ஜந்தர் மந்தர் (Jantar Mantar), 19 வானியல் கருவிகளின் தொகுப்புகளைக் கொண்டு ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஓர் நினைவிடமாகும். ஜெய்ப்பூரைக் கட்டமைத்த இராஜபுத்திர அரசன் சவாய்இரண்டாம் ஜெய் சிங்கினால் இந்த வானியில் கருவிகள் கட்டமைக்கப்பட்டன. இந்த நினைவிடம் 1734 இல் கட்டிமுடிக்கப்பட்டது.[1][2] இங்கு உலகின் மிகப்பெரிய கல்லாலான சூரிய மணிகாட்டி உள்ளது. யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றாக விளங்குகிறது.[1][3]ஜெய்ப்பூர் நகர அரண்மனை, ஹவா மஹால் ஆகிய இரு முக்கியமான இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.[4] இங்குள்ள கருவிகளைக் கொண்டு வானியல் நிலைகளைச் சாதாரணக் கண்களைக் கொண்டே காணலாம்.[1] பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் காணப்பட்ட தொலமியின் வானியியலுக்கு இந்த வான் ஆய்வுக்கூடம் ஒரு எடுத்துக்காட்டாகும்.[1][2]
பெயர்
இப்பெயரானது 'ஜந்தர்'- "கருவி" என்ற பொருள்படும் சமசுகிருத சொல்லான 'யந்திரா' "மந்தர்" - 'கணிப்பு' எனப் பொருள்படும் 'மந்தரானா' ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. இவ்வாறாக, ஜந்தர் மந்தர் என்பது 'கணிப்புக் கருவி' எனப் பொருள்படுகிறது.[3]
நோக்கம்
இசுலாமிய வானியல் நூலான 'சிஜ்' அட்டவணையில் தரப்பட்டிருந்த வான்பொருட்களின் இருப்பிடத் தரவுகள் கண்டறியப்பட்டத் தரவுகளோடு பொருந்தவில்லை என்பதை இரண்டாம் ஜெய்சிங் கண்டுபிடித்தார். ஐந்து வெவ்வேறு நகரங்களிலிருந்து வான் பொருட்களை ஆய்வு செய்து அவற்றின் அமைவுத் தரவுகளைக் கொண்டு சிஜ்ஜின் தரவுகளை மேலும் துல்லியமாக்கினார். அவர் உருவாக்கிய 'சிஜ்-ஐ முகமது ஷாகி' என்றழைக்கப்பட்ட அட்டவணை இந்தியாவில் ஒரு நூற்றாண்டாகப் பயன்படுத்தப்பட்டது (எனினும் இந்தியாவிற்கு வெளியே இவ்வட்டவணை முக்கியத்துவம் பெறவில்லை). மேலும் இந்த அட்டவணை நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுத்தப்பட்டது.[5]
விரித்துரைப்பு
சாம்ராட் இயந்திரம் (ராட்சச சூரியக்கடிகாரம்)
நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, கதிரவனைச் சுற்றும் புவியின் பாதையில் விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது, கோள்களின் சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிற்காக மாபெரும் 19 வடிவவியற் கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் நிலத்தில் பதிக்கப்பட்ட மற்றும் 'குவிமையப்படுத்தும் கருவி'யாகும். மிகப்பெரும் கருவியான சாம்ராட் இயந்திரம் 90 அடிகள் (27 m) உயரம் கொண்டு, அதன் நிழல் ஒரு நாளின் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவிக்கும் முறையில் அமைந்துள்ளது. அதன் முகப்புறம் ஜெய்ப்பூர் நகரின் அட்சக்கோடான 27 அலகுக் கோணமாக அமைந்துள்ளது. அதன் உச்சியில் உள்ள இந்து சத்திரி (சிறிய விதானம்) கிரகணங்கள் மற்றும் பருவகாலங்களை அறிவிக்கப் பயன்படுகிறது. உள்ளூர்ப் பகுதியில் கிடைக்கும் கல் மற்றும் பளிங்கைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கருவியும், பொதுவாகப் பளிங்கின் உட்புறம் குறித்துள்ள, வான் ஆய்வு வரையறை அளவைக் கொண்டுள்ளது. மிகத் துல்லியமாக அமைந்த வெண்கல வில்லைகளும் பயன்படுத்தப்பட்டன. 1901ஆம் ஆண்டு முழுவதுமாக மறு சீரமைக்கப்பட்ட ஜந்தர் மந்தர் 1948ஆம் ஆண்டு ஒரு தேசியச் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஜெய் சிங்கின் ஜந்தர் மந்தரின் ஊடாகச் செல்லும் ஒரு சுற்றுலா, திண்மையான வடிவவியற் கருவிகளின் ஊடாக நடந்து சென்று, வானுலகை ஆய்வதற்கான வடிவமைக்கப்பட்ட ஒரு வான் ஆய்வுத் தொகுப்பை அறியும் தனித்துவமான ஒரு அனுபவமாகும்.
இரண்டு ராட்சச சூரியக்கடிகாரங்களில் சிறியதன் காட்சி.
இந்தக் கருவிகள் பெரும்பாலும் மிகப் பெரும் கட்டமைப்புகளாக உள்ளன.
கருவிகள்
இயந்திர ராஜ் இயந்திரம்உன்னதம்ச இயந்திரம்
இந்த ஆய்வகத்தில் அமைந்துள்ள கருவிகள்:
சக்கர இயந்திரம்: சக்கர இயந்திரத்தில் நான்கு அரைவட்ட விற்களின் மீதமைந்த நிழற்கடிகாரக் குச்சியின் நிழல் ஒரு நாளின் நான்கு வெவ்வேறு பகுதிகளின் நேரத்தைக் காட்டும் வகையில் சூரியனின் சாய்வைக் காட்டுகிறது. இத்தரவுகள் உலகில் நான்கு வெவ்வேறு இடங்களின் நண்பகல் பொழுதிற்கு ஒத்துள்ளன (ஐக்கிய இராச்சியத்தின் கிரீன்விச், சுவிட்சர்லாந்தின் சூரிட்ச், ஜப்பானின் நோட்கி, பசிபிக்கின் செய்ச்சென்). இது உலகின் வெவ்வேறிடங்களில் உள்ளூர் நேரங்களைக் காட்டும் சுவர்க் கடிகராங்களைப் போன்றது.[6]
தட்சிண பிட்டி இயந்திரம்: வான் பொருட்களின் நெடுவரை வான் உச்சி தூரம், ஏற்றக்கோணம் ஆகியவற்றை அளவிடுகிறது[6]
திகம்ச இயந்திரம்: இரு பொதுமைய வெளிவட்டங்களின் நடுவில் அமைக்கப்பட்டத் தூண் சூரியனின் திசைக்கோணத்தை அளக்கவும் சூரிய உதயத்தையும் மறைவையும் கணக்கிடவும் செய்கிறது.[7]
திசை இயந்திரம்: திசையைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.
துருவ தர்சக் பதிகை: பிற வான்பொருட்களிலிருந்து துருவ விண்மீனின் இருப்பிடத்தை ஆய்வு செய்கிறது[7]
ஜெய் பிரகாஷ் இயந்திரம்: இரண்டு அரைக்கோளக் கிண்ண அடிகொண்ட சூரியக்கடிகாரங்களைக் கொண்டுள்ளது. இந்த சூரியக் கடிகாரங்களில் அளவுகள் குறிக்கப்பட்ட பளிங்குப்பட்டைகள் உள்ளன. ஆய்வாளர்கள் இக்கருவியின் உட்புறம் சென்று ஏற்றக்கோணங்கள் திசைக்க்கோணங்கள் மணிக் கோணங்கள், இறங்கு கோணங்கள் ஆகியவற்றைக் கணக்கிடலாம்.[2][6]
கபாலி இயந்திரம்: வான்பொருட்களின் ஆயதொலைகளை திசைக்கோண மற்றும் நடுவரை முறைமையில் கணக்கிட உதவுகிறது.[8]
2006ஆம் ஆண்டு இங்கு எடுத்த தி ஃபால் என்னும் திரைப்படத்தில் இது சிக்கல் மிகுந்த சுற்று வழியாக சித்தரிக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டின் வட்ட இல்ல நேரடி (Live at the Roundhouse 2008) என்னும் சுஃபாங்கிள் (Shpongle) ஒளிப்பேழையின் அட்டைக்காக ஸ்டார்ம் தோர்ஜெர்சன் சூரியக் கடியாரத்தைப் படமெடுத்தார்.[11]
↑Nath., Sharma, Virendra (2016). Sawai Jai Singh and his astronomy. Jai Singh II, Maharaja of Jaipur, 1686-1743. (2nd ed.). Delhi: Motilal Banarsidass Publishers. ISBN978-81-208-1256-7. கணினி நூலகம்32699670.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
↑ 6.06.16.2David Kelly (2011). Exploring Ancient Skies: A Survey of Ancient and Cultural Astronomy. Springer. p. 82. ISBN978-1441976239.