இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Rajiv Gandhi International Airport,(ஐஏடிஏ: HYD, ஐசிஏஓ: VOHS)) அல்லது ஐதராபாத்து பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தியாவின் ஐதராபாத்தின் நகர்மையத்திலிருந்து தெற்கே 22 km (14 mi) தொலைவில் சம்சாபாத்தில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஐதராபாத்தின் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருந்த பேகம்பேட் வானூர்தி நிலையத்திற்கு மாற்றாக இது திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டது. தனியார் துறையும் அரசுத்துறையும் கூட்டாக கட்டமைக்கத் தொடங்கிய இந்திய வானூர்தி நிலையங்களில் இது இரண்டாவது முயற்சியாகும். முன்னதாக கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் இவ்வாறான கூட்டு முயற்சியில் உருவானது. மார்ச்சு 23, 2008இல் இது வணிக செயலாக்கத்திற்கு திறந்து விடப்பட்டது. ஐதராபாத் நகரத்தை இந்தப் பன்னாட்டு விமானநிலையத்துடன் இணைக்க 11.6கி.மீ. நீளமுள்ள உயர்ந்த நிலையில் உள்ள பி.வி. நரசிம்மராவ் உயர் விரைவுப்பாதை அக்டோபர் 19,2009 அன்று திறக்கப்பட்டது.[5] இதன்பின்னர் 30 கி.மீ. தொலைவில் சம்சதாபாத்தில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்தை அடைய 45 நிமிடங்களே எடுக்கின்றது. 2010–11 நிதியாண்டில் இது இந்தியாவின் ஆறாவது பயணிகள் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்கியது.[6] உலகின் சிறந்த வானூர்தி நிலையங்களை மதிப்பிடும் ஐக்கிய இராச்சியத்தின் இசுக்கைட்டிராக்சு நிறுவனம் இந்திய வானூர்தி நிலையங்களில் முன்னணி நிலையங்களில் ஒன்றாக இதனை மதிப்பிட்டுள்ளது.[7] இந்த நிலையத்தை தங்கள் போக்குவரத்து மையமாக ஸ்பைஸ் ஜெட், லுஃப்தான்சா கார்கோ மற்றும் புளூடார்ட் ஏவியேசன் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மேலும் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஜெட்லைட் நிறுவனங்கள் இங்கிருந்து பல பறப்புகளை மேற்கொள்கின்றன. மேலும் குவைத் , கத்தார் , துபாய் , அபுதாபி , ஷார்ஜா , பஹ்ரைன் , மஸ்கட் , சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளிருந்து நேரடி விமான சேவையும் , லண்டன் , ஆங்காங் , தாய்லாந்து , மலேசியா , சிங்கப்பூர் , ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிருந்து நேரடி சேவையும் உண்டு..... மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia