ஊன்வாதம்
ஊன்வாதம் (ஆங்கிலம்: carnism) என்பது மனிதரல்லாத மற்ற விலங்குகளுடனான மனிதகுலத்தின் உறவைப் பற்றிய விவாதங்களில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்தாகும். இது பொதுமக்கள் விலங்குப் பொருட்களை, குறிப்பாக இறைச்சியை, உண்பதையும் நுகர்தலையும் ஆதரிப்பதை வெளிப்படுத்தும் நடைமுறைச் சிந்தனையோட்டமாக வரையறுக்கப்படுகிறது.[கு 1] ஊன்வாதம் என்பது பல்வேறு வகைகளிலும் ஆதரிக்கப்பட்டு யவராலும் கண்டுகொள்ளப்படாமலும் கேள்வியெழுப்பப்படாமலும் தொடரப்படும் ஒரு மேலாதிக்க நம்பிக்கையாக அறியப்படுகிறது.[1][2][3][4] ஊன்வாதம் என்ற சொல் சமூக உளவியல் அறிஞரான மெலனி ஜாய் என்பவரால் 2001-ல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டு அவரது 2009-ம் ஆண்டைய புத்தகமான ஒய் வி லவ் டாக்ஸ், ஈட் பிக்ஸ், அண்டு வேர் கெளஸ் ("நாம் ஏன் நாய்களை நேசிக்கிறோம், பன்றிகளை உண்கிறோம், பசுக்களை அணிகிறோம்") என்ற நூலின் வாயிலாகப் பிரபலமடைந்தது.[5][6][7] ஊன்வாதம் என்பது நனிசைவம் என்ற சிந்தனையின் எதிர்மறையான முரண்பாட்டுச் சிந்தனை ஆகும்.[1] இறைச்சி உண்பதை "இயற்கையானது" என்றும் "இயல்பானது" என்றும் "இன்றியமையாதது" என்றும் (சில நேரங்களில்) "இனியது" என்றும் கருதும் எண்ணமே ஊன்வாதத்திற்கு மையமாக அமைவதாக அறியப்படுகிறது. இவையே ஊன்வாதத்தின் நான்கு இகரங்களாகக் கருதப்படுகின்றன.[கு 2] விலங்குகளில் ஒரு குறிப்பிட்ட இனங்களை மட்டும் உணவாக வகைப்படுத்தி, மற்ற இன விலங்குகளிடம் செய்தால் மனம் ஏற்க மறுக்கும் கொடூரச் செயல்களை அந்த உணவு வகை விலங்குகளிடம் ஏற்புடன் செய்வது என்பது ஊன்வாதத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த வகைப்பாடு கலாச்சார ரீதியாகவும் தொடர்புடையதாக விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, கொரியாவில் சில இடங்களில் நாய்கள் கொன்று உண்ணப்படுகையில் மேற்கத்திய நாடுகளில் அவை செல்லப்பிராணிகளாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அதேபோல் மேற்கத்திய உலகில் பசுக்கள் வெட்டி உண்ணப்படுகையில் இந்தியாவின் பெரும்பகுதிகளில் அவை போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன.[1] வரலாறு![]() பண்டைய கிரேக்க காலத்தில் துவங்கி இன்றுவரை சைவ உணவுமுறையின் வரலாற்றையும் அதற்கு இருந்த எதிர்ப்பையும் பகுப்பாய்வு செய்ததில் இலக்கிய அறிஞரான ரெனன் லாரூ ஒரு சில பொதுத்தன்மைகளைக் கண்டறிந்து அவற்றை 'ஊன்வாத தர்க்கங்கள்' என்று அழைத்தார். சைவ உணவுமுறை கவனத்தில் கொள்ளத் தகாத, நகைப்புக்குரிய சிந்தனை என்றும், மனிதகுலமானது விலங்குகள் மீது ஆதிக்கம் செலுத்தவே கடவுளால் படைக்கப்பட்டது என்றும், விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தவிர்ப்பதென்பது மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக அமையுமென்றும் பொதுவாக ஊன்வாதிகளால் கருதப்படுகிறது. "வளர்ப்பு விலங்குகளுக்கு வலி இராது", "நோய்வாய்ப்பட்டோ வேட்டையாடப்பட்டோ இறப்பதை விட அறுத்துக்கொல்லப்படுவது சிறந்தது" என்பது போன்ற கருத்துக்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வாக்கில் மக்களிடம் பரவலான சிந்தனைகளாக மாறின என்று லாரூ கண்டறிந்தார். ஆனால் பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டு கிரேக்க அறிஞரும் சைவ உணவு வழக்கம் கொண்டவருமான பார்ஃபிரியின் படைப்புகளில் "பண்ணை விலங்குகளுக்கு துன்பம் கிடையாது" போன்ற கருத்தாக்கங்கள் காணப்படுகின்றன. பார்ஃபிரி கம்பளி உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லாமல் எடுக்கப்படும் விலங்குப் பொருட்களுக்கும் அவற்றின் உற்பத்திக்கும் ஆதரவு தெரிவித்தது இதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் உள்ளது.[11] 1970-களில் அதுவரை நெடுங்காலமாக மனித சமூகத்தில் இருந்துவந்த விலங்குகளின் மீதான மதிப்பீடுகளை விலங்குரிமை ஆர்வலர்கள் வினா எழுப்பத்துவங்கினர். 1971-ல் உளவியல் அறிஞரான ரிச்சர்ட் ரைடர் என்பவர் விலங்கினவாதம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். விலங்கினவாதம் என்பது ஒரு விலங்கு எந்த இனத்தைச் சார்ந்தது என்பதை வைத்து அவ்விலங்கின் அடிப்படை உரிமைகளும் மதிப்பீடுகளும் தீர்மானிக்கப்படும் பாகுபாடு ஆகும்.[12][13][14] 2001-ம் ஆண்டு உளவியலாளரும் விலங்குரிமை அறிஞருமான மெலனி ஜாய் உணவுக்காக விலங்குகள் பயன்படுத்தப்படுவதும், குறிப்பாக இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படுவதும், விலங்கினவாதத்தின் ஒரு வகையாகும் என்று விளக்கினார். இதனையே அவர் ஊன்வாதம் என்று அழைத்தார்.[15] ஊன்வாதத்தை ஆணாதிக்கத்துடன் ஜாய் ஒப்பிடுகிறார். இரண்டுமே ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட நெறிமுறைச் சித்தாந்தங்கள் என்றும் அவை இரண்டுமே சமூகத்தில் மிகவும் பரவலாகக் காணப்படுவதால் பெரும்பாலும் சமூகத்தினரின் சிந்தனைக்கு எட்டாமல் இருந்துவிடுகின்றன என்றும் ஜாய் நிறுவுகிறார்.[1] ![]()
ஊன்வாதம் என்பது "விலங்கினவாதத்தின் மையப் புள்ளி" என்று சாண்ட்ரா மஹ்ல்கே வாதிடுகிறார். ஏனெனில் இறைச்சி உண்பது என்பது விலங்கினச் சுரண்டல்களின் பிற வடிவங்களுக்கான கருத்தியல் நியாயமொன்றை நிறுவுவதை ஊக்குவிக்கிறது.[16] விலங்குரிமைப் பேராசிரியரான கேரி பிரான்சியோனி இதனை மறுக்கிறார். ஊன்வாதம் என்பது மறைந்து இருக்கும் ஒரு கருத்தியல் அல்ல என்றும் அது ஒரு சிந்தித்து எடுக்கப்படும் தேர்வு என்பது ஃபிரான்சியோனியின் கருத்து. மனிதர்கள் விலங்குகளை வெறும் பயன்பாட்டுப் பொருட்களாகப் பார்ப்பதாலும், மேலும் அதன் விளைவாக அவற்றை எப்படி வேண்டுமானாலும் தம் விருப்பம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதாலும், சில இன விலங்குகள் உணவாகவும் வேறு சில இன விலங்குகள் செல்லமாக வளர்க்கப்பட்டு குடும்பத்தில் ஒருவராகவும் பார்க்கப்படுகின்றன என்று ஃபிரான்சியோனி விளக்குகிறார்.[17] தன்மைகள்உண்ணக்கூடிய தன்மைகலாச்சார வேறுபாடுகளின் எடுத்துக்காட்டுகள் பிருந்தாவனம் நகரின் தெருவில் ஓய்வெடுக்கும் ஒரு பசு. இந்தியாவில் பசுக்கள் வணங்கப்படுகையில், மேற்கத்திய நாடுகளில் அவை இறைச்சிக்காகக் கொன்று உண்ணப்படுகின்றன. சீனாவில் கொன்று விற்கப்படும் நாய். மேற்கத்தியக் கலாச்சாரத்தில் நாய்கள் நேசிக்கப்படுகையில் சில கிழக்கத்திய கலாச்சாரங்களில் அவை கொன்று உண்ணப்படுகின்றன. மக்களின் மனத்துக்கேற்ப நம் சமூகம் விலங்குகளை உண்ணக்கூடியவை, உண்ணமுடியாதவை, செல்லப்பிராணிகள், தொல்லை தருபவை, கொடூரத் தன்மையுடையவை, பொழுதுபோக்கு விலங்குகள் எனப் பலவாறு வகைப்படுத்துகிறது. இச்செயல் ஊன்வாதத்தின் ஒரு மைய அம்சமாகக் கருதப்படுகிறது. ஒருபுறம் மக்களின் இப்பாகுபாட்டு மனநிலை நமது நம்பிக்கைகளின் அடிப்படையிலும் உள்ளார்ந்த இச்சைகளின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டாலும் மறுபுறம் இதுவே நமது நம்பிக்கைகளையும் இச்சைகளையும் தீர்மானிப்பதாகவும் அமைகிறது.[1][18] எந்தெந்த விலங்குகள் உணவாகக் கருதப்படுகின்றன என்பதில் கலாச்சார மாறுபாடும் உள்ளது. சீனாவிலும் தென்கொரியாவிலும் நாய்கள் உணவாகக் கருதப்படுகையில் மற்ற இடங்களில் அவை அவ்வாறு பார்க்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் அவை பெரும்பாலும் செல்லப்பிராணிகளாகப் பார்க்கப்படுவதாலும் (எ.கா., மேற்கத்திய நாடுகள்) ஒரு சில நாடுகளில் அவை அசுத்தமான விலங்குகளாகப் பார்க்கப்படுவதாலும் (எ.கா., மத்திய கிழக்கு நாடுகள்) தான்.[1][19] மேற்கத்திய நாடுகளில் பசுக்கள் உண்ணப்படுகையில் இந்தியாவின் பெரும்பகுதியில் அவை கடவுளாகப் போற்றப்படுகின்றன. இசுலாமியர்களாலும் யூதர்களாலும் பன்றிகள் உண்ணத்தகாத விலங்குகளாகக் கருதப்படுகையில் மற்ற மக்களால் பரவலாக அவை உண்ணக்கூடியவையாகக் கருதப்படுகின்றன.[20] இந்த வகைபிரித்தல்களே உலகின் எந்த ஒரு பகுதியிலும் அங்குள்ள விலங்குகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன என்று ஜாய் உள்ளிட்ட உளவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வகைபிரித்தலே விலங்குகளின் உணர்த்திறனையும் அறிவாற்றலையும் மக்கள் எந்த அளவுக்குப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைக் கூறுவதாக உள்ளன. அதுமட்டுமல்லாது இவ்வகைபிரித்தல் விலங்குகளின் மீது மக்களுக்கு இருக்கும் இறக்கம், அக்கறை போன்றவற்றின் அளவையும் தீர்மானிக்கின்றன என்பது அறிஞர்களின் கருத்து.[18] இறைச்சி முரண்பாடுஊன்வாதம் என்பது பெரும்பாலான மக்களின் நல்லெண்ணங்களுக்கும் அவர்களது செயல்களுக்குமிடையே உள்ள முரண்பாட்டில் வேரூன்றியுள்ளது என்று ஜெஃப் மான்னெஸ் என்ற அறிஞர் விளக்குகிறார். விலங்குகளுக்குத் தீங்கு விளைவிப்பதை எதிர்க்கும் பெரும்பாலான மக்கள் விலங்குகளைக் கொன்று உண்ணத் தயங்குவதில்லை என்பதே அந்த முரண்பாடு என்கிறார் அவர். இந்த எதிர்மறைச் செயல்கள் மக்களின் மனதிற்குள் அறிதிற முரண்பாட்டினை (cognitive dissonance) ஏற்படுத்துகின்றன என்றும் அம்முரண்பாட்டினை மறைக்கும் விதமாக மனநிலை மறுத்துப்போதல் (psychic numbing) என்னும் நிலைக்கு மக்கள் தங்களை ஆட்படுத்திக்கொள்கின்றனர் என்றும் மான்னெஸ் வாதிடுகிறார்.[21] மக்களின் இந்த விலங்குகள் மீது இயல்பாகவே அக்கறை கொண்ட சிந்தனைக்கும் அதே விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுமுறைகளைத் தழுவும் அவர்களது செயல்களுக்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாடே "இறைச்சி முரண்பாடு" (meat paradox) எனப்படுகின்றது.[22][23][24] இறைச்சி முரண்பாடு மேற்கத்தியர்களிடையே அறிதிற முரண்பாட்டைத் தூண்டுகிறது என்பதற்கு பரிசோதனைகளின் வாயிலாகப் பெறப்பட்ட ஆதாரங்கள் உள்ளன.[9][25][26] விலங்குகளில் குறைவான அறிவாற்றலும் தார்மீக மதிப்பும் கொண்டவையாகத் தாங்கள் கருதும் விலங்குகளை உண்பதில் மேற்கத்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதும், மறுகோணத்தில் தாங்கள் உண்ணும் விலங்குகளை அவர்கள் குறைவான அறிவாற்றலும் தார்மீக மதிப்பும் கொண்டவையாகக் கற்பிதம் செய்வதும் தெரியவந்துள்ளது.[22][27] மேலும், இந்தத் தொடர்பில் ஒற்றிற்கு மற்றொன்று காரணமாகிறது: விலங்குகளை உண்ணத்தகுந்தவை என்றும் உண்ணத்தகாதவை என்றும் வகைப்படுத்துவது அவ்விலங்குகளைக் குறித்த மக்களின் பார்வையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், மக்களின் இறைச்சி உண்ணும் செயலானது அவர்களது மனங்களில் விலங்குகளைப் பற்றியும் அவற்றின் அறிவுத்திறன், உணர்திறன் ஆகியவை பற்றியும் குறைவாக மதிப்பிடும்படிச் செய்து விடுகிறது.[22] எடுத்துக்காட்டாக, ஒரு ஆய்வில் பொதுமக்களிடம் அவர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு அயல்நாட்டு விலங்கைக் குறித்துப் பேசிவிட்டு, "பழங்குடியினர் அங்கு அவ்விலங்கை வேட்டையாடுகிறார்கள்" என்று கூறியபோது அப்பொதுமக்கள் அவ்விலங்கின் அறிவுத்திறனை மிகவும் குறைவாகவே மதிப்பிட்டது ஆய்வு முடிவில் தெரியவந்தது. மற்றொறு ஆய்வில் பொதுமக்களை மாட்டிறைச்சி சாப்பிட்ட பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தியபோது அந்நபர்கள் மாடுகளைக் குறைந்த அறிவுத்திறன் கொண்ட விலங்குகளாகக் கருதியது தெரியவந்தது.