திண்ணஞ் செட்டி ஊருணி - அருள்மிகு கயிலாச விநாயகர் கோவில்
செட்டிநாட்டு வீடுகள் தேவகோட்டையின் சிறப்பு.இதன் அருகாமையில் உள்ள நகரம் காரைக்குடி ஆகும். தேவகோட்டை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
திருச்சிராப்பள்ளி – இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், திருச்சியிலிருந்துஇராமேசுவரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை விமான நிலையமாகும். அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது - தேவகோட்டை சாலை ரயில் நிலையம். காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம் 15 கீ. மீ தொலைவில் உள்ளது தேவகோட்டையில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவகோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவகோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிக அளவில் வசிக்கும் ஊர்களில் ஒன்றாகும்.
பெயர்க் காரணம்
சோழ நாட்டில் காவிரிபூபட்டினத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்த ஊர்களில் ஒன்று தேவி கோட்டை அதன் நினைவாக பாண்டிய நாட்டில் இந்த ஊருக்கு தேவி கோட்டை என்று பெயர் வைத்தனர் என்று சொல்லப்படுகிறது. பின்னாளில் தேவி கோட்டை என்பது "தேவகோட்டை" என மருவியது.[6]
சுதந்திர போராட்டம்
சுதந்திர போராட்ட காலத்தில் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவகோட்டையில் பெரும் கிளர்சசி நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர்களால் தேவகோட்டை முனிசிப் நீதிமன்றம் தீ மூட்டப்பட்டது. இதை தொடர்ந்து தேவகோட்டை ஆர்ச் பகுதியில் ஆங்கிலேயர்களால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தினால் தேவகோட்டை "தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்" என்று அழைக்கப்படுகிறது.[7]