இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Indira Gandhi International Airport, (ஐஏடிஏ: DEL, ஐசிஏஓ: VIDP))இந்தியத் தேசிய தலைநகர் வலயத்தில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். புது தில்லியின் மையப் பகுதியிலிருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) தொலைவில் தென்மேற்கு தில்லியில் அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த வானூர்தி நிலையம் இந்தியாவின் மிகவும் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாகும்.[2] புதியதாக கட்டப்பட்டுள்ள மூன்றாம் முனையத்தின் செயலாக்கத்திற்கு பிறகு இதுவே இந்தியாவினதும் தெற்காசியாவினதும் மிகப் பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகிறது. தற்போது 46 மில்லியன் பயணிகளை கையாளுகின்ற இந்த நிலையம் 2030ஆம் ஆண்டில் 100 மில்லியன் பயணிகளை கையாளும் என மதிப்பிடப்படுகிறது. இதுவும் மும்பையின் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையமும் இணைந்து தெற்கு ஆசியாவின் வான் போக்குவரத்தில் பாதியளவை கையாள்கின்றன.[3][4][5] இதனை பன்னாட்டு இடைவழி மையமாக மாற்ற இதன் இயக்கு நிறுவனம் தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (DIAL) திட்டமிட்டுள்ளது.[6] 5220 ஏக்கராப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தில்லி வானூர்தி நிலையம் தேசிய தலைநகர் வலயத்திற்கான முதன்மை குடியியல் பறப்பியல் மையமாக விளங்குகிறது. முன்னதாக இந்திய வான்படையால் இயக்கப்பட்டு வந்த இந்த நிலையத்தின் மேலாண்மை இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.[7] மே 2006 இல் இந்த ஆணையம் வானூர்தி நிலையத்தை புதுப்பித்து இயக்குவதற்காக தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனத்திற்கு கொடுத்தது. இது ஜிஎம்ஆர் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.[8] 2011இல் உலகில் 34வது நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆண்டில் 34,729,467 பயணிகள் பயணித்த இந்தப் போக்குவரத்து முந்தைய ஆண்டினதை விட 17.8% கூடுதலாகும்.[9] வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia