இரத்தன் நவால் டாட்டா (Ratan Naval Tata; 28 திசம்பர் 1937 – 9 அக்டோபர் 2024) ஓர் இந்தியத் தொழிலதிபரும் டாட்டா சன்சின் முன்னாள் தலைவருமாவார். இவர் 1990 முதல் 2012 வரை டாட்டா குழுமத்தின் தலைவராகவும் இருந்தார். அக்டோபர் 2016 முதல் பெப்பிரவரி 2017 வரை அதன் இடைக்காலத் தலைவராகவும் பணியாற்றினார். அதன் அறக்கட்டளைக்கு இவர் தொடர்ந்து தலைமை தாங்குகினார்.[2][3] 2000 ஆம் ஆண்டில் இந்தியக் குடிமகனுக்கான மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசண் பெற்ற பின்னர் 2008 ஆம் ஆண்டில், இரண்டாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூசண் பெற்றார்.[4]
டாட்டா குழுமத்தின் நிறுவனர் ஜம்சேத்ஜீ டாட்டாவின் மகன் இரத்தன்ஜி டாட்டாவால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாட்டாவின் மகனான இவர் கார்னெல் பல்கலைக்கழகக் கல்லூரியில் கட்டமைப்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும் ஆர்வார்டு வணிகப் பள்ளியில் வணிக மேலாண்மை பெற்றார். 1961 இல் டாட்டா குழுமத்தில் சேர்ந்து டாட்டா ஸ்டீல் தளத்தில் பணிபுரிந்தார். ஜெ. ர. தா. டாட்டா 1991 இல் ஓய்வு பெற்றவுடன் டாட்டாவின் இதர நிறுவனங்களான டாட்டா மோட்டார்ஸ் டாட்டா பவர், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா தேனீர், டாட்டா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாட்டா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாட்டா நிறுவனங்களுக்கும் தலைவரானார். இவரது பதவிக்காலத்தில் டாட்டா குழுமம் டெட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் நிறுவனங்களை கையகப்படுத்தியது. இது இந்தியாவை மையமாகக் கொண்ட டாட்டாவை உலகளாவிய வணிகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. டாட்டா தனது வருமானத்தில் சுமார் 60-65% தொண்டுக்கு நன்கொடையாக அளித்து, உலகின் மிகப்பெரிய பரோபகாரர்களில் ஒருவராக இருக்கிறார்.
1937இல் பிரித்தானிய இந்தியாவின் பம்பாயில் (தற்போது மும்பை) டாட்டா குடும்பத்தில்ஜம்சேத்ஜீ டாட்டாவின் மகன் இரத்தன்ஜி டாட்டாவால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாட்டாவின் மகனாகப் பிறந்தார்.[5][6] இவரது குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ஆம் ஆண்டுகளின் இடையே இவரது பெற்றோர்கள் பிரிந்த போது இவருக்கு ஏழு வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதாகவும் இருந்தது.[7] இவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் வளர்த்தார்.[8]
தொழில் வாழ்க்கை
ரத்தன் டாட்டா, 1962 ஆம் ஆண்டில் கோர்னெல் பல்கலைக்கழகத்தில்கட்டமைப்புப் பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், 1975 ஆம் ஆண்டில் ஆர்வர்டு வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார்.[9]. ஜே. ஆர். டி. டாட்டா வின் அறிவுரையின்படி, ஐபிஎம் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறி விட்டு இவர் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாட்டா குழுமத்தில் சேர்ந்தார். இவர் முதலில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்ற ஜாம்ஷெட்பூருக்கு சென்று பிற உடலுழைப்புப் பணியாளர்களுடன் (blue-collar employees) சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளைக்[10] கையாளும் பணிகளைச் செய்தார்.
8ஆம் வகுப்பு வரை மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியில் படித்தார். அதன் பிறகு, இவர் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி, சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளி மற்றும் நியூயார்க் நகரத்தில் உள்ள ரிவர்டேல் கண்ட்ரி பள்ளியில் பயின்ற இவர் 1955-இல் பட்டம் பெற்றார்.உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, டாட்டா கார்னெல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1959-இல் கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1975 ஆம் ஆண்டில், ஆர்வார்டு வணிகப்பள்ளியில் ஏழு வார மேம்பட்ட மேலாண்மை திட்டத்தில் கலந்து கொண்டார்.[11][12]
டாட்டா நானோ கார், 2008
ஒரு இலட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு டாட்டா நானோ எனும் தானுந்தை மக்களுக்காக தயாரித்து விற்பனை செய்தார்.
தொண்டு நடவடிக்கைகள்
டாட்டா கல்வி, மருத்துவம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது. மேலும் இந்தியாவின் முன்னணி தொண்டு நிறுவனமாகவும் கருதப்படுகிறது.[13][14][15] இந்தியாவில் இருந்து கார்னெல் பல்கலைக்கழகத்திற்கு படிக்கப் போகும் இளங்கலை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் பொருட்டு டாட்டா குழுமத்தின் துணை நிறுவனமான கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை $28 ஐ வழங்கியது.
சொந்த வாழ்க்கை
ரத்தன் டாட்டா திருமணமே செய்துகொள்ளவில்லை. “நான் நான்கு முறை திருமணம் செய்து கொள்ள நெருங்கி வந்தேன், ஒவ்வொரு முறையும் பயத்தில் அல்லது ஒரு காரணத்திற்காக பின்வாங்கினேன்.” என 2011 ஆம் ஆண்டில், ரத்தன் டாடா கூறினார்.[16]
இறப்பு
ஆபத்தான நிலையில் இருந்த டாட்டா மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி டாட்டா தனது வயது மற்றும் அது தொடர்பான மருத்துவ நிலைமைகள் காரணமாக வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியிருந்தார்.[17]
ஆனாலும், டாட்டா 9 அக்டோபர் 2024 அன்று மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தனது 86 வயதில் இறந்தார்.[18][19]
விருதுகளும் அங்கீகாரங்களும்
இந்தியாவில் பல்வேறு அமைப்புகளில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றும் ரத்தன் டாட்டா, வணிகம் மற்றும் தொழில்கள் குறித்த பிரதம மந்திரியின் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்குப்பின், ரத்தன் டாட்டாவை இந்தியாவின் மிகவும் நன்மதிப்பு பெற்ற வணிகத் தலைவர் என்று குறிப்பிட்டு, இவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று போர்ப்ஸ் இதழ் கருத்து வெளியிட்டது.[20]
26 ஜனவரி 2000 அன்று, 50 ஆவது இந்தியக் குடியரசு தினத்தையொட்டி, படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம பூசண் விருதினை ரத்தன் டாட்டாவுக்கு வழங்கினார்கள்.
2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாட்டாவுக்கு வழங்கப்பட்டது.[21]
2006 ஆம் ஆண்டில், பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான விதினை இவருக்கு வழங்கினார்கள்.[22]
மார்ச் 2006 ஆம் ஆண்டில், பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி, கார்னெல் பல்கலைக்கழகம் டாட்டாவை கௌரவித்தது. வணிகத் துறையில் சிறப்பு வாய்ந்த தனியருக்கு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இவ்விருது மிகப்பெரும் பெருமையாகக் கருதப்படுகிறது.[23]
2008 ஆம் ஆண்டிற்கான NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவ்விருது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று மும்பையில் வழங்கினார்கள். 2007 ஆம் ஆண்டு வழங்கிய, நற்பணிகளுக்கான கார்னெகி பதக்கத்தை, டாட்டா குடும்பத்தின் சார்பாக, ரத்தன் டாட்டா ஏற்றுக்கொண்டார்.[24][25]
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்ச்சூன் இதழ் வெளியிட்ட மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார்.
2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், டைம் இதழ் வெளியிட்ட, உலகின் மிக செல்வாக்குடைய நூறு பேர் அடங்கிய பட்டியலில் டாட்டா இடம் பிடித்தார். டாட்டா, ஒரு இலட்ச ரூபாய் காரான நானோவை தயாரித்து வெளியிட்டதற்குப் பெரிதும் புகழப் பெற்றார்.[26]
படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூசண் விருது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இவருக்கு வழங்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கௌரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாட்டாவுக்கு வழங்கியது. தீவு நாடான அதனுடன் தொடர்ந்த வணிக உறவையும், சிங்கப்பூரில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு இவரது பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இதை வழங்கினார்கள். இந்தப் பெருமையைப் பெறும் முதல் இந்தியர் ரத்தன் டாட்டா ஆவார்.[27]
2009 ஆம் ஆண்டில் இவர் மதிப்பார்ந்த பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[28]
ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் வழங்கிய வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டம்; பாங்காக்கில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் வழங்கிய தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டம்; வாரிக் பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம்; மற்றும் இலண்டன் பொருளியல் பள்ளி வழங்கிய கௌரவ பெல்லோஷிப் ஆகியவை இவர் பெற்ற பிற விருதுகளாகும்.