[22] விலங்குப் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்பதையே கருத்தில் கொள்ளாமல் இருப்பதும் அச்சிந்தனையை அறவே தவிர்ப்பதும் இறைச்சி முரண்பாட்டினை எதிர்கொள்ளும் மற்றொரு உத்தியாகும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.[28] விலங்குகளின் தலையோ அல்லது முழுமையான மற்ற உடல் உறுப்புகளோ உணவில் பெரும்பாலும் பரிமாறப்படாமலிருப்பதற்கு இதுவே காரணம் என்று ஜாய் நிறுவுகிறார்.[29] நியாயப்படுத்துதல்இறைச்சி உண்போர் தங்களது இறைச்சி உண்ணும் செயலை "இயற்கையானது, இயல்பானது, இன்றியமையாதது" என்று கருதுவதாகக் கூறும் ஜாய், ஊன்வாதத்தை நியாயப்படுத்தும் மூன்று இகரங்களை அறிமுகப்படுத்தினார்.[8][10] அடிமைத்தனம், வாக்களிக்கும் உரிமையை பெண்களுக்கு மறுத்தல் உள்ளிட்ட பிற பாகுபாடுகளை நியாயப்படுத்தவும் இந்த "மூன்று இகரங்கள்" பயன்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார். மேலும் மக்கள் ஆதரிக்கும் இதுபோன்ற பாகுபாடுகளின் சித்தாந்தம் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்ட பின்னரே இம்மூன்று இகரங்களும் பிரச்சனைக்குரியவை என்பது நமது பார்வைக்கு வரும் என்றும் ஜாய் கூறுகிறார்.[30] மனிதர்கள் இறைச்சியை உண்பதற்காகவே பரிணமித்திருக்கின்றனர் என்பதும், இறைச்சி உண்ணல் மனிதர்களிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு சாதாரண செயல் என்பதும், மனிதர்கள் உயிர்வாழவும் வலுவுடன் இருக்கவும் இறைச்சி தேவை என்பதுமான நம்பிக்கைகள் காலப்போக்கில் மக்களுக்கு ஊட்டப்பட்டுள்ளன என்கின்றன ஆய்வுகள். மதங்கள், குடும்ப சமூகங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகள் இறைச்சி உண்பதை நியாயப்படுத்த முற்படும் இதுபோன்ற நம்பிக்கைகளை மக்களிடையே காலத்திற்கேற்பப் பலவாறு திணித்திருக்கின்றன. இதனால் மனிதர்கள் தங்கள் உடலுக்குத் தேவையான புரதங்களை இறைச்சியை உண்ணாமலேயே பெற முடியும் என்ற உண்மை அறிவியல் வாயிலாக நிரூபிக்கப்பட்ட பின்னரும்,[31] உயிர் வாழ இறைச்சி தேவை என்ற நம்பிக்கை மட்டும் பொதுமக்களிடையே தொடர்ந்து நீடித்து வருகிறது.[9][10] PNAS ஆய்விதழில் வெளிவந்த 2022-ம் ஆண்டு ஆய்வு ஒன்று மனிதப் பரிணாம வளர்ச்சியில் இறைச்சி உண்ணுதலின் பங்கையும் அதன் தாக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.[32][33] ஜாய் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் உளவியலாளர்கள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை 2015-இல் வெளியிட்டனர். அம்முடிவுகளின் வாயிலாக இறைச்சி உண்பவர்களில் பெரும்பாலோர் தங்களது அச்செயலை நியாப்படுத்தும் நான்கு இகரங்களைக் குறிப்பிடுவது தெரியவந்துள்ளது: "இயற்கையானது, இயல்பானது, இன்றியமையாதது, இனிதானது." "மனிதர்கள் அனைத்துண்ணிகள்" (இயற்கையானது), "பெரும்பாலான மக்கள் இறைச்சி உண்பவர்கள்" (இயல்பானது), "தாவர உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் இராது" (இன்றியமையாதது), "இறைச்சி சுவை மிக்கது" (இனிதானது) என்பன இவற்றிற்கு அவர்கள் வைக்கும் வாதங்களாகும்.[9][10][34] இதுபோன்ற வாதங்களை ஏற்று அவற்றை வலுவாக முன்வைக்கும் இறைச்சி உண்போர் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிய குற்ற உணர்வு தங்களுக்குக் குறைவாக இருப்பதாகவே உணர்கின்றனர். விலங்குகளை பண்டங்களாகக் கருதி அவற்றைப் புறநிலைப்படுத்த முனைவது, விலங்குகளின் மீது பெரிதாக அக்கறை கொள்ளாதிருப்பது, விலங்குகளுக்கு குறைந்த உணர்திறன் இருப்பதாக நம்புவது போன்ற இயல்புகள் அவர்களிடம் காணப்படுகின்றன. மேலும் அவர்கள் சமூக சமத்துவமின்மையை ஏற்பவர்களாகவும், படிநிலை சித்தாந்தங்களை அதிகம் ஆதரிப்பவர்களாகவும், தங்களது நுகர்தன்மை குறித்து பெரிதும் அக்கறையற்றவர்களாகவும் இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.[9] ஜாயின் நூலை மதிப்பாய்வு செய்த ஹெலினா பெடர்சென் ஜாயின் கோட்பாடு மிகவும் விரிவானது என்றும் அது மக்களின் நம்பிக்கைகளிலும் அவர்களது மனப்பான்மைகளிலும் காணப்படும் மாறுபாடுகளைக் கணக்கில் கொள்ளவில்லை என்றும் கூறுகிறார். உதாரணமாக, விலங்குப் பொருட்களை அவற்றின் விலங்கு மூலத்திலிருந்து விலக்கிப் பார்க்கும் வழக்கத்தை மக்கள் கொண்டுள்ளனர் என்ற ஜாயின் வாதமானது தாங்கள் வேட்டையாடி உண்பதை நியாயப்படுத்த வேண்டி அவ்விரண்டையும் வெளிப்படையாகவே இணைத்துப் பார்க்கும் சில வேட்டைக்காரர்களுக்கும், விலங்குப் பொருட்களை நுகர்வதைக் குறித்த தங்களது சிந்தனைகளை மாற்றிக் கொண்ட முன்னாள் சைவ உணவுக்காரர்களுக்கும் பொருந்துவதில்லை என்று பெடர்சென் வாதாடுகிறார். மேலும் விலங்குப் பொருட்களை நுகரும் வழக்கம் அவ்விலங்குப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையறியாத மக்களின் அறியாமையால் விளைவது என்ற ஜாயின் வாதத்தை பெடர்சென் வழிமொழிந்தாலும், மக்கள் அவற்றைக் குறித்து அறிந்து கொண்டு விட்டால் தங்களது நுகர்வுப் பழக்கங்களை மாற்றிக்கொள்வார்கள் என்ற கருத்தை பெடர்சென் ஏற்க மறுக்கிறார்.[35] "கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டது" போன்ற கருத்தாக்கங்கள்![]() "விலங்குகள் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டன" என்பதாக வரும் கதைகள் மற்றும் கற்பிதங்களின் வாயிலாக ஊடகங்கள் காப்பாற்றப்பட்ட ஒரு விலங்கைக் காண்பித்து, கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான விலங்குகளை அதன் பின்னால் மறைத்து விடுகின்றன. இதுபோன்ற "கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டன" கதைகளுக்கும் கற்பிதங்களுக்கும் சமூகம் தரும் முக்கியத்துவமே மக்கள் தங்களது சிந்தனை முரண்பாடுகளைக் குறைக்க எடுக்கும் முயற்சியினைப் படம் போட்டுக் காட்டுவதாக அமைகிறது.[37] இந்த இரட்டை நிலைபாடு தான் ஊன்வாதத்தின் சிறப்பியல்பு என்கிறார் ஜாய்.[38] இக்கற்பிதங்களின் மையமாக விளங்கும் விலங்குகளில் சார்லோட்ஸ் வெப் என்ற 1952-ம் ஆண்டு குழந்தைகளின் நூலில் வரும் வில்பர் என்ற பன்றி, பேப் என்ற 1995-ம் ஆண்டு நூலில் வரும் அந்நூலின் அதே பெயரையுடைய அக்கதையின் நட்சத்திர விலங்கான பன்றி, சை மாண்ட்கோமெரி எழுதிய தி குட், குட் பிக் என்ற 2006-ம் ஆண்டு நூலில் வரும் கிறிஸ்டோபர் ஹாக்வுட் என்ற பன்றி,[37] கொல்லப்படுவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட வழியில் தப்பியோடிப் பிழைத்த "டாம்வொர்த் டூ" என்ற இரட்டைப் பன்றிகள், வதைகூடத்திலிருந்து தப்பிய எமிலி, சின்சினாட்டி ஃப்ரீடம் போன்ற பசுக்கள் ஆகியவை அடங்கும். ஆண்டுதோறும் நன்றியறிதல் நாளன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒரு வான்கோழிக்கு மன்னிப்பு வழங்கி அதற்கு விடுதலை வழங்கும் வழக்கமானது ஊன்வாதத்தின் மற்றுமோர் எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுகிறது.[36] இந்த வான்கோழிக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்வைக் குறித்து செய்தி வெளியிடும் அந்நாட்டு ஊடகங்கள் பெரும்பாலும் கோழிப்பண்ணைத் தொழிலைப் புகழ்ந்து எழுதுகின்றன. எனினும் அதே கோழிப்பண்ணைகள் இறைச்சி தயாரிப்பில் ஈடுபடுவதையும் அதற்காகக் கோடிக்கணக்கில் உயிருள்ள வான்கோழிகளை வளர்த்துக் கொல்வதையும் அவ்வூடகங்கள் கண்டுகொள்வதில்லை என்று 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு புலப்படுத்துகிறது.[36] கல்வியல்லாத் துறைகளிலும் சமூகத்திலும் வரவேற்புகல்வி மற்றும் அறிவியல் துறைகளுக்கு அப்பால் சமூகத்திலும் ஊன்வாதம் என்ற கருத்து பரவத் துவங்கியுள்ளது. ஊன்வாதம் என்ற உளவியல் மற்றும் சமூகவியல் கருத்தானது சமூகத்தில் நடைமுறையில் உள்ள விலங்குச் சுரண்டல்களைப் பற்றி விவாதிக்கவும் அதை எதிர்க்கவும் வழிவகுத்துள்ளது என்று தி ஹஃபிங்டன் போஸ்ட், தி ஸ்டேட்ஸ்மேன், தி டிரம் ஆகிய இதழ்களில் வெளிவந்த கருத்துப் பகுதிகள் போற்றி வரவேற்றன.[39][40][41] மறுபுறம் மாட்டிறைச்சித் தொழில் விற்பனை நிலையமான ட்ரோவர்ஸ் கேட்டில் நெட்வெர்க் (Drovers Cattle Network) வெளியிட்ட ஒரு கட்டுரை இச்சொல்லை விமர்சித்து, "விலங்குகளை உண்பது ஒரு உளவியல் நோய்" என்று இச்சொல் குறிப்பதாகக் கடிந்துகொண்டது.[42] மேலும் காண்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia