி உலகெங்கிலும் விலங்குரிமைப் போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்துள்ளன.[9][10] பலராலும் பிப்ஸ் ஒரு தியாகி என்று அழைக்கப்படுகிறார். "ஆமாம், நம் போராட்டங்கள் மக்களை மனதளவில் சற்றே காயப்படுத்தக்கூடும் என்றாலும் ... இந்த [விலங்கு] வர்த்தகத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லத் தயார்" என்று பிப்ஸ் கூறியதாக பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டாலும், "தான் தியாகியாக வேண்டும் என்று ஜில் விரும்பியவரில்லை. அவருக்கு ஒரு இளம் மகன் இருக்கிறார். தன் மகனுக்காக வாழ வேண்டும் என்று வரும்புபவர் அவர். அவர் என்றும் இறக்க விரும்பியதில்லை" என்று பிப்ஸின் தந்தை கூறினார்.[7] 2007-ம் ஆண்டு கோவென்ட்ரி நகரில் நடந்த பிப்ஸின் நினைவு தின நிகழ்வில் பிப்ஸின் காணொளிப் படம், கோவென்ட்ரியில் நடந்த எதிர்ப்புப் போராட்டங்கள், பிப்ஸின் இறுதிச் சடங்குகள், பிப்ஸின் குடும்பத்துடனான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கொண்ட பிப்ஸின் திரைப்படம் தயாரிக்கப்பட்டு[11] முதன் முறையாக பொதுமக்களுக்குக் காட்டப்பட்டது.[12] இவற்றையும் பார்க்ககுறிப்புகள்
மேற்கோள் தரவுகள்
|
Portal di Ensiklopedia Dunia