சிந்துவெளி நாகரிகம்
![]() ![]() சிந்துவெளி நாகரிகம்[1] (Indus Valley Civilisation) என்பது தெற்காசியாவின் வடமேற்கு பகுதிகளில் இருந்த ஒரு வெண்கலக் கால நாகரிகம் ஆகும். இது பொ. ஊ. மு. 3300 முதல் பொ. ஊ. மு. 1300 வரை நீடித்திருந்தது. இது அதன் முதிர்ச்சியடைந்த கட்டத்தை பொ. ஊ. மு. 2600 முதல் பொ. ஊ. மு. 1900 வரை கொண்டிருந்தது.[2][a] பண்டைய எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியாவுடன் அண்மைக் கிழக்கு மற்றும் தெற்காசியாவின் மூன்று தொடக்க கால நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மூன்றில் இதுவே பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்தது. இந்நாகரிகத்தின் களங்கள் பெரும்பாலான பாக்கித்தான் முதல் வடகிழக்கு ஆப்கானித்தான் மற்றும் வடமேற்கு இந்தியா வரை பரவியிருந்தன.[3][b] இந்நாகரிகம் சிந்து ஆற்றின் வண்டல் சமவெளியின் நெடுகில் அமைந்திருந்தது. சிந்து ஆறானது பாக்கித்தானின் நீளம் வழியாக ஓடுகிறது.[2][4] அரப்பா நாகரிகம் என்ற சொல்லானது சில நேரங்களில் சிந்து நாகரிகத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்திலேயே முதன் முதலில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மாதிரி களமான அரப்பாவிலிருந்து இது இப்பெயரை பெறுகிறது. இப்பகுதி அந்நேரத்தில் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தது. இது தற்போது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ளது.[5][c] அரப்பாவை கண்டறிந்தது மற்றும் சீக்கிரமே அதைத் தொடர்ந்து மொகெஞ்சதாரோவைக் கண்டறிந்தது ஆகியவை 1861ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இந்தியப் பேரரசில் இந்தியத் தொல்லியல் ஆய்வகமானது நிறுவப்பட்டதற்கு பிறகு தொடங்கப்பட்ட வேலைப்பாடுகளின் முடிவாகும்.[6] தொடக்க கால அரப்பா மற்றும் பிந்தைய அரப்பா என்ற பெயருடைய தொடக்க கால மற்றும் பிந்தைய பண்பாடுகள் இதே பகுதியில் இருந்தன. தொடக்க கால அரப்பா பண்பாடுகள் புதிய கற்கால பண்பாடுகளிலிருந்து மக்கள் தொகையை பெற்றன. இதில் தொடக்க காலத்தைச் சேர்ந்தது மற்றும் நன்றாக அறியப்பட்டதுமாக பாக்கித்தானின் பலுச்சிசுத்தானத்தில் உள்ள மெகர்கர் உள்ளது.[7][8] தொடக்க கால பண்பாடுகளில் இருந்து பிரித்து அறிவதற்காக அரப்பா நாகரிகமானது சில நேரங்களில் முதிர்ந்த அரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. பண்டைய சிந்து நகரங்கள் அவற்றின் நகரத் திட்டமிடல், செங்கல் வீடுகள், நுட்பமான கழிவு நீர் வெளியேற்றும் அமைப்புகள், நீர் வழங்கும் அமைப்புகள், குடியிருப்பு சாராத கட்டடங்களின் பெரிய திரள்கள் மற்றும், கைவினை பொருட்கள் மற்றும் உலோகவியல் நுட்பங்கள் ஆகியவற்றுக்காக அறியப்படுகின்றன.[d] மொகெஞ்சதாரோ மற்றும் அரப்பா ஆகியவை 30,000 முதல் 60,000 பேரை கொண்டிருக்க கூடிய அளவுக்கு வளர்ந்திருந்தன என்று கருதப்படுகிறது.[10] இதன் உச்ச நிலையின் போது 10 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையிலான மக்களை இந்நாகரிகம் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[11] பொ. ஊ. மு. 3ஆம் ஆயிரம் ஆண்டுக் காலத்தின் போது இப்பகுதியானது படிப்படியாக வறண்டு போனதானது இதன் நகரமயமாக்கலுக்கான தொடக்க கால தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகவும், இந்நாகரிகத்தின் மக்கள் தொகையை கிழக்கிற்கு சிதற வைக்கவும் காரணமாகும் அளவுக்கு குடிநீர் வழங்குதலையும் இந்த வறண்ட நிலையானது இறுதியாக குறைத்தது.[e] 1,000க்கும் மேற்பட்ட முதிர்ந்த அரப்பா களங்கள் குறிப்பிடப்பட்டும், கிட்டத் தட்ட 100 களங்கள் அகழ்வாய்வு செய்யப்பட்டும் உள்ளன.[12][f][14][15] ஐந்து முதன்மையான நகர மையங்கள் இந்நாகரிகத்தைச் சேர்ந்தவையாக உள்ளன:[16][g] சிந்துவெளியின் கீழ் பகுதியில் உள்ள மொகெஞ்சதாரோ ("மொகெஞ்சதாரோவின் தொல்லியல் சிதிலங்கள்" என 1980ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களமாக இது அறிவிக்கப்பட்டது), மேற்கு பஞ்சாபின் அரப்பா, சோலிஸ்தான் பாலைவனத்தில் உள்ள கனேரிவாலா, மேற்கு குசராத்தில் உள்ள தோலாவிரா ("தோலாவிரா: ஓர் அரப்பா நகரம்" என 2021ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது) மற்றும் அரியானாவில் உள்ள இராக்கிகர்கி.[17][h] சிந்துவெளி மொழி என்பது நேரடியாக உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. சிந்துவெளி வரிவடிவம் தொடர்ந்து அறியப்படாமலேயே உள்ளதால்,[18] இம்மொழியுடன் தொடர்பானவை உறுதிப்படுத்தப்படாமல் உள்ளன. அறிஞர்களின் ஒரு பிரிவினரால் திராவிட அல்லது ஈல-திராவிட மொழி குடும்பத்துடனான அரப்பா மொழியின் தொடர்பானது முன் வைக்கப்படுகிறது.[19][20] பெயர்க் காரணம்சிந்துவெளி நாகரிகமானது சிந்து ஆற்று அமைப்பின் பெயரைப் பெற்றுள்ளது. சிந்து ஆற்றின் வண்டல் சமவெளிகளில் தான் நாகரிகத்தின் தொடக்க கால களங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளன.[21][i] தொல்லியலின் ஒரு பழக்கத்தைத் தொடர்ந்து, இந்த நாகரிகமானது சில நேரங்களில் அரப்பா நாகரிகம் என்று குறிப்பிடப்படுகிறது. 1920களில் முதன் முதலில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மாதிரி களமான அரப்பாவே இதற்குக் காரணமாகும். 1947இல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பயன்படுத்தப்படும் முறையாக இது உள்ளது.[22][j] விரிவு![]() சிந்துவெளி நாகரிகமானது தோராயமாக பண்டைய உலகின் பிற ஆற்றங்கரை நாகரிகங்களுடன் சம காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது: நைலின் பண்டைய எகிப்து, புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆற்றால் நீரைப் பெற்ற நிலங்களில் இருந்த மெசொப்பொத்தேமியா, மஞ்சள் ஆறு மற்றும் யாங்சி ஆற்றின் வடிநிலத்தில் இருந்த சீனா. இதன் முதிர்ந்த கட்டத்தின் போது இந்நாகரிகமானது பிற நாகரிகங்களை விட பெரிய நிலப்பரப்பில் பரவி இருந்தது. சிந்து ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளின் வண்டல் சமவெளியில் 1,500 கிலோ மீட்டர்களை உடைய ஒரு மையப்பகுதியும் இதில் அடங்கும். இதனுடன் பல்வேறுபட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் இயற்கையான வாழ்விடங்களுடன் கூடிய ஒரு பகுதியாக, மையப் பகுதியைப் போல் 10 மடங்கு வரை பெரிய அளவுடையதாக இது அமைந்திருந்தது. இதன் கலாச்சார மற்றும் பொருளாதார வடிவத்தை சிந்து ஆறானது தீர்மானித்தது.[23][k] பொ. ஊ. மு. 6,500ஆம் ஆண்டு வாக்கில் சிந்து ஆற்றின் வண்டல் சமவெளிகளின் விளிம்புகளில் பலுச்சிசுத்தானத்தில் விவசாயமானது தோன்றியது.[24][l][25][m] இதை தொடர்ந்து வந்த ஆயிரம் ஆண்டுகளில் சிந்து சமவெளிக்குள் நிலையான வாழ்க்கை முறையை கொண்ட மக்கள் வாழ ஆரம்பித்தனர். கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு இது சாதகமான அமைப்பை ஏற்படுத்தியது.[26][n] மிகுந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிலையான வாழ்க்கை முறையானது பிறப்பு விகிதத்தில் நிகர அதிகரிப்புக்கு வழி வகுத்தது.[24][o] மொகஞ்ச-தாரோ மற்றும் அரப்பாவின் பெரிய நகர்ப்புற மையங்களானவை 30,000 முதல் 60,000 பேரைக் கொண்டிருக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருந்தன. இந்நாகரிகத்தின் உச்ச நிலையின் போது துணைக் கண்டத்தின் மக்கள் தொகையானது 40 இலட்சம் முதல் 60 இலட்சம் பேரைக் கொண்டிருந்தது.[24][p] மனிதர்கள் மற்றும் கொல்லைப்படுத்தப்பட்ட விலங்குகள் நெருக்கமான வாழும் சூழ்நிலையானது தொற்று நோய்களின் அதிகரிப்புக்கு வழி வகுத்தது. இதன் காரணமாக இறப்பு விகிதமானது இக்காலத்தின் போது அதிகரித்தது.[25][q] ஒரு மதிப்பீட்டின் படி, சிந்துவெளி நாகரிகத்தின் மக்கள் தொகையானது அதன் உச்ச பட்ச நிலையின் போது 10 இலட்சம் முதல் 50 இலட்சம் பேரைக் கொண்டிருந்தது என்று குறிப்பிடப்படுகிறது.[27][r] இந்நாகரிகமானது மேற்கே பலுச்சிசுத்தானம் முதல் கிழக்கே உத்தரப் பிரதேசம் வரையிலும், வடக்கே வட கிழக்கு ஆப்கானித்தான் முதல் தெற்கே குசராத்து மாநிலம் வரையிலும் விரிவடைந்திருந்தது.[28] இந்நாகரிகத்தின் பெரும் எண்ணிக்கையிலான களங்களானவை பஞ்சாப் பகுதி, குசராத்து, அரியானா, இராசத்தான், உத்தரபிரதேசம், சம்மு காசுமீர் மாநிலம்,[28] சிந்து மாகாணம் மற்றும் பலுச்சிசுத்தானத்தில் உள்ளன.[28] கடற்கரை குடியிருப்புகளானவை மேற்கு பலுச்சிசுத்தானத்தின் சுத்கஜன் தோரில்[29] இருந்து குசராத்தின் லோத்தல்[30] வரை பரவியுள்ளன. ஒரு சிந்துவெளி களமானது ஆமூ தாரியாவின் சார்டுகாயிலும்,[31] வடமேற்கு பாக்கித்தானின் கோமல் ஆற்று சமவெளியிலும்,[32] சம்முவுக்கு அருகில் பியாசு ஆற்றின் கரையில் மண்டாவிலும்,[33] இந்தோன் ஆற்றின் கரையில் ஆலம்கீர்பூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆலம்கீர்பூரானது தில்லியிலிருந்து வெறும் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[34] சிந்துவெளி நாகரிகத்தின் தெற்குக் கோடி களமானது மகாராட்டிராவின் தைமாபாத்தில் உள்ளது. சிந்துவெளி களங்களானவை பெரும்பாலும் ஆற்றங்கரையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பண்டைக் கால கடற்கரையில்[35] உள்ள பாலகோத் (கோத் பாலா)[36] மற்றும் தீவுகளிலுள்ள தோலாவிரா ஆகிய களங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[37] கண்டுபிடிப்பும், அகழ்வாய்வின் வரலாறும்![]() ![]() ![]()
— யோவான் மார்ஷலிடமிருந்து, மொகஞ்சதாரோவும், சிந்து நாகரிகமும், இலண்டன்: ஆர்தர் புரோபுசுதைன், 1931.[38] சிந்து நாகரிகத்தின் சிதிலங்கள் குறித்த முதல் நவீன குறிப்புகளானவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவரான சார்லசு மேசன் என்பவருடையவை ஆகும்.[39] 1829இல் பஞ்சாப் இராச்சியத்தின் வழியாக மேசன் பயணித்தார். தனது தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு பதிலாக கிழக்கிந்திய நிறுவனத்திற்கு உபயோகரமான உளவியல் தகவல்களை சேகரிப்பதற்காக இவர் சென்றார்.[39] இந்த ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக இவரது பயணங்களின் போது கிடைக்கப் பெறும் எந்த ஒரு பண்டைய வரலாற்றுப் பொருளையும் நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் என்ற மேற்கொண்ட நிபந்தனையும் இருந்தது. பண்டைய நூல்களை அறிந்திருந்தவரான மேசன் பேரரசர் அலெக்சாந்தரின் இராணுவப் படையெடுப்புகளைக் குறிப்பாக நன்கு அறிந்திருந்தார். அலெக்சாந்தரின் போர்ப் பயணங்களில் தொடர்புடைய சில அதே பட்டணங்களை தன்னுடைய அலைதலுக்காகத் தேர்ந்தெடுத்தார். வரலாற்றாளர்களால் இப்பட்டணங்களின் தொல்லியல் களங்களானவை குறிப்பிடப்பட்டுள்ளன.[39] பஞ்சாபில் மேசனின் முதன்மையான தொல்லியல் கண்டுபிடிப்பாக அரப்பா திகழ்ந்தது. சிந்து ஆற்றின் கிளை ஆறான இராவி ஆற்றின் சமவெளியில் சிந்துவெளி நாகரிகத்தின் ஒரு நகரமாக அரப்பா அமைந்திருந்தது. அரப்பாவின் செழிப்பான வரலாற்று பொருட்கள் குறித்து ஏராளமான குறிப்புகளையும், விளக்கங்களையும் மேசன் உருவாக்கினார். இவற்றில் பெரும்பாலானவை பாதி அளவுக்கு மணலில் புதைந்து இருந்தவையாகும். 1842இல் பலுச்சிசுத்தானம், ஆப்கானித்தான் மற்றும் பஞ்சாபில் பல்வேறு பயணங்களின் குறிப்பு என்ற தலைப்புடைய நூலில் அரப்பா குறித்த தன்னுடைய பார்வைகளை இவர் குறிப்பிட்டிருந்தார். பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் ஒரு காலத்தை சேர்ந்தது என அரப்பா சிதிலங்களை இவர் காலமிட்டிருந்தார். அலெக்சாந்தரின் போர்ப் பயணங்களின் போது முன்னர் குறிப்பிடப்பட்டது என அரப்பாவை இவர் தவறுதலாக குறிப்பிட்டு இருந்தார்.[39] இக்களத்தின் பரந்த அளவு மற்றும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து ஏற்பட்ட அரிப்பால் உருவான ஏராளமான பெரிய மேடுகளால் இவர் பெரிதும் மதிப்புணர்வு கொண்டிருந்தார்.[39][s] இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தனது இராணுவத்திற்கு சாதகமான நீர் வழி பயணத்தை ஆய்வு செய்வதற்காக சிந்து ஆற்றின் நீரின் போக்கிற்கு எதிராக பயணம் மேற்கொள்ள அலெக்சாந்தர் பர்னசை கிழக்கிந்திய நிறுவனமானது ஒப்பந்தம் செய்தது.[39] அரப்பாவிலும் பயணத்தை நிறுத்திய பர்னசு இக்களத்தின் பண்டைக் கால கட்டுமானத்தில் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டதை குறிப்பிட்டார். உள்ளூர் மக்களால் இந்த செங்கற்கள் அளவுக்கு மீறீ எடுக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டார்.[39] இத்தகைய குறிப்புகள் இருந்த போதிலும், 1848-49இல் பஞ்சாபை பிரித்தானியர் இணைத்ததற்குப் பிறகு இதன் செங்கற்களுக்குக்காக அரப்பாவானது மேலும் அதிகப்படியான வகையிலே, இக்களத்திற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையிலே சேதப்படுத்தப்பட்டது. பஞ்சாப்பில் போடப்பட்ட இருப்புப்பாதைகளுக்கு சரளைக் கற்களுக்கு பதிலாக பயன்படுத்துவதற்காக ஏராளமான செங்கற்கள் எடுத்துச் செல்லப்பட்டன.[41] 1850களின் நடுவில் போடப்பட்ட முல்தான் மற்றும் லாகூருக்கு இடையிலான இருப்புப்பாதையில் கிட்டத்தட்ட 160 கிலோ மீட்டர் வழித்தடமானது அரப்பா செங்கற்களைக் கொண்டு போடப்பட்டதாகும்.[41] 1861இல் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியாவில் பிரித்தானிய அரச குடும்பத்தின் நேரடி ஆட்சி நிறுவப்பட்டதை தொடர்ந்து துணைக் கண்டத்தில் தொல்லியல் ஆய்வானது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் நிறுவுதலுடன் அலுவல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது.[42] ஆய்வகத்தின் முதல் பொது இயக்குனரான அலெக்சாந்தர் கன்னிங்காம் 1853ஆம் ஆண்டு அரப்பாவுக்கு வருகை புரிந்தார். இதன் உன்னதமான செங்கல் சுவர்களை பற்றி குறிப்பிட்டார். மீண்டும் ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்தார். ஆனால் இந்த முறை அவர் வருவதற்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் இக்களத்தின் ஒட்டு மொத்த மேல் பரப்பும் எடுக்கப்பட்டிருந்தது.[42][43] 7ஆம் நூற்றாண்டு சீன பயணி சுவான்சாங்கால் குறிப்பிடப்பட்ட தொலைந்து போன ஒரு பௌத்த நகரம் அரப்பா என விளக்குவது என்பதே இவரது முதன்மையான இலக்காக இருந்தது. ஆனால், அது எளிதானதாக இல்லை.[43] எனினும், கன்னிங்கம் 1875ஆம் ஆண்டு தன்னுடைய ஆய்வுகளைப் பதிப்பித்தார்.[44] முதல் முறையாக ஓர் அரப்பா முத்திரைக்கு இவர் விளக்கத்தை கொடுத்தார். இதில் உள்ள எழுத்துக்கள் அறியப்படாமலேயே இருந்தன. இவை அயல்நாட்டில் தோன்றிய எழுத்துகள் என்று இவர் முடிவு செய்தார்.[44][45] அரப்பாவில் தொல்லியல் வேலைகளானவை தேக்கம் கொண்டன. இந்தியாவின் புது வைசிராயான கர்சன் பிரபு 1904ஆம் ஆண்டில் பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்துக்கு தலைமை தாங்க யோவான் மார்ஷலை நியமித்தது ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டும் வேலைகள் வேகமெடுத்தன.[46] பல ஆண்டுகள் கழித்து அரப்பாவை ஆய்வு செய்ய மார்ஷலால் நியமிக்கப்பட்ட இரானந்த் சாஸ்திரி இக்களத்தை பௌத்தம் சாராதது என்றும், மிகவும் பண்டைய காலத்தைச் சேர்ந்தது என்றும் குறிப்பிட்டார்.[46] இச்சட்டத்தின் கீழ் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்காக அரப்பாவை தேசிய மயமாக்கிய பிறகு, இக்களத்தின் இரண்டு மேடுகளை அகழ்வாய்வு செய்ய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியலாளர் தயாராம் சகானியை மார்ஷல் பணித்தார்.[46] மேலும் தெற்கே, சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றின் கடைசி பெரிய கணவாயை ஒட்டி பெரும்பாலும் தொடப்படாத மொகெஞ்சதாரோ களமானது கவனத்தை ஈர்த்தது.[46] களத்தை ஆய்வு செய்ய பந்தர்கர் (1911), ரக்கல்தாஸ் பானர்ஜி (1919, 1922–1923), மற்றும் மாதோ சரூப் வாட்ஸ் (1924) உள்ளிட்ட ஒரு தொடர்ச்சியான இந்தியத் தொல்லியல் ஆய்வக அதிகாரிகளை மார்ஷல் அனுப்பினார்.[47] 1923இல் மொகஞ்சதாரோவுக்கான தன்னுடைய இரண்டாவது பயணத்தின் போது பானர்ஜி இக்களத்தைக் குறித்து மார்ஷலுக்கு எழுதினார். இதன் பூர்வீகம் மிகப் பண்டைய காலத்தை சேர்ந்தது எனப் பரிந்துரைத்தார். இதன் பண்டைய பொருட்களில் ஒரு சில அரப்பாவுடன் ஒத்தவை எனக் குறிப்பிட்டார்.[48] பின்னர் 1923இல் மார்ஷலுடனான தனது தகவல் பரிமாற்றத்தில் வாட்சும் இரு களங்களிலும் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் மற்றும் எழுத்து வடிவங்கள் குறித்து மிக குறிப்பாக குறிப்பிட்டார்.[48] இந்த பார்வைகளை அடிப்படையாகக் கொண்டு இரு களங்களிடமிருந்தும் முக்கியமான தகவல்களை ஒரு இடத்திற்கு கொண்டு வர மார்ஷல் ஆணையிட்டார். இந்த விவாதத்தில் கலந்து கொள்ள பானர்ஜி மற்றும் சாகினியையும் அழைத்தார்.[49] 1924 வாக்கில் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தில் மார்ஷல் உறூதி கொண்டார். 24 செப்தம்பர் 1924 அன்று இல்லசுதிரேட்டட் லண்டன் நியூஸ் என்ற பத்திரிகையில் தோராயமான ஓர் அறிவிப்பைச் செய்தார்:[21]
ஒரு வாரம் கழித்து பத்திரிகையின் அடுத்த பிரதியில் பிரிட்டனின் அசிரிய ஆய்வாளரான ஆர்ச்சிபால்டு சய்சு மெசொப்பொத்தேமியா மற்றும் ஈரானில் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த மிக ஒத்த முத்திரைகளை இதனுடன் தொடர்புபடுத்தினார். அரப்பாவின் காலம் குறித்து மிக வலிமையான பரிந்துரைகளை இவை கொடுத்தன. பிற தொல்லியலாளர்களின் ஒப்புக் கொள்ளுதல்களும் இதைத் தொடர்ந்து நடைபெற்றன.[50] கே. என். தீட்சித் போன்றோரின் அமைப்பு ரீதியிலான அகழ்வாய்வுகள் மொகஞ்சதாரோவில் 1924-1925இல் தொடங்கின. எச். அர்கிரீவ்சு மற்றும் எர்னஸ்டு ஜே. எச். மெக்கே போன்றோரின் அகழ்வாய்வுகள் தொடர்ந்தன.[47] 1931 வாக்கில் பெரும்பாலான மொகஞ்சதாரோவானது அகழ்வாய்வு செய்யப்பட்டது. ஆனால், இடையிடை நிகழ்வுகளான அகழ்வாய்வுகள் தொடர்ந்தன. இதில் 1944ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் புதிய பொது இயக்குநராக நியமிக்கப்பட்ட மோர்டிமர் வீலரின் தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வுகளும், அகமது அசன் தானியின் அகழ்வாய்வுகளும் அடங்கும்.[51] 1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சிந்துவெளி நாகரிகத்தின் பெரும்பாலான அகழ்வாய்வு செய்யப்பட்ட களங்கள் பாக்கித்தானுக்கு எனப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பில் இருந்தன.[52][t] தொல்லியலாளர் இரத்நகரின் கூற்றுப் படி, பாக்கித்தானின் சிந்துவெளி களங்கள் ஆகியவை உண்மையில் உள்ளூர் பண்பாட்டை சேர்ந்தவையாகும். சில களங்கள் அரப்பா நாகரிகத்துடன் தொடர்பு கொண்டிருந்ததைக் காட்டின. ஆனால், வெகு சிலவே முழுமையாக வளர்ச்சியடைந்த அரப்பா களங்களாக இருந்தன. [53]1977 நிலவரப் படி, கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளி வரிவடிவ முத்திரைகள் மற்றும் பொறிக்கப்பட்ட பொருட்களில் சுமார் 90% பொருட்கள் சிந்து ஆற்றின் நெடுகில் பாக்கித்தானில் உள்ள களங்களில் கண்டெடுக்கப்பட்டவையாக உள்ளன. அதே நேரத்தில், பிற களங்கள் வெறும் 10% பொருட்களையே கொண்டிருந்தன.[u][54][55] 2002 வாக்கில் 1,000க்கும் மேற்பட்ட முதிர்ந்த அரப்பா நகரங்கள் மற்றும் குடியிருப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் 100க்கும் குறைவானவையே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளன.[13][14][15][56] இவை பெரும்பாலும் சிந்து ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் உள்ள பொதுவான பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்டவையாகும். எனினும், வெறும் ஐந்து முதன்மையான அரப்பா நகர் களங்களே உள்ளன: அரப்பா, மொகெஞ்சதாரோ, தோலாவிரா, கனேரிவாலா மற்றும் இராக்கிகர்கி.[56] 2008 நிலவரப் படி, சுமார் 616 களங்கள் இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.[28] அதே நேரத்தில், பாக்கித்தானில் 406 களங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[28] 1947க்கு பிறகு, இந்தியத் தொல்லியல் ஆய்வகமானது புதிய நாட்டின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சி ஆகிய இலக்குகளை ஒத்தவாறு தொல்லியல் வேலைகளை இந்திய மயமாக்கும் முயற்சித்தது. மாறாக, பாக்கித்தானில் தேசிய முக்கியத்துவமாக இசுலாமிய பாரம்பரியத்தை ஊக்குவிப்பது திகழ்ந்தது. இறுதியாக, முந்தைய களங்களின் தொல்லியல் வேலையானது அயல்நாட்டுத் தொழிலாளர்களிடம் விடப்பட்டது.[57] பிரிவினைக்குப் பிறகு, 1944 முதல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்த மோர்திமர் வீலர் பாக்கித்தானில் தொல்லியல் நிறுவனங்கள் நிறுவப்படுவதை மேற்பார்வையிட்டார். மொகஞ்சதாரோ களத்தைப் பாதுகாக்க பணிக்கப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் முயற்சியில் பின்னர் இணைந்தார்.[58] செருமானிய ஆச்சன் ரிசர்ச் புராஜெக்ட் மொகஞ்சதாரோ, இத்தாலிய மிசன் டு மொகஞ்சதாரோ, ஜார்ஜ் எப். தேல்சால் நிறுவப்பட்ட ஐக்கிய அமெரிக்க அரப்பா ஆர்ச்சியலாஜிக்கல் ரிசர்ச் புராஜெக்ட் உள்ளிட்டவை மொகஞ்சதாரோ மற்றும் அரப்பாவில் ஏற்படுத்தப்பட்ட பிற பன்னாட்டு முயற்சிகள் ஆகும்.[59] பலுச்சிசுத்தானத்தில் போலன் கணவாயின் அடிவாரத்தில் தொல்லியல் களத்தின் ஒரு பகுதியானது திடீர் வெள்ளத்தால் வெளிப்பட்டதைத் தொடர்ந்து, 1970களின் தொடக்கத்தில் பிரெஞ்சு தொல்லியலாளர் ஜீன்-பிராங்கோயிசு சர்ரிச் மற்றும் அவரது குழுவானது மெகர்கரில் அகழ்வாய்வுகளை நடத்தியது.[60] காலப் பகுப்பு
பண்டைய சிந்துவெளி நகரங்கள் "சமூக படிநிலை அமைப்புகள், அவற்றின் எழுத்து முறை அமைப்பு, அவற்றின் பெரிய திட்டமிடப்பட்ட நகரங்கள் மற்றும் அவற்றின் நீண்ட தூர வணிகம் ஆகியவற்றை ஒரு முழுமையான நாகரிகம் எனத் தொல்லியலாளர்களுக்குக் குறிக்கும் வகையில் கொண்டிருந்தன."[61] அரப்பா நாகரிகத்தின் முதிர்ந்த கட்டமானது அண். 2600 முதல் 1900 பொ. ஊ. மு. வரை நீடித்திருந்தது. முதிர்ந்த கட்டத்தின் முந்தைய மற்றும் பிந்தைய பண்பாடுகளான தொடக்க கால அரப்பா மற்றும் பிந்தைய அரப்பா ஆகியவற்றை முறையே இணைத்ததற்குப் பிறகு, ஒட்டு மொத்த சிந்துவெளி நாகரிகமானது பொ. ஊ. மு. 33 முதல் 14ஆம் நூற்றாண்டுகள் வரை நீடித்திருந்தது என்று கருதப்படுகிறது. சிந்துவெளி பாரம்பரியத்தின் ஒரு பகுதி இதுவாகும். சிந்துவெளி பாரம்பரியமானது அரப்பாவுக்கு முந்தைய மெகர்கரின் ஆக்கிரமிப்பையும் உள்ளடக்கியிருந்தது. சிந்துவெளியில் தொடக்க கால விவசாய களமாக மெகர்கர் விளங்கியது.[8][62] சிந்துவெளி நாகரிகத்தைக் குறிக்கும் போது பல காலப் பகுப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.[8][62] இதில் மிகப் பொதுவான முறையானது சிந்துவெளி நாகரிகத்தை தொடக்க கால, முதிர்ந்த மற்றும் பிந்தைய அரப்பா கட்டங்கள் எனப் பிரிக்கிறது.[63] சாப்பர் என்பவரின் மற்றொரு முறையானது பரந்த சிந்துவெளி பாரம்பரியத்தை நான்கு சகாப்தங்களாகப் பிரிக்கிறது. அவை அரப்பாவுக்கு முந்தைய "தொடக்க கால உணவு உற்பத்தி சகாப்தம்", மண்டலமயமாக்கல், ஒருங்கிணைப்பு மற்றும் ஓரிடமயமாக்கல் சகாப்தங்கள் ஆகியவையாகும். இவை தோராயமாக தொடக்க கால அரப்பா, முதிர்ந்த அரப்பா மற்றும் பிந்தைய அரப்பா கால கட்டங்களுடன் ஒத்துப் போகின்றன.[7][64]
அரப்பாவுக்கு முந்தைய சகாப்தம்: மெகர்கர்மெகர்கர் என்பது பாக்கித்தானின் பலுச்சிசுத்தானம் மாகாணத்தில் உள்ள ஒரு புதிய கற்கால (பொ. ஊ. மு. 7,000 முதல் அண். பொ. ஊ. மு. 2,500) மலைக் களம் ஆகும்.[73] சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் குறித்த புதிய நுண்ணோக்குகளை இது கொடுத்தது.[61][v] தெற்காசியாவில் விவசாயம் மற்றும் மேய்ச்சல் வாழ்க்கை முறைக்கான ஆதாரங்களைக் கொடுத்த தொடக்க கால களங்களில் மெகர்கரும் ஒன்றாகும்.[74][75] மெகர்கரானது அண்மைக் கிழக்கின் புதிய கற்காலத்தால் தாக்கம் பெற்றிருந்தது.[76] "கொல்லைப்படுத்தபட்ட கோதுமை வகைகள், விவசாயத்தின் தொடக்க கால கட்டங்கள், மட்பாண்ட முறை, பிற தொல்லியல் பொருட்கள், சில கொல்லைப்படுத்தப்பட்ட தாவரங்கள் மற்றும் மந்தை விலங்குகள்" ஆகியவற்றுக்கு இடையில் மெகர்கரும், அண்மை கிழக்கின் புதிய கற்காலக் களங்களும் ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன.[77][w] மெகர்கர் சுதந்திரமாகத் தோன்றிய ஒரு களம் என ஜீன்-பிராங்கோயிசு சர்ரிச் வாதிடுகிறார். "விவசாயப் பொருளாதாரமானது முழுமையாக அண்மைக் கிழக்கிலிருந்து தெற்காசியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது"[78][w][x][y] மற்றும் கிழக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் மேற்கு சிந்துவெளியில் உள்ள புதிய கற்காலக் களங்களுக்கு இடையேயான ஒற்றுமையானது இந்தக் களங்களுக்கு இடையிலான ஒரு "பண்பாட்டுத் தொடர்ச்சியின்" சான்றாக உள்ளன என சர்ரிச் குறிப்பிடுகிறார். ஆனால், மெகர்கரின் தானாகத் தோன்றிய தன்மையைக் குறிப்பிடும் போது மெகர்கர் ஒரு தொடக்க கால உள்ளூர்ப் பின் புலத்தைக் கொண்டிருந்தது என சர்ரிச் முடிக்கிறார். "அண்மைக் கிழக்கின் புதிய கற்காலப் பண்பாட்டின் ஒரு 'பின் தங்கிய பகுதி'" இது கிடையாது எனக் குறிப்பிடுகிறார்.[78] லூகாக்சு மற்றும் எம்பில் ஆகியோர் மெகர்கரில் ஒரு தொடக்க கால உள்ளூர் வளர்ச்சி ஏற்பட்டது எனப் பரிந்துரைக்கின்றனர். பண்பாட்டு வளர்ச்சியில் ஒரு தொடர்ச்சியும், ஆனால் மக்கள் தொகை உட்புகலில் ஒரு மாற்றத்தையும் கொண்டிருந்தது எனப் பரிந்துரைக்கின்றனர். லூகாக்சு மற்றும் எம்பில் ஆகியோர், மெகர்கரின் புதிய கற்காலம் மற்றும் செப்புக் காலங்களுக்கு இடையில் ஒரு வலிமையான தொடர்ச்சி இருக்கும் அதே நேரத்தில், பற்கள் சார்ந்த ஆதாரங்கள் மெகர்கரின் புதிய கற்கால மக்கள் தொகையிலிருந்து அதன் செப்புக் கால மக்கள் தொகையானது தோன்றவில்லை என்பதைக் காட்டுவதாகக் குறிப்பிடுகின்றனர்.[92] இது "மிதமான அளவுக்கு மரபணு தொடர்ச்சியைப் பரிந்துரைக்கிறது".[92][z] மசுகரன்கசு மற்றும் அவரது குழுவினர் (2015) "புதிய, அநேகமாக மேற்கு ஆசிய உடலமைப்புகளானவை தோகவு காலகட்டத்தில் (பொ. ஊ. மு. 3800) தொடங்கி மெகர்கரிலுள்ள சமாதிகளில் கிடைக்கப் பெறுவதாகக்" குறிப்பிடுகின்றனர்.[93] கல்லேகோ ரோமேரோ மற்றும் அவரது குழுவினர் (2011) இந்தியாவில் பாற்சக்கரை தாளாமை மீதான தங்களது ஆய்வுகளானவை "ரெயிச் மற்றும் அவரது குழுவினரால் (2009) அடையாளப்படுத்தப்பட்ட மேற்கு ஐரோவாசிய மரபணுப் பங்களிப்பானது ஈரான் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து மரபணு வருகையை முதன்மையாகப் பிரதிபலிப்பதாக உள்ளது" என்று பரிந்துரைக்கின்றனர். [94]அவர்கள் மேலும் குறிப்பிடுவதாவது "தெற்காசியாவில் கால்நடை மேய்ச்சலின் தொடக்க கால ஆதாரமானது சிந்து ஆற்று சமவெளிக் களமான மெகர்கரிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இது பொ. ஊ. மு. 7,000ஆம் ஆண்டுக்கு காலமிடப்படுகிறது".[94][aa] தொடக்க கால அரப்பா![]() ![]() தொடக்க கால அரப்பாவின் இராவி கால கட்டமானது அருகில் உள்ள இராவி ஆற்றின் பெயரைப் பெற்றுள்ளது. இது அண். பொ. ஊ. மு. 3,300 முதல் பொ. ஊ. மு. 2800 வரை நீடித்திருந்தது. மலைகளைச் சேர்ந்த விவசாயிகள் படிப்படியாக தங்களது மலைக் குடியிருப்புகள் மற்றும் தாழ்நில ஆற்றுச் சமவெளிகளுக்கு இடையில் நகர்ந்த போது இக்கால கட்டம் தொடங்கியது.[96] கோத் திசி கால கட்டத்துக்கு (2800–2600 பொ. ஊ. மு., அரப்பா 2) முந்தையது இதுவாகும். கோத் திசி என்பது மொகஞ்சதாரோவுக்கு அருகில் பாக்கித்தானின் வடக்கு சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு களம் ஆகும். சிந்துவெளி வரிவடிவத்தின் தொடக்க கால எடுத்துக்காட்டுகள் பொ. ஊ. மு. 3வது ஆயிரமாண்டுக்கு காலமிடப்படுகின்றன.[97][98] தொடக்க கால கிராமப் பண்பாடுகளின் முதிர்ந்த கால கட்டமானது பாக்கித்தானிலுள்ள இரெக்மான் தேரி மற்றும் அம்ரி ஆகியவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[99] முதிர்ந்த அரப்பா கால கட்டத்தை நோக்கிய கால கட்டத்தை கோத் திசியானது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நகர்க் காப்பரணானது மையப்படுத்தப்பட்ட அதிகாரம் மற்றும் வளர்ந்து வந்த நகரத் தரத்திலான வாழ்க்கை முறையைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. முதிர்ந்த கால கட்டத்தில் இருந்த மற்றொரு பட்டணமானது இந்தியாவில் கக்ரா ஆற்றின் அருகில் காளிபங்கான் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[100] தொடர்புடைய மாகாணப் பண்பாடுகள் மற்றும் மூலப் பொருட்களுக்கான தொலை தூர ஆதாரங்களுடன் வணிக வழிகள் இந்தப் பண்பாட்டை இணைத்தன. இலபிசு இலசுலி மற்றும் பாசி தயாரிக்கத் தேவைப்படும் பிற பொருட்களும் இதில் அடங்கும். இந்த நேரத்தில் கிராமத்தவர்கள் ஏராளமான பயிர்களைக் கொல்லைப்படுத்தினர். இதில் பட்டாணிகள், எள்கள், பேரீச்சைகள் மற்றும் பருத்தி ஆகியவை அடங்கும். எருமை உள்ளிட்ட விலங்குகளையும் இவர்கள் கொல்லைப்படுத்தினர். தொடக்க கால அரப்பா சமூகங்கள் பொ. ஊ. மு. 2600 வாக்கில் பெரிய நகர மையங்களாக மாறின. இங்கிருந்து தான் முதிர்ந்த அரப்பா கால கட்டமானது தொடங்கியது. சிந்துவெளி மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர் என சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.[101][102] பெரிய சுவர்களுடைய குடியிருப்புகளைக் கட்டுதல், வணிக வழிகளின் விரிவு, "மட்பாண்ட பாணிகள், ஆபரணங்கள் மற்றும் சிந்துவெளி வரிவடிவத்துடன் கூடிய முத்திரைகள்" ஆகியவற்றின் மூலம் ஓர் "ஒப்பீட்டளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட" பொருள்சார் பண்பாடாக மாகாண சமூகங்கள் அதிகரித்த ஒருங்கிணைப்புக்கு மாறியது ஆகியவற்றை உடையதாக தொடக்க கால அரப்பா கால கட்டத்தின் கடைசி கட்டங்கள் உள்ளன. முதிர்ந்த அரப்பா கால கட்டத்துக்கு மாறியதற்கு இது இட்டுச் சென்றது.[103] முதிர்ந்த அரப்பா![]() முதிர்ந்த அரப்பா அரப்பாவின் எஃப் மேட்டில் தானியக் கிடங்கும், பெரிய மண்டபமும் லோத்தலில் கழிப்பறை அமைப்பின் சிதிலங்கள் சிந்துவெளி நாகரிகத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான குசராத்தின் தோலாவிரா. செயற்கையாகக் கட்டப்பட்ட நீர் தேக்கும் இடங்களுடன் நீர் நிலையை அடைவதற்காக பவோலி படிக்கட்டுகளுடன் இது காணப்படுகிறது.[104] கியோசன் மற்றும் குழுவினரின் (2012) கூற்றுப் படி, ஆசியா முழுவதும் பருவக் காற்றுகள் மெதுவாக தெற்கு நோக்கி இடம் பெயர்ந்ததானது சிந்து மற்றும் அதன் கிளை ஆறுகளின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தியதன் மூலம் சிந்துவெளி கிராமங்கள் வளர்ச்சியடையவதற்கு அனுமதியளித்தது. வெள்ளத்தால் ஆதரவளிக்கப்பட்ட விவசாயமானது பெரும் விவசாய உற்பத்தி அதிகரிப்புக்கு வழி வகுத்தது. இது பதிலுக்கு நகரங்கள் வளர்ச்சியடைவதற்கு ஆதரவளித்தது. சிந்துவெளி நாகரிகக் குடியிருப்பு வாசிகள் நீர்ப்பாசன முறைகளை உருவாக்கவில்லை. கோடை வெள்ளங்களுக்கு வழி வகுத்த பருவ மழையையே பொதுவாகச் சார்ந்திருந்தனர்.[4] முன்னேற்றம் அடைந்த நகரங்களின் வளர்ச்சியானது மழைப் பொழிவில் ஏற்பட்ட குறைவுடன் ஒத்துப்போகிறது என புரூக் மேலும் குறிப்பிடுகிறார். மழைப் பொழிவில் ஏற்பட்ட குறைவானது பெரிய நகர மையங்களாக மக்கள் மீண்டும் ஒருங்கிணைந்ததற்குத் தூண்டு கோலாக அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[105][e] ஜே. ஜி. சாப்பர் மற்றும் டி. எ. லிச்டென்சுடெயின் ஆகியோரின் கூற்றுப் படி,[106] முதிர்ந்த அரப்பா நாகரிகமானது "பகோர், கக்ரா மற்றும் கோத் திசி பாரம்பரியங்களின் அல்லது இந்தியா மற்றும் பாக்கித்தானின் எல்லைகளில் உள்ள காக்ரா சமவெளியில் இருந்த 'இனக்குழுக்களின்' ஓர் ஐக்கியம் ஆகும்."[107] மேலும், மிக சமீபத்திய மைசேல்சின் (2003) கூற்றுப் படி, "ஒரு கோத் திசிய/அம்ரி-நால் ஒருங்கிணைப்பில் இருந்து அரப்பா உலகமானது உருவாக்கப்பட்டது". மேலும் இவர் குறிப்பிடுவதாவது, நுட்பமான முன்னேற்றத்தில் கக்ரா-காகர் திரள் களங்களுடன் சேர்ந்து மொகஞ்சதாரோவின் களமானது முதன்மையானதாக உள்ளது. "கக்ரா-காகர் திரள் களங்களில் கோத் திசி தொடர்புடைய பொருட்களுடன் ஒப்பிடும் போது உண்மையில் கக்ரா மட்பாண்டங்கள் முதிர்ந்தவையாக உள்ளன". "நாம் தொடக்க கால அரப்பா (தொடக்க கால சிந்து) என்று அடையாளப்படுத்தும் ஒருங்கிணைப்பில் முடிவடைந்த கக்ரா, கோத் திசிய மற்றும் அம்ரி-நால் பண்பாட்டு அம்சங்களிலிருந்து உருவான ஒரு கூட்டிணைவை உருவாக்கிய கிரியாவூக்கியாக" இந்தப் பகுதிகளை இவர் காண்கிறார்.[108] பொ. ஊ. மு. 2600 வாக்கில் தொடக்க கால அரப்பா சமூகங்கள் பெரிய நகர மையங்களாக மாறியிருந்தன. இத்தகைய நகர மையங்களில் நவீன பாக்கித்தானில் உள்ள அரப்பா, கனேரிவாலா, மொகெஞ்சதாரோ மற்றும் நவீன இந்தியாவிலுள்ள தோலாவிரா, காளிபங்கான், இராக்கிகர்கி, ரூப்நகர், மற்றும் லோத்தல் ஆகியவையும் அடங்கும்.[109] மொத்தத்தில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளின் பொதுவான பகுதிகளில் இவை முதன்மையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[13] நகரங்கள்ஒரு நவ நாகரிக மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நகரப் பண்பாடானது சிந்துவெளி நாகரிகத்தில் தென்படுகிறது. இப்பகுதியில் முதல் நகர மையமாக இது இந்நாகரிகத்தை ஆக்குகிறது. நகரத் திட்டமிடலின் தரமானது நகரத் திட்டமிடல் குறித்த அறிவு மற்றும் திறமையான நகர அரசாங்கத்தை இது கொண்டிருந்திருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. நகர அரசாங்கங்கள் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவத்தையோ அல்லது மாறாக சமயச் சடங்குகளுக்கு சாதகமான வழி முறையையோ உருவாக்கிக் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[110] அரப்பா, மொகஞ்சதாரோ மற்றும் சமீபத்தில் பகுதியளவுக்கு அகழ்வாய்வு செய்யப்பட்ட இராக்கிகர்கி ஆகிய களங்களில் காணப்பட்டதைப் போல இந்த நகரத் திட்டமிடலானது உலகின் முதல் அறியப்பட்ட நகரக் கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகளைக் கொண்டிருந்தது. நகரத்திற்குள் தனி வீடுகள் அல்லது வீடுகளின் குழுக்களானவை கிணறுகளில் இருந்து நீரைப் பெற்றன. குளிப்பதற்காக என்று ஒதுக்கி வைத்ததாகத் தோன்றும் ஓர் அறையிலிருந்து கழிவுநீரானது மூடப்பட்ட சாக்கடை அமைப்புகளுக்குத் திருப்பி விடப்பட்டது. இவை முதன்மையான தெருக்களில் கோடு போல் அமைக்கப்பட்டிருந்தன. உள் முற்றம் அல்லது சிறிய பாதைகளுக்கு மட்டுமே வீடுகள் திறந்து விடப்பட்டிருந்தன. இந்தப் பகுதியின் சில கிராமங்களில் வீடு கட்டும் முறையானது அரப்பா மக்களின் வீடு கட்டும் முறையை சில வகைகளில் இன்றும் ஒத்துள்ளது.[ab] சிந்துப் பகுதி முழுவதும் நகரங்களில் முன்னேற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்ட பண்டைய சிந்துவின் கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகளானவை மத்திய கிழக்கில் சமகாலத்தில் காணப்பட்ட எந்த ஒரு நகரக் களங்களில் இருந்தவற்றையும் விட மிகுந்த முன்னேற்றம் அடைந்தவையாக இருந்தன. இவர்களது படகு நிறுத்துமிடங்கள், குதிர்கள், தானியக் கிடங்குகள், செங்கல் நடைபாதைகள் மற்றும் காப்புச் சுவர்கள் ஆகியவை அரப்பா மக்களின் முன்னேறிய கட்டடக்கலையைக் காட்டுகிறது. சிந்து நகரங்களின் பெரும் சுவர்களானவை அநேகமாக வெள்ளங்களிலிருந்தும், இராணுவச் சண்டைகளிலிருந்தும் கூட அரப்பா மக்களைக் காத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[112] நகர்க் காப்பரணின் தேவையானது இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ளது. இந்த நாகரிகத்தின் சமகால பிற நாகரிகங்களான மெசொப்பொத்தேமியா மற்றும் பண்டைய எகிப்துக்கு நேர்மாறாக எந்த ஒரு பெரிய நினைவுச்சின்ன கட்டடங்களும் இங்கு கட்டப்படவில்லை. அரண்மனைகள் அல்லது கோயில்களுக்கான தீர்க்கமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை.[113] சில கட்டடங்கள் தானியக் கிடங்குகள் என்று கருதப்படுகின்றன. ஒரு நகரத்தில் ஒரு பெரும், நன்முறையில் கட்டப்பட்ட குளியலிடம் ("பெரும் குளியலிடம்") உள்ளது. இது ஒரு பொதுக் குளியலிடமாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது. நகர்க் காப்பரண்கள் சுவர்களையுடையதாக இருந்த போதிலும் இந்தக் கட்டடங்கள் தற்காப்புக்காகப் பயன்படுத்தப்பட்டனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெரும்பாலான நகரவாசிகள் வணிகர்களாகவோ அல்லது கைவினைஞர்களாகவோ இருந்திருப்பர் என்று தோன்றுகிறது. நன்றாகக் கட்டமைக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் இதே தொழில்களைப் பின்பற்றிய பிறருடன் இவர்கள் வாழ்ந்தனர். முத்திரைகள், பாசிகள் மற்றும் பிற பொருட்களை உருவாக்க நகரங்களுக்கு தொலை தூரப் பகுதிகளில் இருந்து வந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அழகான பாசிகளும் அடங்கும். சோப்புக்கல் முத்திரைகளானவை விலங்குகள், மக்கள் (அநேகமாக கடவுள்கள்) மற்றும் பிற பொறிப்பு வகைப் படங்களைக் கொண்டிருந்தன. இதில் இன்றும் புரிந்து கொள்ளப்படாத சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்து முறையும் அடங்கும். சில முத்திரைகள் வணிகப் பொருட்கள் மீது முத்திரையிடப் பயன்படுத்தப்பட்டன. சில வீடுகள் பிற வீடுகளை விடப் பெரியதாக இருந்த போதிலும் சிந்துவெளி நகரங்களானவை வெளிப்படையாக தெரியும் வகையிலோ அல்லது ஒப்பீட்டளவிலோ இவற்றின் சமத்துவத்திற்காக அறியப்படுகின்றன. அனைத்து வீடுகளும் நீர் பெறும் வசதி மற்றும் கழிவு நீர் வெளியேற்றும் அமைப்பைக் கொண்டிருந்தன. ஒப்பீட்டளவில் இச்சமூகத்தில் செல்வம் ஓரிடத்தில் குவிந்திருக்கவில்லை என்ற தோற்றத்தை இது நமக்குக் கொடுக்கிறது.[114] அதிகாரமும், அரசாங்கமும்அரப்பா சமூகத்தில் ஒரு சக்தி மையத்திற்கு அல்லது சக்தியிலிருந்த மக்களின் பதவிகள் குறித்து உடனடி பதில்களைத் தொல்லியல் பதிவுகள் கொடுக்கவில்லை. ஆனால், சிக்கலான முடிவுகள் எடுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டன என்பதற்கான தோற்றங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பெரும்பாலான நகரங்கள் ஓர் உயர்ந்த ஒழுங்கமைவு மற்றும் நன்முறையில் திட்டமிடப்பட்ட நேர் கோடுகளின் ஒழுங்கமைவு வடிவத்தில் அமைக்கப்பட்டன. ஒரு மைய அதிகாரத்தால் இவை திட்டமிடப்பட்டன என்பதை இது பரிந்துரைக்கிறது. மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைகள் மற்றும் செங்கற்கள்,[115] பொது வசதிகள் மற்றும் கட்டடங்களின் இருப்பு,[116] சமாதி குறியீடுகள் மற்றும் சமாதிப் பொருட்களின் (சமாதிகளில் கிடைக்கப் பெற்ற பொருட்கள்) பல்வேறு வடிவங்கள் ஆகியவை அரப்பா மக்களின் மட்டு மீறிய ஒழுங்கமைவுக்குச் சான்றாக உள்ளது.[117] கீழ் காண்பவை இந்நாகரிகம் குறித்த சில முதன்மையான கோட்பாடுகள் ஆகும்:[சான்று தேவை]
உலோகவியல்அரப்பா மக்கள் உலோகவியலில் சில புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தினர். தாமிரம், வெண்கலம், ஈயம் மற்றும் வெள்ளீயம் ஆகியவற்றை உற்பத்தி செய்தனர்.[சான்று தேவை] பனாவலியில் தங்கத் தூள்களைக் கொண்ட ஒரு தேய் கல்லானது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் தூய்மையை சோதிப்பதற்காக இது அநேகமாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் இத்தகைய தொழில்நுட்பமானது இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[107] அளவியல்![]() சிந்து நாகரிக மக்கள் நீளம், எடை மற்றும் காலத்தை அளவிடுவதில் மிகுந்த துல்லியத் தன்மையைக் கொண்டிருந்தனர். ஒழுங்கமைவுடைய எடைகள் மற்றும் அளவீடுகளின் ஓர் அமைப்பை உருவாக்கிய முதல் மக்களில் இவர்களும் ஒருவராவர். [நம்பகமற்றது ]கிடைக்கப் பெறும் பொருட்களின் ஒப்பீடானது சிந்து நிலப்பரப்பு முழுவதும் ஒரு பெருமளவிலான வேறுபாடு இருப்பதைக் காட்டுகிறது. இவர்களது மிகச் சிறிய பிரிவானது குசராத்தின் லோத்தலில் ஒரு யானைத் தந்தத்தில் குறியிடப்பட்ட அளவுகோல் ஆகும். இதன் நீளம் தோராயமாக 1.704 மில்லி மீட்டர் ஆகும். வெண்கலக் காலத்தில் ஓர் அளவீட்டுக் கருவியில் பதிவு செய்யப்பட்ட மிகச் சிறிய அளவீடு இதுவாகும்.[சான்று தேவை] எடையை அளவிடுவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைத் தேவைகளுக்கும் தசமத்தை அடிப்படையாக கொண்ட அளவீட்டை அரப்பா பொறியியலாளர்கள் பின்பற்றினர். இது அவர்களது அறுமுகத்திண்ம எடைக்கற்கள் மூலம் நமக்குத் தெரிகிறது.[சான்று தேவை] இந்த எடைக் கற்கள் 5:2:1 என்ற வீதத்தில் இருந்தன. எடைகள் 0.05, 0.1, 0.2, 0.5, 1, 2, 5, 10, 20, 50, 100, 200, மற்றும் 500 அலகுகளாக இருந்தன. இது ஒவ்வொரு அலகும் சுமார் 28 கிராம் எடை இருந்தது. சிறிய பொருட்களும் இதே போன்ற வீதத்தில் எடை போடப்பட்டன. அவற்றின் அளவுகள் 0.871 என்று இருந்தன. எனினும், மற்ற கலாச்சாரங்களில் உள்ளதைப் போலவே, உண்மையான எடையானது இப்பகுதி முழுவதும் ஒழுங்கமைவுடன் இல்லை. பிற்காலத்தில், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் (பொ. ஊ. மு. 4ஆம் நூற்றாண்டு) பயன்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள் லோத்தலில் பயன்படுத்தப்பட்ட அதே அளவீடுகளாக இருந்தன.[119] கலைகளும், கைவினைப் பொருட்களும்களிமண் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஏராளமான சிந்துவெளி முத்திரைகளும், பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மிகச் சிறிய அளவில் கல் சிற்பங்களும், சில தங்க அணிகலன்களும், வெண்கலப் பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுடுமண், வெண்கலம் மற்றும் சோப்பிக் கற்களில் உருவாக்கப்பட்ட உருவ ரீதியில் நுட்பமான விளக்கங்களையுடைய சில சிலைகளும் அகழ்வாய்வுக் களங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சுடுமண் பாண்டங்கள் அநேகமாக பெரும்பாலும் விளையாட்டுப் பொருளாக இருந்திருக்கவே வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது[120]. அரப்பா மக்கள் பல்வேறு பொம்மைகளையும், விளையாட்டுகளையும் கூட உருவாக்கினர். இதில் முக்கியமானது கன சதுர வடிவ தாயக் கட்டையாகும். ஒவ்வொரு புறமும் 1 முதல் 6 துளைகள் வரை இதில் இடப்பட்டிருந்தது. மொகஞ்சதாரோ போன்ற களங்களில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.[121] பசுக்கள், கரடிகள், குரங்குகள் மற்றும் நாய்கள் ஆகியவை இந்த சுடுமண் பாண்ட சிலைகளில் உள்ளடங்கியுள்ளன. முதிர்ந்த அரப்பா கால கட்டத்தின் களங்களில் பெரும்பாலான முத்திரைகளில் சித்தரிக்கப்பட்ட விலங்கு எது என தெளிவாக அடையாளப்படுத்தப்படவில்லை. ஒரு பாதி காளையாகவும், ஒரு பாதி வரிக் குதிரையாகவும், பெரும் கொம்புடன் உள்ள விலங்கு ஊகத்திற்கு வழி வகுக்கக் கூடியதாக இருந்துள்ளது. இந்த உருவமானது சமய அல்லது வழிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததா என்பதற்கான போதுமான அளவு ஆதாரங்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், இந்த உருவத்தின் பரவலாகக் காணப்படும் தன்மையானது, சிந்துவெளி நாகரிகத்தின் உருவங்களில் உள்ள விலங்கோ அல்லது வேறு உருவமோ சமயக் குறியீடுகளே என்ற கேள்வியை எழுப்புபவையாக உள்ளன.[122] "சிப்பி வேலைப்பாடுகள், மட்பாண்ட உற்பத்தி மற்றும், மணிக்கல் மற்றும் சோப்புக்கல் பாசி உருவாக்கம்" உள்ளிட்ட பல கைவினை வேலைப்பாடுகள் நடைபெற்றன. அணிகலன்கள், வளையல்கள் மற்றும் பிற பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அரப்பா நாகரிகத்தின் அனைத்து கால கட்டங்களிலும் இருந்து பெறப்பட்டன. இந்த கைவினை வேலைகளில் சில இந்திய துணைக்கண்டத்தில் இன்றும் கூட பின்பற்றப்படுகின்றன.[116] சீப்புகள், கண் மை மற்றும் ஒரு சிறப்பான மூன்று பயன்பாடுகளையுடைய ஓர் ஒப்பனைப் பொருள் போன்ற சில ஒப்பனைப் பொருட்கள் அரப்பாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை நவீன இந்தியாவிலும் அதை ஒத்த இணைப்புப் பொருட்களை இன்றும் கூட கொண்டுள்ளன.[123] சுடுமண்ணில் செய்யப்பட்ட பெண் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன (அண். 2800–2600 பொ. ஊ. மு.). இச்சிலைகளில் முடி பிரியும் இடத்தில் சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.[123] சதுரங்கத்தை ஒத்த காய்களைக் கொண்ட ஒரு பலகையானது லோத்தல் நகரத்திலிருந்து பொ. ஊ. மு. 3000 முதல் 2000 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் சிதிலங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.[124] மொகஞ்சதாரோவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடக்கத்தில் இலாகூர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்தன. பிறகு புது தில்லியில் உள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமையகத்துக்கு இடம் மாற்றப்பட்டன. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு புதிய தலைநகருக்கு என திட்டமிடப்பட்டிருந்த புதிய "மைய ஏகாதிபத்திய அருங்காட்சியத்துக்கு" இவை இடம் மாற்றப்பட்டன. அங்கு குறைந்தது ஒரு பகுதி பொருட்களாவது பார்வைக்கு வைக்கப்படும் என்று எண்ணப்பட்டது. இந்தியாவுக்கான சுதந்திரம் நெருங்கி வருகிறது என்று வெளிப்படையாக அந்நேரத்தில் தெரிந்தது. ஆனால், இந்தியப் பிரிவினையானது கடைசி கட்டத்தில் தான் எதிர்பார்க்கப்பட்டது. தங்கள் நிலப்பரப்பில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மொகஞ்சதாரோ பொருட்களைத் திருப்பிக் கொடுக்குமாறு புதிய பாக்கித்தானின் அரசுத் துறையினர் வேண்டினர். ஆனால், இந்திய அரசுத் துறையினர் மறுத்தனர். இறுதியாக ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. பெரும்பாலும் சுடுமண் பாண்டங்களாக இருந்த சுமார் 12,000 பொருட்கள் என மொத்தமாக இருந்த இந்த கண்டுபிடிப்புகளை இரு நாடுகளுக்கும் இடையில் சரி சமமாக பிரித்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. சில நேரங்களில் இந்த வார்த்தைகள் அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டன. சில அணிகலன்கள் மற்றும் பட்டைகளில் இருந்த பாசிகள் பிரிக்கப்பட்டு இரண்டு குவியல்களாக அமைக்கப்பட்டன. "இரண்டு மிகுந்த முக்கியமான சிலைகளைப்" பொறுத்த வரையில், பாக்கித்தான் பூசாரி-மன்னன் சிலையைக் கேட்டுப் பெற்றது. அதே நேரத்தில், இந்தியா அதை விட சிறிய நடன மங்கை சிலையை வைத்துக் கொண்டது.[125] நீண்ட காலம் கழித்து எழுதப்பட்டிருந்தாலும் கலை நூலான நாட்டிய சாஸ்திரமானது (அண். பொ. ஊ. மு. 200 – பொ. ஊ. 200) இசைக்கருவிகளை அவற்றின் உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவை நரம்புக் கருவிகள், தோல் கருவிகள், உறுதியான பொருள் கருவிகள் மற்றும் காற்றுக் கருவிகள் ஆகியவை ஆகும். சிந்துவெளி நாகரிகத்தின் காலத்தில் இருந்தே இத்தகைய கருவிகள் இருந்துள்ளன என்று அநேகமாகத் தெரிகிறது.[126] எளிமையான கிளுகிளுப்பைகள் மற்றும் குடுவை புல்லாங்குழல்களின் பயன்பாட்டை தொல்லியல் ஆதாரங்கள் நமக்குக் காட்டுகின்றன. அதே நேரத்தில், ஒரு சித்தரிப்பானது தொடக்க கால யாழ் வகைக் கருவிகள் மற்றும் முரசுகளும் கூட பயன்படுத்தப்பட்டன என்பதற்கான ஆதாரத்தை காட்டுகிறது.[127] சிந்துவெளி நாகரிகத்தின் ஒரு சித்திரக் குறியீடானது வளைந்த யாழ் வகைக் கருவியின் தொடக்க காலத்தில் அறியப்பட்ட சித்தரிப்பைக் கொண்டுள்ளது. இது பொ. ஊ. மு. 1800ஆம் ஆண்டுக்கு சற்று முன்னர் காலமிடப்படுகிறது.[128]
மனித சிறு சிலைகள்சிந்துவெளி நாகரிகக் களங்களில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தத்ரூபமான சிறு சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது மெல்லிய கை கால்களை உடைய, வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட நடன மங்கை சிலையாகும். இச்சிலை மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சிலை மற்றொரு சிலையை மூலமாகக் கொண்டு வெண்கல வார்ப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பிற தத்ரூபமான முழுமையடையாத சிறு சிலைகளும் அரப்பாவில் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாரம்பரியக் காலத்தை ஒத்த, மனித உருவங்களை இவை காட்டுகின்றன: ஆணாகத் தோன்றுகின்ற ஒரு நடனமாடும் நபரின் சிறு சிலை மற்றும் அரப்பா தோர்சோ என்றழைக்கப்படும் ஒரு சிவப்பு ஆணின் தோர்சோ சிலை. இவை இரண்டுமே தற்போது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளன. அரப்பாவிலிருந்து இந்த இரு சிறு சிலைகளைக் கண்ட போது சர் யோவான் மார்ஷல் ஆச்சரியத்துடன் பின்வருமாறு கூறினார்:[129]
மனித உடலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இவற்றின் முன்னேற்றமடைந்த பாணியின் காரணமாக இந்த சிறு சிலைகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியவையாக உள்ளன. சிவப்பு தோர்சோ சிலையைப் பொறுத்த வரையில் அதைக் கண்டுபிடித்தவரான வாட்ஸ் இது ஓர் அரப்பா காலத்தைச் சேர்ந்தது எனக் கூறினார். ஆனால், மார்ஷல் இந்த சிறு சிலையை அநேகமாக வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதினார். குப்தர் காலத்திற்கு இதைக் காலமிட்டார். மிகுந்த பிந்தைய காலத்தைச் சேர்ந்த லோகானிபூர் தோர்சோ என்ற சிலையுடன் இதை ஒப்பிட்டார்.[130] ஓர் இரண்டாவது, ஆனால் இதே போன்ற, சாம்பல் கல்லில் செய்யப்பட்ட ஒரு நடனமாடும் ஆணின் தோர்சோ சிலையானது ஒரு பாதுகாக்கப்பட்ட முதிர்ந்த அரப்பா பகுதியில் சுமார் 150 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக, மானுடவியலாளர் கிரிகோரி போசெல் முதிர்ந்த அரப்பா கால கட்டத்தின் போது சிந்துவெளி கலையின் உச்ச நிலையை இந்தச் சிலைகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதினார்.[131]
முத்திரைகள்ஆயிரக்கணக்கான சோப்புக்கல் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அமைப்பானது ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. 2 முதல் 4 செ. மீ. அளவில் பக்கத்தையுடைய சதுரங்களாக அவை இருந்துள்ளன. அவற்றைக் கையாள கயிறு கோர்ப்பதற்காகவோ அல்லது தனி நபர் அணிகலனாக அவற்றை பயன்படுத்துவதற்காகவோ பெரும்பாலான நேரங்களில் இம்முத்திரைகளின் பின்னால் ஓர் ஓட்டை காணப்படுகிறது. மேலும், ஒரு பெரும் எண்ணிக்கையிலான சிறு முத்திரைகளும் எஞ்சியுள்ளன. அதில் சிலவற்றை மட்டுமே முத்திரைகளாக எடுத்துக் கொள்ள முடியும். சிந்துவெளி வரிவடிவத்தின் பெரும் எண்ணிக்கையிலான எடுத்துக்காட்டுகள் முத்திரைகள் மேல் உள்ள குறியீடுகளின் சிறு குழுக்களாக உள்ளன.[132] மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் அதன் தலையில் ஊன்றியிருக்கும் ஓர் உருவத்தை சித்தரிப்பதையும், மற்றொரு முத்திரையான பசுபதி முத்திரையில் சம்மணமிட்டு அமர்ந்து, சிலர்[யார்?] குறிப்பிடுவது போல யோகா செய்வது போன்ற ஒரு தோற்றத்தில் இருப்பதையும் சித்தரிக்கின்றன. இந்த உருவங்கள் பலவராக அடையாளப்படுத்தப்படுகின்றன. சர் யோவான் மார்ஷல் இந்த முத்திரையை இந்துக் கடவுளான சிவனை ஒத்துள்ளதாக அடையாளப்படுத்துகிறார்.[133] கொம்புகள், குளம்புகள் மற்றும் ஒரு காளையின் வாலையுடைய ஒரு மனித தெய்வமும் கூட முத்திரைகளில் தோன்றுகிறது. குறிப்பாக ஒரு கொம்பை உடைய புலி போன்ற மிருகத்துடன் சண்டையிடும் தோற்றத்தில் தோன்றுகிறது. இந்தத் தெய்வமானது மெசொப்பொத்தேமியய காளை மனிதனான என்கிடுவுடன் ஒப்பிடப்படுகிறது.[134][135][136] இரண்டு சிங்கங்கள் அல்லது புலிகளுடன் சண்டையிடும் ஒரு மனிதன், மேற்கு மற்றும் தெற்காசியாவின் நாகரிகங்களுக்குப் பொதுவான உருவமான "விலங்குகளின் எசமானன்" ஆகியவற்றையும் கூடக் காட்டும் பல முத்திரைகள் உள்ளன.[136][137]
வணிகமும், போக்குவரத்தும்![]() ![]() சிந்துவெளி நாகரிகமானது மாட்டு வண்டிகளைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது தெற்காசியா முழுவதும் காணப்படும் மாட்டு வண்டிகளை ஒத்ததாக இவை இருந்தன. மேலும், படகுகளையும் இந்நாகரிகம் கொண்டிருந்தது என்று கருதப்படுகிறது. இதில் பெரும்பாலான படகுகள் அநேகமாக சிறிய, தட்டையான அடிப்பாகத்தைக் கொண்ட படகுகளாகும். இவை ஒரு வேளை தற்போது சிந்து ஆற்றில் காணப்படுவதை ஒத்த பாய் மரங்களால் இயக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு விரிவான கால்வாய் அமைப்பானது நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இது எச். பி. பிராங்போர்த்து என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[144] செப்புக் காலத்தின் 4300 முதல் 3200 பொ. ஊ. மு. வரையிலான காலத்தின் போது சிந்துவெளி நாகரிகத்தின் பகுதியானது தெற்கு துருக்மெனிஸ்தான் மற்றும் வடக்கு ஈரானுடன் மட்பாண்டங்களில் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இது இப்பகுதிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க அளவுக்கு போக்குவரத்தும், வணிகமும் இருந்தைப் பரிந்துரைக்கிறது. தொடக்க கால அரப்பா காலத்தின் போது (சுமார் 3200-2600 பொ. ஊ. மு.) மட்பாண்டங்கள், முத்திரைகள், உருவங்கள், அணிகலன்கள் போன்றவற்றில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இவை நடு ஆசியா மற்றும் ஈரானியப் பீடபூமியுடன் சிந்துவெளி நாகரிகத்திற்கு இருந்த விரிவான கவிகை வண்டி வணிகத்திற்கு ஆவணமாக உள்ளன.[145] சிந்துவெளி நாகரிகத்தின் பொருட்கள் அகலப் பரவிக் காணப்படுவதன் அடிப்படையில், வணிக வழிகளானவை பொருளாதார ரீதியாக ஆப்கானித்தானின் பகுதிகள், ஈரானின் கடற்கரைப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா, மற்றும் மெசொப்பொத்தேமியா உள்ளிட்ட ஒரு பெரும் பகுதியை ஒன்றிணைத்தன என்று கருதப்படுகிறது. இது சிந்து-மெசொப்பொத்தேமியா உறவுகளின் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. அரப்பாவில் புதைக்கப்பட்ட நபர்களின் பற்களின் கெட்டியான வெண்ணிறப் பகுதிகள் குறித்த ஆய்வுகளானவை அரப்பாவின் சில குடியிருப்புவாசிகள் சிந்து சமவெளியையும் தாண்டிய பகுதிகளில் இருந்து இந்நகரத்திற்கு வந்து குடியேறினர் என்று பரிந்துரைக்கிறது.[146] துருக்மெனிஸ்தானின் கோனுர் தேபே மற்றும் ஈரானின் சகிரி சுக்தே ஆகிய வெண்கலக் கால களங்களின் சமாதிகளின் பண்டைய மரபணு ஆய்வுகள் தெற்காசிய வழித்தோன்றல்களான 11 நபர்களை அடையாளப்படுத்துகிறது. இவர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் முதிர்ந்த கால கட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.[147] மத்திய அரப்பா கால கட்டத்தில் இருந்தே அரப்பா மற்றும் மெசொப்பொத்தேமியா நாகரிகங்களுக்கு இடையில் விரிவான கடல் வணிகமானது நடைபெற்றுள்ளது. இதில் பெரும்பாலான வணிகமானது "தில்முனைச் (பாரசீக வளைகுடாவிலுள்ள நவீன பகுரைன், கிழக்கு அரேபியா மற்றும் குவைத்தின் பைலகா தீவு) சேர்ந்த இடை வணிகர்களால்" கையாளப்பட்டது.[148] தட்டையான அடிப் பாகத்தை உடைய படகுகளானவை தைக்கப்பட்ட நாணல் புற்கள் அல்லது துணிகளைப் பாய்களாகக் கொண்டு, ஓர் ஒற்றை மைய பாய்மரத்தால் இயக்கப்பட்ட நுட்பத்தின் உருவாக்கத்தின் காரணமாக இத்தகைய நீண்ட தூரக் கடல் வாணிகமானது சாத்தியமாகியது.[149] எனினும், அரப்பா நாகரிகத்துடன் தொடர்புடைய கடல் வணிகத்திற்கான சான்றுகள் தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை. தொல்லியலாளர்கள் பிரிட்சட் ஆல்ச்சின் மற்றும் ரேமண்ட் ஆல்ச்சின் தங்களது இந்தியா மற்றும் பாக்கித்தானில் நாகரிகத்தின் வளர்ச்சி என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்:
தேனியல் தி. பாட்சு பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
1980களில் ஓமானின் ரசல் சின்சு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான தொல்லியல் கண்டுபிடிப்புகளானவை அரபுத் தீபகற்பத்துடனான சிந்துவெளியின் கடல் வழித் தொடர்புகளுக்குச் சான்றாக அமைந்தன.[149][151][152] தென்னிசு பிரேனேசு சமீபத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது:
வேளாண்மைகங்கல் மற்றும் குழுவினரின் (2014) கூற்றுப் படி, புதிய கற்கால வேளாண்மையானது அண்மைக் கிழக்கிலிருந்து வட மேற்கு இந்தியாவிற்குப் பரவியது என்பதற்கான வலிமையான தொல்லியல் மற்றும் புவியியல் சான்றுகள் உள்ளன. ஆனால், அதே நேரத்தில், "மெகர்கரில் வாற்கோதுமை மற்றும் நாட்டு மாடுகள் கொல்லைப்படுத்தப்பட்டன என்பதற்கான நல்ல சான்றுகளும்" கூட உள்ளன.[76][ac] ஜீன்-பிராங்கோயிசு சர்ரிச்சின் கூற்றுப் படி, வேளாண்மையானது மெகர்கரில் சுதந்திரமாக உள்ளூர் அளவில் தோன்றியது. மெகர்கரானது அண்மைக் கிழக்கின் புதிய கற்காலப் பண்பாட்டின் ஒரு பின்தங்கிய பகுதியாக வெறுமனே திகழவில்லை என்று இவர் வாதிடுகிறார். கிழக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் மேற்கு சிந்துவெளியைச் சேர்ந்த புதிய கற்காலக் களங்களுக்கு இடையில் ஒற்றுமைகளானவை "பண்பாட்டுத் தொடர்வரிசை அமைவுக்கான" சான்றுகளாக இருந்த போதிலும் இவர் இவ்வாறு வாதிடுகிறார்.[78] தொல்லியலாளர் ஜிம் ஜி. சாப்பர் "உணவு உற்பத்தி என்பது தெற்காசியாவில் தானாகத் தோன்றிய, புரிந்து கொள்ளப்படாத நிகழ்வு" என்பதை மெகர்கர் களமானது விளக்குகிறது என்கிறார். "தெற்காசியாவின் வரலாற்றுக்கு முந்தைய நகரமயமாக்கல் மற்றும் சிக்கலான சமூக அமைப்பை உள்ளூர் முறையை அடிப்படையாகக் கொண்டதாகவும், ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக தன்னந்தனியாக இல்லாத பண்பாட்டு வளர்ச்சிக்குமான" விளக்கத்துக்கு தகவல்கள் ஆதரவளிக்கின்றன எனவும் குறிப்பிடுகிறார்.[154] மெகர்கரின் மக்கள் கொல்லைப்படுத்தப்பட்ட கோதுமை மற்றும் வாற்கோதுமைகளைப்[155] பயன்படுத்தினர் என சர்ரிச் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், சாப்பர் மற்றும் லிச்டென்சுடெயின் இங்கு முதன்மையாக அறுவடை செய்யப்பட்ட தானியப் பயிராக இரண்டு வரிசை வாற்கோதுமையில் இருந்து பெறப்பட்ட ஒரு பயிரான ஆறு வரிசை வாற்கோதுமையைக் குறிப்பிடுகின்றனர்.[156] "மெகர்கரிலிருந்த புதிய கற்காலத்தைச் சேர்ந்த கொல்லைப்படுத்தப்பட்ட பயிர்களில் 90%க்கும் அதிகமானவை வாற்கோதுமையைக் கொண்டிருந்ததாகக்" கங்கல் ஒப்புக் கொள்கிறார்." வாற்கோதுமையானது இங்கு கொல்லைப்படுத்தப்பட்டதற்கு நல்ல சான்றுகள் உள்ளதாகக்" குறிப்பிடுகிறார். இருந்த போதிலும், இப்பயிரானது "ஒரு சிறிய அளவில் கோதுமைகளையும்" உள்ளடக்கியிருந்தது என்பதையும் கூட கங்கல் குறிப்பிடுகிறார். கோதுமையானது "அண்மைக் கிழக்கில் தோன்றிய ஒரு பயிர் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், கோதுமையின் காட்டுப் பயிர் வகைகளின் நவீன பரவலானது வடக்கு லெவண்ட் மற்றும் தெற்கு துருக்கி ஆகிய பகுதிகளுக்குள் அடங்கி விடுகிறது."[76][ad] சிந்துவெளி முத்திரைகளில் அடிக்கடிச் சித்தரிக்கப்படும் கால்நடைகளானவை திமிலையுடைய இந்திய அரோச்சுசு மாட்டு வகையாகும் (பாசு பிரிமிசினியசு நமதிகசு). இவை நாட்டு மாடுகளை ஒத்த ஒரு வகையாகும். இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் இன்றும் பொதுவானவையாக இந்த நாட்டு மாடுகள் உள்ளன. இவை ஐரோப்பிய கால்நடைகளில் (பாசு பிரிமிசினியசு தாரசு) இருந்து வேறுபட்டவையாகும். இந்தியத் துணைக் கண்டத்தில், அநேகமாக பாக்கித்தானின் பலுச்சிசுத்தானப் பகுதியில் தனியாக இவை கொல்லைப்படுத்தப்பட்டன என்று நம்பப்படுகிறது.[157][76][ac] ஜே. பேட்சு மற்றும் குழுவினரின் ஆய்வானது (2016) இரு பருவங்களிலும் சிக்கலான பல-பயிர் உத்திகளைப் பயன்படுத்திய தொடக்க கால மக்கள் சிந்துவெளி மக்கள் ஆவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவர்கள் கோடைக் காலம் (அரிசி, சிறு தானியங்கள் மற்றும் பீன்சு) மற்றும் குளிர் காலம் (கோதுமை, வாற்கோதுமை மற்றும் பயறு வகைகள்) ஆகிய பருவங்களில் உணவுப் பொருட்களை விளைவித்தனர். இது வேறுபட்ட நீர்ப்பாசன முறைகளுக்கான தேவையைக் கொண்டிருந்தது.[158] பண்டைக் கால தெற்காசியாவில் ஓர் ஒட்டு மொத்தமாக, தனியாக அரிசி கொல்லைப்படுத்தபட்ட நிகழ்வுக்கான ஆதாரங்களையும் பேட்சு மற்றும் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த அரிசி வகைகள் காட்டுப் பயிரான ஒரைசா நிவாரவை அடிப்படையாகக் கொண்டவையாகும். பொ. ஊ. மு. 2000ஆம் ஆண்டு வாக்கில் உண்மையான ஈர நில அரிசியான ஒரைசா சட்டைவா ஜப்பானிக்கா வருவதற்கு முன்னர் உள்ளூர் ஒரைசா சட்டைவா இண்டிகா அரிசி வேளாண்மையானது "ஈர நில" மற்றும் "காய்ந்த நில" வேளாண்மையின் ஒரு கலவையான உள்ளூர் வேளாண்மையின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.[159] உணவுதொல்லியல் கண்டுபிடிப்புகளின் படி, சிந்துவெளி நாகரிக மக்கள் மாடுகள், எருமைகள், ஆடு, பன்றி மற்றும் கோழி போன்ற அசைவ உணவுகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.[160][161] பால் பொருட்களின் எஞ்சியவையும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்சயேதா சூரியநாராயணன் மற்றும் குழுவினர்,[ae] கிடைக்கப்பெறும் சான்றுகள் நாகரிகப் பகுதி முழுவதும் சமையல் முறைகளானவை ஒரே மாதிரியாக இருந்தன என்பதைக் காட்டுகின்றன எனக் குறிப்பிடுகின்றனர்: பால் பொருட்கள் (குறைந்த அளவில்), அசை போடும் விலங்குகளின் மாமிசம் மற்றும், அசை போடாத விலங்குகளின் மாமிசக் கொழுப்பு, தாவரங்கள் அல்லது இத்தகைய பொருட்களின் கலவையாக உணவுப் பொருட்கள் இருந்தன.[162] நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலத்தின் போதும் உணவு முறையானது ஒரே மாதிரியாகவே இருந்தது.[162] ஏழு உணவுப் பந்துகள் ("இலட்டுகள்") கெட்டுப் போகாத வடிவத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் காளைகளின் இரண்டு உருவங்கள், ஒரு கையடக்க தாமிர வாசி ஆகியவை மேற்கு இராசத்தானில் இருந்து 2017ஆம் ஆண்டின் அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[163] இவை பொ. ஊ. மு. 2600ஆம் ஆண்டுக்குத் தோராயமாக காலமிடப்படுகின்றன. இந்த இலட்டுகள் இருபுற வெடி கனிகள், முதன்மையாக பாசிப் பயறு மற்றும் தானியங்களால் உருவாக்கப்பட்டிருந்தன.[163] காளை உருவங்கள், வாசி மற்றும் ஒரு முத்திரை இதற்கு அருகிலேயே கிடைக்கப் பெற்றமையால் வரலாற்றாளர்கள் இந்த உணவுப் பந்துகளை சமய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதுகின்றனர்.[163][164] மொழிசிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் மொழியியல் ரீதியாக முதனிலைத் திராவிட மொழிகளைப் பேசினர் என்றும், முதனிலைத் திராவிட மொழிகளின் பிரிவானது பிந்தைய அரப்பா பண்பாட்டின் வீழ்ச்சியுடன் ஒத்துப் போகிறது என்றும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[165] பின்லாந்தைச் சேர்ந்த இந்தியவியலாளரான அஸ்கோ பார்ப்போலா சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளின் சீரான தன்மையானது பரவலாக வேறுபட்ட மொழிகள் பயன்படுத்தப்பட்டிருந்திருக்க வேண்டும் என்ற நிலைக்கு மாற்றாக அமைகின்றன என்கிறார். சிந்துவெளி மக்களின் மொழியாகத் திராவிட மொழியின் தொடக்க கால வடிவம் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.[166] தற்போது, திராவிடக் குடும்ப மொழிகளானவை பெரும்பாலும் தென்னிந்தியா மற்றும், வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் மட்டுமே அதிகம் பேசப்படுகின்றன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக, எஞ்சிய இந்தியா மற்றும் பாக்கித்தான் (பிராகுயி மொழி) முழுவதும் இவை தொடர்ந்து பேசப்படுகின்றன. இது இவரின் கருத்தியலுக்கு நம்பகத் தன்மையைக் கொடுக்கிறது. கெக்கார்ட்டி மற்றும் ரென்பிரேவ் ஆகியோர், திராவிட மொழிகளானவை இந்தியத் துணைக் கண்டத்திற்கு வேளாண்மை பரவியதுடன் சேர்ந்து பரவியிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.[167] தாவீது மெக்கால்பின் திராவிட மொழிகளானவை இந்தியாவிற்கு ஈலாம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்களுடன் கொண்டு வரப்பட்டன என்கிறார்.[af] தனது தொடக்க ஆய்வுகளில் ரென்பிரேவ் முதனிலைத் திராவிட மொழியானது இந்தியாவிற்கு ஈரானின் வளமான பிறை பிரதேசப் பகுதியில் இருந்து விவசாயிகளால் கொண்டு வரப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.[168][169][170][ag] ஆனால், மிக சமீபத்தில் கெக்கார்ட்டி மற்றும் ரென்பிரேவ், "திராவிடத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை விளக்குவதற்கு இன்னும் ஏராளமான பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது" எனக் குறிப்பிடுகின்றனர். இவர்கள் மேலும், "மொழித் தகவல்களை மெக்கால்பின் பகுப்பாய்வு செய்தது மற்றும் அவரது கருத்துக்களானவை பரவலாக இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை" என்று குறிப்பிடுகின்றனர்.[167] கெக்கார்ட்டி மற்றும் ரென்பிரேவ் தகவல்களுடன் ஏராளமான கருத்தியல்கள் ஒத்துப் போகின்றன என முடிக்கிறார். இதை "மொழியியல் அறிஞர்களின் பார்வைக்கு விடுவதாகவும்" குறிப்பிட்டுள்ளனர்.[167][ai] ஒரு 2021ஆம் ஆண்டு ஆய்வில் பகதா அன்சுமாலி முகோபத்யாய் பண்டைய சிந்துப் பகுதியில் ஒரு முதனிலைத் திராவிட மொழியின் இருப்பிற்கான மொழியியல் பகுப்பாய்வை முன் வைத்துள்ளார். பல், பற்குச்சி மற்றும் யானை ஆகியவற்றுக்கான திராவிட வேர்ச் சொற்களைப் பல்வேறு சம கால பண்டைய நாகரிகங்களில் பயன்படுத்தி இவர் இதை முன் வைத்துள்ளார்.[175] சாத்தியமான எழுத்து வடிவம்![]() 400 மற்றும் 600க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் தனித்துவமான சிந்துவெளிக் குறியீடுகளானவை[176] முத்திரைகள், சிறிய பட்டிகைகள், மட்பாண்டக் குடுவைகள் மற்றும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பிற பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சிந்துவெளி நகரமான தோலாவிராவின் உள் நகர்க் காப்பரணின் வாயிற் கதவில் ஒரு காலத்தில் தொங்க விடப்பட்டதாகத் தோன்றும் ஒரு "பெயர்ப் பலகையும்" அடங்கும். பொதுவாக சிந்துவெளிப் பொறிப்புகள் நீளத்தில் ஐந்து எழுத்துக்களைக் கொண்டவையாக உள்ளன.[177] தோலாவிரா "பெயர்ப் பலகையைத்" தவிர்த்து இதில் பெரும்பாலானவை சிறியவையாகவே உள்ளன. எந்த ஒரு தனியான பொருளின் மீதும் எழுதப்பட்டதில் மிக நீளமானவை ஒரு தாமிர தகட்டில் பொறிக்கப்பட்ட[178] 34 குறியீடுகளை நீளமாகக் கொண்ட சொல்லாகும். இந்த பொறிப்புகளைச் சான்றாகக் கொண்டு சிந்துவெளி நாகரிகமானது பொதுவாக ஒரு கற்றறிந்த சமூகமென்று குறிப்பிடப்படும் அதே நேரத்தில், இத்தகைய விளக்கமானது பார்மர், இசுபுரோத் மற்றும் விட்செல் (2004) ஆகிய வரலாற்றாளர்களால் ஐயத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.[179] இவர்கள் சிந்துவெளி வடிவமானது ஒரு மொழியைக் குறிப்பிடவில்லை என்றும், மாறாக, அண்மைக் கிழக்கு மற்றும் பிற சமூகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட மொழியல்லாத குறியீட்டு வடிவங்களின் ஒரு மாதிரியை ஒத்தவை என்றும் குறிப்பிடுகின்றனர். இவை குடும்பங்கள், இனங்கள், கடவுள்கள் மற்றும் சமயக் கருத்தியல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர். பிறர் சில நேரங்களில் இந்தக் குறியீடுகள் பொருளாதாரப் பரிமாற்றங்களுக்கு என தனித்துவமாகப் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர். ஆனால், பல சமயப் பொருட்களின் மீதான சிந்துவெளிக் குறியீடுகளின் தோற்றமானது எவ்வாறு என்பதை இந்தக் கருத்தியலானது விளக்கவில்லை. இதில் பெரும்பாலானவை வார்த்தல் முறை மூலம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. எந்த பிற தொடக்க கால பண்டைய நாகரிங்களிலும் இத்தகைய மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட பொறிப்புகளானவை இவற்றை ஒத்த ஒரு முறையைக் கொண்டிருக்கவில்லை.[180] பி. என். ராவ் மற்றும் குழுவினரின் ஒரு 2009ஆம் ஆண்டு ஆய்வானது, சயின்சு இதழில் பதிப்பிக்கப்பட்டது. கணினி அறிவியலாளர்கள் பல்வேறு மொழியியல் வடிவங்கள் மற்றும் மொழியல்லாத அமைப்புகளுடன் குறியீடுகளின் அமைப்பு முறையை ஒப்பிட்டு சிந்துவெளி எழுத்து முறையின் வடிவமானது பேசும் சொற்களை நெருங்கியதாக உள்ளது எனக் கண்டறிந்தனர். இதில் மரபணு ஆய்வு மற்றும் ஒரு கணினி செயற் கட்டளை மொழியும் பயன்படுத்தப்பட்டது. இன்னும் அறியப்படாத ஒரு மொழியை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற கருத்தியலுக்கு இந்த ஆய்வானது ஆதரவளித்தது.[181][182] பார்மர், இசுபுரோத் மற்றும் விட்செல் ஆகியோர் இந்தக் கண்டுபிடிப்பை கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். "நடைமுறை உலக மொழியல்லாத அமைப்புகளுடன்" சிந்துவெளிக் குறியீடுகளை ராவ் மற்றும் குழுவினர் உண்மையில் ஒப்பிடவில்லை என்று குறிப்பிடுகின்றனர். மாறாக, "2,00,000 தோராயமான கட்டளையிடப்பட்ட குறியீடுகள் மற்றும் மற்றொரு 2,00,000 முழுவதுமாக கட்டளையிடப்பட்ட குறியீடுகளைக் கொண்ட, இரண்டு ஒட்டு மொத்தமாக செயற்கையாக அறிஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை இதில் பயன்படுத்தியுள்ளனர்" என்று குறிப்பிடுகின்றனர். "இது நடைமுறை உலகின் அனைத்து மொழியல்லாத குறியீட்டு அமைப்புகளையும் பிரநிதித்துவப்படுத்தவதாக" அவர்கள் ஐயத்திற்குரிய வகையில் குறிப்பிடுகின்றனர் என்கின்றனர்.[183] பார்மர் மற்றும் குழுவினர் நடுக் கால குறியீட்டு மொழிகள் போன்ற மொழியல்லாத அமைப்புகளுடன் ஓர் ஒப்பீட்டையும் கூட குறிப்பிடுகின்றனர். இவை இயற்கையான மொழிகளுடன் சிந்துவெளிக் குறியீடுகளால் ராவ் மற்றும் குழுவினர் பெற்ற அதே போன்ற முடிவுகளைக் கொடுப்பதாகக் குறிப்பிடுகின்றனர். மொழி அமைப்புகளிலிருந்து மொழியல்லாத அமைப்புகளை ராவ் மற்றும் குழுவினரால் பயன்படுத்திய முறையால் பிரித்தறிய இயலவில்லை என்று இவர்கள் முடிக்கின்றனர்.[184] முத்திரைகளின் மீதுள்ள செய்திகளானவை ஒரு கணினியால் பொருள் காணும் அளவை விட மிகச் சிறியதாக உள்ளன. ஒவ்வொரு முத்திரையும் ஒரு தனித்துவமான கலவையில் குறியீடுகளைக் கொண்டுள்ளன. ஒரு போதிய விளக்கத்தைக் கொடுப்பதற்கு ஒவ்வொரு நிரல் ஒழுங்கும் மிகச் சில எடுத்துக்காட்டுகளையே கொண்டுள்ளன. படங்களுடன் காணப்படும் குறியீடுகள் ஒரு முத்திரையிலிருந்து மற்றொரு முத்திரைக்கு மாறுபடுகின்றன. படங்களிலிருந்து குறியீடுகளுக்கான ஒரு பொருளைத் தருவிப்பது என்பது இதன் காரணமாக இயலாததாக உள்ளது. இருந்த போதிலும், முத்திரைகளின் பொருள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விளக்கங்கள் பல பொருள்களை உடையவையாகவும், இடத்திற்கு இடம் மாறுபட்டும் காணப்படுகின்றன.[184]:69 சிந்துவெளி முத்திரைகள் மற்றும் பொறிப்புகளின் தரவகம் (1987, 1991, 2010) என்ற நூலில் கிடைக்கப் பெறும் பொறிப்புகளின் ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் பல பதிப்பிக்கப்பட்டுள்ளன. இது அஸ்கோ பார்ப்போலா மற்றும் அவரது சக அறிஞர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. 1920கள் மற்றும் 1930களில் எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தொலைந்து போன அல்லது திருடப்பட்ட பொறிப்புகளின் புகைப்படங்கள் சமீபத்திய பிரதியில் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கடைசி சில தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பல பொறிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னர், ஆய்வாளர்கள் தரவகத்தில் மார்ஷல் (1931), மெக்கே (1938, 1943) மற்றும் வீலர் (1947) ஆகியோரின் அகழ்வாய்வுக் குறிப்புகளில் எடுக்கப்பட்ட சிறிய புகைப்படங்களின் மூலப் பொருட்களைச் சேர்க்க வேண்டியிருந்தது அல்லது மிக சமீபத்திய அங்கொன்றும் இங்கொன்றுமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டவற்றைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.[சான்று தேவை] சமயம்![]() சிந்துவெளி மக்களின் சமயம் மற்றும் நம்பிக்கை அமைப்பானது குறிப்பிடத்தக்க அளவுக்குக் கவனத்தைப் பெற்றுள்ளது. இப்பகுதியில் பிந்தைய காலத்தில் வளர்ச்சியடைந்த இந்திய சமயங்களின் தெய்வங்களின் முந்தைய வடிவங்கள் மற்றும் சமயப் பழக்க வழக்கங்களை அடையாளப்படுத்துதல் என்ற பார்வையில் குறிப்பாகக் கவனத்தைப் பெற்றுள்ளன. எனினும், சான்றுகள் சிலவே உள்ளதாலும், அவையும் பல்வேறு விளக்கங்களுக்கு உள்ளாவதாலும், சிந்துவெளி வரிவடிவமானது தொடர்ந்து அறியப்படாமலேயே உள்ள உண்மையாலும் இவற்றின் முடிவுகளானவை ஒரு பகுதி ஊகங்களாகவும், மிக பிந்தைய இந்து சமய அணுகு முறையில் இருந்து கடந்த காலம் குறித்த பின்னோக்கிய பார்வையைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளது.[185] அரப்பா களங்களைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகளின் இந்து சமய விளக்கங்களுக்கான பாணியை இப்பகுதியில் தொடங்கி வைத்த தொடக்க கால மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய பணியானது யோவான் மார்ஷலுடையதாகும்.[186] சிந்துவெளி சமயத்தின் முக்கியமான பின் வரும் அம்சங்களை 1931ஆம் ஆண்டு இவர் அடையாளப்படுத்தினார்: ஒரு பெரும் ஆண் கடவுள் மற்றும் ஒரு தாய்க் கடவுள்; விலங்குகள் மற்றும் தாவரங்களைத் தெய்வமாக்குதல் அல்லது வழிபடும் முறை; லிங்கத்தின் ஒரு குறியீட்டுப் பிரதிநிதித்துவம்; சமயப் பழக்க வழக்கங்களில் குளியல் மற்றும் நீரைப் பயன்படுத்துதல். மார்ஷலின் விளக்கங்களானவை பெரும் அளவுக்கு விவாதிக்கப்பட்டுள்ளன, தொடர்ந்து வந்த தசாப்தங்களில் சில நேரங்களில் ஐயத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.[187][188] ஒரு சிந்துவெளி முத்திரையானது ஒரு கொம்புடைய தலைப் பாகையையுடைய ஓர் அமர்ந்திருக்கும் உருவத்தைக் காட்டுகிறது. இதற்கு அநேகமாக மூன்று தலைகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதைச் சுற்றி விலங்குகள் காணப்படுகின்றன. இந்துக் கடவுள் சிவனின் (உருத்திரன்) தொடக்க கால வடிவம் என இந்த உருவத்தை மார்ஷல் அடையாளப்படுத்தினார். சிவன் துறவு, யோகக் கலை மற்றும் லிங்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறார். விலங்குகளின் இறைவனாகக் கருதப்படுகிறார். பெரும்பாலும் மூன்று கண்களை உடையவராகக் காட்டப்படுகிறார். இவ்வாறாக, இந்த முத்திரையானது பசுபதி முத்திரை என்று அறியப்படத் தொடங்கியது. சிவனின் ஓர் அடை மொழியான பசுபதிநாதர் (அனைத்து விலங்குகளின் இறைவன்) என்ற பெயரை இது பெற்றுள்ளது.[187][189] மார்ஷலின் விளக்கமானது சில ஆதரவைப் பெற்ற அதே நேரத்தில், பல விமர்சகர்கள் மற்றும் இவரது ஆதரவாளர்களும் கூட பல மறுப்புகளைத் தெரிவித்துள்ளனர். இந்த உருவமானது மூன்று முகங்களையோ அல்லது யோக நிலையிலோ இல்லை மற்றும் வேத இலக்கியத்தில் உருத்திரன் என்பவர் காட்டு விலங்குகளைப் பாதுகாப்பவர் கிடையாது என தோரிசு சீனிவாசன் வாதிடுகிறார்.[190][191] எர்பெர்ட்டு சுல்லிவன் மற்றும் ஆல்பு கில்தேபெய்தெல் ஆகியோரும் மார்ஷலின் முடிவுகளை நிராகரித்துள்ளனர். சுல்லிவன் இந்த உருவம் ஒரு பெண் உருவம் என்றும், கில்தேபெய்தெல் இந்த உருவத்தை எருமை வடிவக் கடவுளான மகிசன் என்றும், சுற்றியுள்ள விலங்குகளை நான்கு திசைகளுக்கான தெய்வங்களின் வாகனங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.[192][193] 2002ஆம் ஆண்டில் எழுதிய கிரிகோரி போசெல் இந்த உருவத்தை ஒரு தெய்வமாக எடுத்துக் கொள்வது ஏற்புடையதாக இருக்கும் அதே நேரத்தில், இதை எருமையுடன் தொடர்புபடுத்துவது, இதன் அமர்ந்திருக்கும் நிலையைச் சடங்குகளுடன் கூட தொடர்புபடுத்துவது, இதைத் தொடக்க கால சிவன் என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தலாக இருக்கும் என்று கருதுகிறார்.[189] இந்த முத்திரையை தொடக்க கால சிவனுடன் மார்ஷல் தொடர்புபடுத்தியதற்கான விமர்சனங்கள் இருந்த போதிலும், விலாசு சங்கவே போன்ற சில சைன அறிஞர்களால் இந்த உருவமானது தீர்த்தங்கரர் ரிசபநாதர் என்று விளக்கப்படுகிறது.[194] எயின்ரிச் ராபர்ட் சிம்மர் மற்றும் தாமசு மெக்கெவில்லே போன்ற வரலாற்றாளர்கள் முதல் சைன தீர்த்தங்கரரான ரிசபநாதர் மற்றும் சிந்துவெளி நாகரிகத்துக்கு இடையில் ஒரு தொடர்பு இருப்பதாக நம்புகின்றனர்.[195][196] ஏராளமான பெண் உருவங்கள் அகழ்வாய்வு செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு தாய் கடவுளின் ஒரு வழிபாட்டு முறையானது இருந்திருக்கலாம் என்று மார்ஷல் ஒரு கருத்தியலை முன் வைத்தார். இந்து சமயப் பிரியான சாக்தத்தின் முன்னோடி இது என எண்ணினார். எனினும், சிந்துவெளி மக்களின் வாழ்வில் பெண் உருவங்களின் பங்கு குறித்து தெளிவாகத் தெரியவில்லை. மார்ஷலின் கருத்தியலுக்கான சான்றானது "உறுதியானதாக" இல்லை என போசெல் கருதுகிறார்.[197] புனித லிங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தியதாக மார்ஷல் விளக்கம் அளித்த சில கற்களானவை தற்போது குழவியாக பயன்படுத்தப்பட்டவையாகவோ அல்லது விளையாட்டுக்களில் எண்ணுவதற்காகப் பயன்படுத்தப்பட்டவையாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. அதே நேரத்தில், யோனியைப் பிரதிநிதித்துப்படுத்தியதாக மார்ஷல் கருதிய மோதிர வடிவல் கற்களானவை தூண்களை நிறுத்தப் பயன்படுத்தப்பட்ட கட்டடக்கலை அம்சங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், இவற்றின் சமய முக்கியத்துவத்துக்கான சாத்தியமானது நிராகரிக்கப்படக் கூடியதாக இல்லை.[198] பல சிந்துவெளி முத்திரைகள் விலங்குகளைக் காட்டுகின்றன. அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதை சில சித்தரிக்கின்றன. அதே நேரத்தில், பிற வெவ்வேறு விலங்குகளின் உடல் பாகங்களை ஒன்றாகக் கொண்ட சித்தரிப்புகள் உள்ளன. மொகஞ்சதாரோவைச் சேர்ந்த ஒரு முத்திரையானது ஒரு பாதி-மனிதன், ஒரு பாதி-எருமை உருவத்தை உடைய ஓர் இராட்சதன் ஒரு புலியைத் தாக்குவதைக் காட்டுகிறது. கிலுகாமிசுடன் சண்டையிடுவதற்காகப் பெண் தெய்வமான அருருவால் உருவாக்கப்பட்ட, சுமேரியப் புராணங்களில் உள்ள ஓர் இராட்சதனை இது ஒரு வேளை குறிக்கலாம் என்று கருதப்படுகிறது.[199] சம கால எகிப்திய மற்றும் மெசொப்பொத்தேமியா நாகரிகங்களுக்கு மாறாக, சிந்து வெளியானது எந்த ஒரு நினைவுச் சின்ன அரண்மனைகளையும் கொண்டிருக்கவில்லை. அகழ்வாய்வு செய்யப்பட்ட நகரங்கள் இச்சமூகமானது தேவையான பொறியியல் அறிவைக் கொண்டிருப்பதைக் காட்டும் போதும் கூட இவ்வாறு கொண்டிருக்கவில்லை.[200][201] சமய விழாக்கள் என்று ஏதேனும் இருந்தால் அவை பெரும்பாலும் தனி வீடுகள், சிறிய கோயில்கள் அல்லது வெட்ட வெளியிலேயே நடந்திருக்க வேண்டும் என்பதை இது பரிந்துரைக்கிறது. மார்ஷல் மற்றும் பிந்தைய அறிஞர்களால் ஏராளமான களங்கள் சமயப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அநேகமாக அர்ப்பணிக்கப்பட்டவை என்று எண்ணப்படுகின்றன. ஆனால், தற்போது மொகஞ்சதாரோவில் உள்ள பெரும் குளியலிடம் மட்டுமே சமயப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகப் பரவலாக எண்ணப்படுகிறது. இது சடங்கு தூய்மைப்படுத்தலுக்கான ஓர் இடமாக இருந்தது.[197][202] அரப்பா நாகரிகத்தின் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைகளானவையாக பகுதியளவு சமாதி முறை (இதில் உடலானது எலும்புகளாக ஆக்கப்பட்டு பிறகு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது) மற்றும் உடல் தகனம் செய்யப்படும் முறையும் கூட குறிப்பிடப்படுகின்றன.[203][204] பிந்தைய அரப்பா![]() ![]() பொ. ஊ. மு. 1900 வாக்கில் ஒரு படிப் படியான வீழ்ச்சிக்கான அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கின. பொ. ஊ. மு. 1700 வாக்கில் பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டன. அரப்பா காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் குறித்த சமீபத்திய ஆய்வானது, சிந்துவெளி நாகரிகத்தின் முடிவானது தனி நபர்களுக்கிடையிலான வன்முறை மற்றும், தொழு நோய் மற்றும் காச நோய் போன்ற தொற்று நோய்களின் அதிகரிப்பைக் கண்டது என விளக்குகிறது.[206][207] வரலாற்றாளர் உபிந்தர் சிங்கின் கூற்றுப் படி, "பிந்தைய அரப்பா கால கட்டத்தால் வெளிக் காட்டப்படும் பொதுவான தன்மையானது நகர்ப் புறப் பகுதி இணைப்புகளின் ஒரு சிதறல் மற்றும் கிராமப் புறப் பகுதிகளின் ஒரு விரிவாக்கம் ஆகும்".[208] 1900 முதல் பொ. ஊ. மு. 1700க்கு இடைப்பட்ட தோராயமான காலத்தின் போது சிந்துவெளி நாகரிகத்தின் பகுதிக்குள் பல மாகாணப் பண்பாடுகள் உருவாகத் தொடங்கின. பஞ்சாப் பகுதி, அரியானா, மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் கல்லறை எச் கலாச்சாரமும், சிந்து மாகாணத்தில் சுகர் கலாச்சாரமும், குசராத்தில் ரங்பூர் கலாச்சாரமும் (இது ஒளிரும் சிவப்பு மட்பாண்டங்களால் பிரநிதித்துவப்படுத்தப்படுகிறது) தோன்றின.[209][210][211] பலுச்சிசுத்தானத்தின் பிராக் மற்றும் இந்தியாவின் மகாராட்டிரத்தின் தைமாபாத் ஆகியவை அரப்பா பண்பாட்டின் பிந்தைய கால கட்டத்துடன் தொடர்புடைய பிற களங்கள் ஆகும்.[103] சோலிஸ்தான் பாலைவனத்தில் உள்ள குத்வலா, குசராத்தின் பேட் துவாரகை மற்றும் மகாராட்டிரத்தின் தைமாபாத் ஆகியவை பிந்தைய அரப்பா களங்களில் பெரியவையாக உள்ளன. இவற்றை நகர்ப்புற மையங்கள் எனக் கருதலாம். ஆனால், முதிர்ந்த அரப்பா நகரங்களுடன் ஒப்பிடும் போது இவை சிறியவையாகவும், எண்ணிக்கையில் குறைவானவையாகவும் இருந்தன. பேட் துவாரகையானது அரண்களை உடையதாக இருந்தது. பாரசீக வளைகுடா பகுதியுடன் தொடர்ந்து தொடர்புகளைக் கொண்டிருந்தது. ஆனால், பொதுவாகவே நீண்ட தூர வணிகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது.[212] மற்றொரு புறம் இந்தக் காலமானது வேளாண்மை அடிப்படையில் ஒரு வேறுபாட்டைக் கண்டது. பல்வேறு வகையான பயிர்கள், பல பயிர் முறையின் உருவாக்கம், மேலும் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கிச் செல்லும் போது கிராமப் புறக் குடியிருப்புகளாக மாறிய தன்மை ஆகியவற்றைக் கண்டது.[213] பிந்தைய அரப்பா கால கட்டத்தின் மட்பாண்டங்களானவை "முதிர்ந்த அரப்பா மட்பாண்டப் பழக்க வழக்கங்களுடன் சில தொடர்புகளைக் காட்டுகின்றன" என்று குறிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில், தனித்துவமான வேறுபாடுகளையும் கூட கொண்டிருந்தன.[214] சில நூற்றாண்டுகளுக்கு பல களங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றின் நகர்ப்புற அம்சங்கள் குன்றி, மறைந்தன. எடைக் கற்கள் மற்றும் பெண் உருவங்கள் போன்ற முன்னர் பொதுவானதாக இருந்த பண்டைய பொருட்கள் அரிதானதாக மாறின. சில வட்ட முத்திரைகள் வடிவியல் கணிதம் சார்ந்த வடிவங்களுடன் காணப்படுகின்றன. ஆனால், நாகரிகத்தின் முதிர்ந்த கால கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிந்துவெளி வரிவடிவமானது தற்போது அரிதானது. தற்போது பானைகளின் பொறிப்புகளில் மட்டுமே அது காணப்படுகிறது.[214] ஒளிரும் மட்பாண்டங்கள், கண்ணாடி மற்றும் கல் பாசிகளை உருவாக்குதலில் சில புதுமைகளை உள்ளூர்ப் பண்பாடுகள் அதே நேரத்தில் காட்டுகின்ற போதும், நீண்ட தூர வணிகமும் கூட ஒரு வீழ்ச்சியைக் கண்டது.[103] நகர்ப் புற வசதிகளான கழிவு நீர் அமைப்புகள் மற்றும் பொதுக் குளியல் இடங்கள் பேணப்படவில்லை. புதிய கட்டடங்கள் "மோசமாகக் கட்டமைக்கப்பட்டன". கல் சிற்பங்கள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டன. விலை உயர்ந்த பொருட்கள் சில நேரங்களில் குவியல்களாக மறைத்து வைக்கப்பட்டன. மக்களிடையே அமைதியின்மை இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விலங்குகளின் இறந்த உடல்கள் மற்றும் மனிதர்களின் உடல்களும் கூட புதைக்கப்படாமல் தெருக்களிலும், கைவிடப்பட்ட கட்டடங்களிலும் அப்படியே விடப்பட்டன.[215] பொ. ஊ. மு. 2வது ஆயிரமாண்டின் பிந்தைய பாதியின் போது பிந்தைய அரப்பா கால கட்டத்தைத் தாண்டிய நகர்ப் புறக் குடியிருப்புகளில் பெரும்பாலானவை முழுவதுமாகக் கைவிடப்பட்டன. தொடர்ந்து வந்த பொருள்சார் பண்பாடானது தற்காலிக ஆக்கிரமிப்பைப் பொதுவான இயல்பாகக் கொண்டிருந்தது. "நாடோடிகள் மற்றும் முதன்மையாக மேய்ச்சல் வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த ஒரு மக்களின் முகாம்களாக" இவை இருந்தன. இவர்கள் "ஒழுங்கற்ற, கைகளால் செய்யப்பட்ட மட்பாண்டங்களைப்" பயன்படுத்தினர்.[216] எனினும், பிந்தைய அரப்பா மற்றும், பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில், முதன்மையாக சிறிய கிராமப்புற குடியிருப்புகளில் இதைத் தொடர்ந்து வந்த பண்பாட்டு காலப் பகுதியைச் சேர்ந்த களங்கள் தமக்கு இடையில் ஒரு பெரும் தொடர்ச்சியையும், ஒற்றுமைகளையும் கொண்டிருந்தன.[213][217] ஆரியப் புலப்பெயர்வு![]() 1953ஆம் ஆண்டு சர் மோர்டிமர் வீலர் நடு ஆசியாவிலிருந்து வந்த ஓர் இந்தோ-ஐரோப்பியப் பழங்குடியினமான "ஆரியர்களின்" படையெடுப்பானது சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது என்ற கருத்தை முன் வைத்தார். சான்றாக, மொகஞ்சதாரோவின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 37 எலும்புக் கூடுகளின் ஒரு குழு மற்றும் வேதங்களின் பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் மற்றும் கோட்டைகளை இவர் குறிப்பிட்டார். எனினும், இந்த எலும்புக் கூடுகள் நகரம் கைவிடப்பட்டதற்குப் பிந்தைய ஒரு காலத்தைச் சேர்ந்தவையாகவும், நகர்க் காப்பரணுக்கு அருகில் இதில் ஓர் எலும்புக் கூடு கூட கிடைக்கப் பெறவில்லை என்பதன் காரணமாகவும் அறிஞர்கள் சீக்கிரமே வீலரின் கருத்தியலை நிராகரிக்கத் தொடங்கினர். 1994இல் கென்னத் கென்னடியால் எலும்புக் கூடுகள் குறித்த தொடர்ந்து வந்த ஆய்வுகளானவை மண்டை ஓடுகளில் காணப்பட்ட தடங்களானவை அரிப்பால் ஏற்பட்டவை என்றும், வன்முறையால் நிகழவில்லை என்றும் காட்டின.[218] கல்லறை எச் கலாச்சாரத்தில் (பஞ்சாப் பகுதியில் பிந்தைய அரப்பா கால கட்டம்) அஸ்திக் கலசங்களின் மீது தீட்டப்பட்ட சில வடிவங்கள் வேத இலக்கியத்தின் வழியாக விளக்கப்பட்டுள்ளன: எடுத்துக்காட்டாக, கூட்டு உடம்பையுடைய மயில்களுக்குள் ஒரு சிறிய மனித வடிவம் உள்ளது, இது இறந்தவர்களின் ஆன்மா என விளக்கப்படுகிறது; ஒரு வேட்டை நாய் உள்ளது, இது இறப்பிற்கான இந்துக் கடவுள் எமனின் வேட்டை நாய் என்று கருதப்படுகிறது.[219][220] இந்தக் காலத்தின் போது புதிய சமய நம்பிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதை இது அநேகமாகக் காட்டலாம். ஆனால், அரப்பா நகரங்களை அழித்தவர்களாக கல்லறை எச் கலாச்சார மக்களை எடுத்துக் கொள்ளக் கூடிய கருத்தியலுக்கு தொல்லியல் சான்றுகள் ஆதரவளிக்கவில்லை.[221] காலநிலை மாற்றமும், வறட்சியும்சிந்துவெளி நாகரிகம் ஓரிடமயமாக்கப்பட்டதற்குப் பங்களித்த காரணங்களாக ஆற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றங்கள்[222] மற்றும் புவி சூடாதல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. புவி சூடாதல் நிகழ்வானது மத்திய கிழக்கின் அண்டைப் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான காரணமாகவும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.[223][224] 2016 நிலவரப்படி பல அறிஞர்கள் வறட்சி மற்றும், எகிப்து மற்றும் மெசொப்பொத்தோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட ஒரு வீழ்ச்சி ஆகியவையே சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் என்று நம்புகின்றனர்.[225] சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான புவியியல் மாற்றமானது "4,200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் வறட்சி மற்றும் புவி குளிர்ந்த திடீர் நிகழ்வின்" காரணமாக அநேகமாக நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். கோலோசின் காலத்தின் தற்போதைய நிலையான மேகாலயக் காலம் தொடங்கியதை இது குறித்தது.[226] பருவப் பெயர்ச்சிக் காற்றுகளின் நீர் வழங்கலை இந்த ஆற்று அமைப்பு சார்ந்திருந்தது. பொ. ஊ. மு. 1800ஆம் ஆண்டு வாக்கில் இருந்து சிந்துவெளிக் காலநிலையானது குறிப்பிடத்தக்க அளவுக்கு குளிர்ந்தும், வறண்டும் போனது. அந்நேரத்தில் பருவப் பெயர்ச்சிக் காற்றின் பொதுவான, பலவீனமடைந்த நிலையுடன் இது தொடர்புபடுத்தப்படுகிறது.[4] இந்தியப் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளின் மழை வழங்கலானது குறைந்தது. வறட்சி அதிகரித்தது.[4][227][228] உறுதியாக நம்ப முடியாத மற்றும் விரிவு குறைவான வெள்ளங்களுக்கு இது வழி வகுத்தது. இவை பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உணவளித்த வேளாண்மையை நீண்ட காலத்திற்குத் தொடர இயலாத நிலைக்கு உள்ளாக்கியன. வறட்சியானது நாகரிகம் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாகும் அளவுக்கு நீர் வழங்கலைக் குறைத்தது. இதன் மக்களை கிழக்கு நோக்கிச் சிதற வைத்தது.[229][230][105][e] கியோசன் மற்றும் குழுவினரின் (2012) கூற்றுப் படி, சிந்துவெளி நாகரிகக் குடியிருப்புவாசிகள் நீர்ப்பாசன செயல் வல்லமைகளைக் கொண்டிருக்கவில்லை. கோடை கால வெள்ளங்களுக்கு வழி வகுத்த பருவப் பெயர்ச்சி மழையையே முதன்மையாகச் சார்ந்திருந்தனர். பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் தொடர்ந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த போது வேளாண்மைச் செயல்பாடுகளை நீண்ட காலம் தக்க வைக்க கூடிய வெள்ளங்கள் உறுதியாக நம்பக் கூடியவையாக இல்லை. பிறகு குடியிருப்பு வாசிகள் கிழக்கே இருந்த கங்கை வடி நிலத்தை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். அங்கு இவர்கள் சிறிய கிராமங்கள் மற்றும் தனித் தனியான பண்ணைகளை நிறுவினர். இந்த சிறிய சமூகங்களில் உற்பத்தி செய்யப்பட்ட சிறிய அளவு உபரிப் பொருட்கள் வணிகத்தின் வளர்ச்சிக்குப் போதுமானதாக இல்லை. நகரங்கள் வீழ்ச்சியடைந்தன.[231][232] தொடர்ச்சியும், உடன் வாழ்தலும்அரப்பாவின் வீழ்ச்சியே மக்களைக் கிழக்கு நோக்கி இடம் பெயரச் செய்தது என்பதை தொல்லியல் அகழ்வாய்வுகள் காட்டுகின்றன.[233] போசெலின் கூற்றுப்படி, பொ. ஊ. மு. 1900க்குப் பிறகு தற்போதைய இந்தியாவிலுள்ள களங்களின் எண்ணிக்கையானது 218லிருந்து 853ஆக உயர்கிறது. ஆந்த்ரூ லாவ்லர் என்பவர் "கங்கைச் சமவெளியை ஒட்டிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் பொ. ஊ. மு. 1200ஆம் ஆண்டு வாக்கில் நகரங்கள் அங்கு வளர்ச்சியடையத் தொடங்கின. இது அரப்பா கைவிடப்பட்டதற்கு வெகு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரும், இதற்கு முன்னர் எண்ணப்பட்டதை விட அதிக காலத்திற்கு முன்னரும் நடைபெற்றுள்ளது" என்று குறிப்பிடுகிறார்.[225][aj] ஜிம் சாப்பரின் கூற்றுப்படி, உலகின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே பண்பாட்டு வளர்ச்சிகளின் ஒரு தொடர்ச்சியானது இங்கும் நடந்தது. தெற்காசியாவில் நகரமயமாக்கலின் இரண்டு முதன்மையான கால கட்டங்களுக்கு இடையிலான இணைப்பாக இது உள்ளது.[235] அரியானாவின் பகவான்புரா போன்ற களங்களில் தொல்லியல் அகழ்வாய்வுகளானவை பிந்தைய அரப்பாவின் கடைசி கால கட்டத்தின் மட்பாண்டங்கள் மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டின் தொடக்க கால கட்டத்தின் மட்பாண்டங்கள் ஆகியவை ஒரு காலத்தைப் பகிர்ந்து கொண்டிருந்திருக்கின்றன என்று கண்டறிந்துள்ளன. இரண்டாவது பண்பாடானது வேத காலப் பண்பாட்டுடன் தொடர்புடையதாகும். இது பொ. ஊ. மு. 1200ஆம் ஆண்டு வாக்கில் காலமிடப்படுகிறது. பல்வேறு சமூகக் குழுக்கள் ஒரே கிராமத்தை ஆக்கிரமித்து இருந்துள்ளதற்கான ஆதாரத்தை இந்தக் களமானது கொடுக்கிறது. ஆனால், அவர்கள் வேறுபட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தி, வேறுபட்ட பாணியிலான வீடுகளில் வாழ்ந்து வந்தனர்: "காலப்போக்கில் பிந்தைய அரப்பா மட்பாண்டமானது படிப்படியாக சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டது." குதிரை அறிமுகப்படுத்தப்பட்டது, இரும்புக் கருவிகள் மற்றும் புதிய சமயப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பிற பண்பாட்டு மாற்றங்கள் இக்காலத்தில் நிகழ்ந்தன என்பது தொல்லியல் ஆய்வு மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளது.[103] சௌராட்டிராவின் ராஜ்கோட் மாவட்டத்தில் ரோஜிதி என்ற இடத்தில் ஓர் அரப்பா களம் கூட உள்ளது. குசராத் மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒரு தொல்லியல் குழு மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து 1982-83இல் இந்தக் களத்தை அகழ்வாய்வு செய்யத் தொடங்கின. ரோஜிதி தொல்லியல் அகழ்வாய்வுகள் குறித்த தங்களது அறிக்கையில் கிரிகோரி போசெல் மற்றும் எம். எச். ராவல் ஆகியோர் அரப்பா நாகரிகம் மற்றும் பிந்தைய தெற்காசியப் பண்பாடுகளுக்கிடையில் "பண்பாட்டுத் தொடர்ச்சிக்கான வெளிப்படையான அறிகுறிகள்" உள்ள போதும், அரப்பா "சமூகப் பண்பாட்டு அமைப்பு" மற்றும் "ஒன்றிணைந்த நாகரிகத்தின்" பல அம்சங்கள் "நிரந்தரமாகத் தொலைந்துவிட்டன" என்று குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில், இந்தியாவின் இரண்டாவது நகரமயமாக்கலானது (வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுடன் தொடங்கியது, அண். 600 பொ. ஊ. மு.) "இந்த சமூகப் பண்பாட்டுச் சூழ்நிலைக்கு தொலை தூரத்துக்கு வெளியே அமைந்துள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.[236] அரப்பாவுக்குப் பின்முன்னர், அறிஞர்கள் அரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சியானது இந்தியத் துணைக் கண்டத்தில் நகர வாழ்க்கையின் இடை நிற்றலுக்கு வழி வகுத்தது என்று நம்பினர். எனினும், சிந்துவெளி நாகரிகமானது உடனடியாக மறைந்து விடவில்லை. சிந்துவெளி நாகரித்தின் பல அம்சங்கள் பிந்தைய பண்பாடுகளில் காணப்படுகின்றன. கல்லறை எச் கலாச்சாரமானது பிந்தைய அரப்பா பண்பாட்டின் ஒரு வெளிப்பாடு என்று கருதப்படுகிறது. இது பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்த ஒரு பெரும் பகுதியில் பரவியிருந்தது. இதைத் தொடர்ந்து காவி நிற மட்பாண்டப் பண்பாடு வந்தது. பண்டைய வேத சமயமானது சிந்துவெளி நாகரிகங்களில் இருந்து பகுதியளவு அம்சங்களைக் கொண்டிருந்தது என்று உறுதியாக விளக்கிய மூன்று பிற முதன்மையான அறிஞர்களை தாவீது கார்டன் வைட் என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார்.[237] 2016ஆம் ஆண்டு நிலவரப் படி, தொல்லியல் தரவுகளானவை பிந்தைய அரப்பா என்று வகைப்படுத்தப்பட்ட பொருள்சார் பண்பாடானது குறைந்தது அண். 1000-900 பொ. ஊ. மு. வரை நீடித்திருக்க வேண்டும் என்று காட்டுகின்றன. இது சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டுடன் பகுதியளவு சம காலத்தைச் சேர்ந்ததாக இருந்தது.[235] ஆர்வர்டு தொல்லியலாளர் ரிச்சர்ட் மிடோவ் பிந்தைய அரப்பா குடியிருப்பான பிரக் பொ. ஊ. மு. 1800 முதல் பேரரசர் அலெக்சாந்தரின் பொ. ஊ. மு. 325ஆம் ஆண்டு படையெடுப்புக் காலம் வரை தொடர்ந்து செழித்திருந்தது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.[225] சிந்துவெளி நாகரிகத்தின் ஓரிடமயமாக்கலுக்குப் பிறகு மாகாணப் பண்பாடுகள் உருவாகத் தொடங்கின. சிந்துவெளி நாகரிகத்தின் தாக்கத்தை பல்வேறு அளவுகளில் இவை காட்டுகின்றன. அரப்பாவின் முந்தைய பெரும் நகரத்தில் கல்லறை எச் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்ட ஒரு மாகாணப் பண்பாட்டின் அடக்கம் செய்யும் முறைகள் காணப்படுகின்றன. இதே நேரத்தில், காவி நிற மட்பாண்டப் பண்பாடு இராசத்தானில் இருந்து சிந்து-கங்கைச் சமவெளிக்குப் பரவியது. தகனம் செய்யும் முறையின் தொடக்க காலச் சான்றாக கல்லறை எச் கலாச்சாரமானது உள்ளது. இந்த தகனம் செய்யும் வழக்கமே தற்போது இந்து சமயத்தில் முதன்மையான பழக்கமாக உள்ளது. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிகி.மு 1800 அளவில் இப் பண்பாட்டின் படிப்படியான வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகிறது. கி.மு 1700 இல் பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும்,சிந்துவெளிப் பண்பாடு சடுதியாக மறைந்துவிடவில்லை. இப் பண்பாட்டின் பல கூறுகள் பிற்காலப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. நடப்புத் தொல்லியல் தரவுகள், பிந்திய ஹரப்பாப் பண்பாடு என்று குறிக்கப்படுகின்ற பொருள்சார் பண்பாடு, கி.மு 1000 – 900 வரையிலுமாவது தொடர்ந்திருக்கக்கூடும் என்று காட்டுகின்றன. சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குக் காலநிலை மாற்றம் தொடர்பான இயற்கைக் காரணங்கள் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. .[238] சிந்துவெளியின் காலநிலை கி.மு 1800 இலிருந்து, குறிப்பிடத் தக்க அளவு குளிரானதாகவும், வறண்டதாகவும் மாறியது. காகர்-கக்ரா ஆற்று முறைமையில் குறிப்பிடத்தக்க பகுதி இல்லாமல் போனதும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் மேற்படி எடுகோள் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆரியர் முதலாக, ஆப்கானியர், துருக்கியர், முகலாயர் போன்றோர் இந்து குஷ் பகுதியில் உள்ள கணவாய்கள் வழியாகத் தென்னாசியாவுக்குள் ஊடுருவிய பாதையில், இப் பகுதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சிந்து வெளிப் பண்பாட்டின் வீழ்ச்சி மற்றும் ஆரியர் வட இந்தியாவுக்குள் நுழைந்த இந்திய-ஆரிய இடப்பெயர்வு தொடர்பான எடுகோள்கள் ஆராயப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ஓர் "ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை"யாக முன்வைக்கப்பட்டது. இதன் வீழ்ச்சிக்காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இக் கோட்பாட்டுக்கு ஒரு சான்றாக அமைந்தது. அத்துடன் போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் மேற்படைகளில் காணப்பட்டதும் இக் கோட்பாட்டிற்கு வலு சேர்த்தது. தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் இது பற்றிக் குறிப்பிட்டபோது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே, அழிவுக்காகக் "குற்றம் சாட்டப்படுகிறான்" என்றார். இன்று இக் கொள்கைக்கு மாற்றாக வேறு பல கொள்கைகளும் நிலவுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் வெளியிலிருந்து வரவில்லையென்றும், இந்தியாவே அவர்களது தாயகம் என்றும், இந்தோ ஐரோப்பிய மொழிகள் தோன்றியது இந்தியாவிலேயே என்றும், சில இந்திய ஆய்வாளர்கள், குறிப்பாக வட இந்திய ஆய்வாளர்கள் வாதாடி வருகிறார்கள். சிந்துவெளி நாகரீகம் ஆரியர்களுடையது என்பதும் இவர்களது வாதம். எனினும் இவ்வாதங்களுக்கு அனைத்துலக அளவில் அறிஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை. சிந்துவெளி நகைகள்![]() மெசொப்பொத்தோமியாவின் ஊரின் முதல் வம்சத்தினர் காலத்தில் அழகிய பல வண்ண கல் தங்க நகைகள் சிந்துவெளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.[239] சிந்துவெளி எழுத்துக்கள்மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள்![]() மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[240] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.[241] காவிரிக்கரையில் சிந்துசமவெளி எழுத்துக்கள்தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.[242] சிந்து சமவெளி நாகரிகம்சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும். இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.[243] சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.[244] இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Mohenjo-daro என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. ![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சிந்துவெளி நாகரிகம்
|
Portal di Ensiklopedia Dunia