சிபு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: SBW, ஐசிஏஓ: WBGS); (ஆங்கிலம்: Sibu Airport; மலாய்: Lapangan Terbang Sibu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சிபு நகருக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[1]
இந்த வானூர்தி நிலையம், சரவாக் மாநிலத்தின் சிபு பிரிவு பகுதியில் வாழும் மக்களுக்கு உள்நாட்டுச் சேவைகளை வழங்கி வரும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
2018-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 1,579,528. அதே வேளையில் 20,869 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. சிபு நகர மையத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் தென் பகுதியில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.[2]
பொது
இந்த வானூர்தி நிலையம் மலேசியாவில் 11-ஆவது விறுவிறுப்பான வானூர்தி நிலையமாகவும்; சரவாக்கில் மூன்றாவது விறுவிறுப்பான வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது.
ஏப்ரல் 2009-இல், சிபு வானூர்தி நிலையத்தின் முனையத் தளத்தை (Terminal Building) மேம்படுத்துவதற்காக RM 150 மில்லியன் வழங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட முனையம் 31 ஜூலை 2012-இல் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது.[3]
சிபுவில் முதல் வானூர்தி நிலையம், தெக்கு (Teku) நகரில் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் ஒரு சாதாரண வானூர்தி நிலையமாக கட்டப்பட்டது. இருப்பினும், வானூர்தி ஓடுதளம் நேச நாட்டுப் படைகளால் கடுமையாகக் குண்டுகள் வீசப்பட்டுத் தாக்கப்பட்டது. வானூர்தி நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் 1951-இல் தொடங்கின.
தொடக்கத்தில், ஓடுபாதை 3,600 அடி நீளம்; 150 அடி அகலத்தில் கட்டப்பட்டது. முதல் வானூர்தி 1952 மே 21-ஆம் தேதி இந்த வானூர்தி நிலையத்தில் தரையிறங்கியது. 1 ஜூலை 1952 சூலை 21-ஆம் தேதி வழக்கமான சேவைகளுக்காகத் திறக்கப்பட்டது.
முதல் சேவை
மலேசியா எயர்லைன்சு (Malayan Airways) நிறுவனம், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் சிங்கப்பூரிலிருந்துகூச்சிங், சிபு, லபுவான் ஆகிய இடங்களுக்கு தன் வானூர்திகளைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தியது. 1959-இல் ஓடுபாதை 4,500 அடிக்கு 150 அடியாக நீட்டிக்கப்பட்டது.[5]
புதிய வானூர்தி நிலையத்தின் செயல்பாடு அதிகாரப்பூர்வமாக 1 ஜூன் 1994-இல் தொடங்கியது. அப்போது அந்த வானூர்தி நிலையம் சிபு நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்து இருந்தது. 31 மே 1994-இல், நான்கு மலேசியா எயர்லைன்சு வானூர்திகள் முதன் முதலாகத் தரையிறங்கின.[5]