50 விரைவுத் தொடருந்து/ 1 நாளைக்கு 400 புறநகர் தொடருந்து/1 நாளைக்கு 50 DEMU சேவைகள்/1 நாளைக்கு
அமைவிடம்
சென்னை எழும்பூர்மதராசு எழும்பூர்
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
Show map of சென்னை
சென்னை எழும்பூர்மதராசு எழும்பூர்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
Show map of தமிழ்நாடு
சென்னை எழும்பூர்மதராசு எழும்பூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
Show map of இந்தியா
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் (Chennai Egmore railway station, நிலையக் குறியீடு: MS) இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின், சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் இந்தியாவின் தெற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.[1]
வரலாறு
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் 1908
இந்த தொடருந்து நிலையம் ஒரு கோட்டையாக இருந்து வந்துள்ளது. இதற்குப் பெயர் 'எழும்பூர் ரெடோ' ஆகும். இது சாந்தோமில் உள்ள லீட்ஸ் கோட்டை போன்றுள்ளதாக அறியப்படுகிறது. பிரிட்டிசாரால் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.[2]
இடம்
இந்த தொடருந்து நிலையக் கட்டிடமானது 2.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1.7 ஏக்கர், டாக்டர் பால் ஆண்டி என்பவரிடமிருந்து பெறப்பட்டதாகும். இவர் முதலில், சென்னை மாவட்ட ஆட்சியரிடம், தான் 1.7 ஏக்கர் சொத்தினை சிரமேற்கொண்டு வளர்த்ததின் காரணமாக, தர மறுத்துள்ளார். பின்னர், தென் இந்திய ரெயில்வே நிறுவனம் 1,00,000 ரூபாய் கொடுத்து வாங்கியது.
கட்டுமானம்
இந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர், கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தாக அறியப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தி. சாமிநாத பிள்ளை என்பவரால் 1905இல் செப்டம்பர் மாதம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கட்டுவதற்காக சுமார் 1.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.[2] சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம், அதிகாரப்பூர்வமாக 1908 சூன் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.[3][4]
தொடக்கம்
இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
முதலில், இதற்கு 'இராபர்ட் கிளைவ்' என்பவரின் பெயர் சூட்டப்பட இருந்தது. எனினும், பொதுமக்கள் கடுமையாக எதிர்த்த காரணத்தால், எழும்பூர் தொடருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டது. நிலையம் திறக்கப்படும் போது, அங்கு மின்சார இணைப்பு இல்லாமல் இருந்தனால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே உருவாகிய பிறகு, சென்னையின் முக்கிய மீட்டர் கேஜ் முனையமாக, எழும்பூர் தொடருந்து நிலையம் மாறியது.
இலங்கை கொழும்பு ரயில்கள்
எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் – தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஓர் இரயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில், தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த இரயில் சேவை நிறுத்தப்பட்டது.[5]
சென்னை எழும்பூர் - காச்சிகுடா - காச்சிகுடா செங்கல்பட்டு விரைவுத் தொடருந்து - சென்னைக் கடற்கரை, ரேணிகுண்டா, துவ்வாடா மற்றும் தோனு வழியாக (நாள்/இரவு ரயில்).
சென்னை எழும்பூர் - சேலம்/மேட்டூர் அணை - [சென்னை எழும்பூர் - மேட்டூர் அணை விரைவுத் தொடருந்து] - விழுப்புரம் மற்றும் ஆத்தூர் வழியாக (இரவு/இணைப்பு இரயில்).
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் கிழக்கு பகுதியிலிருந்து, மே 2011
எழும்பூர் தொடருந்து நிலையம் 925 மீ தூரத்தில் பிரிக்கப்பட்ட இரண்டு மேம்பாலங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. சுமார் 750 மீ நீளம் கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில், 11 தளங்கள் உள்ளன. தளம் 1,2,3 குறைந்த நீளம் கொண்ட தளங்கள் ஆகும். இவை சிறிய ரக தொடருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமான 4ஆம் தளம் எழும்பூர் தொடருந்து நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5,6,7 ஆம் தளங்கள் நீள ரக தொடருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
2004 ஆம் ஆண்டில், பூந்தமல்லி ஹை ரோடு பக்கத்தில், நிலையத்தின் இரண்டாவது நுழைவுவாயில் கட்டுமானம், இந்திய ரூபாய் 115.3 மில்லியன் செலவில் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் இந்த இரண்டாவது நுழைவுவாயில் திறக்கப்பட்டது.
போக்குவரத்து
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்தின் அகலப் புகைப்பம்
2013 வரை, இந்தத் தொடருந்து நிலையம், தினமும் சுமார் 35 முக்கிய வழிவகை இரயில்கள் மற்றும் 118 புறநகர் இரயில்கள், மற்றும் சுமார் 150,000 மக்களைக் கையாளுகிறது.[6]
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [7][8][9][10][11][12]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, சென்னை எழும்பூர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [13][14][15][16]
வசதிகள்
பயணத் தொடர்புகள்
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு இரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாநகரப் பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ ரிக்சா, டாக்ஸி மற்றும் கால் டாக்ஸி போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உள்ளன. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன.
உணவு மற்றும் இதர வசதிகள்
மேலும் உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், வலைதள மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன.