தார்மீக வட்ட விரிவாக்கம்![]() தார்மீக வட்ட விரிவாக்கம் (Moral circle expansion) என்பது நம்மால் தார்மீக முக்கியத்துவம் கொடுக்கப்படும் பொருட்கள் மற்றும் விடயங்களின் எண்ணிக்கையும் வகைகளும் காலப்போக்கில் அதிகரிப்பது ஆகும்.[1] தார்மீக உள்ளடக்கம் அல்லது உள்ளடக்கச் சேர்ப்பு பற்றிய பொதுவான சிந்தனைகள் பண்டைய காலத்திலிருந்தே மெய்யியல் அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ள போதிலும், 19-ம் நூற்றாண்டிலிருந்து இச்சிந்தனை மனித உரிமை மற்றும் விலங்குரிமை தொடர்பான சமூக இயக்கங்களை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக விலங்குரிமை தொடர்பாக மெய்யியல் அறிஞர் பீட்டர் சிங்கர் 1970-களிலிருந்து இந்த விடயத்தைப் பற்றி எழுதி வந்துள்ளார். மேலும் 2017-ம் ஆண்டு முதல் 21-ம் நூற்றாண்டின் திறன்மிகு ஒப்புரவாண்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சிந்தனைக் குழுவான சென்டியன்ஸ் இன்ஸ்டிடியூட் செயற்பட்டு வந்துள்ளது. வளர்ந்து வரும் தார்மீகக் கருத்தியலில் ஒரு சீரான எல்லை இல்லாமை மற்றும் மக்களின் தார்மீக அணுகுமுறைகளுக்கும் அவர்களின் நடத்தைக்கும் இடையே காணப்படும் தொடர்பற்ற தன்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, மனிதகுலம் உண்மையில் விரிவடையும் தார்மீக வட்டத்தைக் கொண்டிருக்கிறதா என்ற குறிப்பிடத்தக்க விவாதம் எழுந்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வரலாறுதார்மீக வட்டத்தின் ஆரம்பகால விவாதங்கள்பொ.ஊ. 2-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உறுதிப்பாட்டுவாத தத்துவஞானி ஹீரோக்கிளீஸ் தார்மீக வட்டத்தைப் பற்றி முதன் முதலாக விவாதித்த குறிப்புகள் உள்ளன. ஆன் அப்ராப்ரியேட் ஆக்ட்ஸ் ("ஏற்புடைய நடத்தைகள்") என்ற தனது நூலில் ஒரு மனிதனின் செறிவான விரிவடையும் சமூக வட்டங்களை அவர் விவரித்ததுடன், இவ்வட்டங்களுள் உள்ளார்ந்த வட்டத்திற்கான கடமையே மிகவும் வலுவானதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை வில்லியம் லெக்கி 1869-ம் ஆண்டு தனது படைப்பான "ஆகஸ்டஸ் முதல் சார்லமேக்னே வரை ஐரோப்பிய ஒழுக்கங்களின் வரலாறு" என்ற நூலில் முழுமையாக்கியுள்ளார்.[1] தார்மீக வட்ட விரிவாக்கத்திற்கான ஆரம்பகால ஆதரவுவிலங்குரிமைக்கான ஆரம்பகால ஆர்வலரான எட்வர்ட் பேசன் ஈவன்ஸ் (Edward Payson Evans) என்பவர் "பரிணாம நெறிமுறைகள் மற்றும் விலங்கு உளவியல்" என்ற நூலை 1897-ல் வெளியிட்டார். இதில் மனித இனம் தன்னை மற்ற அனைத்து உயிரினங்களிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டதாகவும் தனித்ததாகவும் பார்க்கத் தூண்டும் மானுடமையவாதக் கருத்துக்களை உடைத்தெரிய வேண்டுமென்றும் அச்சிந்தனையின் விளைவாகத் தனக்கு பிற விலங்கினங்களோடு எந்த தார்மீகக் கடமைகளும் இல்லை என்பது போன்ற எண்ணத்தையும் விட்டொழிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.[2] பயனெறிமுறைக் கோட்பாட்டு மெய்யியலாளரும் விலங்குரிமை அறிஞருமான ஜே. ஹோவர்ட் மூர் தனது 1906-ம் ஆண்டு படைப்பான தி யுனிவர்சல் கின்ஷிப் என்ற நூலில் ஒரு உணர்திற தத்துவத்தை முன்னிறுத்தினார். அதன் மூலம் அனைத்து உணர்திற உயிரினங்களையும் ஒத்த பரிணாம உறவின் அடிப்படையில் பேணிக் காக்க வேண்டிய கடமை மனித இனத்திற்கு உள்ளது என்று மூர் வலியுறுத்தினார்:[3]
