கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில் அல்லது விசயமங்கை, சம்பந்தர், அப்பர் ஆகிய சமயக் குரவர்களால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சைவ இலக்கியங்களில் விசயமங்கை என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. விசயமங்கை என்பது கோவில் பெயரே ஊரின் பெயர் கோவிந்தபுத்தூர்(கோ கறந்த புத்தூர்). இத்தலம் தமிழ்நாட்டில்அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுத்தூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவதலம் ஆகும். தற்பொழுது உள்ள கோயில் கட்டடம் கி.பி 980-ல் உத்தம சோழனால் கட்டப்பட்டது.[1][2]
அமைவிடம்
ஜெயங்கொண்டம்-மதனத்தூர் சாலையில், தா.பழூர், காரைக்குறிச்சி, திருபுரந்தன் அடுத்து இவ்வூர் உள்ளது.
தட்சிணாமூர்த்தி, இறைவி, ராஜராஜன், மனைவி, ராஜேந்திரன், சம்பந்தர், சப்தமாதர்ள், விநாயகர், மூலத்திருமேனிகள் உள் மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.[2]
வரலாறு
இக்கோயில் முதலில் செங்கலால் கட்டபட்டக் கோயிலாக இருந்துள்ளது. பிற்கால சோழர்கள் காலத்தில் சோழ அரசில் அதிகாரியாக இருந்த அம்பலவன் பழுவூர்நக்கன் என்பவர் இக்கோயிலைக் கல்லால் கட்டுவித்ததோடு, ஸ்ரீவிமானத்தையும் கல்லால் கட்டுவித்தார்.[4]
முதலாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டில், வடகரை ராஜேந்திர சிங்க வளநாட்டுப் பெரியவானவன் மாதேவி சதுர்வேதிமங்கலத்து விசயமங்கை என்றும், திரிபுவனச் சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டில் விக்கிரம சோழன் நாட்டு இன்னம்பர் நாட்டு விசயங்கை எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
மதுரை கொண்டு கோப்பரகேசரி வர்மன், பரகேசரி உத்தமச் சோழன், முதலாம் ராஜராஜசோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதல் குலோத்துங்கச் சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜதேவன் ஆகியோர் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இங்கு காணப்பெறுகின்றன. அதோடு இக்கல்வெட்டுகளில் விஜயமங்கலமுடைய மகாதேவர், விஜயமங்கலத்து மகாதேவர் மற்றும் விஜயமங்கலமுடைய பரமசாமி என இறைவனது திருப்பெயர்கள் குறிப்பிடப்பெற்றள்ளது. இவ்வூரில் திருத்தொண்டத் தொகையன் திருமடம் ஒன்று இருந்ததை திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜ தேவரின் 32வது ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகிறது.
திருஞானசம்பந்தர் பாடிய, வாழ்க அந்தணர் வாணவர் ஆயினம் என்னும் பாடல் இக்கோயிலில் கி.பி. 1248ல் எழுதப்படடுள்ள மூன்றாம் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டின் தொடக்கத்தில் எழுதப் பட்டுள்ளது. பாடல் பெற்ற க்ஷேத்திரங்கள் பலவற்றிலும் பூஜையின்போது தேவாரம் ஓதப்பட்டன. அதுபோல இந்த கோவிந்தபுத்தூர் கோயிலிலும் தேவாரப் பதிகங்கள் ஓதப்பட்டன. கி.பி. 984ல் வடிக்கப்பட்ட உத்தமச் சோழரின் கல்வெட்டு இக்கோயிலில் தேவார திருப்பதிகம் விண்ணப்பம் செய்ததைப் பற்றி கூறுகின்றது.
இத்திருமறை ஓதலுக்காக இவ்வூர் சபையினரால் நெல் வழங்கப்பட்டதையும், முதலாம் ராஜராஜனின் கி.பி. 1014ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று செய்தி சொல்கிறது. பாண்டியர் மற்றும் விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகளும் இங்கு பரவிக் கிடக்கின்றன.
இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் ஆறு கல்வெட்டுகள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1426-ம் ஆண்டு விஜயநகர மன்னர்கள் காலத்தில் வடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இன்னம்பூரில் கி.பி. 1372ம் ஆண்டு விஜயநகர மன்னன் கம்பண்ணரின் கல்வெட்டில் இவ்வூர் கோவிந்தப்புத்தூர் என்றும், இவ்வூர் இந்நாட்டின் தலைநகரமாக விளங்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது