இராமநாதபுரம் முண்டு மிளகாய், இதன் பிறப்பிடமான இராமநாதபுரம் மாவட்டத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இம்மிளகாய் இம்மாவட்டத்தில் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிரிடப்படுகிறது. தமிழ் மொழியில் முண்டு என்ற சொல் 'கொழுப்பு மற்றும் உருண்டை' என்று பொருள்படும்.[1][2][3]
உள்ளூர் பெயர்
1947ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் காலத்தில் இந்த மாவட்டம் "ராம்நாடு இராச்சியம் அல்லது ராம்நாடு எஸ்டேட்" என்ற பெயரில் அறியப்பட்டதால், இது ராம்நாடு முண்டு மிளகாய் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.[4][5][6][7]
விளக்கம்
இராமநாதபுரம் முண்டு மிளகாய் வட்டமானது. தோராயமாக சேலாப்பழம் அளவிலானது. இவை மென்மையாகவும் அதிகக் காரத்துடனும் இருக்கும்.[8] மிளகாய் அடர்த்தியான தோலை உடையது. இவை சாம்பார், சட்னி,கறி போன்ற தென்னிந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.[9] இராமநாதபுரம் முண்டு மிளகாய் நேரடியாக விதைத்து மானாவாரி பயிராகப் பயிரிடப்படுகிறது. உப்புத்தன்மை, வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.
முதுகுளத்தூரைச் சேர்ந்த இராமநாதபுரம் முண்டு மிளகாய் உற்பத்தியாளர் நிறுவனம், இராமநாதபுரம் முண்டு மிளகாயின் புவிசார் குறியீடு பதிவிற்கு முன்மொழிந்தது. நவம்பர் 2020-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, மிளகாய்க்கு 2023-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள புவியியல் அடையாளப் பதிவேட்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் விளையும் மிளகாய்க்கு "இராமநாதபுரம் முண்டு மிளகாய்" என்று பெயர் வந்தது. இதன்மூலம் இது தமிழ்நாட்டின் முதல் மிளகாய் வகையாகவும், புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் 45வது வகைப் பொருட்களாகவும் ஆனது.[11]