பிரம்மனுக்கும், திருமாலுக்கும் தத்தம் காலப்பதம் முடிவுற்றதும் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அவர்களின் திருமேனிகளைத் தம் தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை (காயம் - உடம்பு) தம்முள் ஆரோகணித்துக் கொண்டமையால் இத்தலம் "காயாரோகணம்" எனப் பெயர்பெற்றது. மேலும் மகாலட்சுமி இத்தலத்து இவ்விறைவனைவில்வத்தால் அருச்சித்துத் திருமாலைத் தன் கணவனாகப் பெற்றதும். மற்றும் குரு, மகாலட்சுமி வழிபாடுகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கப்பெறும் என்பது தல வரலாறாக விளங்குகிறது.[3]
இலக்குமிவில்வத்தால் காயாரோகணேசுவரரை அருச்சித்துத்திருமாலைத் தனக்குக் கணவனாகப் பெற்றனள். வியாழபகவான் அங்கு வழிபாடு செய்து ‘எமது பெருமானே, தேவரீரே தேவர்களுள் பிராமணராவீர்! ஏனையோர்களுள் பிராமணன் அடியேன். பிராமணனுக்குப் பிராமணனே புகலிடம். பிராமணன்பிராமணராகிய தங்களைத் தொழாது பிறரை வணங்கில் நலமுமுறான்; நரகமும் புகுவன் என்றிங்ஙனம் மறைகள் விரித்துரைக்கும். பிராமணனாகிய எனக்குத் தங்கள் திருவடிகளே கதி’ என்று கூறிய பிருகற்பதிக்கு பெருமான் முன்னின்று ‘வேண்டுவகேள் அருளுதும்’ என்றனர். ‘திருவடியில் இடையறா அன்பும் எனக்குரிய வியாழக் கிழமையில் காயாரோகண (தாயார்குளம்) தீர்த்தத்தில் மூழ்கி இங்கு வழிபடுவார்க்கு விரும்பியவும், வழங்கி மேலும் முத்தியையும் அளித்தருள வேண்டுமென வேண்டினர். ‘என்றென்றும் இவ்விலிங்கத்தே அம்மையொடும் விளங்கி அவரவர் விரும்பிய அனைத்தும் அருளுவோம்’ என வாய்மலர்ந்து தேவர்களுக்குக் குருவாகும் வரத்தை வழங்கி இலிங்கத்தே மறைந்தருளினார்.
இயமன் அங்கு வந்து பூசனை புரியத் ‘தென் திசைக்குத் தலைவனாக்கி நம்மை வணங்குவோரைத் தண்டம் செய்யின் அன்று இப்பதவி உனக்கு நீங்கும்’ என்றருளி விடுத்தனர். இயமனும்பூசித்த இங்குப் பிதிரர்க்கு நீர்க்கடனைச் செய்வோர் வீடு பெறுவர். வேகவதிநதிக்கரையில் உள்ள இத்தலம் அறிவு பெறவும் செல்வம் பெறவும் ஒருங்கு சிறப்புடைய தலமாகும்.[4]