எஸ். பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam; 4 சூன் 1946 – 25 செப்டம்பர் 2020), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.[7] 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000-இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.[8] இவர் "பாடும் நிலா"
என்று அழைக்கப்படுகிறார்.[9]
பாலசுப்பிரமணியம், தெலுங்குக் குடும்பத்தைச் சேர்ந்த, எஸ். பி. சாம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகனாக சென்னை மாகாணம், சித்தூர் மாவட்டம், கோணேட்டம்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தார்.[28] மாநிலப் பிரிவினைக்குப் பின் கோணேட்டம் பேட்டை தமிழ்நாட்டின் பக்கம் வந்தது. அது இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இவருடைய தந்தை நெல்லூரைச் சேர்ந்தவர். தாய் கோணேட்டம் பேட்டையைச் சேர்ந்தவர். பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் இவரின் சிறு வயதிலேயே நெல்லூருக்கு வந்தனர். சாம்பமூர்த்தியின் முதல் மனைவி இறந்ததால், சகுந்தலம்மாவை
இரண்டாவதாக மணந்தார். சாம்பமூர்த்தியின் முதல் மனைவிக்கு மகள் ஒருவரும், மகன் ஒருவரும் பிறந்தனர்.[29][30][31][32][33][34][35][36] இவருடைய தந்தை சாம்பமூர்த்தி, அரிகதை காலட்சேபக் கலைஞர் ஆவார். பாலசுப்பிரமணியத்திற்குப் பின்னர் பிறந்த இரண்டு தம்பிமாரில் ஒருவர் இறந்துவிட்டார். பின்னர் இரண்டு தங்கையரும், தம்பி ஒருவரும், இரண்டு தங்கையரும் பிறந்தனர். இவர்களில் பாடகி எஸ். பி. சைலஜா கடைசித் தங்கை ஆவார்.[37][38][39] மகன் எஸ். பி. பி. சரணும் பிரபலமான பாடகரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.[40] பாலசுப்பிரமணியத்தின் தாயாருக்கு பாலுவைச் சேர்த்து 4 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர்.
பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை அரிகதை வாசிக்கும் பொழுது கவனித்து, ஆர்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். இவர் பொறியாளராக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தபூர், ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். குடற்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.[8][41]
இசையில் அதிக நாட்டம் கொண்ட பாலசுப்பிரமணியம், கல்லூரியில் படிக்கும் போதே பல பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார். 1964 ஆம் ஆண்டு சென்னையை மையமாகக் கொண்ட தெலுங்குக் கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பாடி முதல் பரிசைப் பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இக்குழுவில் அனிருத்தா (ஆர்மோனியம்), இளையராஜா (கிட்டார், ஆர்மோனியம்), பாஸ்கர், கங்கை அமரன் (கிட்டார்) போன்றோர் பங்கு பெற்றனர்.[42] இவர்களோடு சேர்ந்து எஸ்பிபி இசை நிகழ்ச்சிகளையும் நாடகக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ். பி. கோதண்டபாணி, கண்டசாலா ஆகியோர் நடுவராக இருந்து பங்குபெற்ற பாடல் போட்டியில் சிறந்த பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[43][44][45] அடிக்கடி இசையமைப்பாளர்களைச் சந்திப்பதும், பாட வாய்ப்புக் கேட்பதுமாக இருந்த இவருக்கு முதல் போட்டிப் பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவே என்னிடம் நெருங்காதே' என்ற பாடலாகும்.[46] பி. பி. ஸ்ரீனிவாஸ் இவருக்கு தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், சமசுகிருதம், ஆங்கிலம், உருது போன்ற பல மொழிகளில் தனது பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்.[47]
இசைப்பணி
1960கள்–1970கள்
பாடும் நிலாவும், அவருடைய மனைவி சாவித்ரியும் கே. ஜே. யேசுதாஸ் குடும்பத்தினரால் கௌரவிக்கப்பட்டபோது
பாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடகராக முதன் முதலில் 1966 திசம்பர் 15 அன்று சிறீ சிறீ சிறீ மரியாத ராமண்ணா(1967) என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக எஸ். பி. கோதண்டபாணியின் இசையில் பாடினார்.[48][49] இப்பாடல் பதிவான எட்டாம் நாளில் கன்னடத்தில்நக்கரே அதே சுவர்க என்ற திரைப்படத்திற்காகப் பாடினார்.[50] இவரது முதலாவது தமிழ்ப் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் எல். ஆர். ஈஸ்வரியுடன்ஓட்டல் ரம்பா என்ற திரைப்படத்திற்காகப் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" என்பதாகும். ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்ததாக 1969-இல் சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலை ஜெமினி கணேசனுக்காகப் பாடினார். ஆனால் இப்படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆருக்காகஅடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.[51][52][53] இதுவே இவர் பாடி வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.[54]எஸ். ஜானகியுடன் இவர் பாடிய முதலாவது பாடல் கன்னிப் பெண் (1969) படத்திற்காக "பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்" என்பதாகும். இதன் பின்னர் இவர் ஜி. தேவராஜனால்கடல்பாலம் என்ற திரைப்படத்தில் மலையாளத் திரைத்துறைக்கும் அறிமுகமானார்.[55]
1980கள்
௭ஸ். பி பாலசுப்பிரமணியம்-1985
பாலசுப்பிரமணியம் 1979-இல் வெளிவந்த சங்கராபரணம் என்ற திரைப்படத்திற்காகப் பாடல்களைப் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்குத் திரையுலகில் சிறந்த திரைப்படமாகக் கருதப்படுகிறது.[56]கே. விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளிவந்தது. விஸ்வநாத் பாலசுப்பிரமணியத்தின் பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கே. வி. மகாதேவனால்கருநாடக இசை மெட்டுகளில் உருவாக்கப்பட்டது. பாலசுப்பிரமணியம் முறையாக கருநாடக இசையைக் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் பாடல்களைப் பாடினார்.[57] இத்திரைப்படத்திற்காக இவர் தனது முதலாவது சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதைப் பெற்றார்.[58] இவரது முதலாவது இந்தித் திரைப்படம் ஏக் தூஜே கே லியே (1981) இவருக்கு இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. கே. பாலசந்தர் இதனை இயக்கினார்.[11]
பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரைப்படங்களுக்கு நிறையப் பாடல்களை பாடினார். குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்தும், தனித்தும், சக பின்னணிப் பாடகர், பாடகியருடன் சேர்ந்தும் 70களின் இறுதி முதல் 80களின் காலப்பகுதியில் பல பாடல்களைப் பாடினார்.[59][60][61] தமிழ்த் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர். சிப்பிக்குள் முத்து (1986), உருத்திரவீணா (தெலுங்கு, 1988) இவர்கள் இருவருக்கும் மீண்டும் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்தன.[62] இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.[63]
1989 முதல் பாலசுப்பிரமணியம் இந்தி நடிகர் சல்மான் கானுக்குப் பின்னணி பாடிவந்தார். மைனே பியார் கியா (1989) இந்திப் படம் பெரும் வெற்றி பெற்றது.[64] இத்திரைப்படத்தில் எல்லாப் பாடல்களையும் இவரே பாடினார். எல்லாப் பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கிக் கொடுத்தது. இவர் 90களிலும் காதல் இரசனையோடு கானின் திரைப்படங்களுக்குப் பாடினார்.[65] இவற்றில் குறிப்பிடத்தக்கதாக ஹம் ஆப்கே ஹைன் கௌன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.[66] இப்படத்தில் லதா மங்கேசுக்கருடன் இவர் பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது. இவற்றின் மூலம் பாலசுப்பிரமணியம் இந்திய அளவில் மிகச்சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராக இனங்காணப்பட்டார்.[67][68][69][70][71][72]
1990கள்
பாடும் நிலாவின் ஐம்பது ஆண்டுகள் இசைப்பயண விழாவில் சித்ராவுடன் பாடும் நிலா. இடம் :துபாய் ஆண்டு:2016
௭ஸ் பி பாலசுப்பிரமணியம் 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும்.[73] ஏ. ஆர். ரகுமானின் முதலாவது படமான ரோஜாவில் மூன்று பாடல்களைப் பாடினார். இதற்குப் பிறகு நிறைய பாடல்களை ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவந்தார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" என்ற பாடலை அனுபமாவோடு பாடினார்.[74]கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" என்ற பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் திரைப்படத்தில் ஏறத்தாழ எல்லாப் பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் "தங்கத்தாமரை மகளே" பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது இவருக்கு 1996-ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.[75][76]
பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னடத் திரைப்படங்களுக்குப் பாடல்கள் பாடியுள்ளார். அம்சலேகாவின் பருவ காலம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார். இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காகக் கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவாயி (1995) திரைப்படத்தில் "உமண்டு குமண்டு" பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்தியத் தேசிய விருதை அம்சலேகாவின் இந்துஸ்தானி இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.[62]
2000களில்
2017-ஆம் ஆண்டு தனது 50 ஆண்டுகாலப்பணிக் கொண்டாட்டத்திற்காகப் பலநாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகச் சிங்கப்பூரில்
2013-ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக் கானுக்காக விசால்-சேகரின் இசையில் "நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்" என்ற தலைப்புப் பாடலை பாடினார். இப்பாடல் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி திரையிசையில் பாடியதாகும்.[80][81] பாலசுப்பிரமணியம் 2015 சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திர மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டார்.[82] இவர் சமயங்களைக் கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார். இதற்காக 2015ஆம் ஆண்டிற்கான கேரள அரசின் "அரிவராசனம்" விருது பெற்றார்.[83][84][85]
மே 2020-இல், கோவிட்-19 பெருந்தொற்று சூழலில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர், அரச ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கும் முகமாக இளையராஜாவின் இசையில் "பாரத் பூமி" என்ற பாடலைப் பாடி வெளியிட்டார்.[86] இக்காணொளிப் பாடலை 2020 மே 30-இல் இளையராஜா இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கில் வெளியிட்டார்.[87][88]
தெலுங்கு உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான படுதா தீயாகா என்ற நிகழ்ச்சியை பாலசுப்பிரமணியம் தொகுத்து வழங்கியதில் தொலைக்காட்சிகளில் அறிமுகனார். இந்நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு முதல், ஆந்திரா, தெலங்காணாவிலிருந்து பாடும் திறமைகளை வெளிப்படுத்திய பெருமைக்குரியது. உஷா, கௌசல்யா, கோபிகா பூர்ணிமா, மல்லிகார்ஜுன், ஹேமச்சந்திரா, என்.சி காருண்யா, சுமிதா போன்ற தெலுங்குப் பாடகர்கள் நிகழ்ச்சியில் அறிமுகமாயினர். கன்னட உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான எட் தும்பி ஹடுவேனுவையும் இவர் தொகுத்து வழங்கினார்.[94] பதலனி உண்டி, எண்டாரோ மகானுபஹ்லுலு, சுவரபிஷேகம் போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் பாலசுப்பிரமணியம் பங்குபெற்றார்.[95] தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியில்உண்மைநிலை நிகழ்ச்சியான இசைவானில் இளையநிலா எயார்டல் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார்.
நடிப்பு, இசையமைப்பு
பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதிற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[96][97]தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.[98][99][100].[101]
சாதனைகள்
2016 ஆம் ஆண்டு கோவாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வாங்கும் போது ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.[8][102][103] ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கருநாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கருநாடக இசையில் அமைந்த பாடலிற்காகத் தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு, கருநாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.[104][105]
பாலசுப்பிரமணியம் எந்தப் பாடகரும் செய்யாத சாதனைகளை இந்தியத் திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 பெப்ரவரி 8 அன்று கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழில் 19 பாடல்களையும் (ஒரே நாளில்), இந்தியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.[106][107]
பாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண். சரண் பின்னணிப் பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.[111][112]
இறப்பு
இவருக்கு 2020 ஆகத்து 5 அன்று, கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களில் மோசமடைந்த இவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து, வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று 2020 செப்டம்பர் 24 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், 2020 செப்டம்பர் 25 அன்று, இவருடைய உயிர் பகல் 1:04 மணியளவில் பிரிந்தது.[113][114]
↑"SP.Balasubrahmanyam's 67th Birthday". 4 June 2013. Archived from the original on 7 ஏப்ரல் 2014. Retrieved 22 July 2013. Today, S.P. Balasubrahmanyam is celebrating his 67th birthday. He was born on 4 June 1946 into a Brahmin family in Nellore. Balasubrahmanyam started singing from a very young age. After dropping out from an engineering program in JNTU, he got his first break in 1966, when he sang for Sri Sri Sri Maryada Ramanna and he has sung over 40,000 songs. The State Government of AP presented the Nandi Award to Balasubrahmanyam 25 times. The Government of India honoured him with a Padma Bhushan award in 2011 and also presented him with six National Awards.
↑Dinathanthi, Nellai Edition, 11 August 2006, p. 11.
↑ 118.0118.1118.2118.3118.4‘Film News', Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. p. 738.