அனிதா கிரைன்ஸ் வழக்குஅனிதா கிரைன்ஸ் வழக்கு (ஆங்கிலம்: Anita Krajnc case) என்பது கனடாவின் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள பர்லிங்டன் நகரில் அமைந்துள்ள "பியர்மேன்ஸ் போர்க் இன்கார்பரேட்டட்" என்ற பன்றி இறைச்சி நிறுவனத்தின் வதைகூடத்திற்கு அதன் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பன்றிகளை வழியில் நிறுத்தி அவ்விலங்குகளுக்குத் தண்ணீர் கொடுத்ததற்காக டொராண்டோ நகரைச் சேர்ந்த அனிதா கிரைன்ஸ் என்பவர் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்கு ஆகும்.[1] இந்தச் சம்பவம் ஜூன் 22, 2015 அன்று நடந்தது.[1][2] நீண்ட விசாரணைக்குப் பின்னர் கிரைன்ஸ் குற்றமற்றவர் என்று மே 4, 2017 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. பின்புலம்"டொராண்டோ பிக் சேவ்" என்ற விலங்குரிமை அமைப்பின் இணை நிறுவனரான அனிதா கிரைன்ஸ்,[3] டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.[4] அவரது முனைவர் பட்ட ஆய்வேடு சர்வதேச சுற்றுச்சூழல் மேலாண்மைகளை உருவாக்குவதில் அறிவியல் அறிவு, பொதுக் கல்வி ஆகியவற்றின் பங்கை அலசுவதை அடிப்படையாகக் கொண்டது.[5] க்வீன்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருந்துள்ள கிரைன்ஸ்,[6] ஒரு ஊடக ஜனநாயக ஆர்வலராகவும் எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.[7] அவர் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான சார்லஸ் காக்சியாவின் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.[8] வழக்கின் நிகழ்வுஜூன் 22, 2015 அன்று பர்லிங்டன் நகரில் உள்ள ஃபியர்மேன்ஸ் போர்க் இன்க். நிறுவனத்தின் வதைகூடத்திற்கு வெளியே டொராண்டோ பிக் சேவ் என்ற விலங்குரிமைக் குழு போராட்டமொன்றை நடத்தியது.[1] விலங்குரிமை ஆர்வலரான கிரைன்ஸ் இக்குழுவில் உறுப்பினராவார்.[9] வெட்டுவதற்காகப் பன்றிகளை வதைகூடத்திற்கு எடுத்துச் செல்லும் வதைகூட வண்டிகள் ஆப்பிள்பை லைன் மற்றும் ஹார்வெஸ்டர் சாலை சந்திப்பில் சாலைகளுக்கு நடுவிலுள்ள ஒரு போக்குவரத்து திடலில் சமிஞ்கைக்காக நிற்கையில் அவ்வண்டிகளின் பக்கவாட்டில் உள்ள துளைகள் வழியாக கிரைன்ஸூம் அவரது குழுவினரும் அப்பன்றிகளுக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வண்டிகளில் ஒன்றன் ஓட்டுநர் தனது வண்டியிலிருந்து இறங்கி கிரைன்ஸிடம் சென்று தண்ணீர் கொடுப்பதை நிறுத்தச் சொன்னார். அப்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் விவிலியத்தின் பழமொழிகள் பகுதியிலிருந்து "தாகமாக இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுங்கள்" என்ற வசனத்தை கிரைன்ஸ் அவரிடம் எடுத்துரைத்தார்.[10] அதற்குப் அந்த ஓட்டுநர் "பன்றிகள் ஒன்றும் மனிதர்கள் அல்ல" என்று கூறினார்.[11] கிரைன்ஸ் அந்த ஓட்டுநரிடம் சற்றே இரக்கம் காட்டும்படிக் கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த ஓட்டுநர் காவல்துறையை அழைக்கப்போவதாக கூற, கிரைன்ஸ் தான் இயேசுவை அழைக்கப்போவதாக பதிலளித்தார். இதையடுத்து அந்த ஓட்டுநர் தனது வண்டியில் ஏறி அதை ஓட்டிச் சென்றார். இந்த உரையாடல்கள் யாவும் கிரைன்ஸின் சக விலங்குரிமைக் குழுவினரால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டன.[2] இந்த சம்பவம் தொடர்பாகப் புகார் கொடுக்கப்பட, காவல்துறையும் இச்சம்பவம் குறித்த தனது அறிக்கையில் கிரைன்ஸும் அவரது குழுவினரும் பன்றிகளுக்குத் தண்ணீர் கொடுத்த புட்டியில் இருந்தது "பெயர் தெரியாத ஏதே ஒரு திரவம்" என்று பதிவு செய்தது.[12] ஜூன் 23, 2015 அன்று, எரிக் வான் போக்கல் என்பவர் கிரைன்ஸின் மீது வழக்கு தொடர்ந்தார். இவருடைய பண்ணையில் இருந்து தான் சம்பவத்தன்று வதைகூடத்திற்குப் பன்றிகள் கொண்டு வரப்பட்டன. செப்டம்பர் 9, 2015 அன்று, கிரைன்ஸ் மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டது. இதன் மூலம் கிரைன்ஸுக்கு ஒரு குறிப்பிட்ட அபராதத் தொகையில் தொடங்கி அதிகப்பட்டம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. இதை முன்னிறுத்தும் வகையில் அவரது விலங்குரிமைக் குழு செப்டம்பர் 24 அன்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.[13] அக்டோபர் 14, 2015 அன்று கிரைன்ஸ் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட அங்கு அவரது குற்றப்பத்திரிகை அவர் முன் வாசிக்கப்பட்டது.[1][14] தி டெய்லி டெலிகிராப் நாளிதழ் இந்த வழக்கைக் குறித்த தனது செய்திக் கட்டுரையொன்றில் கனடா நாட்டுச் சட்டத்தின் கீழ் பன்றிகள் உடமைகளாகக் கருதப்படுகின்றன என்றும் 36 மணி நேரம் வரை உணவே தண்ணீரோ இன்றி அவற்றைக் சட்டப்படிக் கொண்டு செல்லலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.[15] அபராதத்தைச் செலுத்த மறுத்த கிரைன்ஸ் தான் சிறை தண்டனையை அனுபவிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.[16] விலங்குக் கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை ஆர்வலர்களுக்கு இருந்தாலும், தனது ஆட்சேபனை எல்லாம் ஆர்வலர்கள் தனது வண்டியோட்டும் செயற்பாட்டில் குறுக்கிடுவதும் அவர்களது சொந்தப் பாதுகாப்பினையும் மீறி வண்டியைத் தொடுவதும் தான் என்று வண்டியின் ஓட்டுநர் கூறினார். மேலும் கிரைன்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் நியாயமானவையே என்று அவர் கருதினார். சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் பன்றிகள் வண்டியில் ஏற்றப்பட்டதாகவும் அதற்குள் அவற்றிற்கு தாகம் எடுக்க வாய்ப்பில்லை என்றும் அவர் வாதிட்டார். இக்கூற்றை மறுக்கும் விதமாக இந்த சம்பவத்தின் காணொளிக் காட்சியில் காணப்படும் பன்றிகள் "கடுமையான வெப்ப நிலைகளின் காரணத்தால் உடற்சோர்வுடன்" காணப்பட்டதாக முன்னாள் விலங்கு வளர்ப்பாளரான பாப் காமிஸ் கூறிய கருத்தை மெட்ரோ நாளிதழ் தனது இதழில் பதிப்பித்தது.[10] "பிறரது உடமைகளில் குறுக்கிடவோ சட்டவிரோதமாக போராட்டம் நடத்தவோ அவர்களுக்கு [ஆர்வலர்களுக்கு] உரிமையும் இல்லை" என்று எரிக் வான் போக்கல் தனது புகாரை ஆதரிக்கும் வகையில் கூறினார். உணவு, தண்ணீர் போன்றவை தொடர்பாக பன்றி வளர்ப்போர் சங்கம் வகுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டே தனது பண்ணையின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக மேலும் அவர் கூறினார். ஒரு அடுப்பங்கறை பண்டத்தையும் உயிரினங்களையும் வேறுபடுத்தத் தெரியாதது போன்ற ஒரு செயலாகப் பன்றிகள் போன்ற உயிருள்ள விலங்குகளை இவ்வாறு உடமையாகக் கருதுவதே இந்த விஷயத்தின் மையப் பிரச்சினை என்றும் விலங்குகளிடம் இரக்கம் காட்டுவது என்பது ஒருபோதும் குற்றச் செயலாகக் கருதப்படக்கூடாது என்றும் கிரைன்ஸ் கூறினார்.[17] விசாரணைஇந்த வழக்கு ஆன்டாரியோ உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டேவிட் ஹாரிஸ் தலைமையில் விசாரணைக்கு வந்தது.[18] விசாரணையின் இறுதி வாதங்கள் மார்ச் 9, 2017 அன்று நடைபெற்றன.[19] நீதிபதி டேவிட் ஹாரிஸ், மே 4, 2017 அன்று கிரைன்ஸ் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தார். எதிர்த் தரப்பு வாதிட்டது போலன்றி பன்றிகளுக்குத் தண்ணீர் கொடுப்பது என்பது பன்றிகளின் உரிமையாளர்களுக்கு "செயற்பாடு ரீதியாகவோ, பயன்பாடு ரீதியாகவோ" குறுக்கீடாக அமையாது என்பதால் இது ஒரு குற்றமல்ல என்று நீதிபதி கருதினார். கிரைன்ஸின் செயலானது வதைகூடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பன்றிகளின் இறைச்சியினை மாசுபடுத்தக்கூடும் என்ற எதிர்த் தரப்பு வாதத்தையும் நீதிபதி ஹாரிஸ் நிராகரித்தார். ஓட்டுநர் நடந்த சம்பவத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாமல் உடனடியாக பன்றிகளை வதைகூடத்திற்குச் சேர்த்துள்ளார் என்பதிலிருந்தே உண்மையில் ஆபத்து ஏதும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களில் பன்றிகளுக்குத் தண்ணீர் கொடுக்கப்பட்டதை அறிந்த பின்னரும் வதைகூடங்கள் அப்பன்றிகளை ஒருபோதும் ஏற்க மறுத்ததில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டே இது போன்ற வாதங்கள் செல்லாது என்று நீதிபதி ஹாரிஸ் அவற்றை நிராகரித்தார்.[18] பிரதிவாதிகளின் இரண்டு நிபுணத்துவ சாட்சிகளின் சாட்சியத்தை நீதிபதி ஹாரிஸ் புறநிலையாக இல்லை என்று கூறி நிராகரித்தார், மேலும் அவ்விரு சாட்சிகளில் ஒன்று "அறிவியல் தன்மையற்று" இருப்பதையும் அவர் சுட்டினார். கிரைன்ஸ்ஸை அவரது தரப்பு மண்டேலா, காந்தி, சூசன் பிரவுன் அந்தோனி மற்றும் ஹோலோகாஸ்ட் எனப்படும் பெரும் இன அழிப்பின் போது யூதர்களுக்கு உதவியவர்களுடன் ஒப்பிட்டதையும் கவனத்தை ஈர்க்கும் அறிக்கைகள் என்று கண்டித்தார்.[18] எதிர்வினைகிரைன்ஸ் வழக்கில் அவரை ஆதரித்து பல இணையவழி மனுக்கள் வெளிவந்தன. அவற்றில் "இரக்கம் ஒரு குற்றமல்ல" என்று பெயரிடப்பட்ட மனு ஒன்று 125,500 கையொப்பங்களைக் தாங்கி வந்தது. மற்றொரு மனுவானது கிரைன்ஸுக்கு எதிரான குற்றச்சாட்டைக் நீக்குமாறு ஆன்டாரியோ நீதிமன்றத்தைக் கோரிய வண்ணம் 24,000-க்கும் அதிகமான கையொப்பங்களை தாங்கி வந்தது.[20] டெய்லி டெலிகிராப் நாளிதழ் கிரைன்ஸின் வழக்கை "விலங்குரிமை ஆர்வலர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு" என்று வர்ணித்தது.[15] இதர நிகழ்வுகள்அக்டோபர் 4, 2016 அன்று விலங்குகளை ஏற்றிக்கொண்டு வதைகூடத்திற்குச் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று கவிழ்ந்ததை அடுத்து, 2015-ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கான பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரிலும் காவல்துறையைத் தடுத்த குற்றச்சாட்டின் பேரிலும் கிரைன்ஸ் கைது செய்யப்பட்டார். சம்பவத்தன்று தெருவின் ஒரு பகுதியை காவல்துறை கயிற்றுப்பட்டை கொண்டு தடுப்பு ஒன்றை எழுப்பியிருந்தனர். அடிபட்ட விலங்குகளைப் பார்வையிட ஒரு முறைக்கு மேற்பட்டு இத்தடுப்புகளைக் கடந்து சென்ற காரணத்தினாலும் காவல்துறையின் விதிமுறைகளை மீறியதற்காகவும் கிரைன்ஸ் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தரப்பு கூறியது.[21] ஜூன் 2020-ல், அதே வதைகூடத்தின் வாயிலில் கிரைன்ஸ் குழுவினரின் வழக்கமான "டொராண்டோ பிக் சேவ்" போராட்டமொன்றில் கலந்துகொண்டபோது கிரைன்ஸின் சக விலங்குரிமை செயற்பாட்டாளரான ரீகன் ரஸ்ஸல் பன்றிகளை ஏற்றிச் சென்ற விலங்குப் போக்குவரத்து வாகனம் ஒன்றில் சிக்கி நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டார்.[22] இவற்றையும் பார்க்கமேற்கோள் தரவுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia