திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும்நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.
தல வரலாறு
தனது மனைவி லோபமுத்திரையுடன் அகத்தியரின் உருவச்சிலை
இந்து சமயப் புராண வரலாற்றின்படி, இறைவன் சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனது. அகத்தியரின் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி இறைவனை வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அகத்தியருக்கும் லோபமுத்திரைக்கும் இத்தலத்தில் இறைவன் தன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது.[2]
மற்றொரு மரபு வரலாற்றில், உரோசம முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டு அம்மலர்கள் கரைசேர்ந்த இவ்விடங்களில் சிவாலயங்கள் அமைந்து சிவனை வழிபட்டதாகவும், அவற்றில் முதலாவது மலர் கரைசேர்ந்த பாபநாசத்தில் அமைத்த கோயில் பாபநாசநாதர் கோயிலெனக் கூறப்பட்டுள்ளது.[3] இக்கோயில் சிவவடிவான இலிங்கமானது நவகோள்களில் ஒன்றான சூரிய தேவனின் அம்சமாக கருதப்படுகிறது. கைலாயநாதரை முதன்மைக் கடவுளாகக் கொண்டு நவகோள்களுக்குரியவையாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோயில்களின் வரிசையில் முதலாவதான இக்கோயில் சூரியனுக்குரியதாகும்.[3][4]
கோயிலமைப்பு
கோயிலின் வரலாற்றுத் தோற்றம்
கோயிலுள்ள அனைத்துக் கருவறைகளையும் உள்ளடக்கியவாறு கருங்கல்லலான சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் கோபுரம் ஏழடுக்குகள் கொண்டதாகும். கோயிலின் முதன்மைக் கடவுளாக பாபநாசநாதர் இலிங்க வடிவிலுள்ளார். இறைவி உலகம்மையின் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் வெளிச்சுவற்றில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகோள்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தை அடுத்துள்ள சிறுகோயிலில் யாளிகளைமைந்த தூண்களைக் கொண்ட மண்டபத்தில் நடராசர் உள்ளார். இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராசர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார்.[3] இக்கோயில் குளம் பாபநாச தீர்த்தம் எனப்படுகிறது. மேலும் அகத்திய தீர்த்தமும் கல்யாணி தீர்த்தமும் இக்கோயிலைச் சேர்ந்தவையாகும்.[5]
வரலாறு
கோயில் குளம்
கோயிலின் வரலாறு சரியானபடி கணிக்க முடியவில்லையென்றாலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சந்திரகுல பாண்டியன் என்ற பாண்டிய அரசனால் இக்கோயிலின் நடுக் கோயிலும் விமானமும் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த, வீரப்ப நாயக்கரால் (கிபி1609-23), யாகசாலை, கொடிமரம், நடராசர் மண்டபம் கட்டப்பட்டன. தற்காலத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறையால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.[4]
மேற்கோள்கள்
↑பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009