செருமேனியம் ஈராக்சைடு
செருமேனியம் ஈராக்சைடு (Germanium dioxide), செருமேனியம் ஆக்சைடு, செருமேனியா, மற்றும் செருமேனியத்தின் உப்பு எனவும் அழைக்கப்படுகிற,[1] ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு GeO2. இச்சேர்மமே செருமேனியத்தின் முக்கிய வணிக மூலம் ஆகும். இது செருமேனியத்தின் மேல் செருமேனியம் வளிமண்டல ஆக்சிசனுடன் வினைபுரிவதன் வாயிலாக ஒரு படிவாகப் படிகிறது. அமைப்புசெருமேனியம் ஈராக்சைடின் (GeO2) இரண்டு முக்கிய மாற்று அமைப்புகள் அறுமுகி மற்றும் நான்முகி அமைப்பைப் பெற்றுள்ளன. அறுமுகி வடிவம் கொண்ட GeO2 β-குவார்ட்சினையொத்த, அணைவு எண் 4 ஐக் கொண்ட செருமேனியத்தைக் கொண்டுள்ளது. நான்முகி வடிவ GeO2 (ஆர்குடைட்டு கனிமம்) இசுடிசோவைட்டில் காணப்படும் ரூடைலையொத்த வடிவத்தைக் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பில், செருமேனியம் அணைவு எண் 6 ஐக் கொண்டுள்ளது. படிக வடிமற்ற (கண்ணாடி போன்ற) GeO2 உருகிய சிலிகாவினையொத்ததாக உள்ளது.[2] செருமேனியம் ஈராக்சைடானது படிக வடிவத்திலும் படிகமற்ற வடிவத்திலும் தயாரிக்கப்படலாம். சராசரியான சூழ்நிலையில் உள்ள வெப்பநிலையில் படிக வடிமற்ற சேர்மமானது GeO4 நான்முகி வடிவ வலைப்பின்னலால் உருவாகிறது. உயர்த்தப்பட்ட அழுத்தத்தில் (9 கிகா பாசுகல்) செருமேனியத்தின் அணைவு எண்ணானது, Ge-O இன் பிணைப்பு நீளத்தின் அதிகரிப்போடு சேர்ந்து மெதுமெதுவாக 4 இலிருந்து 5 ஆக அதிகரிக்கிறது.[3] இன்னும் அதிக அழுத்தத்தில், அதாவது 15 கிகா பாசுகல் அளவு அழுத்தத்தில், செருமேனியத்தின் அணைவு எண்ணானது 6 ஆக அதிகரிப்பதாேடு அடர்வான வலைப்பின்னல் அமைப்பானது GeO6 அறுமுகி வடிவால் உருவாக்கப்படுகிறது.[4] அழுத்தமானது போதுமான அளவிற்கு குறைக்கப்படும் போது, அமைப்பானது நான்முகி வடிவத்திற்கு மீள்கிறது.[3][4] உயர் அழுத்தங்களில், உரூத்தைல் வடிவமானது செஞ்சாய்சதுர CaCl2 வடிவத்திற்கு மாறுகிறது.[5] வினைகள்செருமேனியம் ஈராக்சைடை தூளாக்கப்பட்ட செருமேனியத்துடன் 1000 °செல்சியசு வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது செருமேனியம் மோனாக்சைடானது (GeO) கிடைக்கிறது.[2] அறுமுகி வடிவ செருமேனியம் ஈராக்சைடானது (d = 4.29 கி/செமீ3)உரூத்தைல் வடிக சேர்மத்தைக் (d = 6.27 g/cm3)காட்டிலும் எளிதில் கரையக்கூடியதாக உள்ளது. மேலும், H4GeO4 அல்லது Ge(OH)4 அமிலத்தை உருவாக்குகிறது.[6] GeO2 ஆனது அமிலத்தில் சிறிதளவே கரைவதாகவவும், ஆல்கலிகளில் ஒப்பீட்டளவில் எளிதில் கரைந்து செர்மானேட்டுகளைத் தருகிறது.[6] ஐதரோகுளோரிக் அமிலத்துடன் தொடர்பேற்படும் போது, இச்சேர்மம் அரிக்கும் தன்மையும், எளிதில் ஆவியாகும் தன்மையும் கொண்ட செருமேனியம் டெட்ராகுளோரைடைத் தருகிறது. பயன்கள்செருமேனியம் ஈராக்சைடின் ஒளியியல் பிரிகைப் பண்புகள் மற்றும் அதன் ஒளி விலகல் எண் மதிப்பு (1.7) ஆகியவை இச்சேர்மத்தை அகன்ற கோணம் உடைய, ஒளியியல் நுண்ணோக்கிகளில் பயன்படுத்தக்கூடிய, பொருளருகு வில்லைகளைத் தயாரிக்கவும், ஒளி இழையின் மையப்பகுதியினைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. செருமேனியமும், அதன் கண்ணாடி ஆக்சைடும் (GeO2) அகச்சிவப்புக் கற்றை ஊடுருவும் தன்மை கொண்டவையாக இருப்பதால் இராணுவம் மற்றும் விலையுயர்ந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் இரவில் தெளிவாகப் பார்க்கப் பயன்படும் தொழில்நுட்பத்திலும், வெப்பவியல் ஒளிப்படப்பெட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[7] GeO2 ஆனது இதர அகச்சிவப்பு ஊடுருவும் தன்மை கொண்ட கண்ணாடிகளை விட அதிகமாகத் தேர்வு செய்யப்படுகிறது. ஏனெனில், மிகவும் கடினமான இராணுவச் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் இயந்திரவியல் வலிமை இச்சேர்மத்தில் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.[8] சிலிக்கான் டைஆக்சைடு மற்றும் செருமேனியம் ஆக்சைடு ஆகியவற்றின் கலவை ("சிலிகா-செருமேனியா") ஒளியிழைகளைத் தயாரிக்கப் பயன்படும் ஒளியில் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.[9] இந்த உலோகக் கலவையில் உலோகங்களின் விகிதங்களைக் கட்டுப்படுத்துவது ஒளிவிலகல் எண்ணைக் கட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்கிறது. சிலிகா-செருமேனியா கண்ணாடிகள் தனித்த சிலிகாவைக் காட்டிலும் குறைவான பாகுநிலையையும் மற்றும் அதிக ஒளிவிலகல் எண்ணையும் கொண்டிருந்தன. சிலிகா இழையில் சிலிகாவுடனான மாசாக இருந்த டைட்டானியாவை செருமேனியா பதிலியிட்டது. இதன் காரணமாக கூடுதலாக வெப்பப்படுத்தும் தேவையானது நீக்கப்பட்டு இழைகள் நொறுங்கும் தன்மை அடைவது தடுக்கப்பட்டது.[10] செருமேனியம் ஈராக்சைடானது பாலிஎதிலீன்டெட்ராப்தாலேட்டு பிசின் தயாரிப்பில் வினைவேகமாற்றியாகவும்,[11] இதர செருமேனியம் சேர்மங்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இச்சேர்மம் ஒளிரும் பொருட்கள் மற்றும் இதர குறைக்கடத்திப் பொருட்களின் தயாரிப்பிற்கான நுழைநிலைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நச்சுத்தன்மை மற்றும் மருத்துவக்குணம்செருமேனியம் ஈராக்சைடு குறைவான நச்சுத்தன்மை கொண்ட சேர்மம் ஆகும். ஆனால், அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரகத்தை பாதிக்கும் தன்மை உடையது. செருமேனியம் ஈராக்சைடானது சில சந்தேகத்துக்கிடமான துணை உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்பட்டு அதிசயிக்கத்தக்க குணமாக்கும் செயல்களைச் செய்வதாகவும் கூறப்படுகிறது.[12] அதிக அளவிலான உட்கொள்ளல் பல நேர்வுகளில் செருமேனியம் நச்சுத்தன்மையைய விளைவித்து விடுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia