சுவாமிமலை வெண்கலப் படிமங்கள்

சுவாமிமலை வெண்கலப் படிமங்கள்
ஒரு பஞ்சலோகப் படிமம்
குறிப்புசுவாமிமலையில் உருவாக்கப்படும் உலோகப் படிமங்களும் சிலைகளும்
வகைகைப்பணி
இடம்சுவாமிமலை, தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2008–09
பொருள்உலோகம், மெழுகு, களிமண், வெண்கலம்

சுவாமிமலை வெண்கலப் படிமங்கள் என்பவை தமிழ் நாட்டில் உள்ள சுவாமிமலையில் உற்பத்தி செய்யப்படும் வெண்கலச் சிலைகளைக் குறிப்பன.[1] இந்திய அரசு 2008-2009 காலப் பகுதிக்கான புவியியல் குறியீடாக இதை ஏற்றுக்கொண்டது.[2]

வரலாறு

சோழர் ஆட்சிக்காலத்தில் முதலாம் இராசராசன், தஞ்சாவூரில் உள்ள பிருகதீசுவரர் கோயிலின் கட்டுமானப் பணிகளில் சிற்பிகள் குழு ஒன்றை ஈடுபடுத்தியிருந்தான்.[3][4] ஐராவதீசுவரர் கோயிலில் சிலைகளை வார்ப்பதற்கு உதவிய சிற்பிகள் சுவாமிமலையில் குடியேறினர்.[4]

உற்பத்தி

இங்கே உருவாக்கப்படும் படிமங்கள் 6 அடி (1.8 மீட்டர்) தொடக்கம் 12 அடி (3.7 மீட்டர்) வரை உயரம் கொண்டவை.[4] தரத்தைப் பேணுவதற்காகக் குறைந்த எண்ணிக்கையிலான படிமங்களையே இறுக்கமான கட்டுப்பாடுகளின் கீழ் இங்கு உருவாக்குகின்றனர். இங்கு உருவாக்கப்படும் படிமங்களில் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளடங்குகின்றன. தேவையைப் பொறுத்து ஆண், பெண் விலங்குகளின் உருவங்களையும் இங்கே வார்க்கின்றனர்.[5] மெழுகு வார்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்திச் சிலைகளை வார்க்கின்றனர். இவை திண்ணிய வார்ப்பு, பொள் வார்ப்பு ஆகிய இரு வகைகளில் அமைகின்றன.[5]

மரபுவழியாகத் திண்ணிய மெழுகு வார்ப்பு நுட்பத்தையே பயன்படுத்தினர். தேவைப்படும் படிமத்தின் மாதிரியை மெழுகுக் கலவை நிரப்பப்பட்ட அச்சாகச் செய்கின்றனர். தேன் மெழுகு, பிளான்டனசு ஓரியென்டலிசு என்னும் மரத்தின் பிசின், நிலக்கடலை எண்ணெய் ஆகியவற்றை 4:4:1 விகிதத்தில் கலப்பதனால் இக்கலவை உருவாகின்றது.[6] மெழுகு உருவத்தின்மேல் மூன்று படைகளாகக் களிமண் பூசப்படுகின்றது. ஒவ்வொரு படைக்கும் வேறுபட்ட களிமண் வகைகள் பயன்படுகின்றன.[6] 3 மிமீ முதற் படைக்கு, நுண்ணிய இருவாட்டி மண் அல்லது காவேரிப் படுகையில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை உமிக் கரியுடன் சேர்த்து அரைத்துப் பசுவின் சாணத்துடன் கலந்த கலவை பயன்படுகின்றது. இரண்டாம் படைக்கு நெல் வயலில் எடுக்கப்படும் களி மண்ணுடன், மணல் கலந்த கலவையும், மூன்றாம் படைக்கு களிமண்ணுடன் பருமணல் கலந்து குழைத்த கலவையும் பயன்படுகின்றன. பெரிய சிலைகளுக்கான களிமண் பூச்சை உலோகக் கம்பிகளைக் கொண்டு வலுவூட்டுவது வழக்கம்.[6]

களிமண் பூச்சுக் காய்ந்த பின்னர் அச்சைச் சூடாக்கி மெழுகை உருக்கி வெளியேற்றுவர். இவ்வாறு உருவாகும் அச்சின் இடைவெளிக்குள் உலோகத்தை உருக்கி ஊற்றுவர். இங்கு பயன்படும் உலோகம் பழங்காலத்தில் பொன், வெள்ளி, செப்பு, துத்தநாகம், ஈயம் ஆகிய ஐந்து உலோகங்களைக் கலந்து உருவாக்கிய ஒரு கலப்புலோகம் ஆகும். இதைப் பஞ்சலோகம் என்பர். பொன், வெள்ளி என்பவை தற்காலத்தில் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் அவற்றுக்குப் பதிலாகத் தகரம், இரும்பு என்பவற்றைச் சேர்ப்பது உண்டு.[6] உருக்கி ஊற்றிய உலோகம் குளிர்ந்து இறுகிய பின்னர் அச்சை உடைத்து உலோக உருவத்தை வெளியே எடுத்து மேலும் மெருகூட்டிப் படிமத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பர்.[5]

அளவு

படிமங்களைச் செய்வதற்கு சிற்ப நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளைச் சிற்பிகள் பயன்படுத்துவர். அளவுக்கான அடிப்படை அலகு தாலம் எனப்படும். இது முகத்தில் தலைமுடியின் கீழ்ப் பகுதியில் இருந்து தாடையின் கீழ்ப் பகுதிவரையுள்ள தூரம் ஆகும். தாலத்தின் பன்னிரண்டில் ஒரு பகுதியை அங்குலம் என்பர். இதை மேலும் எட்டாகப் பிரித்தால் ஒரு பகுதி யாவா எனப்படும் அது அண்ணளவாக பார்லி தானியத்தின் அளவுடையது. இவ்வாறே பிரித்துச் செல்லும்போது கிடைக்கும் மிகக் குறைந்த அலகு பரமாணு எனப்படும் இது ஒரு தலைமுடியின் தடிப்பை விடக் குறைவானது. தென்னோலையைக் கிழித்து ஒரு பட்டியாகத் தயார் செய்து அதில் படிமத்துக்குத் தேவையான அளவுகளைச் சிற்பிகள் குறித்து வைத்துக்கொள்வர்.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. German Mining-museum Bochum (2008). Masters of Fire: Hereditary Bronze Casters of South India. David Brown Book Company. p. 30,32. ISBN 9783937203379.
  2. "Geographical indication". Government of India. Archived from the original on 26 August 2013. Retrieved 28 June 2015.
  3. Vidya Dehejia (2007). Chola: Sacred Bronzed of Southern India. Harry N. Abrams. p. 21. ISBN 9781903973837.
  4. 4.0 4.1 4.2 "Worldwide demand for Swamimalai bronze icons". The Hindu. 11 October 2009. http://www.thehindu.com/arts/worldwide-demand-for-swamimalai-bronze-icons/article57920.ece. 
  5. 5.0 5.1 5.2 "The Craft of Bronze Icons". dsource.in. Archived from the original on 6 பெப்ரவரி 2016. Retrieved 29 January 2016.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 R.M. Pillai; S.G.K. Pillai; A.D. Damodaran (2002). The Lost-Wax Casting of Icons, Utensils, Bells, and Other Items in South India. http://www.tms.org/pubs/journals/JOM/0210/Pillai-0210.html. பார்த்த நாள்: 2019-10-21. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya