கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்
கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் (Brihadisvara Temple, Gangaikonda Cholapuram) இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.[1] கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான். இக்கோவில், ஐராவதேஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.[1] இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[2] கட்டமைப்பு![]() 560 அடி (170 m) நீளமும் 320 அடி (98 m) அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நடுக் கருவறையில் இக்கோயிலின் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் (சிவன்) லிங்க வடிவில் உள்ளார். முற்றத்தின் முக்கியப்பகுதி கிழமேற்காக 104 m (341 அடி) by 30.5 m (100 அடி) அளவுகொண்டுள்ளது.[3] லிங்கத்தின் உயரம் 4 m (13 அடி); அடிப்பகுதியின் சுற்றளவு 18 m (59 அடி).[4] 100 sq ft (9.3 m2) அளவுள்ள கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி (1.8 m) உயரமுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையின் மீதுள்ள விமானத்தின் உயரம் 55 m (180 அடி); இவ்விமானம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் விமானத்தைவிட 3 m (9.8 அடி) உயரம் குறைவானது. பெருவுடையார் கோயில் விமானத்தின் அடுக்குகள் நேரானவையாகும் இக்கோயில் விமான அடுக்குகள் வளைவாகவும் உள்ளன.[3] மற்றெந்த சிவன் கோயில்களிலும் உள்ள இலிங்கங்களைவிட, 4 m (13 அடி) அடி உயரமுள்ள இக்கோயில் இலிங்கம் மிக உயரமானதாகும்.[5] ![]() ![]() கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கியவாறு நந்தி (200 m (660 அடி)) அமைக்கப்பட்டுள்ளது.[6] கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி (2.9 m) ஆகும். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன. அண்மையில் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது. கொடி மரம் அமைக்கப்பட்ட பின்னர் பிரம்மோற்சவம் நிகழ்த்தப்பட்டது. [7] சிற்பங்கள்இராசராசசோழற்குக் கண்ணி சூட்டும் சிவன் நடராசர் முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர் போன்ற சிவனின் திருவுருவங்கள், மேலும் பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் ஒரு அடியாருக்கு மாலை சூட்டுவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. சிலர் அந்த அடியார் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டீச்வரர் என்றும், வேறுசிலர் அவ்வுருவம் கோயிலைக் கட்டிய முதலாம் இராசேந்திரன் என்றும் கருதுகின்றனர். சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11 ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும்.[8] ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம் இக்கோயிலில் அமைந்துள்ளது.[4] வரலாறுதஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனால் (பொ.ஊ. 1014-44) பொ.ஊ. 1035 இல் இக்கோயில் கட்டப்பட்டது.[6] முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த ஆறாம் ஆண்டில் (பொ.ஊ. 1020) கட்டப்பட்டதாக சில வரலாற்றாய்வாளர்கள் கருதினாலும், கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான பொ.ஊ. 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.[9] கல்வெட்டுகளிலிருந்தும் 1980களின் அகழ்வாய்வுகளின்படியும் கோட்டைச் சுவர்கள், அரண்மனைகள், நடுவிலமைந்த கோயில் என கங்கைகொண்ட சோழபுரம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாக இருந்தது தெரியவருகிறது. தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குரிய நன்கொடைகளையெல்லாம் இராசேந்திரன் இக்கோயிலுக்குத் திருப்பிவிட்டானென்றும், பெருவுடையார் கோயிலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களையும் சிற்பிகளையும் தஞ்சாவூரிலிருந்து இங்கு வரவழைத்து இக்கோயிலைக் கட்டச் செய்தான் என்றும் கருதப்படுகிறது.[6] முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்குவந்த முதலாம் குலோத்துங்க சோழன் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டினான். 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்களது முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கும் நோக்கில் பாண்டியர்கள் சோழர்களை முறியடித்து இந்நகரை அழித்தனர். கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தவிர இந்நகரின் அரண்மனைகள் உள்ளிட்டப் பிறயாவும் அழிக்கப்பட்டன.[10] கலாச்சாரம்மூவர் உலா, தக்கயாகப் பரணி போன்ற நூல்களின் பல சமகால இலக்கியங்களில் கங்கைகொண்ட சோழபுர நகரம் மற்றும் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவரான கம்பர் இயற்றிய கம்ப இராமாயணத்தில் அவரது அயோத்தி நகர வருணனைகளுக்கு கங்கைகொண்ட சோழபுர நகரமைப்புதான் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டுமென சில அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நூலிலும் இத்தகைய ஒற்றுமையைக் காணமுடிகிறது. சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணலாம்.[10] தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலைப் போன்று இக்கோயிலும் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ளது. இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் இக்கோயிலில் ஆதரிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டன.[11] தஞ்சைப் பெருவுடையார் கோயிலும் இக்கோயிலும் திராவிடக் கட்டிடக்கலையின் உச்சநிலையின் வெளிப்பாடாக விளங்குவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.[3] இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால் ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ள தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களுள் கங்கைகொண்ட சோழபுர பிரகதீசுவரர் கோயிலும் ஒன்றாகும்.[12] அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[1] இக்கோயில் அழியாத சோழர் பெருங்கோயில்கள் பட்டியலில் 2004 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையின் ஆதரவுடன், தொல்லியல்துறை 2009 ஆம் ஆண்டில் இங்கு அருங்காட்சியகம், சிற்றுண்டி விடுதிகள், கடைகள் மற்றும் கழிவறைகளை அமைத்துள்ளது.[13] கலாச்சாரத்திலும் இறை வழிபாட்டிலும் இம்மூன்று கோயில்களும் இன்றளவும் உயிர்ப்புடன் விளங்குவதால் இவை "சோழர்களின் அழியாப் பெருங்கோயில்கள் என்ற வகைப்பாட்டில் இடம்பெற்றுள்ளன.[14] முதாலம் இராசேந்திர சோழனின் முடிசூட்டுவிழாவின் ஆயிரமாவது நினைவாண்டுத் திருவிழா ஜூலை, 2014 இல் இருநாட்கள் கொண்டாடப்பட்டது.[15] திருவிழாக்களும், வழிபாடும்தொல்லியல்துறையால் பராமரிக்கப்பட்டு வந்தாலும் தமிழ்நாட்டிலுள்ள பிற சிவன்கோயில்களில் நடைபெறுவது போன்று இக்கோயிலிலும் நாள்தோறும் நான்குமுறை சைவமுறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன (காலசந்தி : காலை 8:30, உச்சிகாலம்: மதியம் 12:30, சாயரட்சை: மாலை 6:00, அர்த்தசாமம்: இரவு 7:30 - 8:00). ஒவ்வொரு வழிபாட்டிலும் அலங்லாரம், நெய்வேதனம், தீப ஆராதனை என மூன்று நிலைகள் உள்ளன. வார, பதினைந்து நாட்கள், மாத இடைவெளிகளிலும் சில குறிப்பிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆண்டின் அனைத்து நாட்களிலும் கோயில் நாள்தோறும் காலை 6 12:30; மாலை 4-9:00 வரை திறந்திருக்கும். மாசி மாதத்தில் மகா சிவராத்திரி, ஐப்பசியில் பௌர்ணமி, மார்கழியில் திருவாதிரை நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது.[16] ஐப்பசித் திருவிழாவில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.[4] உலகப் பாரம்பரிய சின்னம்
1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.[1] பொ.ஊ. 10–12 ஆம் நூற்றாண்டுகளில், வெவ்வேறு மூன்று சோழ அரசர்களால் கட்டப்பட்ட இம்மூன்று கோயில்களும் அதிகளவிலான ஒற்றுமையமைவுகளைக் கொண்டுள்ளன.[17][18] ஆதாரங்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia