தஞ்சாவூர் பொம்மைகள்

தஞ்சாவூர் பொம்மை
ராஜா பொம்மை என்கிற சாய்ந்தாடும் பொம்மை
குறிப்புசுடுமண் பாண்டம் பொம்மை தஞ்சாவூரின் களிமண்ணால் செய்யப்பட்டது.
வகைகைத்தொழில்
இடம்தஞ்சாவூர், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2008-09
பொருள்சுடுமண் பாண்டம், ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ், காகிதக்கூழ், மரத்தூள்


தஞ்சாவூர் பொம்மைகள் என்பவை தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் பொம்மைகள் ஆகும்.[1] தஞ்சை கைவினைஞர்களால் இந்த பொம்மைகள் காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்பட்டது. புவி ஈர்ப்பு விசையை பற்றி சர் ஐசக் நியூட்டன் எடுத்துரைக்கும் முன்பே சாய்ந்தாடும் பொம்மைகள் தஞ்சாவூரில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.[2]

எனவே தஞ்சாவூர் பொம்மைகள் தனித்துவமான வரலாற்றை கொண்டுள்ளன. இந்த பொம்மைகள் தொடக்கத்தில் காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்பட்டன. தற்போது நவீன பொம்மைகள் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ், காகிதக்கூழ், மரத்தூள் கொண்டு செய்யப்படுகின்றன. தஞ்சையின் அடையாளமாக விளங்கும் இப்பொம்மைகள் தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றக் கூடியவை ஆகும்.

தஞ்சாவூர் பொம்மைகளுக்கு தஞ்சாவூர் வணிகர் சங்கம் சார்பில் 2007ஆம் ஆண்டு மே மாதம் புவிசார் குறியீடு கோரப்பட்டது. 2008 செப்டம்பர் மாதம் இந்திய அரசால் தஞ்சாவூர் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.[3]

வரலாறு

16 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களால் ஆளப்பட்டது. தஞ்சாவூர் பொம்மைகள் அதற்கு முன்பிருந்தே கைவினைஞர்களால் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. சர் ஐசக் நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை கோட்பாடு 1665 - 1666 இல்தான் வெளியிடப்பட்டது. எனவே அதற்கு முன்னரே புவி ஈர்ப்பு விசை குறித்து அறிந்து தமிழர்கள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை செய்தனர் என ஜாக்ராபிகள் இண்டிகேஷன் தி தஞ்சாவூர் டால் என்ற நூலில் ஸ்ரீ சஞ்சய் காந்தி குறிப்பிடுகிறார்.

கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், நாடகம் போன்ற கலைகளுக்குப் பெயர்பெற்ற தஞ்சையில் 19 ஆம் நூற்றாண்டில் இப்பொம்மைகள் உருவாக்கப்பட்டன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இப்பொம்மைகள் உருவாக்கும் கலைஞர்கள் சிறப்புடன் மதிக்கப்பட்டனர்.

தயாரிக்கும் முறை

முதலில் அடிப்பாகம் தயரிக்கப்படுகிறது. வளைவான அடிப்பாகமுள்ள கிண்ணம் போன்ற ஒரு அமைப்பில் தூய களிமண் நிரப்பி அது இரண்டு நாட்கள் நிழலிலும் பின் இரண்டு நாடகள் வெயிலிலும் உலரவைக்கப்படுகிறது. நிரப்பப்படும் களிமண்ணுக்கேற்பவே பொம்மைகள் செங்குத்தாக அமைகின்றன. பின் மேல்பாகம் தயாரிக்கப்பட்டு அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகின்றன. உப்புத்தாளால் நன்கு தேய்க்கப்பட்டு கண்கவர் வண்ணங்கள் அடிக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன.

வகைகள்

  1. சாய்ந்தாடும் பொம்மைகள்
  2. தலையாட்டி பொம்மைகள்
  3. நடன பொம்மைகள்

சாய்ந்தாடும் பொம்மைகள்

தஞ்சாவூர் சாய்ந்தாடும் பொம்மைகள்
தஞ்சாவூர் சாய்ந்தாடும் பொம்மையைச் சாய்த்தாலும் கீழே விழாமல் ஆடும் வண்ணம் அமைக்கப்பட்ட அடிப்பாகம்

தஞ்சாவூர் பொம்மைகளில் சாய்ந்தாடும் பொம்மை தனித்துவமானது. இந்த பொம்மைகளின் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகளைச் சாய்த்து தள்ளினாலும் கீழேவிழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. புவிஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.[4]

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சாய்ந்தாடும் பொம்மை

சாய்ந்தாடும் பொம்மைகளில் புகழ்பெற்றவை ராஜா ராணி தம்பதிகள் பொம்மையாகும். இவற்றில் நடன இணை பொம்மைகளும், தாத்தா பாட்டி பொம்மைகளும் செய்யப்படுகின்றன.

சாய்ந்தாடும் பொம்மை தயாரிப்பு

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், மரக்கூழ் மற்றும் கிழங்கு மாவு ஆகியவை கொண்டு தஞ்சை பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் நன்றாக அரைக்கப்படுகிறது. அரைக்கப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸூடன் காகிதக் கூழ் தேவையான கிழங்கு மாவுடன் (சாகோ) 1:3 என்ற விகிதத்தில் கலக்கப்படுகிறது. அந்த மாவை பூரி போல‌ தேய்க்கின்றனர். அதனை அச்சில் (டை) வைக்கின்றனர். சிலையை அச்சிலிருந்து பிரித்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, காகிதங்களை அதனுள் ஒட்டி உறுதி செய்கின்றனர்.

பொம்மையின் முன்பகுதி பின்பகுதி என இரண்டும் தயாரிக்கப்பட்டவுடன், கீழ்பகுதியில் கனத்திற்காக களிமண் சேர்க்கப்படுகிறது. பின்பு இருபகுதியும் இணைக்கப்பட்டு, இடைவெளி பூசப்பெறுகிறது. அவை உலர்ந்த பிறகு பொம்மைக்கு வர்ணம் பூசுகின்றனர்.

தற்போதைய பொம்மைகள்

அக்காலத்தில் களிமண்கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மைகள் தற்போது ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ், காகிதக்கூழ், மரத்தூள் ஆகியவை கொண்டு செய்யப்படுகின்றன. உடல் பாகங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டு அவை ஒரு கம்பியில் பொருந்தி ஆடும்படி உருவாக்கப்படுகின்றன. ஆடும் மாது, தாத்தா-பாட்டி ஆகியவை அதுபோல உருவாக்கப்படும் பொம்மைகளே. தற்போது பிளாஸ்டிக்கிலும் இந்த பொம்மைகள் விற்கப்படுகின்றன.

புவிக்குறியீட்டு எண்

பொருட்களுக்கான புவிக்குறியீட்டு சட்டம் 1999 ஆண்டு சட்டத்தின்படி தஞ்சாவூர் பொம்மைகள் தஞ்சையின் உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பொம்மைகளுக்கு தஞ்சாவூர் வணிகர் சங்கம் சார்பில் 2007ஆம் ஆண்டு மே மாதம் புவிசார் குறியீடு கோரப்பட்டது. ஆய்வுகளுக்குப் பிறகு 2008 செப்டம்பர் மாதம் இந்திய அரசால் தஞ்சாவூர் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.[3]

தலையாட்டி பொம்மைகள்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளில் ஒன்றான செட்டியார் பொம்மையின் தலையாடுதலை விவரிக்கும் இயங்குபடம்

தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள் தொடக்கத்தில் களிமண்ணால் செய்யப்ப்பட்டன. தற்போது பிளாஸ்டிகால் தயாரிக்கப்பட்டவையும் விற்பனைக்கு உள்ளன. எனினும் பாரம்பரியமாக களிமண்ணில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கே இந்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பொம்மைகளில் தலையை மட்டும் ஆட்டுகின்றவாறு உள்ள பொம்மைகள் தலையாட்டி பொம்மைகள் எனப்படுகின்றன. இவற்றில் தலையாட்டும் பரதநாட்டிய நடனப் பெண் பொம்மை, தலையாட்டும் குரங்கு பொம்மை, தலையாட்டும் சிறுவன் பொம்மை என சில வகைகள் உள்ளன. அனைத்தையும் விட தலையை ஆட்டும் வயதான தம்பதிகள் பொம்மை புகழ்பெற்றதாகும். இந்த இணை பொம்மைகளை செட்டியார்- செட்டிச்சி பொம்மை என அழைப்பர். இவை தாத்தா பாட்டி பொம்மை என்றும் கூறப்படுகிறது.

நடன பொம்மைகள்

தஞ்சாவூர் பொம்மைகளில் புகழ்பெற்றது நடன பொம்மைகளாகும். இவை பல்வேறு இந்திய நடனங்களை பிரதிபலிப்பதாக உருவாக்கப்படுகின்றன.

பரதநாட்டிய நடன பெண் பொம்மை நான்கு பாகங்களாக உள்ளன. தலை, கைகளுடன் இணைந்த மார்பு பகுதி, பாவாடை, காலுடன் இணைந்த அடிப்பாகம்‌ ஆகியவை.‌

  1. மயில் நடன பொம்மை
  2. குறத்தி நடன பொம்மை
  3. கதகளி நடன பொம்மை
  4. பரதநாட்டிய நடன பொம்மை
  5. மணிப்பூரி நடன பொம்மை
  6. பொய்க்கால் குதிரை நடன பொம்மை

அங்கிகரிக்கப்பட்ட கைவினைஞர்கள்

தஞ்சாவூர் நடன பொம்மைகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், காகிதக் கூழ், மரக் கூழ் மற்றும் சாகோ ஆகியவற்றை உள்ளடக்கிய பொருட்களின் கலவையால் உருவாக்கப்படுவதை புவிசார் குறியீட்டில் பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கைவினைஞர்களின் திறமையை அங்கிகரித்து புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பகுதியில் காவிரியில் கிடைக்கும் வண்டல் மண் கலவையால் இந்த பொம்மைகள் தனித்துவம் பெறுகின்றன. புவிசார் குறியீடு மூலம் பொம்மைகள் தயாரிக்கும் கைவினைஞர்களுக்கு அங்கிகாரம் உள்ளது.

அங்கிகாரமற்றவர்கள் தஞ்சாவூர் பொம்மைகளை தயாரிப்பதை தடுக்கவும், தண்டனை வழங்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சை பொம்மையை தயாரிக்க புதிய நபர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களது பொம்மைகள் தரக்கட்டுப்பாடு, தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு நிபுணர்களின் துணையோடு அங்கிகரிக்கப்படுகிறது.

விற்பனை கண்காட்சி அரங்கம்

தஞ்சாவூர் தொடருந்து நிலையத்தில் தலையாட்டி பொம்மை விற்பனை அரங்கம் 2022 மே மாதம் திறக்கப்பட்டு உள்ளது.[5] தஞ்சாவூர் தாரகை மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி பெண்கள் 2022 இல் பிரதமராக இருந்த மோடிக்கு தலையாட்டி பொம்மையை அனுப்பினர். அதனை பிரதமர் மோடி, மனதின் குரல் என்ற 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசினார்.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "My Native Treasures: Thanjavur Dancing Dolls – Hindu Press International" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-04-30.
  2. "வீழ்பவர் எழும் வாழ்வியல் தத்துவம்..." Hindu Tamil Thisai. 2020-02-04. Retrieved 2023-04-30.
  3. 3.0 3.1 "Thanjavur dolls dance into GI Registry". 12 சனவரி 2009 – via The Economic Times - The Times of India.
  4. Physics Class 9. Pearson Education India. p. 184. ISBN 8131728463.
  5. "புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டிபொம்மை விற்பனை அரங்கம் திறப்பு". Daily Thanthi. 10 மே 2022.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya