சுல்தான் அகமது ஷா வானூர்தி நிலையம் அல்லது குவாந்தான் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: KUA, ஐசிஏஓ: WMKD); (ஆங்கிலம்: Sultan Ahmad Shah Airport அல்லது Kuantan Airport; மலாய்: Lapangan Terbang Sultan Ahmad Shah) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், குவாந்தான் நகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]
இந்த வானூர்தி நிலையம், குவாந்தான் மாநகர் மக்களுக்கும்; பகாங் மாநில மக்களுக்கும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. இந்த வானூர்தி நிலையம் குவாந்தான் மாநகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பொது
சுல்தான் அகமது ஷா வானூர்தி நிலையம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் பெற்றது. 2008-ஆம் ஆண்டில், தைவான் அரசாங்கமும் மலேசியாவும் இணைந்து தாய்பெய் மாநகரில் இருந்து குவாந்தான் வானவூர்தி நிலையத்திற்கு நேரடியாக 23 விமானங்கள் மூலமாக, சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரப்பட்டார்கள்.
இந்த வானூர்தி நிலையத்துடன் அரச மலேசிய விமானப் படையும் (RMAF Kuantan) இணைந்து செயல்படுகிறது.