பீட்டர் சிங்கரும் விரிவடையும் வட்டமும்பயனெறிமுறைக் கோட்பாட்டு மெய்யியலாளரான பீட்டர் சிங்கர் 1981-ம் ஆண்டு எழுதிய தி எக்ஸ்பான்டிங் சர்கிள் ("விரிவடையும் வட்டம்") என்ற புத்தகத்தில் தார்மீக வட்ட விரிவாக்கக் கருத்தினை மேலும் செப்பனிட்டார்.[4] இந்தப் புத்தகம் விரிவடையும் வட்டத்தின் பொதுவான கோட்பாட்டை முன்வைக்கிறது: தனது குடும்பம் அல்லது தன்னைச் சார்ந்த சமூகக் குழு போன்ற தன்னைப் போலவே இருப்பவர்களை மட்டுமே மதிக்கத் துவங்கிய மனித இனம் பின்னர் தனது நாட்டின் மற்ற குடிமகன்களையும் ஏற்றுக்கொண்டு இறுதியாக ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மதிக்கத் தொடங்கியது; இப்போது அதே விரிவாக்க செயல்முறை விலங்குரிமை தொடர்பாக நடைபெற்று வருகிறது. "ஒப்புரவாண்மை விரிவாக்கத்திற்கான ஒரே நியாயமான நிறுத்தற் புள்ளி எதுவெனில் நமது செயல்களால் பாதிக்கப்படக்கூடிய அனைவரும் நமது ஒப்புரவாண்மை வட்டத்திற்குள் சேர்க்கப்பட்டுவிட்டனர் என்ற புள்ளியேயாகும்" என்று சிங்கர் தனது புத்தகத்தில் விவரிக்கிறார். சிங்கர் தனது வேறு சில படைப்புகளிலும் விரிவடையும் வட்டத்தைக் குறித்து எழுதுகிறார்.[5][6] மாற்றுக் கருத்துகளும் பிற்கால முன்னேற்றங்களும்தார்மீக வட்ட விரிவாக்கம் குறித்து சில பிற்கால எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர் என்றபோதும் அவர்களின் வரையறைகள் சிங்கரின் வரையறையிலிருந்து சற்றே வேறுபட்டுக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ராபர்ட் ரைட் தனது 1994-ம் ஆண்டைய தி மாரல் அனிமல் ("தார்மீக விலங்கு") என்ற புத்தகத்தில் சிங்கரின் கருத்துக்கு விமர்சனக் கருத்தாக்கத்துடன் பதிலளித்தார்.[7] டி. ஜே. காஸ்பர்பாயர் 2018-ம் ஆண்டு எழுதிய புத்தகமான சப்ஹ்யூமன், தார்மீக வட்டத்தின் விரிவாக்கத்தை "தார்மீக நோயாளிகள்" என்ற சிந்தனையைக் கொண்டு வரையறுக்கிறது. இது தார்மீக நோயாளிகளாகக் கருதப்படும் விடயங்களின் எண்ணிக்கை மற்றும் எத்தனை வகையான விடயங்கள் தார்மீக நோயாளிகளாகக் கருதப்படுகின்றன என்பதன் அதிகரிப்பு ஆகிய இரண்டையும் கணக்கில் கொண்டு இந்த வரையறையைச் செய்கிறது. தார்மீக வட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும் விடயங்கள் போதுமான அளவில் இருக்க வேண்டியது முக்கியம் என்றும் காஸ்பர்பாயர் மேலும் கூறுகிறார்.[8] மெய்யியலாளர் ஜெப் செபோவின் 2025-ம் ஆண்டு படைப்பான தி மாரல் சர்கிள் ("தார்மீக வட்டம்") என்ற புத்தகம் நெறிமுறைகளின் நோக்கத்தில் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகள், பூச்சிகள், செயற்கை நுண்ணறிவுயிரிகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றையும் உள்ளடக்குமாறு நமது தார்மீக வட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வாதிடுகிறது. மனித விதிவிலக்கு என்ற கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் இந்நூல், தொழிற்முறை விவசாயம் (factory farming), சிறைப்பிடிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு போன்ற மனித நடைமுறைகள் பெரும்பாலும் மனிதரல்லா விலங்குகளின் நலன்களைக் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றன என்பதை ஆராய்கிறது. சிறைபிடிக்கப்பட்ட யானைகள், வளர்க்கப்பட்ட பூச்சிகள், டிஜிட்டல் மனங்களை உருவாக்குவதைச் சுற்றியுள்ள நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிய வழக்காய்வுகளின் (case studies) வாயிலாக செபோ இந்தக் கருத்துகளை அலசுகிறார். நெறிமுறை பொறுப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தும் இந்நூல் அனைத்துயிரிகளின் நலத்தேவைகளை உள்ளடக்கிய சமமான எதிர்காலத்தை உருவாக்க முறையான மாற்றங்களைப் பரிந்துரை செய்கிறது.[9] திறன்மிகு ஒப்புரவாண்மை இயக்கத்தில் தார்மீக வட்ட விரிவாக்கம்திறன்மிகு ஒப்புரவாண்மை இயக்கமானது, குறிப்பாக உணர்திறக் கழகம் (the Sentience Institute), தனது மெய்யியற் கோட்பாடுகளின் ஒரு பகுதியாக தார்மீக வட்ட விரிவாக்கத்தை தொடர்ந்து விவாதித்து வருகிறது.[10] 2017-ம் ஆண்டு திறன்மிகு ஒப்புரவாண்மை அறக்கட்டளையின் (Effective Altruism Foundation) ஒரு துணைப் பகுதியாகத் தொடங்கப்பட்ட உணர்திறக் கழகம், "மனிதகுலத்தின் தார்மீக வட்டத்தின் விரிவாக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிந்தனைக் குழு" என்று தன்னை விவரிக்கிறது.[11] அதன் வலைத்தளம், மைய வட்டங்கள் உட்பட, தார்மீக வட்டத்தின் விரிவான மாதிரி ஒன்றை வழங்குகிறது: உள்மைய வட்டமானது முழு தார்மீக முக்கியத்துவத்தையும், வெளிப்புற வட்டமானது குறைந்தபட்ச தார்மீக முக்கியத்துவத்தையும் குறிக்கிறது. சில விடயங்கள் முற்றிலுமாக இவ்வட்டங்களுக்கு வெளியே விழுகின்றன. கூடுதலாக, அவை அணுகுமுறை எண்ணங்களுக்கான தார்மீக வட்டத்திற்கும் (moral circle for attitudes) செயல்களுக்கான தார்மீக வட்டத்திற்குமான (moral circle for actions) வேறுபாட்டையும், சமூக தார்மீக வட்டத்திற்கும் (societal moral circle) தனிநபர் தார்மீக வட்டத்திற்குமிடையிலான (individual circle) வேறுபாட்டையும் இயம்புகின்றன.[12] தார்மீக வட்ட விரிவாக்கம் என்பது ஒரு கருத்தாக்கமாக உணர்திறக் கழகத்தின் இணை நிறுவனர் ஜேசி ரீஸ் அந்திஸ் மற்றும் மெய்யியலாளர் ஈஸ் பேஸ் ஆகியோரால் 2021-ம் ஆண்டு ஃபியூச்சர்ஸ் ஆய்விதழில் வெளிவந்த "தார்மீக வட்ட விரிவாக்கம்: தொலைதூர எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஒரு நம்பிக்கைக்குரிய உத்தி" என்ற தலைப்பிலான கட்டுரையில் உருவாக்கப்பட்டது.[1] முன்மொழியப்பட்ட விரிவாக்கங்கள்மனித வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் பல்வேறுபட்ட விடயங்கள் மனிதனின் தார்மீக வட்டத்திற்குள் நுழைந்துள்ளன. சில சமயங்களில் சில வெளியேறிய நிகழ்வுகளும் உண்டு:[1][5]
எந்தவொரு குறிப்பிட்ட விடயமோ அல்லது விடயங்களின் குழுவோ வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் தார்மீக வட்டத்திற்குள் நுழையலாம். விலங்குகளை உள்ளடக்கிய தார்மீக வட்டத்தின் தற்போதைய விரிவாக்கத்தை காஸ்பர்பாயர் அனைத்து மனிதர்களையும் உள்ளடக்கிய வட்டத்திலிருந்து அனைத்து உணர்திறப் பொருட்களையும் உள்ளடக்கிய வட்டமாக மாறியுள்ள விரிவாக்கம் என்று குறிப்பிடுகிறார்.[8] தாவரங்கள், இயற்கை, மற்றும் ரோபோக்கள் கூட தார்மீக வட்டத்திற்குள் நுழையத் தொடங்கலாம் என்று சிகல் சாமுவேல் பரிந்துரைத்துள்ளார்.[5] அந்திஸ் மற்றும் பேஸ் இந்த விரிவடைந்த வட்டத்தை பிறருக்குத் தீங்கு விளைவிக்க விரும்புவது முதல் தன்னைக் காட்டிலும் பிறரைப் பற்றி அதிக அக்கறை கொள்வது வரையிலான "பல பரிமாண சாய்வு" என்று குறிப்பிடுகின்றனர்.[1] எதிர் வாதங்கள்மனிதரல்லா விலங்குகள் நமது தார்மீக வட்டத்திற்குள் வரத் துவங்கிவிட்டன என்ற கூற்றுக்கள் உள்ளபோதிலும் உணவுக்காகவோ அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காகவோ பயன்படுத்தப்படும் விலங்குகளின் உண்மையான நிலை மேம்பட்டு வருகின்றனவா என்ற கேள்விக்கான விடை இன்னும் தெளிவாக இல்லை என்று காஸ்பர்பாயரும் மற்ற அறிஞர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.[1][8] மதம் சில விலங்குகளுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு அந்தஸ்தானது காலப்போக்கில் தேய்ந்து போனதால் அந்த நிலை தற்போது குறைந்துள்ள வகையில் தார்மீக வட்டச் சுருக்கம் ஒன்று காணப்படுகிறது என்ற விமர்சனம் அறிஞர்களால் வைக்கப்படுகிறது.[13] கடவுள்களர்கள், மூதாதையர்கள் உள்ளிட்ட குழுக்கள் தார்மீக வட்டத்தை விட்டு வெளியேறியதாகவோ அல்லது அவ்வட்டத்தின் மையத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டதாகவோ அறியப்படுகையில் கைக்குழந்தைகளும் கருவில் உள்ள குழந்தைகளும் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு தார்மீக நிலைகளைக் நடத்தப்படுகின்றனர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[14] தார்மீக வட்டம் என்ற கருத்தானது பெரிதும் மேற்கத்திய ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது என்றும், அதன் காரணமாக உலகின் பிற பகுதிகளில் காணப்படும் தார்மீகக் கருத்துக்களின் பன்முகத்தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கத் தவறி விடுகின்றது என்றும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அகிம்சை உள்ளிட்ட இந்திய தார்மீகக் கருத்துகள் விலங்குகளுக்குத் தரும் மதிப்பானது மேற்கத்திய கலாச்சாரத்தில் காணப்படுவதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் என்பது நோக்கத்தக்கது.[1][5] இவற்றையும் காண்கதரவுகள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia