குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் இரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.
முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது. 13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை = 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).
நமக்கு எல்லாம் தெரிந்த 27 நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருபத்தி எட்டாவதாக ஒரு நட்சத்திரம் உள்ளது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அது அபிஜித் நட்சத்திரம். உத்திராடத்திற்கும் திருவோணத்திற்கும் நடுவில் இடம் பெற்றிருக்கக்கூடிய சூட்சும நட்சத்திரம்தான் இந்த அபிஜித் நட்சத்திரம்.
பாதம்
புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை. ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 x 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.
அட்டவணை
கீழேயுள்ள அட்டவணை நட்சத்திர அதிபதிகளையும், நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது.