குஞ்சழிப்பு![]() ![]() குஞ்சழிப்பு அல்லது குஞ்சுக் கொலை அல்லது தேவையற்ற குஞ்சு அழித்தல் (ஆங்கிலம்: chick culling) என்பது கோழி வளர்ப்பில் தேவையற்ற (ஆண் மற்றும் ஆரோக்கியமற்ற பெண்) குஞ்சுகளை பிரித்துக் கொல்லும் செயல்முறையாகும். இப்படிச் செய்வதற்குக் காரணம் இக்குஞ்சுகளால் தீவிர விலங்கு வளர்ப்புத் தொழிற்துறையில் எந்தப் பயனும் இல்லை என்பதேயாகும். வரம்பில்லா வளர்ப்பு (free range), இயற்கைசார் வளர்ப்பு (organic), அல்லது பேட்டரி கூண்டு வளர்ப்பு (battery cage) என அனைத்து தொழில்மயமான முட்டை உற்பத்தியிலும் இது நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், சில சான்றளிக்கப்பட்ட மேய்ச்சல் வளர்ப்பு முறையில் வளர்க்கப்பட்ட முட்டை பண்ணைகள் இந்த நடைமுறையை முற்றிலுமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.[1][2] உலகளவில், முட்டை உற்பத்தித் தொழிலில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 பில்லியன் ஆண் குஞ்சுகள் இவ்வாறு அழிக்கப்படுகின்றன.[3] ஆண் கோழிக்குஞ்சுகள் முட்டையிடாததாலும், இனப்பெருக்கத் திட்டங்களில் உள்ள ஆண் கோழிக்குஞ்சுகள் மட்டுமே முட்டைகளை அடைகாக்கப் பயன்படும் என்பதாலும், ஆண் குஞ்சுகள் முட்டை உற்பத்தித் தொழிலுக்கு தேவையற்றவையாகக் கருதப்படுகின்றன. எனவே கருவில் உருவான சில நாட்களுக்குள் அல்லது முட்டையிலிருந்து பொரிந்து வெளிவந்த ஓரிரு நாட்களுக்குள் குஞ்சுகள் பாலினம் வகைபடுத்தப்பட்டு அவற்றில் ஆண்குஞ்சுகள் பிரிக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன.[3] மயக்க மருந்து ஏதும் இல்லாமல் கழுத்து திருகப்பட்டும், கரியமில வாயு மூலம் மூச்சுத்திணறச் செய்தும், அதிவேக அரைப்பு இயந்திரம் கொண்டு அரைக்கப்பட்டும் இக்குஞ்சுகள் கொல்லப்படுகின்றன. அரைத்துக் கொல்லப்படுவதே (maceration) ஐக்கிய அமெரிக்காவில் முதன்மையாகக் கடைபிடிக்கப்படும் குஞ்சழிப்பு முறையாகும். மேற்கத்திய நாடுகளில் கரியமில வாயு மூலம் மூச்சுத்திணறச் செய்வதை விட அரைத்துக் கொல்லப்படுவதே பெரும்பாலும் விரும்பப்படும் முறையாகும். ஏனெனில் அரைத்துக் கொல்லப்படுகையில் மரணம் உடனடியாக அல்லது ஒரு நொடிக்குள் நிகழ வல்லது என்பதால் இம்முறையானது "அதிக மனிதாபிமானமான" முறையாகக் கருதப்படுகிறது.[4][5] நவீன தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்பங்களின் விளைவாக முட்டையிடும் கோழி விகாரங்கள் இறைச்சி உற்பத்தி (பிராய்லர்கள்) விகாரங்களிலிருந்து வேறுபடுகின்றன. ஆண் குஞ்சுகள் முட்டையிடுவதில்லை என்பதாலும் பிராய்லர்களாக மாறும் அளவுக்கு வளரக்கூடியவையல்ல என்பதாலும் ஐக்கிய அமெரிக்காவில் முட்டை உற்பத்தித் துறையில் அவை முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன.[4] ஃபாய் கிரா (foie gras) உற்பத்தியில் கூட வாத்துகளும் வாத்துக் குஞ்சுகளும் அழிக்கப்படுகின்றன. ஆனால் முட்டை உற்பத்தித் தொழிலில் செய்வது போலல்லாது ஃபாய் கிரா உற்பத்தித் தொழிலில் பெண் வாத்துகள் அழிக்கப்படுகின்றன. ஆண் பறவைகளை விட பெண் பறவைகள் குறைவாகவே எடை அதிகரிப்பதால் பெண் வாத்துகள் இலாபமற்றதாகக் கருதப்பட்டு இவ்வாறு ஒரு தொழில்துறை அரைப்பு இயந்திரத்தில் போட்டு அரைக்கப்பட்டுக் அழிக்கப்படுகின்றன.[6] இவ்வாறு ஆண்டுக்கு 40 மில்லியன் பெண் வாத்துகள் இந்த முறையில் கொல்லப்படுகின்றன. கொல்லப்படும் பெண் வாத்துக் குஞ்சுகளின் எச்சங்கள் பின்னர் பூனை உணவு, உரங்கள் ஆகியவற்றில் ஒரு மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.[7] குஞ்சழிப்பில் விலங்கு நல மீறல்கள் உள்ளதால், குஞ்சுகளை அழிப்பதற்கு சமூக எதிர்ப்பு உள்ளது. 2010களில், குஞ்சுகள் முட்டையில் இருக்கும்போதே அவற்றின் பாலினத்தைக் கண்டறியும் தொழில்நுட்பங்களை (in-ovo sexing) அறிவியல் அறிஞர்கள் உருவாக்கினர். வணிக அளவில் இந்த முறைகள் புழக்கத்திற்கு வந்ததிலிருந்து, உலகில் முதன்முறையாக ஜெர்மனியும் பிரான்சும் கூட்டாக 1 ஜனவரி 2022 முதல் அனைத்து குஞ்சழிப்பு முறைகளையும் தடை செய்வதாக அறிவித்து, மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளையும் அவ்வாறு செய்யுமாறு அழைப்பு விடுத்தன.[8] இத்தாலியிலும் இம்முறை தடை செய்யப்பட்டு விட்டது.[9] இவற்றையும் பார்க்கமேற்கோள் தரவுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia