இந்துதொன்மவியலில், கலி யுகம் அல்லது கலி ஆண்டு (Kali Yuga) ஒரு யுக சுழற்சியில் நான்கு யுகங்களில் (உலக யுகங்கள்) நான்காவதும், குறுகியதும், மோசமானதும் ஆகும். இது துவாபர யுகத்திற்கு அடுத்ததும், அடுத்த சுழற்சியின் கிருத (சத்ய) யுகத்திற்கு முந்தியதும் ஆகும். மோதல்களும் பாவங்களும் நிறைந்த தற்போதைய யுகம் என்றும் இது நம்பப்படுகிறது.[1][2][3]
புராணங்களின்படி,[a]கிருட்டினணின் இறப்பு துவாபர யுகத்தின் முடிவையும் கலியுகத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது, இது கிமு 17/18 பெப்பிரவரி 3102 தேதியிடப்பட்டது.[9][10] 432,000 ஆண்டுகள் (1,200 தெய்வீக ஆண்டுகள்) நீடிக்கக்கூடிய கலியுகம் 5,126 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, பொஊ 2025-இல் 4,26,874 ஆண்டுகள் மீதமுள்ளது.[11][12][13] கலியுகம் பொஊ 428,899 இல் முடிவடையும்.[b]
இன்றைய கலி யுகத்தின் முடிவில், நற்பண்புகள் மிக மோசமாக இருக்கும் போது, கல்கியால் நிகழும் என்று முன்னறிவிக்கப்பட்ட அடுத்த சுழற்சியில் புதிய கிருத (சத்திய) யுகம் தொடங்கும்.[14]
நான்கு யுகங்கள்
இந்நான்கு யுகங்களின் காலவரையாக கூறப்படுபவை:
கிருதயுகம் - 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்
திரேதாயுகம் - 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள்
துவாபரயுகம் - 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்
கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.
தற்போது கலியுகம் நடப்பதாக நம்பப்படுகிறது. கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் என இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.
கலியுகம் என்று ஆரம்பித்தது என உறுதியிட்டு கூற இயலவில்லை. கண்ணன் இறந்தநாளில் கலியுகம் துவங்கியதாக சிரீமண் மகாபாகவதம் முதல் °கந்தம்: அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது. பொ.ஊ.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியதாக[15]பொ.ஊ. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார் குறிப்பிடுகிறார். கலியுகம் பொ.ஊ.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது என்கிறார் வராகமிகிரர் என்னும் மற்றொரு வானியலார். சிரீயுக்தேசுவர் என்பவர் இந்த 4,32,000 ஆண்டுகள் கணக்கையே தவறானதாக கூறுகிறார். அவரது கூற்றுப்படி கலியுகத்திற்கு 2400 ஆண்டுகள் (1200 ஆண்டுகள் இறங்குமுகம், 1200 ஆண்டுகள் ஏறுமுகம்); தவிர தற்போது நடப்பது துவாபர யுகம்.[16]
கலியுக இயல்புகள்
கலியுகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும் எனக் கூறப்படுபவை:
அரசர்கள் செங்கோல் தாழும்.கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வர்.
மக்கள் மனப்பான்மை: பொறாமை அதிகமாகும்;ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும். கொலைகள் எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தாது.காமம் மற்றும் பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும்.
ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காது.அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து உண்டாகும்.
திருமணம் அவரவர் விருப்பப்படி தான் நடக்குமே தவிர பெரியவர்கள் சம்மதத்தின் பேரில் அல்ல.
கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழும். வெள்ளை குதிரையில் வந்து கலியுக நிகழ்வுகளுக்குக் காரணமான "கலி"யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிப்பார். அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய யுகம் (கிருத யுகம்) பிறக்கும்.
↑Matchett, Freda; Yano, Michio (2003). "Part II, Ch. 6: The Puranas / Part III, Ch. 18: Calendar, Astrology, and Astronomy". In Flood, Gavin (ed.). The Blackwell Companion to Hinduism. Blackwell Publishing. p. 390. ISBN0631215352. The [Kali yuga] epoch arrived at ... was midnight of February 17/18 in 3102 BC according to the midnight (ardharatika) school, and the sunrise of February 18 (Friday) of the same year according to the sunrise (audayika) school.
↑Burgess 1935, ப. 19: The instant at which the [kali yuga] Age is made to commence is midnight on the meridian of Ujjayini, at the end of the 588,465th and beginning of the 588,466th day (civil reckoning) of the Julian Period, or between the 17th and 18th of February 1612 J.P., or 3102 B.C. [4713 BCE = 0 JP; 4713 BCE - 1612 + 1 (no 0 (ஆண்டு)) = 3102 BCE.]
↑Gupta, S. V. (2010). "Ch. 1.2.4 Time Measurements". In Hull, Robert; Osgood, Richard M. Jr.; Parisi, Jurgen; Warlimont, Hans (eds.). Units of Measurement: Past, Present and Future. International System of Units. Springer Series in Materials Science: 122. Springer. pp. 6–8. ISBN9783642007378.
↑Merriam-Webster 1999, ப. 629 (Kalki): தற்போதைய கலி யுகத்தின் முடிவில், அறமும் மதமும் குழப்பத்தில் மறைந்து, அநீதியான மனிதர்களால் உலகம் ஆளப்படும் போது, கல்கி தீயவர்களை அழித்து ஒரு புதிய யுகத்தை உருவாக்கத் தோன்றுவார்.... சில புராணக்கதைகளின்படி, கல்கியின் குதிரை பூமியை அதன் வலது காலால் முத்திரையிடும், இதனால் உலகைத் தாங்கும் ஆமை ஆழத்தில் விழுகிறது. பின்னர் கல்கி பூமியை அதன் தொடக்கத் தூய்மைக்கு மீட்டெடுப்பார்.