மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம்
மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Mangalore Airport, (ஐஏடிஏ: IXE, ஐசிஏஓ: VOML)), கருநாடக மாநிலத்தின் மங்களூரு நகரத்திற்கான பன்னாட்டு வானூர்தி நிலையம்[2] ஆகும். இது கருநாடகத்தின் இரண்டே பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்; மற்றது பெங்களூருவின் கெம்பகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். தவிரவும் இது கருநாடகத்தின் இரண்டாவது நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுப் பறப்புகளைத் தவிர மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முதன்மை நகரங்களுக்கு தினமும் வானூர்திகள் செல்கின்றன. திசம்பர் 25, 1951இல் திறக்கப்பட்டது; அப்போது இது பாஜ்பே விமான நிலையம் என அழைக்கப்பட்டது.[3] அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு DC-3 டகோட்டா வானூர்தியில் வந்திறங்கி துவங்கி வைத்தார்.[3][4] மேற்சுருக்கம்இந்த வானூர்தி நிலையம் மங்களூரின் நகரமையத்திலிருந்து வடகிழக்கே 13 km (8.1 mi) தொலைவில் பாஜ்பே அருகே [5] அமைந்துள்ளது. சிறுகுன்றின் மீது இரு உயர்மட்ட ஓடுபாதைகள் (09/27 & 06/24) இடப்பட்டுள்ளன. இத்தகைய மலையுச்சி ஓடுபாதைகள் இந்தியாவில் வேறு இரண்டு வானூர்தி நிலையங்களில் மட்டுமே அமைந்துள்ளன – கோழிக்கோடும் லெங்புயும்.[6] மிகச்சிறிய வசதிகள் குறைந்த பயணிகள் முனையம் 2000 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது; கூடுதல் நிறுத்துமிடங்கள், கூடுதல் பயணிகள் இருக்கைகள், கூடுதல் உணவகங்கள் நிறுவப்பட்டன. துவக்கத்தில் இந்த வானூர்திநிலையத்திலிருந்து குறைந்த உள்நாட்டு பறப்புகளுக்கே பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக மும்பைக்கும் பெங்களூருக்கும் மட்டுமே வானூர்திகள் இயக்கப்பட்டன. பன்னாட்டு பறப்புகள் 2006இல் துவங்கின; ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய்க்கு முதலில் இயக்கியது. மங்களூரு வானூர்தி நிலையம் முதல் ஆறாண்டுகளுக்கு, அக்டோபர் 2006 முதல் அக்டோபர்2012 வரை, சுங்க வானூர்தி நிலையமாகவே இருந்தது.[7] 2012இல்தான் இதற்கு பன்னாட்டு வானூர்தி நிலையத் தகுதி வழங்கப்பட்டது.[8] 2005 வரை சிறிய 1,600 m (5,249 அடி) நீளமுள்ள ஓடுபாதையில் போயிங் 737-400 இரக வானூர்திகளே இயக்க முடிந்தது. தற்போது இடப்பட்டுள்ள நீளமான ஓடுபாதை பெரிய வானூர்திகளை இயக்க ஏதுவாகிறது. இந்தப் புதிய ஓடுபாதையில் சனவரி 10, 2006 அன்று கிங்க்ஃபிஷர் ஏர்லைன்சின் ஏர்பஸ் A319 தரையிறங்கியது.[9] செப்டம்பர் 28, 2012இல் முதல் ஏர்பஸ் A310 தரையிறங்கியது. இது ஹஜ் பயணிகளுக்காக சவுதி அராபியாவின் மெக்காவிலிருந்து இயக்கப்பட்டது.[10] 2011–12 ஆண்டில் இந்நிலையத்தின் வருமானம் ரூ. 42.64 கோடியாக இருந்தது; இயக்கு இலாபம் ரூ. 87.6 மில்லியனாக இருந்தது.[11] இது 2006–07 ஆண்டு இயக்கு இலாபத்தை விட ரூ.8.3 மில்லியன் கூடுதலாகும்.[12] 2012–13 ஆண்டில் 11,940 வானூர்தி இயக்கங்களில் சாதனையளவாக 1.02 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது.[11] இதே காலகட்டத்தில் வருமானம் ரூ. 506.6 மில்லியனாகவும், இயக்கு இலாபம் Rs 164.9 மில்லியனாகவும் இருந்தது.[11] 2013–14 ஆண்டில் 1.25 மில்லியன் பயணிகளையும் Rs 638.9 மில்லியன் வருமானத்தையும் கண்டுள்ளது.[13] கட்டமைப்புஓடுபாதை1,615 m (5,299 அடி) நீளமுடைய முதல் ஓடுபாதை (09/27) 1951இல் திறக்கப்பட்டது. குன்றின் சிகரத்தில் அமைந்த சமமட்ட ஓடுபாதையின் அணுக்கம் மலைச்சரிவுகளுக்கு அருகாமையில் இருந்தது.[14][15] ஓடுபாதையின் கிழக்கில் குன்றின் ஓரங்கள் கிட்டத்தட்ட 90 m (300 அடி) உயரத்திலிருந்து 9 m (30 அடி)) தாழ்வுக்கு 500 m (1,600 அடி) குறைந்த தொலைவிலும் மேற்கில் கிட்டத்தட்ட 83 m (272 அடி) உயரத்திலிருந்து 25 m (82 அடி) தாழவும் இருந்தன.[14] ஓடுபாதை சமநிலையில் இல்லாது அதன் உயரம் கிழக்கிலிருந்து மேற்கில் 90 m (300 அடி) இலிருந்து 83 m (272 அடி) வரை வேறுபட்டது. இச்சிறிய ஓடுபாதையில் தரையிறங்குவது மிகக் கடினமாக கருதப்பட்டது.[14] மங்களூரு வானூர்தி நிலையம் கருநாடகத்தில் இரண்டு ஓடுபாதைகளைக் கொண்ட முதல் வானூர்தி நிலையமாகும்.[16] பைஞ்சுதையால் கட்டப்பட்ட ஓடுபாதை கொண்ட முதல் வானூர்திநிலையமாகவும் அமைந்தது.[17] 2,450 m (8,038 அடி) நீளமுள்ள இரண்டாம் ஓடுபாதை (06/24) மே 10, 2006 திறக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து ஜெட் ஏர்லைன்சின் பறப்பு 95 பயணிகளுடன் முதன்முதலில் இந்த ஓடுபாதையில் தரையிறங்கியது.[18] புதிய ஓடுபாதையிலிருந்து வான்கலவழி ஒன்று இணையாக அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் வானூர்திகள் சென்றுவரு நேரம் குறைக்கப்பட்டது.[19] மே 15, 2010 அன்று குடிசார் வான்பயண அமைச்சர் ஓடுபாதையை 9,000 அடிகள் (2,740 m) நீளத்திற்கு நீட்டிக்க பணியாணை வெளியிடப்படும் என அறிவித்தார்.[20] ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812 விபத்திற்குப் பின்னால் மே 30, 2010இல் இதனை மீளவும் உறுதி செய்தார். கூடுதலாக அவசர காலத்தில் தேவைப்படும் வழியலிடமும் கருத்தில் கொள்ளப்படும் என்றார். [21] மிகவும் அபாயகரமான வானூர்தி நிலையமாக அடையாளம் காணப்பட்ட இதற்கு குடிசார் வான்போக்குவரத்து தலைமை இயக்குநர் (DGCA) பாதுகாப்பு மேம்பாட்டு ஆணைகளைப் பிறப்பித்தார். கூடுதல் ஓடுபாதை, ஓடுபாதை ஓரத்தில் பாதுகாப்பான நிலப்பகுதி, ஓடுபாதையில் சரியான குறியிடல்கள், அடிப்படை வசதிகளின் சரியான பராமரிப்பு ஆகியன மேம்படுத்தல் பணியின் சிறப்பம்சங்களாகும்.[22][23] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia