கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Cochin International Airport, (ஐஏடிஏ: COK, ஐசிஏஓ: VOCI)) கொச்சி மற்றும் அதன் அண்மையிலுள்ள மாவட்டங்களுக்கான பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் வடகிழக்கில் ஏறத்தாழ 30 km (19 mi) தொலைவிலுள்ள நெடும்பாச்சேரி (உள்ளூர் உச்சரிப்பு:நெடும்பாஸ்ஸேரி) என்னுமிடத்தில் கட்டப்பட்டுள்ளது.[4] முன்னதாக வெல்லிங்டன் தீவில் செயல்பட்டு வந்த வானூர்தி நிலையம் பெரிய வானூர்திகளுக்காக விரிவாக்கபட தேவையான நிலப்பரப்பை கொண்டிராததாலும் கப்பற்படைக்கு உரிமையானதாக இருந்ததாலும் மாற்று வானூர்தி நிலையமாக இது திட்டமிடப்பட்டது. அதுநாள் வரை முற்றிலும் அரசுநிதியிலிருந்தே கட்டமைக்கப்பட்டுவந்த திட்டங்களுக்கு மாற்றாக இது இந்தியாவில் முதன்முதலாக அரசு-தனியார் கூட்டு முயற்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.30 நாடுகளிலிருந்து 10,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு வழங்கி உள்ளனர்.[5] கேரளாவின் வானூர்தி நிலையங்களில் இதுவே மிகவும் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. 2011-12 நிதியாண்டில் 4,717,650 பயணிகள் பயன்படுத்திய இது இந்தியாவின் ஏழாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்கியது. பன்னாட்டுப் பயணிகளை மட்டும் கருத்தில் கொண்டால் 2,586,658 பன்னாட்டுப் பயணிகள் வந்தசென்ற இந்த வானூர்தி நிலையம் இந்தியாவின் நான்காவது நிலையமாக உள்ளது.[6] ஏர் இந்தியா எக்சுபிரசு இதனைத் தனது முதன்மை முனைய நடுவமாகக் கொண்டுள்ளது; ஏர் இந்தியா, கோஏர், இன்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஜெட்லைட் மற்றும் ஸ்பைஸ் ஜெட் இங்கிருந்து பல இடங்களுக்கு சேவைகள் வழங்கி வருகின்றன. வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia