சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Sardar Vallabhbhai Patel International Airport, SVPIA) (ஐஏடிஏ: AMD, ஐசிஏஓ: VAAH) குசராத்து மாநிலத்தின் காந்திநகர் மற்றும் அகமதாபாத் நகரங்களுக்குச் சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையம் அகமதாபாத்தின் வடபகுதியில் 9 km (5.6 mi) தொலைவில் அன்சோல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முதல்இந்திய துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
நிதியாண்டு 2016-17இல் இந்நிலையம் 7.4 மில்லியன் பயணிகளையும் ஏறத்தாழ 200 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது; பயணிகள் போக்குவரத்தில் இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியலில் எட்டாமிடத்தில் உள்ளது. கோஏர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் வான்சேவை நிறுவனங்களுக்கு இது குவியநகரமாகவும் உள்ளது. 2015இல் அரசு இதனை தனியார்மயப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது. விரிவாக்குவதில் எழுந்த சிக்கல்கள் காரணமாக மாற்று பன்னாட்டு வானூர்தி நிலையமாக தோலேரா பன்னாட்டு வானூர்தி நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
வரலாறு
இந்த வானூர்தி நிலையம் 1937இல் நிறுவப்பட்டது.பன்னாட்டு சேவைகள் 1991ஆம் ஆண்டு சனவரி 26 அன்று துவங்கின. பன்னாட்டு வானூர்திநிலையமாக முறையாக 2000 ஆம் ஆண்டு மே 23 அன்று அங்கீகாரம் வழங்கப்பட்டது.[4] பன்னாட்டு பயணிகளைக் கையாள 2010இல் புதிய இரண்டாம் முனையம், முனையம் 2, துவங்கப்பட்டது. வானூர்திநிலைய வளாகத்தில் 18 அடி (5.5 m) உயரமுள்ள வல்லபாய் பட்டேல் சிலை வைக்கப்பட்டுள்ளது.[5][6] 2015இல் சென்னை, கொல்கத்தா, செய்பூர் வானூர்தி நிலையங்களுடன் இந்த நிலையத்தையும் தனியார்மயப்படுத்த இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் கருத்துருக்களை கோரியது.[7]
மார்ச் 21, 2017இல் 700 kWp திறனுள்ள கூரை மீதான சூரிய ஆற்றல் நிலையம் அமைக்கப்பட்டது.[8]
கட்டமைப்பு
இந்த வானூர்தி நிலையத்தில் தற்போது நான்கு முனையங்கள் உள்ளன: உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம், துணைநிலை போக்குவரத்திற்காக மூன்றாவது கூடுதல் முனையம் மற்றும் சரக்கு முனையம். இதில் 45 நிறுத்தலிடங்களும் உள்நாட்டு முனையத்தில் 4 வான்பாலங்களும் பன்னாட்டு முனையத்தில் 4 வான்பாலங்களும் உள்ளன. புதிய முனையம் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.[9]
புதிய முனையத்தில் இரு முனையங்களையும் இணைக்குமாறு 500 மீ தொலைவிற்கு நகரும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.[10] பறப்புக்களைக் கட்டுப்படுத்துவதை மேம்படுத்தவும் பறப்புக்களைக் கையாளும் திறனைக் கூட்டவும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் புதிய தொழினுட்பத் தொகுதியை கட்டமைக்கவுள்ளது.[11]
ஓடுபாதை
இந்த வானூர்தி நிலையத்தில் 3,599 மீட்டர்கள் (11,808 அடி) நீளமுள்ள ஒரு ஓடுபாதை மட்டுமே உள்ளது.[12]
வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம்
நிலையத்தை நவீனப்படுத்துதல் அங்கமாக இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாடு (ATC) கட்டிடத்தைக் கட்டத் தீர்மானித்துள்ளது. இதில் 65 மீட்டர்கள் (213 அடி) உயரமுள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாடுக் கோபுரமும் அடங்கும்.[13]
முனையங்கள்
முனையம் 1
45,000 m2 (480,000 sq ft) பரப்பிலுள்ள முனையம் ஒன்றில் 32 உட்பதிகை முகப்புகள் உள்ளன.
முனையம் 2
சூலை 4, 2010 அன்று முனையம் 2 துவங்கப்பட்டது; fசெப்டம்பர் 15, 2010 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. 2009இல் தேசிய கட்டுமான எஃகு வடிவமைப்பு மற்றும் சிறந்த கட்டுமான விருதுகளில் இந்த முனையம் சிறந்த எஃகு கட்டமைப்பிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.[14] இந்த முனையத்தில் நான்கு வான்பாலங்களும் 32 உட்பதிகை முகப்புகள் உள்ளன. மொத்தம் ஏறத்தாழ 41,000 ச. மீட்டர் பரப்பளவுள்ள இம்முனையத்தில் எந்த நேரத்திலும் கிட்டத்தட்ட 1,600 பயணிகள் பயணிக்க முடியும். இங்குள்ள 'நிலைய ஓய்விடம்' மீயுயர்தர ஓய்வறை ஆகும். முதல் வகுப்பு மற்றும் வணிக வகுப்பு பயணிகளுக்கானது. இதன் 51,975-சதுர-மீட்டர் (559,450 sq ft) பரப்பிலுள்ள தங்குவிட கடுந்தரையில் ஒன்பது ஏர்பஸ் 321களும் நான்கு ஏடிஆர்-72 இரக வானூர்திகளும் நிறுத்த முடியும்.
சரக்கு முனையம்
2013–14இல் இந்த வானூர்தி நிலையம் தங்கம், வெள்ளி உள்ளிட 51,637 டன்கள் சரக்கை கையாண்டுள்ளது. 60 விழுக்காடு சரக்கு உள்நாட்டு உற்பத்தியாகும்.[15] 2009இல் அழுகுபொருள்களுக்காக 3,685 சதுர மீட்டர்கள் (39,670 sq ft) பரப்பளவுள்ள நிலத்தை ஏழாண்டுகளுக்கு குசராத் அக்ரோ இன்டஸ்ட்ரீசு நிறுவனத்திற்கு இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் குத்தகை கொடுத்துள்ளது. இருப்பினும் மூன்றாம் நபரை வானூர்தி நிலைய இயக்கங்களுக்கு பயன்படுத்துவதில்லை என்ற அரசுக் கொள்கையால் இதனை பயன்படுத்த இயலவில்லை. சூலை 1014இல் குடிசார்வான்பயண அமைச்சர் தடையின்மை சான்றிதழ் வழங்கியபின்னரே இயக்கத்திற்கு வந்தது.[16]
இந்தியன் ஏர்லைன்சு பறப்பு 113 1988ஆம் ஆண்டில்அக்டோபர் மாதம் 19ஆம் நாள் மும்பையிலிருந்து அகமதாபாத் வருகையில் கடைசி அணுக்கத்தின்போது தரையில் மோதியது; இதில் ஆறு வான்சேவையாளர்கள் உள்ளிட்டு 130 பேர் உயிரிழந்தனர். புகைமூட்டமாகவிருந்தக் காரணத்தால் கண்பார்வைக் காட்சியைக் கொண்டு இறங்க அனுமதிக்கப்பட்டது. அப்போது ஓடுபாதைக்கு 5 கி.மீ. தொலைவில் மரங்களிலும் உயிரழுத்த மின்கம்பிகளிலும் சிக்கி வயல்வெளியில் மோதி தீப்பற்றி எரிந்தது.
ஜெட் ஏர்வேஸ் பறப்பு 2510, 2010ஆம் ஆண்டில் சூலை 22ஆம் நாள் இந்தோரிலிருந்து வருகையில் ஓடுபாதையில் மோதியது. ஏடிஆர் இரக வானூர்தியில் 57 பயணிகளும் 4 சேவையாளர்களும் இருந்தனர். சிலர் சிறு காயங்களுடன் தப்பினர். மூக்குச் சக்கரம் வெடித்ததால் முன் பகுதி தரையில் மோதியது.[21]
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன