ரீகன் ரஸ்ஸல்லின் மரணம்
கனடாவின் விலங்குரிமை ஆர்வலரும் வன்கொடுமை எதிர்ப்பாளருமான ரீகன் ரஸ்ஸல் (ஆங்கிலம்: Regan Russell), 2020-ம் ஆண்டு ஜூன் 19 அன்று கனடாவின் ஆன்டாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் நகரில் உள்ள பன்றி அடிதொட்டியான சோஃபினா புட்ஸ் (Sofina Foods Inc.) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான பியர்மேன் போர்க் (Fearman's Pork Inc.) நிறுவனத்திற்கு வெளியே நடந்த வன்கொடுமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு விலங்குகளை ஏற்றிச்சொல்லும் வாகனம் ஒன்று ஏற்றப்பட்டு கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தியதற்காக அந்த வண்டியின் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ![]() பின்னணிரஸ்ஸல் தனது 24 வயதில் விலங்குரிமைக்காக பிரச்சாரம் செய்யத் துவங்கினார். தனது முதல் போராட்டமாக வினிப்பெக்கில் உள்ள ஒரு அரசுக் கட்டிடத்திற்கு வெளியே நீர்நாய்கள் அடித்துக் கொல்லப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். 1985-ம் ஆண்டு பீட்டர் சிங்கர் இயற்றிய அனிமல் லிபரேஷன்: ஏ நியூ எதிக்ஸ் பார் அவர் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ் என்ற நூலைப் படித்ததன் விளைவாக நனிசைவ வாழ்க்கை முறையைத் தழுவினார். ரஸ்ஸல் கறுப்பர் உரிமைக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் குரல் கொடுத்தவர்.[3] மரைன்லேண்டிற்கு எதிராக 2012-ல் காணொளி ஆவணப்படுத்தப்பட்ட படமொன்றில், "சட்டத்தை நாங்கள் வலுக்கட்டாயமாக மீறுகிறோம் என்று மக்கள் கூறுகிறார்கள். பெண்களுக்கு எப்படி உரிமை கிடைத்தது என்று நினைக்கிறீர்கள்? அடிமைத்தனம் எப்படி ஒழிக்கப்பட்டது என்று நினைக்கிறீர்கள்? மக்கள் துணிந்து நின்று முட்டாள் தனமான சட்டங்களை உடைத்ததால் தான்" என்று ரஸ்ஸல் கூறியிருந்தார்.[4] "அனிமல் சேவ் மூவ்மென்ட்" என்ற விலங்குரிமை அமைப்பின் கிளை அமைப்பான "டொராண்டோ பிக் சேவ்" அமைப்பில் ரஸ்ஸல் உறுப்பினராக இருந்தார். இவ்வமைப்பு கனடாவின் மிகப் பழமையான பன்றி அடிதொட்டியான பியர்மேன்ஸ் போர்க் இன்கார்பரேட்டர் நிறுவனத்திற்கு வெளியே அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தது. இந்த மைக்கேல் லட்டிபி என்பவருக்குச் சொந்தமான சோபினா புட்ஸ் இன்கார்பரேட்டர் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.[5] இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்வலர்கள் கொல்லப்படவிருக்கும் பன்றிகளை ஏற்றிச்செல்லும் டிரெய்லர் வாகனங்களை அந்நிறுவன வளாகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே இரண்டு நிமிடங்கள் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டடு அவ்வாகனங்களின் பக்கவாட்டிலுள்ள துளைகள் வழியாக அப்பன்றிகளுக்கு தண்ணீர் கொடுத்துப் அவைகளை படம்பிடிப்பது வழக்கம்.[4][6] 2020-ம் ஆண்டு ஜூன் 18 அன்று ஆன்டாரியோவின் சட்டமன்றம் "அத்துமீறலிலிருந்து பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டம்" எனப்படும் ஒரு சட்ட மசோதாவிற்கு அரசு ஒப்புதலை வழங்கியது.[7] அதே ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வரவிருந்த இந்த மசோதாவின் ஒரு பிரிவு, விலங்குகளை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டுனர்களின் அனுமதியின்றி அவ்வண்டிகளைத் தடுத்து நிறுத்துவதையும் அவற்றின் போக்குவரத்தில் தலையிடுவதையும் சட்டவிரோதமாக்கியது.[8] மரணமும் சட்ட நடவடிக்கைகளும்2020-ம் ஆண்டு ஜூன் 19 அன்று காலை ரஸ்ஸல் "டொராண்டோ பிக் சேவ்" அமைப்பைச் சேர்ந்த மேலும் ஆறு ஆர்வலர்களுடன் வழக்கம் போல் பியர்மேன்ஸ் போர்க் நிறுவனத்திற்கு வெளியே வதைகூடத்திற்கு கொண்டு செல்லப்படும் பன்றிகளுக்கு தண்ணீர் கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி அன்றைய கடைசி வாகனம் காலை சுமார் 10:20 மணியளவில் வதைகூடத்திற்கு வந்து சேர்ந்தது. அவ்வாகனம் அந்த வதைகூட வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வழக்கமான பாதைக்கு பதிலாக சாலையின் உள் பாதையில் நிறுத்தப்பட்டது.[4] ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அதன் ஓட்டுனர் வண்டியை நுழைவாயில் வழியாக உள்ளே செலுத்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள குறுக்குவழியில் நின்று கொண்டிருந்த ரஸ்ஸல் மீது அந்த வாகனம் மோதியது. அப்போது ரஸ்ஸல் அச்சாலையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் மீது மோதிய வாகனம் அவரது உடலை நசுக்கித் துண்டித்து அதைப் பல மீட்டர்கள் தொலைவிற்கு இழுத்துச் சென்றது. ரத்த வெள்ளத்தில் இருந்த ரஸ்ஸல் அவசர சிகிச்சை ஊர்த்தி சம்பவ இடத்துக்கு வருவதற்குள் இறந்து போனார்.[6][7] ஒரு மாத விசாரணைக்குப் பிறகு ஆண்டுரூ பிளேக் என்ற அந்த வாகன ஓட்டுனரின் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக நெடுஞ்சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவருடைய செயலில் குற்றமிழைக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.[9][10] மார்ச் 2023-ம் ஆண்டு பிளேக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 12 மாதக் காவலில் வைக்கப்பட்டார். மேலும் அவருக்கு 2000 கனடிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டு காவலிலிருந்து வெளிவரும் வரை வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது.[2] பிற்கால நிகழ்வுகள்ரஸ்ஸல்லின் மறைவிற்கு உலகெங்கிலும் உள்ள விலங்குரிமை ஆர்வலர்கள் பல வகையிலும் அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்தின் லண்டனில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியில் இறப்புநிலைப் போராட்டம் நடத்தியும்,[11] இத்தாலியின் அட்டேனா லுகானாவில் உள்ள வதைகூடத்திற்கு வெளியே அமர்ந்தநிலைப் போராட்டம் நடத்தியும்,[12] டொராண்டோவின் மையப்பகுதியில் நீதி கேட்டுப் பேரணியோடு கூடிய அணிவகுப்புப் போராட்டம் நடத்தியும்,[13] இந்தியாவின் மும்பையில் உணவு விநியோகம் செய்தும் மக்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.[14] கலிபோர்னியாவில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பிரெஞ்சு நடிகரும் விலங்குரிமை ஆர்வலருமான வாகின் பீனிக்ஸ் கலந்து கொண்டார். அதன் பின்னர் பீனிக்ஸ் மற்ற விலங்குரிமை ஆர்வலர்களுடன் சேர்ந்து பியர்மேன்ஸ் போர்க் நிறுவனத்தின் வதைகூடத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.[15] ரஸ்ஸலைப் பற்றி கூறுகையில், "அவரது துயர மரணம் 'அனிமல் சேவ்' ஆர்வலர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அருளுணர்வோடு கூடிய நனிசைவ வாழ்வு முறையினைக் கடைபிடித்து கறுப்பின மக்களின் வாழ்வுக்காகவும், பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நங்கை-நம்பி-ஈரர்-திருனர் உரிமைகளுக்காகவும் கடுமையாகப் போராடிய அவரது நினைவைப் போற்றும் வண்ணம் வன்கொடுமைகளை தீவிரமாக எதிர்கொண்டு போராடுவோம்" என்று பீனிக்ஸ் தெரிவித்தார்.[16] ஜூலை 30, 2020 அன்று, பியர்மேன்ஸ் போர்க் நிறுவன வதைகூடத்திற்கு வெளியே பன்றிகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் நிகழ்வு ஒன்று அதன் எதிர்தரப்பினரால் குறுக்கிடப்பட்டது. அந்த எதிர்தரப்பினர் விலங்குரிமை ஆர்வலர்களைப் பன்றிகளுக்கு தண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்தும் ரஸ்ஸலை இழிவுபடுத்தும் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.[17] ரஸ்ஸலின் மரணம் நயாகரா-ஆன்-தி-லேக்கில் நடந்த குதிரை வண்டிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்த போராட்டங்களிலும் அதற்காக எதிர் போராட்டங்களிலும் ஒரு பேச்சுப்பொருளாக மாறியது.[18] விலங்குகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கும் சங்கமான எஸ்.பி.சி.ஏ.-வின் ஹாமில்டன்/பர்லிங்டன் கிளை ரஸ்ஸலின் மரணத்திற்குப் பின் அவருக்கு விலங்குகளுக்கான அர்ப்பணிப்புக்கும் தியாகத்திற்குமான டாக்டர் ஜீன் ரம்னி விருதினை வழங்கி கெளரவித்தது.[19] ரஸ்ஸல் பற்றிய கில்ட் ஃபார் காம்பாஷன் என்ற குறும்படத்தை ஆர்வலர் வருண் விர்லன் வெளியிட, அது 2020 சர்வதேச நனிசைவத் திரைப்பட விழாவில் திறையிடப்பட்டது.[20] எர்த்லிங்ஸ ஆவணப்படத்தின் இயக்குனரான ஷான் மான்சன் தேர் வாஸ் எ கில்லிங் என்ற தலைப்பில் ரஸ்ஸல் பற்றிய ஆவணப்படமொன்றை வெளியிட்டார்.[21] உலக அளவில் இறைச்சி நுகர்வு குறைவதற்கு ரஸ்ஸலின் மரணம் ஒரு காரணமாகக் குறிக்கப்பட்டது.[22] மார்ச் 2021-ல், விலங்குரிமைச் செயற்பாட்டுக் குழுவான "அனிமல் ஜஸ்டிஸ்" ஆன்டாரியோ அரசாங்கத்தின் மீது "அத்துமீறலிலிருந்து பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினை" எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது.[23] 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஸ்ஸலின் கணவர் ரஸ்ஸலைக் கொன்ற வாகன ஓட்டுனர் ஆண்டுரூ ப்ளேக் மீதும் இவ்விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தார்.[24] இவற்றையும் பார்க்கமேற்கோள் தரவுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia